சிறப்புக் கட்டுரைகள்

உஷாரய்யா உஷாரு.. + "||" + Usharayya Usharoo ..

உஷாரய்யா உஷாரு..

உஷாரய்யா உஷாரு..
அவள் என்ஜினீயரிங் படித்துவிட்டு, அதற்கு தகுந்த வேலையை தேடி களைத்துப்போயிருந்தாள். வருடங்கள் சில கடந்தும் விரும்பிய வேலை கிடைக்கவில்லை.
வள் என்ஜினீயரிங் படித்துவிட்டு, அதற்கு தகுந்த வேலையை தேடி களைத்துப்போயிருந்தாள். வருடங்கள் சில கடந்தும் விரும்பிய வேலை கிடைக்கவில்லை. வீட்டிலே இருந்த அவளிடம், ‘என்ஜினீயரிங் படித்துவிட்டு சும்மாவே இருக்கிறாயே!’ என்ற கேள்வியை பலரும் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அதனால் நொந்துபோய் இருந்த நேரத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் இருந்து, கம்ப்யூட்டர் சார்ந்த பணிகளை கவனிக்கும் வேலைக்கு அழைப்பு வந்தது.

கிடைத்த சம்பளம் போதும் என்று அந்த வேலையில் சேர்ந்தாள். சேர்ந்த சில வாரங்களிலே ‘படித்த படிப்புக்குரிய வேலையும் இல்லை.. போதுமான சம்பளமும் இல்லை’ என்று புலம்பத் தொடங்கிவிட்டாள். அவளது புலம்பலுக்கு, அந்த நிறுவனத்தில் உயர் அதிகாரியாக இருந்த இளைஞர் நட்புடன் நம்பிக்கையூட்டி ஆறுதல் கூறிக்கொண்டிருந்தார். அந்த ஆறுதல், தேறுதல், நட்பு எல்லாம் கலந்து சில மாதங்களிலே காதலாகிவிட்டது. இருவரும் காதலித்துக்கொண்டிருந்தார்கள்.

அவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி காதலிக்கு பிரபலமான நிறுவனம் ஏதாவது ஒன்றில் வேலைவாங்கிக்கொடுத்துவிட்டு அதன் பிறகு பெற்றோரிடம் கூறி திருமணம் செய்துகொள்ளலாம் என்று திட்டமிட்டார்.

அவரது திட்டம் சரியாக இருந்ததாலும், அந்த இளைஞரும் நல்லவராக இருந்ததாலும் அவள், அவரை முழுமையாக நம்பினாள். அவரும் அவள் மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்தார். அவருக்கு சொந்தமாக கார் இருந்ததால் காதல் ஜோடிகளான அவர்கள் இருவரும் அவ்வப்போது காரில் ஒன்றாக வெளியே சென்றுவருவார்கள்.

அன்று அவர்கள் வெளியூருக்கு போய்விட்டு காரில் ஒன்றாக திரும்பிக் கொண்டிருந்தபோது விதிவிளையாடியது. இரவு நேரத்தில் சாலை ஓர மரத்தில் அவர்களது கார் மோதியது. சம்பவ இடத்திலே அந்த இளைஞர் மரணமடைந்தார். அவளும் காயமடைந்தாள். அதிர்ந்துபோன அவள் தனது காயத்தை பற்றி கவலைப்படாமல், காதலனின் உடலைத் தூக்கி தனது மடியில் போட்டுக்கொண்டு அழுத அழுகை அந்த பகுதியில் வாகனங்களில் சென்றுகொண்டிருந்தவர்களை கலங்கடித்தது. அதை பலர் தங்கள் செல்போன்களில் படம்பிடித்தார்கள்.

அவளது கதறல் பலரையும் உருகவைத்ததால், இறந்து போனது அவளது கணவன் என்று முடிவு செய்து ‘இந்த பெண் தனது கணவன் மீது எந்த அளவுக்கு பாசம் வைத்திருந்தால் இந்த அளவுக்கு உருண்டு புரண்டுஅழுவார்’ என்று கருத்தும் தெரிவித்தார்கள். அந்த வீடியோ சில நிமிடங்களிலே நாடுமுழுவதும் வைரலாக பரவியது.

இந்த சம்பவம் நடந்து 8 வருடங்கள் ஆகிவிட்டன. அந்த பெண்ணின் வயது 30-ஐ தாண்டிவிட்டது. ஆனால் இன்னும் அவளுக்கு திருமணமாகவில்லை. எல்லாவற்றுக்கும் காரணம் அந்த பழைய விபத்து வீடியோதான். அவசரகதியில் யாரோ ஒருவர் அன்று அவர்களை ‘கணவன்- மனைவி’ என்று குறிப்பிட்டு வீடியோ பதிவிட்டதால், அவளுக்கு இறந்துபோன இளைஞரோடு ஏற்கனவே ரகசிய திருமணம் நடந்துவிட்டது என்றும், அவர்கள் ஒன்றாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்றும் கருதிவிட்டார்கள். அதனால் அவளை திருமணம் செய்துகொள்ள யாரும் முன்வரவில்லை. நிச்சயதார்த்தம் வரை வந்தும் நாலைந்து முறை திருமணம் நின்றுபோயிருக்கிறது.

அவள், காதலனின் மரணத்தை கெட்ட கனவாக நினைத்து மறந்துவிட்ட பிறகும், அந்த வீடியோவை ஊரில் உள்ள சிலர் அழிக்காமலே வைத்திருப்பதால், அவள் வாழ்க்கை இன்னும் துளிர்க்காமலே இருந்து கொண்டிருக்கிறது.

பெண்களே காதலிக்கும்போது கவனமாக இருங்கள். இல்லாவிட்டால் உங்கள் எதிர்கால வாழ்க்கைக் கனவு கானல் நீராகிவிடக்கூடும்..!

- உஷாரு வரும்.