அன்று ‘300’ இன்று ‘86’ - அமிதா ரஜனி


அன்று ‘300’ இன்று ‘86’ - அமிதா ரஜனி
x
தினத்தந்தி 19 May 2019 6:25 AM GMT (Updated: 19 May 2019 6:25 AM GMT)

ஆச்சரியப்பட வைக்கும் விதத்தில் 214 கிலோ எடையை குறைந்து மெலிந்த தோற்றத்திற்கு மாறி இருக்கிறார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உடல் பருமன் பிரச்சினையால் அவதிக்குள்ளாகி எழுந்து நடமாட முடியாமல் படுத்தபடுக்கையாக இருந்த பெண்மணி ஆச்சரியப்பட வைக்கும் விதத்தில் 214 கிலோ எடையை குறைந்து மெலிந்த தோற்றத்திற்கு மாறி இருக்கிறார். 300 கிலோ எடை இருந்தவர் இப்போது 86 கிலோவாக குறைந்திருக்கிறார். அவரது பெயர் அமிதா ரஜனி. 42 வயதாகும் இவர் எடையை குறைக்க கடும் போராட்டத்தை சந்தித்திருக்கிறார். புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணரான சாஷ்காங் ஷா, அமிதாவுக்கு பக்கபலமாக இருந்து இந்த வியத்தகு மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.

‘‘இது நம்ப முடியாத விஷயம். இத்தகைய எடை குறைப்பை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. 300 கிலோ எடை இருந்தவர் நான்கு ஆண்டுகளில் படிப்படியாக 214 கிலோ வரை எடை குறைந்து 86 கிலோவுக்கு மாறி இருக்கிறார்’’ என்கிறார், சாஷ்காங் ஷா.

அமிதா உடல் பருமன் பிரச்சினை மட்டுமின்றி சிறுநீரக செயலிழப்பு, கொழுப்பு அதிகரிப்பு, நீரிழிவு நோய், சுவாச கோளாறு போன்ற பாதிப்புகளாலும் அவதிப்பட்டு வந்துள்ளார். இத்தகைய பாதிப்புகளுக்கு மத்தியில் எடையை குறைப்பதற்கு டாக்டர்கள் குழு கடும் முயற்சி மேற்கொண்டிருக்கிறது. தற்போது அமிதா எந்த மருந்தும் எடுத்துக்கொள்ளாத அளவுக்கு நலமாக இருக்கிறார். அவரது எடை குறைப்பு பற்றிய விவரம் லிம்கா சாதனைக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

அமிதா மகாராஷ்டிரா மாநிலம் பால்கார் மாவட்டத்திலுள்ள வசை பகுதியை சேர்ந்தவர். ‘‘என்னால் இனி எழுந்து நடக்கவே முடியாது என்று தான் நினைத்திருந்தேன். இப்போது வெளி இடங்களுக்கு சென்று வருகிறேன். ரெயிலில் இரண்டாம் வகுப்பில் கூட கூட்ட நெரிசலுக்கு மத்தியில் பயணிக்கிறேன்’’ என்கிறார்.

6 வயது வரை அமிதா மற்ற குழந்தைகளை போல இயல்பாகவே இருந்திருக்கிறார். அதற்கு பிறகுதான் உடல் எடை அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. ‘‘நான் 10-ம் வகுப்பு படித்தபோது 126 கிலோ எடை இருந்தேன். கல்லூரி இறுதி ஆண்டில் 170 கிலோவை எட்டியிருந்தேன்’’ என்கிறார்.

அமிதாவை லண்டனுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்திருக்கிறார்கள். ஆனால் அங்குள்ள மருத்துவர்களால் அவருக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சினையை கண்டுபிடிக்கமுடியவில்லை.

அமிதா அதிக எடை இருந்தபோது ஏராளமான சிரமங்களை அனுபவித் திருக்கிறார். ‘ஒருமுறை படுக்கையில் இருந்து கீழே விழுந்துவிட்டேன். அரை மணி நேரம் வரை என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. சமீபத்தில் கீழே விழுந்தேன். ஆனால் இரண்டு நிமிடங்களில் எழுந்து நின்றுவிட்டேன். இப்போது முழு ஆரோக்கியத்துடன் செயல் படுகிறேன். என்னால் தனியாக வெளியே சென்றுவரவும் முடியும்’’ என்கிறார்.

அமிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ஷா திட்டமிட்டு முறையாக சிகிச்சை அளித்திருக்கிறார். ‘‘2015-ம் ஆண்டு வளர்சிதை மாற்றம் தொடர்பான அறுவை சிகிச்சை அமிதாவுக்கு மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு அவரது நிலையில் முன்னேற்றம் ஏற்பட தொடங்கியது. உடல் எடை குறைய தொடங்கி, அவரால் சுயமாக நடக்க முடிந்தது. 2017-ம் ஆண்டு இரைப்பை அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. அதன் பிறகு அவரது எடை 140 கிலோவாக குறைந்தது. பின்பு படிப்படியாக குறைந்து 86 கிலோ ஆகிவிட்டார்’’ என்கிறார்.


Next Story