சிறப்புக் கட்டுரைகள்

மறக்க முடியாத மாபெரும் தலைவர் ராஜீவ் காந்தி ! இன்று நினைவு நாள் + "||" + Rajiv Gandhi Memorial Day

மறக்க முடியாத மாபெரும் தலைவர் ராஜீவ் காந்தி ! இன்று நினைவு நாள்

மறக்க முடியாத மாபெரும் தலைவர் ராஜீவ் காந்தி ! இன்று நினைவு நாள்
மறக்க முடியாத மாபெரும் தலைவர் ராஜீவ் காந்தி ! இன்று நினைவு நாள்
மறக்க முடியாத மாபெரும் தலைவர் ராஜீவ் காந்தி !   இன்று நினைவு நாள்

அன்று பிரதமராக இருந்த தமது அன்னை இந்திரா காந்தி பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட சில மணி நேரத்தில், நாட்டின் நலன் கருதி, கடமை உணர்ச்சியுடன் பிரதமராக ராஜீவ் காந்தி பொறுப்பு ஏற்றுக்கொண்டு, செயலாற்றிய விதம் எல்லோரையும் புல்லரிக்கச் செய்தது. எல்லோரும் தாயை இழந்த தனயனுக்கு ஆறுதல் கூறுகிற நிலை மாறி தனயனே எல்லோருக்கும் ஆறுதல் கூறிய காட்சியை அல்லவா நாம் பார்த்தோம். தாயின் ஈமச் சடங்கின்போது, அவர் நடந்துகொண்ட விதம் நாட்டு மக்களுக்கு நம்பிக்கையைத் தந்தது.

அன்று ராஜீவ் காந்தி, படுகொலை செய்யப்பட்ட இந்திரா காந்தியின் தனயன் மட்டுமல்ல! 85 கோடி மக்களின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஒரு பிரதமரும் கூட. இந்திரா காந்தியை எரித்த சாம்பலில் இருந்து இந்த நாட்டைக் காக்க எழுந்த ரட்சகனாக அல்லவா அன்று ராஜீவ் காந்தி எழுந்து நின்றார்.

பிரதமர் பொறுப்பை ஏற்ற சில நாட்களிலேயே பொதுத்தேர்தலுக்கு அறிவிப்பு வெளியிட்டு, மக்களின் பெருவாரியான வாக்குகளைப் பெற்று, தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக பிரதமராக, உலகத்தின் முன்னே கம்பீரமாக நின்ற ராஜீவ் காந்தி, ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்குவதில் அல்லும்பகலும் அயராது உழைத்தார்.

இந்திய அரசியலில் நேரு, இந்திரா, ராஜீவ் என்பது வாரிசு உரிமையின் அடிப்படையில் உருவானதல்ல. மக்கள் தங்கள் விருப்பத்தை ஜனநாயக முறையில் உருவாக்கிய பாரம்பரியமே இது. இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் மக்கள் ஆதரவால் தலைவர்கள் ஆனார்கள். மக்கள்தான் தங்கள் விருப்பத்தின் மூலம் ஜனநாயகரீதியாக இந்த பாரம்பரியத்தை உருவாக்கினார்கள்.

நேரு குடும்பத்தினர் நாட்டு நலன் கருதி தான் அரசியலுக்கு வந்தார்களே தவிர, சுயநலத்தோடு வந்ததாக எவரும் கூறமுடியாது. அதனால்தான், நேரு குடும்பத்தினரை மக்கள் நேசித்தார்கள். போற்றினார்கள். இன்றும் பாராட்டி வருகிறார்கள்.

தமது நாற்பதாவது வயதில் பாரத நாட்டின் இளைய பிரதமராக பொறுப்பேற்ற ராஜீவ் காந்தி நிகழ்த்திய சாதனைகள் ஏராளம் ஏராளம். இந்த நாட்டின் வறுமையை விஞ்ஞானத்தாலும், தொழில்நுட்பத்தாலும்தான் விரட்ட முடியும் என்று ராஜீவ் காந்தி நம்பினார். தகவல் தொழில்நுட்பத்துறையில் புரட்சியை ஏற்படுத்தினார். இந்திய மக்களை 21-ம் நூற்றாண்டிற்கு அழைத்துச் செல்ல தொலைநோக்கு பார்வையுடன் திட்டங்களை தீட்டினார். நாட்டை எதிர்நோக்கி இருந்த பல பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு திறந்த மனதுடன் பல முயற்சிகளை மேற்கொண்டார். அவரது அணுகுமுறையில் வித்தியாசம் இருந்தது. மாறுதல் இருந்தது. பஞ்சாப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும், அசாம் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் உடன்பாடு கண்டார்.

இந்த உடன்பாட்டைக் காண்பதில் அரசியல் கண்ணோட்டமின்றி, நாட்டு நலனையே பெரிதாக மதித்தார். கூர்க்கா பிரச்சினையையும், மிசோ மக்கள் பிரச்சினையையும் தீர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். எதிலும் ஒரு முடிவு காண வேண்டுமென்பதில் கண்ணும், கருத்துமாக இருந்து செயல்பட்டார். ஜனநாயகத்தில் அதிகாரங்கள் ஓரிடத்தில் குவிந்திருப்பதைத் தடுத்து, அதைக் கீழ்மட்டத்திலும் பகிர்ந்து கொடுக்க ‘பஞ்சாயத்து ராஜ்’, ‘நகர்பாலிகா’ சட்டத்தை கொண்டுவந்து, ‘மக்களுக்கே அதிகாரம்’ என்ற லட்சியத்தை அடைய முயன்றார்.

அண்டை நாடுகளோடு நல்லுறவு காண்பதில் தீவிரம் காட்டினார். மாலத்தீவில் ஆட்சியை எதிர்த்து கலகப்போர் நடந்தபோது, அந்த அரசு கேட்டுக்கொண்டதற்கிணங்க ராணுவத்தை அனுப்பி, நொடிப்பொழுதில் போரை அடக்கி அந்நாட்டைக் காப்பாற்றிய பெருமை நமது இந்தியாவுக்கு உண்டு. நமது ராஜீவ் காந்திக்கு உண்டு. சகோதர சகவாழ்வு நமது லட்சியமாக இருந்தது என்பதற்கு இது ஓர் உதாரணம். அந்நிய நாடுகளானாலும், அண்டை நாடுகளானாலும் சுமுகமான உறவுகாண ‘சார்க்’ என்ற அமைப்பை உருவாக்க பெரும் பங்காற்றினார்.

1988-ல் ராஜீவ் காந்தியின் சீன விஜயம், அந்நாட்டுடன் நமது உறவுகளைப் புதுப்பிக்க பெரிதும் உதவியது. வரலாற்று புகழ்மிக்க டெல்லி பிரகடனம், ‘ஆப்பிரிக்க நிதி’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, இன ஒதுக்கக் கொள்கையில் சிக்கியுள்ள மக்களைக் காக்க பெரிதும் முயன்றவர் ராஜீவ் காந்தி. நமீபியா விடுதலை பெற உலக அரங்கில் குரல் கொடுத்து, அந்த நாட்டு மக்களுக்கு விடுதலையும் பெற்று தந்தார் ராஜீவ் காந்தி. சர்வதேச அரங்கில் வடக்கு, தெற்கு பிரச்சினையாக இருந்தாலும், தெற்கு தெற்கு கூட்டுறவாக இருந்தாலும், ஐ.நா. சம்பந்தப்பட்ட விவகாரமாக இருந்தாலும், அணிசேரா நாடுகளின் பிரச்சினையாக இருந்தாலும், காமன்வெல்த் விவகாரமாக இருந்தாலும் இவற்றில் ராஜீவ் காந்தியின் பங்கு எல்லோரும் வியக்கும் வகையில் இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.

ராஜீவ் காந்தி தமது இளம் வயதிலேயே அணிசேரா இயக்கத்தின் தலைவராகவும், காமன்வெல்த் நாடுகளின் உந்துசக்தியாகவும் விளங்கியவர். ஐந்து கண்டங்களைச் சேர்ந்த ஆறு நாடுகளின் துணையுடன் அவர் மேற்கொண்ட ஆயுதக் குறைப்பு முயற்சி, அனைவராலும் பாராட்டப்பட்டது. வரவேற்கப்பட்டது.

இலங்கை தமிழர்களின் 40 ஆண்டு கால பிரச்சினைகளை தீர்க்க அதிபர் ஜெயவர்த்தனாவுடன் இந்திய-இலங்கை உடன்பாடு கண்டார். இலங்கை தமிழர் பிரச்சினையை அரசியல் நோக்கத்தோடு பார்க்காமல், மனிதாபிமான அடிப்படையில் அதற்கு ஒரு நிரந்தர தீர்வுகாண உடன்பாட்டின் மூலம் முயற்சிகள் செய்தார். ஐந்தே ஆண்டுகளில் இந்திய நாட்டின் பிரதமராக தேசிய அளவிலும், சர்வதேச அரங்கிலும் பார் போற்றும் வகையில் இத்தகைய சாதனைகளைப் படைத்த, இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தலைவர் ராஜீவ் காந்தி.

உலக சமாதானத்தின் தூதுவராகவும், இந்திய ஜனநாயகத்தின் பாதுகாவலராகவும், மதசார்பற்ற வலிமையான ஒன்றுபட்ட இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் ஜொலித்த இந்தியாவின் மாபெரும் தலைவர் ராஜீவ் காந்தியை இதே தமிழ் மண்ணில் தேர்தல் பிரசார கூட்டத்திற்கு வந்தபோது, நம்மிடமிருந்து பயங்கரவாதிகளால் பறிக்கப்பட்ட நாள் மே 21.

இந்திய அரசியல் வரலாற்றில் இத்தகைய கோரச் சம்பவங்களை சுதந்திரம் அடைந்தபோதே இந்த நாடு சந்தித்தது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அடிமை விலங்கை உடைத்தெறிய இந்த நாட்டு மக்கள், யார் தலைமையில் அகிம்சை வழியில் போராடினார்களோ அந்த மகாத்மாவை மதவெறி பிடித்த பாசிச சக்திகள், சுதந்திரம் அடைந்த உடனேயே படுகொலை செய்தனர். சுதந்திர இந்தியாவின் பிரதமராக 16 ஆண்டுகள் பதவி வகித்து, உலக அரங்கில் இந்தியாவை ஒளிரச்செய்த அன்னை இந்திரா காந்தி, பிரிவினைவாத வன்முறை சக்திகளின் குண்டுகளுக்கு பலியானார்.

ராமானுஜர் பிறந்த புனித மண்ணில் இறவா புகழுக்குச் சொந்தக்காரராக நம் இதயங்களில் என்றென்றும் நினைவில் நிற்கும் உன்னத தலைவர் ராஜீவ் காந்தியின் உயிரை சுயநலமும், சூதும், நயவஞ்சகமும் கொண்ட நாசகார சக்திகள் நம்மிடமிருந்து பறித்துவிட்டன.

ராஜீவ் காந்தி கொலையில் சம்பந்தப்பட்டவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க பரிந்துரை செய்து கருணை காட்டியவர் சோனியா காந்தி. எவரையும் பழிவாங்குவது காங்கிரசின் நோக்கம் அல்ல. சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும் என்பதே காங்கிரசின் நிலைப்பாடு.

எனவே, இந்தியாவின் இணையற்ற தலைவர் ராஜீவ் காந்தியை கொன்றவர்களை, குற்றவாளிகள் என்று அழைக்காமல், தமிழர்கள் என்று அழைக்கலாமா? பரிவு காட்டலாமா? மறைந்த தலைவரோடு, மாண்டுபோன 16 அப்பாவி தமிழர்களின் குடும்பங்களுக்கு பரிவு காட்டாமல், கொலையாளிகளுக்கு பரிந்து பேசுவதுதான் பண்பாடா? நியாயமா? இந்தியாவை ஐம்பதாண்டு காலத்துக்கும் மேலாக வழி நடத்தக்கூடிய ஆற்றல்மிக்க ஒப்பற்ற தலைவரை இதே நாளில் சதிதிட்டத்தின் மூலம் பயங்கரவாதத்திற்கு பலிகொடுத்தோம். இழந்தது போதும், பயங்கரவாத சக்திகளை முறியடிக்க இந்நாளில் சூளுரை ஏற்போம். இதுவே மறைந்த தலைவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலி.

- கே.எஸ்.அழகிரி, தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

ஆசிரியரின் தேர்வுகள்...