பட்டுக்கோட்டை பிரபாகர் : கனவு நாயகி-32


பட்டுக்கோட்டை பிரபாகர் :  கனவு நாயகி-32
x
தினத்தந்தி 19 May 2019 5:09 AM GMT (Updated: 19 May 2019 5:09 AM GMT)

பிரபல நடிகை அபிநயா தங்களை அவமானப்படுத்தியதற்காக பாடம் கற்றுத்தர நடிகர்கள் இனியவனும், தீபக்கும் ஆலோசிக்கிறார்கள்.

அவன் அழுக்காயிருந்தான். அசிங்கமாயிருந்தான். அவனிடமிருந்து குமட்டுமளவிற்கு மதுவின் வாடை வீசியது. வீட்டின் ஹாலில் அமர்த்தலாக கால் மேல் கால் போட்டமர்ந்து பீடி புகைத்தபடி எதிரே நின்ற சுந்தரமூர்த்தியையும், ராஜ லட்சுமியையும் பார்த்தான்.

‘‘ராஜி! புருஷன் உசுரோட இருக்கறப்ப நீ வேற ஒருத்தனை சேர்த்துக்கிட்டது வெளில தெரிஞ்சா எப்படி இருக்கும்? அபிநயாவுக்கான மரியாதை என்னாகும்?’’ என்றான்.

‘‘ஏய்! நீ எதுக்கு இப்ப வந்திருக்கே?’’ என்றாள் ராஜலட்சுமி கொஞ்சமும் மிடுக்கும், அதிகாரமும் குறையாமல்.

‘‘புருஷனுக்கு நீ குடுக்கற மரியாதை இதுதானா ராஜி?’’
‘‘ச்சீ! என் பேரை சொல்லாத!’’
‘‘ஏன்.. பேரை மாத்திட்டியா?’’
‘‘அதுக்கு உனக்கு அருகதை இல்ல. நீ என் புருஷன்றதையே நான் மறந்து போயி பல வருஷமாச்சு’’
‘‘தெரியுமே. அதான் ஞாபகப்படுத்தலாம்னு வந்தேன்’’
‘‘இப்ப என்ன வேணும் உனக்கு?’’

‘‘இத பாரு.. நான் இருந்து அனுபவிக்க வேண்டிய இடத்துல ஏதோ ஒரு தெருநாயைக் கொண்டாந்து உக்கார வெச்சிருக்கியே..இது நியாயமா?’’

அதுவரை பொறுமையாக அமைதியாக நின்ற சுந்தரமூர்த்தி ஆத்திரம் தாங்காமல் பாய்ந்து அவன் சட்டையைப் பிடித்தார்.

‘‘யார்றா நாயி? கட்டின பொண்டாட்டியை விட்டுட்டு, பெத்த குழந்தையை விட்டுட்டு திடீர்னு ஓடிப் போனியே.. அப்பறம் திரும்பியாவது பார்த்தியா? ஒரு போனாவது பேசினீயா?’’

‘‘இரு.. இருப்பா.. இதெல்லாம் கேக்கறதுக்கு நீ யாரு? மொதல்ல அதைச் சொல்லு! என் பொண்டாட்டிக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்? ஒரு வேளை நீ அவளுக்கு தாலி கட்டியிருந்தா அது சட்டப்படி தப்பு.’’

‘‘சட்டப்படி நீதான் புருஷன்.. ஆனா இத்தனை நாள் அந்த நினைப்பு உனக்கு இருந்திச்சா? இன்னிக்கு நாங்க வசதியா புகழா இருக்கறதால தேடிட்டு வந்துட்டே! குடும்பம்னா என்ன.. பாசம்னா என்னன்னு உனக்கென்னடா தெரியும் ராஸ்கல்?’’

‘‘சாருக்கு எல்லாமே டபுள் மடங்கு தெரியும் போலருக்கு.. அதனாலதான் ஊர்ல ஒரு குடும்பம் வெச்சிக்கிட்டு இங்க ஒரு ரகசிய குடும்பம் செட் பண்ணிட்டாரு..’’

ஆச்சரியமாகப் பார்த்தார் சுந்தரமூர்த்தி.

‘‘என்னடா பாக்கறே? உன்னைப்பத்தி, இங்க நடக்கற கூத்தைப்பத்தி பூரா விவரமும் தெரிஞ்சிக்கிட்டுதான் வந்திருக்கேன். என்ன தைரியம் இருந்தா நான் தாலி கட்டின பொண்டாட்டியோட குடித்தனம் நடத்திக்கிட்டு என்னையே கேள்வி கேப்பே? உனக்கென்னடா யோக்யதை இருக்கு?’’

சுந்தரமூர்த்தி வாயடைத்துப் போனார்.
அமைதியாக ஓரமாக நின்றுகொண்டார்.

‘‘நான் பேசிட்டிருக்கறது என் பொண்டாட்டிகிட்ட.. எது சொல்றதா இருந்தாலும் அவ சொல்லட்டும்.. நீ குறுக்க வந்து எதாச்சும் பேசினே..’’ என்ற அவன் சட்டென்று தன் மடியிலிருந்து பள பளக்கும் கத்தியை வெளியில் எடுத்து டீப்பாய் மீது வைத்தான்.

ராஜலட்சுமி அதட்டலாக, ‘‘ஏய்..சுதாகர்! மரியாதையா வெளில போயிடு! உங்கூட பேசறதுக்கு எனக்கு எதுவும் இல்ல. உன்னை நான் எப்பவோ தலை முழுகிட்டேன்’’ என்றாள்.

‘‘நான் தலைமுழுகலையே..’’
‘‘இப்ப உனக்கு என்னதான் வேணும்?’’
‘‘இவனை நீ இப்பவே இந்த நிமிஷமே துரத்தியடிக்கணும். இனிமே நான்தான் இந்த வீட்டுக்குத் தலைவன்.’’
‘‘முடியாது! அதெல்லாம் நடக்காது!’’

‘‘ஏண்டி நடக்காது? நான் குடுக்காத என்ன சுகத்தைடி அவன் ஸ்பெஷலா குடுத்துட்டான்?’’

‘‘நான் நொந்து போயிருந்தப்ப என் மனசுக்கு ஆறுதலா இருந்தார். எனக்கும் அபிநயாவுக்கும் பாதுகாப்பா இருந்தார். எங்க ரெண்டு பேரையும் நிஜமா நேசிச்சார். இவர் மட்டும் என் வாழ்க்கையில வரலைன்னா நான் எப்பவோ விஷம் குடிச்சி செத்துப் போயிருப்பேன்.’’

‘‘ஓ.. அப்படியா? அப்படின்னா ஒரு பெரிய தேங்ஸ் சொல்லி கொஞ்சம் பணத்தையும் குடுத்து அனுப்பி வெச்சிடு.. பாவம்.. என்ன இருந்தாலும் இவ்வளவு செஞ்சவரை வெறும் கையோட அனுப்ப வேணாம்.’’

‘‘ராஜி..நான் போயிடறேன்’’ என்று நகர்ந்த சுந்தரமூர்த்தியை, ‘‘நில்லுங்க!’’ என்று கத்தி நிறுத்தினாள்.

‘‘நீங்க ஏன் போகணும்? என் மனசுலயும் சரி.. இந்த வீட்லயும் சரி.. இந்தப் பன்னாடைக்கு இடமில்ல.. உங்களுக்குதான் எல்லா உரிமையும் இருக்கு. போலீசுக்கு போன் பண்ணுங்க’’

சுதாகர் இடிஇடியென்று பெரிய நகைச்சுவை கேட்டதைப் போல சிரித்தான்.

‘‘கூப்புடுப்பா, சீக்கிரம் கூப்புடு. அப்படியே பத்திரிகைகாரங்களையும் சேர்த்து கூப்புடு. இத்தனை நாளு அபிநயாவோட அப்பா நீதான்னு நினைச்சிருந்தாங்க.. அவங்களுக்கு உண்மை தெரியட்டும்.. யார் மூஞ்சில காறித் துப்புவாங்கன்னு பார்ப்போம்..’’

இரண்டு பேரும் மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் நின்றபோது.. படப்பிடிப்பு முடிந்து வந்த அபிநயா வீட்டுக்குள் நுழைந்தாள்.

‘‘என் அருமை மகளே வர்றா.. நியாயத்தை அவகிட்டயே கேப்போம்.. வாம்மா ராசாத்தி.. நல்லாருக்கியா?’’

உள்ளே வந்த அபிநயா ஏதோ வினோத வஸ்துவைப் பார்ப்பதுபோல முகத்தைச் சுளித்துப் பார்த்து, ‘‘யாரும்மா இது?’’ என்றாள்.

‘‘அபி கண்ணு.. என்னை தெரியலையாடா ராஜா.. தாடியும், மீசையுமா ஆளே அடையாளம் தெரியாம மாறிட்டேன். உங்கப்பனை உனக்கு அடையாளம் தெரியாமப் போச்சா?’’

அபிநயா உற்றுப் பார்த்து இப்போது நினைவுக்கு வர.. அதிசயமாகப் பார்த்தாள்.

‘‘கண்ணு.. நான் ரொம்பப் பெரிய தப்பு பண்ணிட்டேன். உன்னையும், அம்மாவையும் அம்போன்னு விட்டுட்டுப் போனது தப்புதான். இப்ப திருந்திட்டேன் கண்ணு. இந்தாளை துரத்திவிட்டுட்டு என்னை வீட்ல சேர்த்துக்கோன்னு சொன்னா என்னை திட்றாம்மா உன் அம்மா’’

‘‘அப்படி ஒரு முடிவை எங்கம்மா எடுத்தா அம்மாவையும் வீட்டை விட்டு வெளில போன்னு சொல்லிடுவேன்.. யோவ்.. நீ எல்லாம் ஒரு அப்பாவா? திடீர்னு போவே.. பல வருஷம் கழிச்சி திடீர்னு வருவே. நீ எங்க போனே, ஏன் போனே எதுவும் கேக்கக்கூடாது. மறுபடி உன்னைச் சேர்த்துக்கணும். சில விஷயங்களுக்கு மன்னிப்பே கிடையாது. அம்மா.. அந்தாளை வெளில போகச் சொல்லு.. இல்லைன்னா நானே கழுத்தைப் பிடிச்சி வெளில தள்ளுவேன்..’’

சுதாகருக்கு ஆத்திரம் பொங்கியது.

‘‘தள்ளுவடி! நான் பெத்து வளர்த்த பொண்ணுடி நீ! என் ரத்தம்! பணம், புகழ் சேர்ந்ததும் தலைக்கு போதையேறி பேசறீயா? கழுத்தைப் பிடிச்சி தள்ளுவியா?’’

‘‘என் வீட்ல திருட வந்தேன்னு சொல்லி உன்னை உள்ளேகூட தள்ளுவேன். போயிடு வெளில!’’

‘‘அவ்வளவு ராங்கியாடி உனக்கு? இந்த மூஞ்சி இருந்தாதான நடிப்பே..? அதுல ரெண்டு கொடு போட்டா?’’

சட்டென்று கத்தியை எடுத்துக்கொண்டு அவன் அபிநயா மீது பாய்ந்து அவள் கையை பின்னால் முறுக்கிப் பிடித்து.. அவள் அலற அலற.. கத்தியை அவள் முகத்துக்குக் கொண்டு சென்றபோது.. சுந்தரமூர்த்தி இடையில் புகுந்தார்.

கத்தியுடனிருந்த அவன் கையை அழுத்தமாகப் பிடித்துத் திருப்பி அவன் பிடியிலிருந்து அபிநயாவை விடுவித்து அவன் முகத்தில் ஓங்கி ஒரு குத்துவிட.. சுதாகர் தடுமாறி கீழே விழுந்தான்.

அவன் கையிலிருந்து கத்தி விலகிச் சென்று விழுந்தது. தடுமாறி எழுந்த அவன் முழு ஆத்திரத்தில் அப்படியே ராஜலட்சுமி மேல் பாய்ந்து இரண்டு கைகளாலும் அவள் கழுத்தை நெறிக்கத்தொடங்கினான்.

‘‘எல்லாம் உன்னாலதான். உன்னைக் கொலை பண்ணாம விட மாட்டேன்’’

வெறித்தனமாக கத்தியபடி அவன் இன்னும் அழுத்தமாக கழுத்தை நெறிக்க.. ராஜலட்சுமிக்கு விழிகள் பிதுங்கின.. மூச்சுக்குத் தவித்தாள்.

சுந்தரமூர்த்தி தன் பலமனைத்தையும் கொண்டு அவனை ராஜலட் சுமியிடமிருந்து விலக்க முயற்சி செய்தும் முடியாமல் போக.. இதைப் பார்த்துக்கொண்டிருந்த அபிநயா உச்சமான பதட்டத்தில் கீழேக் கிடந்த அந்தக் கத்தியை எடுத்து வந்து சுதாகரின் இடுப்பில் ஆவேசமாக இரண்டு முறைக் குத்தினாள்.

ரத்தம் பீறிட்டது.
அவன் பிடி விலகியது.
அவன் மெதுவாக சரிந்தான்.
ராஜலட்சுமி புஸ்புஸ் என்று மூச்சு வாங்கினாள்.

‘‘அபிநயா.. ஆம்புலன்சுக்கு போன் செய்’’ என்றார் சுந்தரமூர்த்தி. ‘‘பிரயோஜனமில்லை.. செத்துட்டான்’’ என்றாள் அபிநயா உலர்ந்த குரலில்.

ராஜலட்சுமியும், சுந்தரமூர்த்தியும் உச்சமான அதிர்ச்சியில் அப்படியே சிலையாக நின்றார்கள்.


Next Story