சிறப்புக் கட்டுரைகள்

வழி காட்டும் வைர வரிகள்...! + "||" + Diamond lines showing the way ...

வழி காட்டும் வைர வரிகள்...!

வழி காட்டும் வைர வரிகள்...!
வைர வரி, பொன்மொழி, மணி வார்த்தை, இவற்றிற்கான வரைவிலக்கணம் எது?
விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஓர் உள்ளத்தில் எது நம்பிக்கையை ஊற்றெடுக்கச் செய்கிறதோ, அதுவே வைர வரி; தோல்வியின் தாக்கத்தால் துவண்டு கிடக்கும் ஒரு நெஞ்சத்தில் எது எழுச்சியை விதைக்கிறதோ, அதுவே பொன்மொழி; வாழ்வில் குறிக்கோள் எதுவும் இல்லாமல், வீணே சோம்பித் திரியும் மனதில் எது உயிர்களை தோன்றுமாறு செய்கிறதோ, அதுவே மணி வார்த்தை. ஒட்டுமொத்த மனித குலத்திற்கு என்றென்றும் தேவைப்படுகிற செய்தியை எது நல்குகிறதோ, அதுவே சான்றோர் வாக்கு; மந்திர மொழி.

‘அன்பே சிவம்’ என்பது திருமூலர் வாக்கு. இதனை, ‘அன்பே தவம்’ என மொழிவார் பாரதியார். ‘அன்புற்றார் இன்புற்று வாழ்தல் இயல்பு’ என்பது அவரது முடிந்த முடிபு. ரத்தினச் சுருக்கமாகக் கூறுவது என்றால், அன்பு நெறியே தமிழர் நெறி; ‘அன்பின் வழியது உயிர்நிலை’. அன்பின் வலிமையைப் பறைசாற்றும் ஓர் இந்தியப் பழமொழி இதோ: “அன்பு இருந்தால், புளிய மரத்தின் இலையில் இருவர் படுக்கலாம்”. பருத்தியைப் போல ஒருவன் அன்பு செலுத்தினால், வாழ்க்கையில் அது ஆடையாக அவனைக் காத்து, மரணத்திலும் அவனுடனேயே வரும்.

உலகில் வாழ்வது எப்படி? நம் தந்தையும், தாயும் நமக்குப் பேசக் கற்பித்தனர்; உலகமோ நமக்கு வாயை மூடிக் கொண்டிருக்கக் கற்பித்துள்ளது. ‘எல்லோருக்கும் காதைக் கொடு; யாரிடமும் வாயைக் கொடுக்கதே!’ (‘வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிக் கொள்ளாதே!’) என்பது இந்நூற்றாண்டின் புதுமொழி; அனுபவ மொழி. அலசிப் பார்த்தால் உலகத்தின் நடைமுறை இதுதான்: பணம் ஒருவன் கையில், பையோ மற்றொருவன் கையில். எனவே, உலகத்தின் இயல்பை உள்ளபடி புரிந்து கொண்டு, உலகத்தோடு ஒட்ட ஒழுக வேண்டும். “நீ இனிமையாய் இருந்தால், உன்னை விழுங்கி விடுவார்கள்; கசப்பாய் இருந்தால், உன்னை வெளியே துப்பி விடுவார்கள்” எனப் போலந்துப் பழமொழி விடுக்கும் எச்சரிக்கை அனைவரும் கருத்திலும், கவனத்திலும் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

ரொட்டிக்கும் உப்புக்கும் மேலாக எதுவும் இல்லை! ஏழை மக்களுக்குப் பொருளாதாரமே ஆன்மிகத் தத்துவம் ஆகும். பட்டினி கிடக்கும் கோடிக் கணக்கான மக்களுக்கு நீங்கள் வேறு வேண்டுகோள் எதுவும் விடுக்க முடியாது. அவர்கள் அதற்குச் செவி சாய்க்க மாட்டார்கள். ஆனால் நீங்கள் அவர்களுக்கு உணவு எடுத்துச் செல்லுங்கள். அவர்கள் உங்களை அவர்களுடைய கடவுளாகவே கருதுவார்கள்” என்பது காந்தியடிகளின் திண்ணிய கருத்து. இதனைச் சுண்டக் காய்ச்சிய வடிவில், சிந்திக்கத் தூண்டும் விதத்தில் வெளியிட்டுள்ளது ஒரு ரஷியப் பழமொழி: “எவ்வளவு வேண்டுமானாலும் யோசனை செய்யுங்கள் ரொட்டிக்கும் உப்புக்கும் மேலாக எதையும் நீங்கள் கண்டுபிடிக்க முடியாது”. நாட்டு மக்கள் அனைவருக்கும் ரொட்டியும் உப்பும் கிடைக்க வழி வகை செய்துவிட்டால் போதும், உலகம் இன்பம் விளையும் தோட்டமாக உடனடியாக வடிவெடுத்து விடும்.

துயரங்களுக்கான பரிகாரங்கள் காலமும் மவுனமும். வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் துயரங்கள், பாரதியாரின் பாணியிலே ‘வலிமையற்ற தோளினாய் போ போ போ’ என்றால் நம்மை விட்டுப் போய் விடாது. இதே போல், இன்பங்கள், ‘உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா’ என்று அழைத்தால் நம்மிடம் ஓடி வந்து விடாது. ‘இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம், இறைவன் வகுத்த நியதி’ என்னும் கவியரசர் கண்ணதாசனின் வாக்கிற்கு ஏற்ப, இரண்டையும் இயல்பு என அமைதியாகவும், பொறுமையாகவும் ஏற்றுக்கொண்டு நம்பிக்கையோடு வாழ்ந்து காட்டுவது தான் வெற்றியின் தாரக மந்திரம். இதனை, “எல்லாத் துயரங்களுக்கும் இரண்டு பரிகாரங்கள் உண்டு: அவை காலமும் மவுனமும்” என ஒரு பிரான்ஸ் பழமொழி தெளிவுற மொழிந்துள்ளது. வாழ்வில் சுகம் எப்போதும் தனித்தே வரும்; சோகம் எப்போதும் படையுடன் அணிவகுத்தே வரும். அதற்காக, சுகம் வரும் போது துள்ளிக் குதிப்பதிலோ, சோகம் தாக்கும் போது துவண்டு போவதிலோ யாதொரு பயனும் இல்லை; சிந்தித்துப் பார்த்தால் பொருளும் இல்லை. சுகமும் சோகமும் சரி விகிதத்தில் சேர்ந்தமைந்ததே வாழ்க்கை. இதனைப் புரிந்து கொண்டால், வாழ்வில் இன்பமே எந்நாளும்; துன்பம் இல்லை. விழுமிய இவ்வாழ்வியல் பாடத்தினைச் சீனப் பழமொழி ஒன்று தனக்கே உரிய பாணியில் அழகுறப் பதிவு செய்துள்ளது: சோகம் என்ற பறவைகள் உன் தலைக்கு மேலே பறப்பதை நீ தடுக்க முடியாது. ஆனால் அவைகள் உன் தலையிலே கூடு கட்டி வசிப்பதை நீ தடுக்கலாம். இதில் ‘தடுக்கலாம்’ என்பதற்குப் பிறகு ‘இடைவிடாது முயற்சி செய்தால்’ என்பதைச் சேர்த்துக் கொண்டால் போதும்!

உயிருள்ள போதே தேடிக் கொள்ள வேண்டும்! இறந்தவன் இறுதிப் பயணத்தில் எத்தனை பேர் வருகிறார்கள் என்று ஒருமுறை கண்களைத் திறந்து பார்த்தான் வாழ்ந்ததற்கு வருத்தப்பட்டு மறுபடியும் கண்களை மூடிக்கொண்டான்” என்பது கவியருவி ஈரோடு தமிழன்பனின் முத்திரைக் கவிதை. சரி, அப்படி என்றால், ஒரு மனிதன் தான் இறந்ததற்குப் பின்னரும் உலகால் நினைக்கப்பட வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? இந்த ‘மில்லியன் டாலர்’ வினாவுக்கு எகிப்துப் பழமொழி தரும் மிகச் சரியான விடை இது:

“நீ இறக்கும் பொழுது உனக்காக அழக்கூடியவர்களை, உயிருள்ள போதே நீ தேடி வைத்துக் கொள்ள வேண்டும்”. அதற்கு நீ, கைம்மாறு கருதாமல், மனித நேயத்தோடு நாலு பேருக்கு நல்லது செய்ய வேண்டும், அது போதும்! மனிதன் உலகிற்கு விட்டுச்செல்லவே இறைவன் படைப்பில் மனிதனே தலைசிறந்தவன். அவன் இயற்கையில் ஓர் அற்புதம். ‘வந்தான் வாழ்ந்தான் போனான்’ என ஒரு மனிதன் வாழ்வதற்குப் பெயர் ‘வாழ்வு’ அன்று; அது ‘வேடிக்கை வாழ்வு’. ஒரு மனிதன் வாழ்ந்தான் என்பதற்கான சிறந்த அடையாளங்களாக, அவன் ஒரு வீடாவது கட்டியிருக்க வேண்டும்; ஒரு மகனையாவது பெற்றிருக்க வேண்டும்; ஒரு நூலாவது எழுதி இருக்க வேண்டும்” என்று இத்தாலிய பழமொழி ஒன்று அழகுற குறிப்பிட்டுள்ளது.

- முனைவர் இரா.மோகன், முன்னாள் பேராசிரியர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்.


ஆசிரியரின் தேர்வுகள்...