சிறப்புக் கட்டுரைகள்

பதறினார்கள்... சிதறினார்கள்...! + "||" + Shouted ... scattered ...!

பதறினார்கள்... சிதறினார்கள்...!

பதறினார்கள்... சிதறினார்கள்...!
சிறிதோ பெரிதோ ஆட்ட நாளில் எந்த அணி திறனில் மிகுந்து இருக்கிறதோ அந்த அணிதான் வெற்றி பெறும் என்பது கிரிக்கெட்டில் ஓர் எழுதப்படாத விதி.
ஆட்ட நாளில் எந்த அணி திறனில் மிகுந்து இருக்கிறதோ அந்த அணிதான் வெற்றி பெறும் என்பது கிரிக்கெட்டில் ஓர் எழுதப்படாத விதி. பதறாத காரியம் சிதறாது என்பதுவும் கிராமத்து சொலவடை அல்லது பழமொழி. இரண்டும் உண்மை என்று நிரூபணமாகி இருக்கிறது சென்னை-மும்பை அணிகள் மோதிய ஐ.பி.எல். இறுதி “தப்பாட்டத்தில்” சேப்பாக்கத்தில் இறுதி ஆட்டம் இல்லை என்றபோதே சென்னை அணி பாதி ஆட்டத்தில் தோற்றுவிட்டது என்பது ஒன்று. டோனியை தூக்கினால் அணியையே சுருட்டி விடலாம் என்பது இன்னொன்று அதற்கு அவசியமே இல்லாமல் டோனி தற்கொலைக்கு ஒப்பான ஒரு ரன் அவுட்டில் சிக்குகிறார் என்பது அகந்தைக்குக் கிடைத்த அடி.. வாட்சன் ரன் அவுட் ஆனது விதி வசம். அந்தச் சூழலில் அத்தகைய பதற்றத்தில் அப்படி ஒன்று நிகழாதிருந்தால் தான் ஆச்சரியம்.

ஆங்கிலத்தில் ஒன்று சொல்வார்கள் யார் பதற்றமடையாமல் இருக்கிறார்களோ அவர்கள் தான் எளிதில் கரை சேர்வார்கள்.. கடைசி ஓவரில் இரண்டு அணிகளிடமும் அது இல்லாமல் போக அதிர்ஷ்டம் மும்பைக்கு கை கொடுத்தது. இல்லாவிட்டால் இரண்டு பந்துகளில் நான்கு ரன்கள் தேவைப்பட்ட நிலையில் டோனி அனுபவ வீரர் ஹர்பஜன் சிங்கை களமிறக்காமல் ஷர்துல் தாகூரை களம் இறக்குவாரா? சரி இறங்கியது தான் இறங்கினோம். ஒரு பந்தில் 2 ரன் தேவை. அடித்தும் ஆடவேண்டாம் தடுத்தும் ஆட வேண்டாம் மட்டையை கீழே போட்டு விட்டு ஓடி ஒரு ரன் எடுத்திருந்தாலும் ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கலாம். இதெல்லாம் நிதானமாக யோசிக்கும்போது வரக்கூடிய யோசனைகள். பதற்றத்தில் இருப்பவர்களுக்கு வரவே வராது. அதிலும் அந்தப் பையன் ஒரு சோட்டா. அந்தப் பையனிடமிருந்து என்ன எதிர்பார்க்க முடியும்.

அனுபவமும் திறமையும் உடையது சென்னை அணி. துடிப்பும், இளமையும் உடையது மும்பை அணி. வெல்ல வேண்டியவர்கள் தோற்றார்கள். தோற்க வேண்டியவர்கள் வென்றார்கள். கிரிக்கெட் ஒரு வினோத விளையாட்டு என்று சொல்வது சும்மா அல்ல. டோனியை கேட்டுப்பாருங்கள். இந்த ஆட்டத்தை மறக்காமல் ஆயுள் முழுவதும் சொல்லிக் கொண்டிருப்பார், எல்லோரும் வியர்வை சிந்த விளையாடினார்கள். ஆனால் வாட்சன் மட்டும் தான் ரத்தம் சிந்தி விளையாடினார் எனலாம். ஒருவேளை அந்த வலியும், வேதனையும் தான் வேகமாக ஓடிப்போய் எல்லையைத் தொட முடியாமல் ரன் அவுட் ஆக வேண்டி நேர்ந்ததோ. இதை தியாகம் என்று கொண்டால் டோனி செய்ததை துரோகம் என்ற பட்டியலில்கூடச் சேர்க்கலாம். அந்த ரன் அவுட் மகா கேவலம். ஒரு ரன் எடுத்துவிட்டார் தொடர்ந்து “ஓவர்த்ரோ”. கிரிக்கெட்டில் நல்ல மரபு என்பது “ஓவர்த்ரோவுக்கு” ஓடாமல் இருப்பது தான். ஆனால் மற்ற எவரையும் விட டோனி அதைச் செய்தார். கை மேல் பலன். தேவை இல்லாத ஒரு திருப்புமுனை அல்லவா அது?

கிரிக்கெட்டில் கண்ணியவான் என்று ஒருவர் உண்டு வெஸ்ட் இண்டீசின் கோர்ட்னி வால்ஷ். பாகிஸ்தானுடன் இறுதி ஆட்டம். கோர்ட்னி பந்து வீச ஓடி வரும்போது பாகிஸ்தான் வீரர் கோட்டுக்கு வெளியே. ஓடி வந்த கோர்ட்னி அந்த விக்கெட்டை தட்டி விட்டு நம்முடைய ரவிச்சந்திரன் அஸ்வின் செய்தாரே அது போல் எதிரியை அவுட்டாக்கி இருக்கலாம். ஆனால் கோர்ட்னி அவரை கோட்டுக்கு உள்ளே வரும்படி எச்சரித்தார். அவர் அவுட்டாகவில்லை. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணி அந்த ஆட்டத்தில் அதனாலேயே தோற்றது. சென்னையில் முப்பது வயதுக்கு குறைந்த ஆட்டக்காரர்கள் யாரும் இல்லை. அது அனுபவத்தின் சேகரம் என்று மார் தட்டிக்கொண்டாலும் ரெய்னா (8), ராயுடு (4), ஜடேஜா (5), ஷர்துல் (2) ஆடியவிதம் அப்படிச் சொல்லவில்லை. ஐந்து ஒற்றைப்பட இலக்கம், இரண்டு ரன் அவுட்டுகள் எந்த அணியால் மீண்டெழ முடியும்.

“பாட்டையாக்கள் படை என்பது நையாண்டிதான் என்றாலும் ஒரு வகையில் பொருந்தவே செய்கிறது. ஐதராபாத் ஆடுகளம் இரண்டு குணம் கொண்டது. பந்து தரையில் பட்டு சீறி எழுந்து வரும். அதை திசை திருப்பிவிட்டு சமாளிக்கலாம் அல்லது வரும் இடத்திலேயே சுருண்டுவிடும் அதை அடிப்பதும் கஷ்டம், தடுப்பதும் கடினம். ஒன்றை இதில் நாம் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். பந்து வீசப்பட்டு நம்மை நோக்கி வரும்போது அதை அடிப்பதா? தடுப்பதா? என்பதை தீர்மானிக்க நமக்குக் கிடைக்கும் அவகாசம் வெறும் 12 நொடிகள் தான். கொலைக் கொம்பன்களும் குப்புற அடித்து விழுவது இங்கே தான். அம்பத்தி ராயுடு பிறந்த மண் அது. அதன் ஒவ்வொரு அங்குலமும் அவருக்கு அத்துப்படி என்பார்கள். அவராலேயே அந்தப்பாடு பட்டும் நான்கு ரன்களே சேர்க்க முடிந்ததென்றால் மற்ற வீரர்கள் எம்மாத்திரம். அப்படியானால் வாட்சன்? கிரிக்கெட் விஷயத்தில் ஆஸ்திரேலியர்கள் தனிப்பிறவிகள். இன்ன பாருங்களேன் தடைகள் நீங்கி முதன் முதலாக ஓர் ஆட்டத்தில் கலந்துகொண்ட ஸ்மித் 92 ரன்கள் விளாசி இருக்கிறார். மும்பை அணியைப்பற்றி ஒன்றும் பெரிதாகச் சொல்வதற்கு இல்லை. விண்டு விரித்துச் சொன்னால் மும்பை அணி வெல்லவில்லை, சென்னை அணி அநியாயத்துக்கு தோற்றது என்பதுதான் உண்மை. ஒரு வேளை என் கருத்து பாரபட்சம் கொண்டதாக தோன்றலாம். ஆனால் உற்றுணர்ந்து பார்த்தால் அது தான் உண்மை அது தான் எதார்த்தம்.

- சாத்தான்குளம் அப்துல் ஜப்பார், விளையாட்டு விமர்சகர்.