கலைந்து போன கனவுகள்...!


கலைந்து போன கனவுகள்...!
x
தினத்தந்தி 24 May 2019 6:13 AM GMT (Updated: 24 May 2019 6:13 AM GMT)

நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை பாரதீய ஜனதா கட்சியின் வெற்றி என்பது ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்று தான்.

தமிழகம், கேரளா, ஆகிய 2 மாநிலங்களை தவிர மோடிக்கு எதிராக பெரிய எதிர்ப்பு அலை உருவாகவில்லை என்பது தான் உண்மை. மோடி என்ற தனி நபரை மட்டும் குறி வைத்து இந்தியாவில் உள்ள கட்சிகள் அனைத்தும் தாக்குதல் நடத்தியதை பெரும்பாலான இந்திய மக்கள் வரவேற்கவில்லை. காங்கிரஸ் உள்பட இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் மோடியை பாசிசத்தின் வடிவமாகவே சித்தரித்தார்கள். பா.ஜ.க. ஆட்சியை வகுப்பு வாதத்தை வளர்த்தெடுக்கும் ஆட்சியாகவே அவர்கள் வர்ணித்தார்கள்.

மோடி மீண்டும் பிரதமர் ஆனால் இந்திய ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்படும் என்று திரும்ப, திரும்ப அவர்கள் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தினார்கள். மோடி உண்மையில் ஒரு பாசிசவாதி என்றால் கடந்த 5 ஆண்டுகள் மத்தியில் நடந்த பா.ஜ.க ஆட்சி வகுப்புவாதத்தை வளர்த்தெடுத்த ஜனநாயக மாண்புகளுக்கு எதிரான ஆட்சி என்று அவர்கள் நினைத்து இருந்தால் அவர்கள் அனைவருமே ஓரணியில் நின்று மோடியின் பிடியில் இருந்து நாட்டை காப்பாற்ற முன்வந்து இருக்க வேண்டும்.

மாயாவதி, அகிலேஷ் யாதவ், மம்தாபானர்ஜி, சரத்பவார், சந்திரசேகர ராவ், சந்திரபாபு நாயுடு, தேவேகவுடா, என்று பிரதமர் கனவுகளோடு வலம் வந்தவர்கள் ஓரணியில் நிற்கவே இல்லை. எனவே உண்மையில் இவர்கள் தங்கள் கனவுகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக மோடியை எதிர்த்தார்களே தவிர மதச்சார்பின்மையையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்காக எதிர்க்கவில்லை என்பது தான் கசப்பான உண்மை.

இந்தியாவின் பாதுகாப்பு மோடியின் கைகளில் பத்திரமாக இருக்கும் என்று வட இந்திய வாக்காளர்கள் நினைத்து இருக்கிறார்கள். இந்திய ஜனநாயகத்தில் உண்மையிலேயே மறுபரிசீலனை செய்ய வேண்டிய விஷயங்கள் ஏராளமாக உள்ளன. ஆக்கப்பூர்வமான சிந்தனைகளோடு இனியாவது எதிர்க்கட்சிகள் பா.ஜ.க ஆட்சியின் தவறுகளை விமர்சிப்பதற்கும் உரிய தீர்வுகளை முன்வைப்பதற்கும் செயலாற்ற வேண்டும்.

தமிழகத்தை பொறுத்தவரையில் அ.தி.மு.க, பா.ஜ.க.வின் கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் மிகப் பெரிய தோல்வியை சந்திக்கும் என்று அனைவருமே எதிர்பார்த்த ஒன்றுதான். தமிழக வாக்காளர்களில் 80 சதவீதத்துக்கு மேற்பட்டவர்கள் மோடிக்கும் பா.ஜ.க.வுக்கும் எதிராகவே தங்கள் எண்ணங்களை உருவாக்கி கொண்டார்கள்.

ஹைட்ரோகார்பன், மீத்தேன் எரிவாயு, ஸ்டெர்லைட், எட்டு வழிச்சாலை என்று எல்லாவற்றுக்கும் மக்களின் விருப்பத்துக்கு மாறாகவே பா.ஜ.க. ஆட்சி செயல்பட்டது. எட்டு வழிச்சாலைக்கு எதிராக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகும், மத்திய மந்திரி நிதின்கட்காரி அத்திட்டம் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்று பேசியதும், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் மூலம் மக்களின் பேரெதிர்ப்பை சந்தித்த வேதானந்தம் குடும்பத்துக்கு நாகை, கடலூர், காரைக்கால் பகுதிகளில் எரிவாயு குழாய்களை அமைப்பதற்கு அனுமதி அளித்ததும் வாக்காளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தின.

பல்வேறு மாநில கட்சிகளின் கூட்டுத்தன்மையில் மத்தியில் ஆட்சி அமைந்து இருந்தாலோ அல்லது காங்கிரஸ் தலைமையில் ஒரு கூட்டணி ஆட்சி உருவெடுத்து இருந்தாலோ 1996-ல் ஏற்பட்ட மிகமோசமான அனுபவத்தையும் சந்திக்க வேண்டியது இருக்கும். உலக நாடுகளின் பார்வையில் இந்தியா உரிய மரியாதையை பெறவும் பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் காணவும், 5 ஆண்டுகளுக்கு ஒரு நிலையான அரசு அமைவதே இந்திய ஜனநாயகத்துக்கு உகந்தது.

பொறுப்புணர்வுமிக்க இந்திய வாக்காளர்கள் வெறுப்பு அரசியலுக்கு இடம்தராமல் ஒரு நிலையான ஆட்சியை மோடி மீண்டும் தருவதற்கான வாய்ப்பை வழங்கி இருக்கிறார்கள். அவர்களுடைய நம்பிக்கைக்கு ஏற்ப மோடியின் அரசு இனி செயல்பட வேண்டும். ஒவ்வொரு திட்டத்தை முன்னெடுக்கும்போதும் அதன் விளைவுகளை தெளிவாக சிந்தித்து, மக்கள் நலனுக்கு முன்னுரிமை அளித்து ஆட்சியை வழங்குவது மோடியின் முக்கிய கடமையாகும்.

மோடியின் ஆட்சிக்கு எதிராக இந்தியா முழுவதும் ஒரு எதிர்ப்பு அலை வேகமாக வீசுவதாக நம்பிய காங்கிரஸ், மத்தியில் ஆட்சியை கைப்பற்ற முடியும் என்ற கனவில் மிதந்தது. உ.பி, மேற்கு வங்காளம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்து ஒரு மூன்றாவது அணியை உருவாக்கி அதிகாரத்தை கைப்பற்ற முடியுமென்ற ஆசையோடு மாயாவதி தொடங்கி சந்திரபாபு நாயுடு வரை கனவுலகில் மூழ்கி இருந்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக எதிர்க்கட்சிகளின் இந்த கனவுகள் கலைந்து போய்விட்டன.

தமிழகத்தில் தி.மு.க. மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தாலும், சென்றமுறை ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட நிலை தான் இன்று ஸ்டாலினுக்கு வந்து வாய்த்து இருக்கிறது. தமிழகத்தின் ஆட்சியை எப்படியாவது தக்கவைத்துக் கொள்ள வேண்டுமென்று துடியாய் துடிக்கும் அ.தி.மு.க. தலைமை நாடாளுமன்றதேர்தலை விட சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அதிக கவனத்தை செலுத்தியது. அ.தி.மு.க. ஆட்சி வகுத்த பல்வேறு வியூகங்களின் விளைவாக ஆட்சியை தக்கவைத்து கொள்வதற்குரிய இடங்களைப் பெற்றுள்ளது. தேர்தல் முடிவுகளுக்கு பின்பு மத்தியில் ஒரு நிலையான ஆட்சி அமைவதற்கான சூழல் கனிந்து விட்டது.

தமிழருவி மணியன், தலைவர், காந்திய மக்கள் இயக்கம்



Next Story