வெற்றிச்சிகரம் எட்டும் தூரம் : போட்டியாளர்கள் எதிரிகளா?


வெற்றிச்சிகரம் எட்டும் தூரம் :  போட்டியாளர்கள் எதிரிகளா?
x
தினத்தந்தி 25 May 2019 10:54 AM GMT (Updated: 25 May 2019 10:54 AM GMT)

வேர்களின் வேலையை கிளைகளும், கிளைகளின் வேலையை வேர்களும் செய்ய நினைத்தால் மரங்கள் மரங்கள் ஆகுமா?

ஓர் ஓட்டப்பந்தயம். 32 பேர் ஓடுவதற்குத் தயாராக இருக்கிறார்கள். “ரெடி! ஒன்! டூ! த்ரீ! ஓடு!!” எனப் பெருஞ்சத்தம் கேட்கிறது! எல்லாரும் ஓடத் தொடங்குகிறார்கள்!

இளைஞனே! ஒன்றைச் சொல்ல மறந்துவிட்டேன்! அந்த 32 பேரில் நீயும் ஒருவன். ஓட்டம் தொடங்கியாயிற்று! ஆட்டம் ஆரம்பமாயிற்று!

போட்டி தொடங்கிய இரண்டு வினாடியிலேயே முதலிடம் பிடித்து ஓடிக்கொண்டிருக்கிறான் ஒருவன்; அவனைத் தொடர்ந்து அரைவினாடி இடைவெளியில் இரண்டாவதாக இன்னொருவன்; இவனுக்குப்பின் ஒரு வினாடி கெடுவில் மூன்றாவதாக ஒருவன்; அவனுக்குப்பின் நீ! ஆமாம்! நாலாவதாக ஓடிக்கொண்டிருப்பது நீயே, நீதான்!

உனக்குப்பின்னால் 28 பேர்; உனக்கு முன்னால் மூன்று பேர் யாரை யார் முந்தி எப்போது செல்லப்போகிறார்கள் என்கிற ஆச்சரிய ஆர்வத்தோடு பார்வையாளர்கள்!

அன்பனே! என் இளைய நண்பனே! இப்போது உனக்கான கேள்வியை நான் கேட்கப்போகிறேன்! பதிலளிக்க நீ தயாரா?

“ஓடிக்கொண்டிருக்கிற ஓட்டத்தில் நான் என் மூச்சைக் கவனிப்பேனா? உன் பேச்சைக் கவனிப்பேனா? முந்திச்செல்லும் முன்னோடிகளைக் கவனிப்பேனா? பிந்தி வரும் இளைத்தவர்களுக்காக நான் இரக்கம் காட்டுவேனா?” என நீ கேட்கலாம்!

பொறுமை இளைஞனே! பொறுமை! நீ ஆசுவாசமாக அமர்ந்து யோசித்துப் பதில் சொல்லவேண்டிய தேவையில்லை!; ஓடிக்கொண்டே மூச்சைக்கட்டிப் பேச்சை நிறுத்தாமல் பதில் சொல்லலாம்! கேள்வியும் எளிதானது! பதிலோ அதைவிட எளிதானதுதான்.

“நீ இப்போது கலந்துகொண்டிருப்பது போட்டியா? போட்டியென்றால் யாருக்கும் உனக்கும் போட்டி? உனக்கும், போட்டியில் கலந்துகொண்டிருக்கிற பிற 31 பேருக்குமிடையே போட்டியென்றால் உன்னோடு ஓடிக்கொண்டிருக்கிற அவர்களெல்லாம் உனக்கு நண்பர்களா? பகைவர்களா? இவர்களிலும் உன்னை முந்தி ஓடிக்கொண்டிருப்பவர்களும் பிந்தி வந்துகொண்டிருப்பவர்களும் எப்படிப்பட்ட நண்பர்கள்? அல்லது எப்படிப்பட்ட பகைவர்கள்?”

ஏறத்தாழ எல்லாக் கேள்விகளுக்கும் நானே பதில் சொல்லித்தான் நிறைவுக் கேள்வியைக் கேட்டிருக்கிறேன். உனது நிறைவான பதில் என்னவாக இருக்கும் என்பதையும் என்னால் யூகிக்க முடிகிறது.

“ஆம்! இது போட்டிதான்! நான் மட்டுமல்ல! இந்தப்போட்டியில் கலந்துகொண்டிருக்கிற ஒவ்வொருவருக்கும் அவர்களைத் தவிர மற்றவர்கள் அனைவருமே போட்டியாளர்கள்தான்! அது மட்டுமல்ல! போட்டியிலுள்ள அனைவருமே பகைவர்களேயொழிய நண்பர்களாகப் போட்டி முடியும் வரை இருக்கவே முடியாது! முந்திச் செல்பவன் கொடும்பகைவன்; பிந்தி வருபவன் சாதாரணப் பகைவன்!” என்று உரக்கச் சொல்வது என் செவிகளில் தெளிவாகவே கேட்கிறது!

அன்பனே! என் இளைய நண்பனே! இது ஓட்டப்பந்தயப் போட்டிக்கு மட்டுமே பொருந்துகிற கேள்வியும் பதில்களுமில்லை. வாழ்க்கையில், படிப்பு தொடங்கி, வேலைவாய்ப்பு, அலுவலகப்போட்டிகள், வாழ்தலுக்கான போட்டிகள், ஏன், மின்சார ரெயிலில் ஓடிஏறி இடம்பிடிப்பது முதற்கொண்டு, எந்தவித இடிபாடுகளுமின்றி நிலைய நிறுத்தத்தில் இறங்குகிறவரை எல்லாவற்றுக்கும் பொருந்துபவைதாம்.

வாழ்க்கை போட்டியென்று ஆனால், சக மனிதர்கள் எல்லாரும் பகைவர்கள், எதிரிகள் என்று எண்ணப்பட்டால் வாழ்க்கை எப்படி மகிழ்ச்சி மயமாக மாறும்?

நமது எண்ணங்களில் இப்படியொரு பகைமையுணர்வு நம்மையறியாமலேயே ஆதிக்கம் செலுத்துவதால்தான் யாரைப் பார்த்தாலும் ஒரு வெறுப்புணர்வும், பொறாமையுணர்வும் இனம்புரியாமலேயே தோன்றிவிடுகிறது.

கோபமும் அச்சமும் பொறாமையும் வெறுப்புணர்வும் குடிகொண்டுள்ள மனதில் அமைதி எப்படி கோவில்கொள்ளும்? எந்தப் போட்டியில் வெல்லுவதற்கும் திட மனதும் அசையா அமைதியும் தேவை என் கிறார்களே அதற்கு என்ன செய்ய வேண்டும்?

அன்பனே! என் இளைய நண்பனே! இன்னும் நீ ஓடிக்கொண்டுதான் இருக்கிறாய்! அதே நாலாவது இடத்தில்தான்! இப்போது சொல்! உனக்குமுன்னே ஓடிக்கொண்டிருக்கிறார்களே! ‘முடிந்தால் என்னை முந்திக்கொள்!’ என்று சவால் விட்டுக்கொண்டே! அவர்கள் உனக்கு நண்பர்களா? எதிரிகளா? ‘கொஞ்சம் நீ அசந்தாலும் உன்னை முந்தி விடுவோம்!’ என்று உன்னைத் துரத்திக்கொண்டே உன் பின்னால் ஓடி வருகிறார்களே! அவர்கள் உன் நண்பர்களா? எதிரிகளா?

ஆம் இளைஞனே! இரண்டு பிரிவினருமே உனக்கு நண்பர்கள் தாம்! எப்படித் தெரியுமா? உனக்கு முன்னே ஓடிக்கொண்டிருக்கிறார்களே! அவர்கள்தாம் இன்னும் நீ எடுக்கவேண்டிய வேகத்தையும் நேரத்தையும் உனக்கு அறிவுறுத்துகிறவர்கள்!

நீ கொஞ்சம் அசந்தாலும் பிந்தி விடுவாய்! நாங்கள் முந்திவிடுவோம்! என்று எச்சரிக்கைமணி அடித்துக்கொண்டே நீ பின்தங்கி விடாமல் உன்னைத் துரத்திக்கொண்டே வருகிறார்களே! அவர்கள்தாம் நீ சோம்பிப் போகாமல் சுறுசுறுப்பாய் இயங்குவதற்கான தூண்டுகோல்கள்!

அப்படிப் பார்த்தால் நமக்குத் தூண்டுகோலாகவும் இலக்குகளாகவும் உள்ளவர்களை நாம் எப்படி எதிரிகள் என்று நினைப்பது? நண்பர்கள் என்று நினைத்தால் வாழ்க்கையின் எவ்வளவு பெரிய சவாலும் சர்க்கரைச் சாரலாய் இனிக்கத்தானே செய்யும்!

ஒரு நகரின் புறநகர்ப் பகுதியில் ஒரு பலசரக்குக்கடையை ஒருவர் நடத்தி வந்தார். அந்தப் பகுதி உருவான காலந்தொட்டே அந்தக் கடையை அவர் நடத்தி வந்ததால் கடந்த பத்தாண்டுகளாக அவருக்குப் போட்டியாய் ஒரு கடைகூட அப்பகுதியில் தோன்றவில்லை; எப்போதும் அலைமோதும் கூட்டம்; நேர்மை, நியாய வணிகம் இவை மாறாமலும் தொழில் நடத்தி வந்தார்.

திடீரென அந்தச் சாலையில் அவரது கடைக்கு எதிரே இருந்த காலியிடத்தில் ஒரு பெரிய கட்டிடம் எழும்பத் தொடங்கியது; விசாரித்தார். “ஐயா இங்கே மிகப்பெரிய ‘ஷாப்பிங் மால்’ ஒன்று வரப்போகிறது! அது உங்கள் கடையைவிட ஆயிரம் மடங்கு பெரியதாக இருக்கும்” என்று பதில் வந்தது.

அன்று கடையைப் பூட்டினார்; அருகில் உள்ள ஒரு மலையடிவாரத்தில் இருக்கும் தமது குருநாதரான துறவியைக் காணச் சென்றார்.

“என்ன வியாபார நேரத்தில் வந்திருக்கிறாயே! என்ன முக்கியத் தகவல்?” -கேட்டார் துறவி.

“சுவாமி! கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நான் அந்த இடத்தில் நன்றாகப் பலசரக்கு வியாபாரம் பண்ணி வருகிறேன் என்பது தங்களுக்குத் தெரியும்! தற்போது என் கடைக்குப் போட்டியாய் எனக்கு எதிராகவே பிரம்மாண்டமாய் ஒரு கடை உருவாகி வருகிறது! நான் என்ன செய்வது?” கேட்டார் வியாபாரி.

துறவி கண்ணைமூடித் தியானித்து, “இப்போது உன் கடைக்கு எதிராகத் தொடங்கப்படப் போகிற அந்தப் பிரம்மாண்டக் கடையிலும் வியாபாரம் அமோகமாக நடைபெற வேண்டுமென்று தினமும் பிரார்த்தனை பண்ணு!” என்று கூறினார்.

“அப்படியே செய்கிறேன்” என்று திரும்பினார், குரு வார்த்தையை எப்போதும் தட்டாத வியாபாரி.

ஓராண்டு கடந்தது. வியாபாரி மீண்டும் குருநாதரைப் பார்க்கச் சென்றார்.

“என்ன உன் கடையை நிரந்தரமாக மூடிவிட்டாயா?”- கேட்டார் குருநாதர்.

“ஆமாங்க சுவாமி! என்கடையை நிரந்தரமாக மூடிவிட்டேன்!; ஆனால் அந்த ஷாப்பிங் மால் கடையை என் பெயருக்கு வாங்கி விட்டேன்!” என்று பவ்யமாகப் பதில் சொன்னார் வியாபாரி.

போட்டிகள் நிறைந்ததுதான் உலகம்; பொறாமை தவிர்ந்த புதுமைச் சிந்தனைகளைப் பரவச் செய்தால் எதிரிகளும் நண்பர்களாவர்; பகைவர்களும் பங்காளிகளாவர். சக போட்டியாளர்களின் ஆதரவோடு நாம்தான் வெற்றி காண்போம்!

- முனைவர் சுந்தர ஆவுடையப்பன்


Next Story