காற்றை சுத்தமாக்கும் முறையை கண்ட காட்ரெல்


காற்றை சுத்தமாக்கும் முறையை கண்ட காட்ரெல்
x
தினத்தந்தி 17 May 2019 6:55 AM GMT (Updated: 17 May 2019 6:55 AM GMT)

வித்தியாசமான விஞ்ஞானிகள்

இன்று மாசுக்கட்டுப்பாட்டிற்கு பல வழிகள் பிறந்துவிட்டன. தொழிற்சாலைகள் வளர்ச்சிகண்ட ஆரம்ப காலத்தில், மாசுகளால் ஏற்பட்ட மரணங்கள், நோய்களை கட்டுப்படுத்த, காற்றை சுத்தமாக்கும் வழியை உருவாக்கிய விஞ்ஞானியைத்தான் நாம் இந்த வாரம் பார்க்கப் போகிறோம்...

தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சுக் காற்றை, வடிகட்டும் வழியை காட்டியவர்தான் பிரடெரிக் ஜி. காட்ரெல். இவர் ஜெர்மன் நாட்டில் 1877-ல் பிறந்தார். இளமையில் நன்றாகப் படித்தார். உயர்கல்வியும் பெற்றார். பின்னர் அறிவியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்றார்.

அமெரிக்கா சென்று கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் பேராசிரியராக வேலை செய்தார். அந்த நேரத்தில் தனது படிப்புச் செலவுக்காகவும், இதரச் செலவுக்காகவும் ஏராளமாக கடன் வாங்கியிருந்தார்.

அந்தக் கடனை அடைக்கப் பணத்திற்கு எங்கே செல்வது என யோசனை செய்தார். அப்போதுதான் புகையில் இருந்து கழிவுப் பொருட்களை பிரிக்கும் புரட்சிகரமான திட்டம் அவர் மனதில் தோன்றியது.

மின்சாரத்தைக் கொண்டு புகையில் உள்ள கழிவு பொருட்களை படியச் செய்யும் சோதனையை செய்தார். புகையில் உள்ள கழிவுப் பொருட்களை நீக்கிவிட்டால், அதன் பின்னர் அது தூய காற்றாக மாறிவிடும் என்பதை உறுதி செய்தார்.

அந்த காலக்கட்டத்தில் தொழிற்சாலைகள் எல்லாம் வேகமாக பெருகிக்கொண்டே வந்தன. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கரும் புகைகள் நேரடியாக காற்றில் கலந்து சுவாசக் காற்றைக் கெடுத்து கொண்டிருந்தன. எனவே அவரது ஆராய்ச்சி அந்தக் காலத்திற்கு பொருத்தமானதாக இருந்தது.

அவரது நண்பர்கள் ஆராய்ச்சி செய்திட பண உதவி செய்தார்கள். கந்தக அமிலத்திலிருந்து கழிவுப்பொருட்களை மீட்கும் சிறிய சாதனத்தை அமைத்தார். பெரிய தொழிற்சாலை ஒன்றில் அதை செயல்படுத்தி ஆராய்ச்சி செய்தார். இதுபோலவே பல தொழிற்சாலைகளிலும் கவலைக்கிடமான சூழ்நிலையே நிலவியது. ஓர் உலோக உருக்கு ஆலையில் இருந்து வெளிவந்த புகை அங்குள்ள சுற்றுப்புறம், எங்கும் படிந்த காரணத்தினால் வயல் வெளிகளில் உள்ள புற்களின் மீது ஒருவிதமான நச்சுப்பொருள் படிந்து இருந்தது. அந்தப்புற்களை மேய்ந்த கால்நடைகள் மடிந்தன. அந்தப்பகுதியில் உள்ள பல பால் பண்ணையாளர்கள் அந்த உலோக உருக்காலையின் உரிமையாளர் மீது வழக்குப் போட்டனர். பல ஆரஞ்சு பழ தோட்டக்காரர்களும் அந்த உருக்காலையின் மீது வழக்குப்போட்டனர்.

இப்படியாக பல்வேறு தொழிற்சாலைகளிலும் பல வழக்குகள் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வந்தன. இதனால் ஏராளமான தொழிற்சாலைகள் இழுத்து மூடுகின்ற நிலைக்கு தள்ளப்பட்டன.

அப்படிப்பட்ட பாதிப்புக்கு உள்ளான ஒரு தொழிற்சாலையில்தான் காட்ரெல் தன் கண்டுபிடிப்பு கருவியின் பெரிய அமைப்பு ஒன்றை பொருத்தினார். அதுவோ வெற்றிகரமாக செயல்பட்டது. அதன்பிறகு தொழிற்சாலைகளுக்கு ஏற்றவண்ணம் கழிவுப்பொருட்களை பிரிக்கும் கருவியை அமைக்க வேண்டும் என முடிவு செய்தார். அதேநேரம் அவரது பேராசிரியர் வேலையை விட்டுவிடவும் இல்லை.

இருந்தாலும், இவரிடத்தில் சென்று நாம் ஆலோசனை கேட்க வேண்டுமா? என பல தொழிற்சாலை உரிமையாளர்கள் அவரை ஏளனம் செய்தனர். ஆனால் அவர் உலோகத் தொழிற்சாலை ஒன்றில் அமைத்த கருவியின் விளைவால் புகைத் தொல்லையானது கட்டுப்படுத்தப்பட்டது. 10 லட்சம் டாலர்கள் மதிப்புள்ள கழிவுப் பொருட்கள் சுத்திகரிக்கப்பட்டன. காகித உற்பத்தி ஆலை ஒன்றில் அவர் கண்டுபிடித்த சாதனத்தின் மூலமாக நாள்தோறும் 6 டன்கள் எடைகொண்ட சோடா உப்புகள் பிரித்தெடுக்கப்பட்டன.

பெரியநகரங்களில் எல்லாம் காற்றில் கலக்கும் கழிவுப்பொருட்களை அகற்ற அவரது சாதனங்கள் உதவின.

நியூயார்க் நகரில் ஒரு பகுதியில் மட்டும் நாள்தோறும் ஆயிரம் டன்கள் புழுதிகள் படிந்துவந்தன. காட்ரெலின் கண்டுபிடிப்பு சாதனத்தால் அது நீக்கப்பட்டு நகரம் சுத்தமானது.

தனது கண்டுபிடிப்பு சாதனங்களின் உரிமையை எப்படி நாம் பயன்படுத்தலாம் என அவர் யோசனை செய்தார்.

தனக்கு கிடைத்த லாபத்தில் ஒரு குறிப்பிட்ட ஒரு பங்கு தொகையை அறிவியல் வளர்ச்சிக்காக வழங்கிட முடிவு செய்தார். தனக்கு பண உதவி செய்த நண்பர்களுக்கு நன்றி மறவாமல் தக்க முறையில் உபகாரம் செய்தார்.

இந்த நேரத்தில் ஸ்மித் சோனியன் என்ற தனியார் நிறுவனத்தினர் அவருக்கு கைகொடுத்தனர். அவர்களது கூட்டு முயற்சியின் காரணமாக ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றை ஏற்படுத்தினார். அறிவியல் முன்னேற்றத்திற்கு பணம் சேர்ப்பதுதான் அதன் குறிக்கோளாக இருந்தது.

அவர் பெரும் பணக்கார நிலையை எட்டிப்பிடிக்காத போதிலும் கடன் தொல்லையில்லாமல் விடுபட்டார். தனது பேராசிரியர் வேலையை விட்டுவிட்டு அரசுப்பணியில் ஈடுபட்டார். வேதியியல் பிரிவின் தலைவராக விளங்கினார். உலோகவியல் பிரிவின் தலைவரானார். சுரங்கத்துறையின் இயக்குனராக செயல்பட்டார். அமெரிக்க அரசின் தொழில்சட்ட வல்லுனர்களில் ஒருவராக சமாதான மாநாட்டில் கலந்துகொண்டார்.

நைட்ரஜன் வாயுவை உரங்களில் நுழைத்து நிலைநிறுத்தும் உர உற்பத்தியிலும் மேதையாக விளங்கினார்.

ஹாலிபதக்கம், வாஷிங்டன் பரிசு போன்ற பல சிறப்பு பரிசுகளையும் பெற்றார். 1948-ல் தேசிய அறிவியல் கழக கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றபோது அங்குள்ள அறையிலேயே இயற்கை எய்தினார்.

தொழிற்சாலைகளில் வெளிவரும் நச்சுக் காற்றினால் மனித இனப் பரம்பரையே பாதிக்கின்ற போக்கை மாற்றியமைத்து தூய காற்றை இந்த உலகம் சுவாசிக்க வழி செய்த அவரை நாம் போற்றி வணங்கிட வேண்டும். அவரைப் போன்று நாட்டின் சுற்றுச்சூழலை பாதுகாக்க பாடடுபட வேண்டும்.

- கே.நல்லசிவம்



Next Story