சிறப்புக் கட்டுரைகள்

அறிவை வளர்க்கும் அருங்காட்சியகங்கள் + "||" + Knowledge-building Museums

அறிவை வளர்க்கும் அருங்காட்சியகங்கள்

அறிவை வளர்க்கும் அருங்காட்சியகங்கள்
நாளை (சனிக்கிழமை) சர்வதேச அருங்காட்சியக தினமாகும்
மனித சமுதாயத்தின் பாரம்பரியத்தையும், உயிரினங்களின் வரலாற்றையும் நினைவூட்டும் இடங்களாகவும், அவை தொடர்பான விஷயங்களை பாதுகாத்து இளைய தலைமுறைகளுக்கு காட்சிப்படுத்தும் இடங்களாகவும் திகழ்கின்றன அருங்காட்சியகங்கள். அறிவியல் விளக்க மையங்களாகவும் விளங்குகின்றன. அருங்காட்சியகங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தவே இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அருங்காட்சியக தினத்தில் உலகின் மிகப்பெரிய குழந்தைகள் அருங்காட்சியகம் பற்றி தெரிந்து கொள்வோமா குட்டீஸ்...

உலகின் மிகப்பெரிய குழந்தைகள் அருங்காட்சியகம் என்ற சிறப்பு பெற்றது அமெரிக்காவின் இந்தியானா நகரில் அமைந்துள்ள ‘சில்ரன்ஸ் மியூசியம் ஆப் இந்தியானாபோலிஸ்’ அருங்காட்சியகம். இத 1925-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. மொத்தம் 29 ஏக்கர் பரப்பளவு கொண்டது.

இதில் 7.5 ஏக்கரில் குழந்தைகளுக்கான ஆரோக்கிய விளையாட்டு உபகரணங்கள், பயிற்சி மையம் செயல்படுகிறது. ஏராளமான உள்ளரங்க விளையாட்டுகள், வேடிக்கை பயிற்சி விளையாட்டுகளுக்கான வசதிகள் இங்குள்ளது. 12 விதமான, வெளியரங்க விளையாட்டுகளுக்கான வசதியும் உள்ளன.

17 நிரந்தர காட்சி அரங்குகளும், 4 தற்காலிக காட்சிப்பொருள் அரங்குகளும் உள்ளன.

1 லட்சத்து 30 ஆயிரம் கலைப்பொருட்கள் மற்றும் விளக்க மாதிரிகள் இடம் பெற்றுள்ளன.

300 பணியாளர்கள் அருங்காட்சியக பணிகளில் ஈடுபடுகிறார்கள். சுமார் 600 தன்னார்வலர்களும் சேவை செய்கிறார்கள்.

குழந்தைகளுக்கான கல்விசார் அறிவை வளர்க்க உதவும் பல்வேறு விஷயங்கள் அருங்காட்சியகத்தில் உள்ளன. கலை, அறிவியல், மனிதநேயம் உள்ளிட்ட பலவித துறைகளின் அறிவை வளர்க்க பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் இந்த அருங்காட்சியகத்திற்கு சுற்றுலா செல்கிறார்கள். ஆண்டுதோறும் இங்கு வந்து செல்லும் பார்வையாளர்களின் எண்ணிக்கை 12 லட்சம் பேராகும். நீங்கள் அமெரிக்கா சுற்றுலா சென்றால் கண்டிப்பாக இந்த அருங்காட்சியகத்தை பார்த்துவாருங்கள்.

இனி, உலகப்புகழ்பெற்ற வேறுசில குழந்தைகள் அருங்காட்சியகங்களை அறியலாம்...

* பெல்ஜியத்தில் இன்பேன்ட் மியூசியம் என்ற அருங்காட்சியகத்தில் கண்டுபிடிப்புகளை குழந்தைகள் உணரும் எளிமையான விளக்கங்களுன் காட்சிப்படுத்தி உள்ளார்கள். பொழுதுபோக்க உதவும் கணினி வீடியோ விளையாட்டுகளும் குழந்தைகளை கவர்ந்து இழுக்கிறது.

* ஸ்வீடன் நாட்டின் ஜூனிபேக்கென் அருங்காட்சியகத்தில் கடல் காட்சியகமும், ஸ்டோரி ரெயில் பயணமும் குழந்தைகளை வெகுவாக கவர்ந்திழுக்கும்.

* போர்ச்சுக்கல் நாட்டின் லிஸ்பன் சென்ட்ரோ சியன்சியா வைவா மியூசியம் தனிச்சிறப்பு மிக்கது. 1998-ம் ஆண்டு ஒரு அறிவியல் கண்காட்சிக்காக உருவாக்கப்பட்ட இந்த காட்சியகம், மக்களின் பேராதரவால் தொடர்ந்து அருங்காட்சியகமாக செயல்பட ஆரம்பித்துவிட்டது.

* பராகுவே நாட்டில் அமைந்துள்ள தேசிய விவசாய அருங்காட்சியகம், மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கேற்ற அருங்காட்சியகமாகும். விவசாயம் சார்ந்த பல்வேறு பொருட்கள், கருவிகள், விவசாய செயல்முறைகள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.

* குழந்தைகள் விரும்பும் மாயாஜால காட்சியகமாக விளங்குகிறது குரோசியாவில் உள்ள ‘ஜாக்ரெப் இல்லூசன் மியூசியம்’ அருங்காட்சியகம்.

* இங்கிலாந்தின் லண்டனில் உள்ள ‘வி அண்ட் ஏ மியூசியம்’, குழந்தைகளின் காட்சி மற்றும் செயல்முறைகளுக்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட சிறப்புக்குரிய அருங்காட்சியகங்களில் ஒன்றாகும். நியூயார்க் அருகே ரோசெஸ்டரில் குழந்தைகள் அருங்காட்சியகம், ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா காஸ்மாகாய்ஸா அருங்காட்சியகம், ஜார்ஜியாவில் உள்ள அட்லாண்டா குழந்தைகள் அருங்காட்சியகம், தென்கொரியாவின் சியோல் சில்ரன் மியூசியம் ஆகியவை புகழ் பெற்றவை.