தண்ணீரால் வாழ்ந்தார்கள்... தண்ணீரால் அழிந்தார்கள்...


தண்ணீரால் வாழ்ந்தார்கள்... தண்ணீரால் அழிந்தார்கள்...
x
தினத்தந்தி 2 Jun 2019 7:30 AM GMT (Updated: 1 Jun 2019 12:55 PM GMT)

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய வரலாற்றுக்கு, எழுத்துப்பூர்வமாக எந்த ஓர் ஆதாரமும் இல்லாத நிலையிலும், அவை பற்றிய தகவல்களை ஆய்வாளர்கள் எப்படியாவது வெளிக்கொணர்ந்து விடுகிறார்கள்.

தொல்பொருள் ஆய்வு மூலமாகவோ அல்லது வேறு ஏதாவது வழியிலோ அந்தக்கால வரலாறு பற்றிய செய்திகளைத் தோண்டிச் சேகரித்து, அவற்றைக் கோர்வையாக ஒழுங்குபடுத்தி, ‘பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இப்படித்தான் நடந்தது’ என்று வரையறை செய்து விடுகிறார்கள்.

பழங்காலத்தில் உலகின் பல பகுதிகளிலும் முன்னேறிய சமுதாயம் வாழ்ந்து இருந்தது என்பது இது போன்ற ஆய்வுகள் மூலம் தான் தெரியவந்து இருக்கிறது.

பகீரத முயற்சி செய்து, கடந்த காலத்திய நாகரிகங்களின் தொடக்கம் பற்றிய செய்திகளை எப்படியோ கண்டுபிடித்து வெற்றி கண்ட ஆய்வாளர்கள், அந்த நாகரிகங்கள் எவ்வாறு தங்கள் அழிவைச் சந்தித்தன என்ற இறுதி முடிவை மட்டும் அறிய முடியாமல் தோல்வி அடைந்து விடுகிறார்கள் என்பது வினோதம்.

இதற்கு எடுத்துக்காட்டு இந்தியாவிலேயே இருக்கிறது.

தமிழகத்தின் ‘ஆதிச்சநல்லூர்’ பற்றிக் கேள்விப்பட்டு இருக்கலாம்.

திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பாதையில் அந்த ஊர் இருக்கிறது.

ஆங்காங்கே முதுமக்கள் தாழிகளைத் தோண்டி எடுத்த புதை குழிகளுடன், கட்டாந்தரையான மண்மேடு மட்டுமே எஞ்சி இருக்கும் பரிதாப நிலையில் அந்த இடம் இப்போது காட்சி அளிக்கிறது.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆதிச்சநல்லூர் எப்படி இருந்தது?

லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் வாழ்விடமாக விளங்கிய அந்த நகர், ஏற்றுமதி-இறக்குமதி தொழில், அணிகலன்கள் செய்யும் தொழிற்சாலைகள் ஆகியவற்றுடன் பரபரப்பான நகராக இயங்கியது.

அந்த ஊரின் மயானம் மட்டுமே 140 ஏக்கர் பரப்பளவில் அமைந்து இருந்தது என்றால், அங்கே எவ்வளவு மிகப்பெரிய மக்கள் கூட்டம் வாழ்ந்து இருப்பார்கள் என்று கணக்கிட்டுக் கொள்ளலாம்.

தற்போதைய சென்னை நகர் போன்ற அளவில் ஆதிச்சநல்லூர் இருந்து இருக்கலாம் என்பது ஆய்வாளர்கள் கருத்து.

ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இருந்தெல்லாம் மக்கள் அங்கு வந்து வசித்தார்கள் என்பதற்கு ஆதாரம் கிடைத்து இருக்கிறது.

சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஆதிச்சநல்லூரின் நாகரிகம், ஆரம்ப வரலாறு ஆய்வாளர்களால் இவ்வாறு தொகுக்கப்பட்டு இருக்கிறது.

ஆனால், அப்படிப்பட்ட புகழ் மிக்க நாகரிகம் அழிந்தது எப்படி?, அங்கு வசித்த மக்கள் எல்லாம் என்ன ஆனார்கள்?, அவர்களின் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் யாருமே இல்லாமல் துடைத்துப் போட்டது போல அனைவரும் ஒட்டுமொத்தமாக மறைந்த மாயம் என்ன?, போரில் மாண்டார்களா?, இயற்கைச் சீற்றத்துக்குப் பலியானார்களா?, கொள்ளை நோய் ஏதும் அவர்களை வாரிச்சுருட்டிக் கொண்டு போனதா? என்ற கேள்விகளுக்கான பதில்கள், வரலாற்று ஆய்வாளர்களின் கைகளில் இன்னும் சிக்கவில்லை.

மதுரை அருகே ‘கீழடி’ என்ற கிராமத்தில் நாகரிக வளர்ச்சி பெற்ற மக்கள், பல நூறு ஆண்டு களுக்கு முன் வாழ்ந்தார்கள்; பெரிய கட்டிடங் களைக் கட்டி, சாயத் தொழிற்சாலை போன்றவற்றை நடத்தினார்கள் என்ற வரலாறு, இப்போது தீவிரமாக நடைபெற்று வரும் தொல்பொருள் ஆய்வு மூலம் படிப்படியாகத் தெரிய வருகிறது.

அங்கு வாழ்ந்த மக்களும், தங்கள் இறுதிக்காலத்தை எப்படிச் சந்தித்தார்கள் என்ற விவரம் மட்டும் இன்னும் தட்டுப்படாமலேயே இருக்கிறது.

‘நாகரிகங்களுக்கெல்லாம் ஆதி’ என்று சிலரால் கொண்டாடப்படும் சிந்து சமவெளி நாகரிகம், மற்றும் பெரு நாட்டில் வாழ்ந்த ‘இன்கா’ இன மக்களின் நாகரிகம் ஆகியவையும் எப்படி அழிந்தன என்ற தகவல் எட்டாக்கனியாகவே உள்ளது.

இதே கதி தான் கம்போடியா வரலாற்றுக்கும் ஏற்பட்டது.



இந்தியாவின் தாக்கத்தை மூலதனமாகக் கொண்டு கம்போடிய மன்னர்கள், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அங்கோர் நகரில் நடத்திய பொற்கால ஆட்சி குறித்த பல தகவல்களும், கண்களைக் கவரும் அற்புதமான சிற்பங்களுடன் கூடிய கோவில்களை அங்கே எப்படிக் கட்டினார்கள் என்ற விவரமும் ஆதாரபூர்வமாகக் கிடைத்து இருக்கின்றன.

பதினான்காம் நூற்றாண்டு வரை பல சிறப்புக்களுடன் விளங்கிய, கம்போடியாவின் தலைநகராகத் திகழ்ந்த அங்கோர் நகரம், எப்படி திடீர் என்று அழிவைச் சந்தித்தது என்ற கேள்விக்கான பதில் மட்டும் இன்னும் இருளுக்குள் அடைந்து கிடக்கிறது.

“தண்ணீரால் வாழ்ந்தார்கள் - தண்ணீராலேயே மாண்டார்கள்” என்ற ஓர் அம்சம் மட்டும் அங்கோர் நகரின் அழிவுக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

ஆதிச்சநல்லூர், கீழடி, சிந்து சமவெளி ஆகிய நாகரிகங்கள் அழிந்த போது, அவற்றில் சம்பந்தப்பட்ட யாரும் அந்த அழிவு எப்படி நடைபெற்றது என்பது பற்றி ஆவணமாக எழுதி வைக்கவில்லை என்பதால் அந்த நாகரிகங்களின் அந்திம காலத்தை அறிந்து கொள்ள முடியவில்லை.

உலகமே வியக்கும் தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டிய மன்னர் ராஜராஜன் எவ்வாறு இறந்தார்? அவரது இறுதி ஊர்வலம் எப்படி நடந்தது? அவர் எங்கே அடக்கம் செய்யப்பட்டார் என்பது போன்ற விவரங்களை அப்போது வாழ்ந்த யாருமே ஆவணப்படுத்தவில்லை என்பதால், மன்னர் ராஜராஜன் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை தேடிக் கண்டுபிடியுங்கள் என்று கோர்ட்டு உத்தரவிடும் நிலை இப்போது ஏற்பட்டு இருக்கிறது.

அதே போல கம்போடியாவில் 13-வது நூற்றாண்டு வரை நடைபெற்ற நிகழ்வுகள், கல்வெட்டுக்களில் ஆவணம் போல பதிவாகி இருப்பதால், அவை பற்றிய விவரங்கள் தெரியவருகின்றன.

ஆனால், 13-வது நூற்றாண்டுக்குப் பிறகு நடைபெற்ற சம்பவங்கள் பற்றிய கல்வெட்டு ஏதும் அங்கு கிடைக்கவில்லை.

இதனால், 14-வது நூற்றாண்டில் அங்கோர் நாகரிகம் எவ்வாறு அழிந்தது என்பதைத் தெரிந்துகொள்ள முடியவில்லை.

கம்போடிய நாட்டு மன்னர்கள், ஆயிரக்கணக்கான கோவில்களைக் கட்டியது போல, அங்கே ஏராளமான நீர்நிலைகளையும் அமைத்தார்கள்.

தண்ணீர் தான் உயிர்களின் வாழ்வாதாரத்திற்கும், உணவு உற்பத்திக்கும், மற்ற ஆக்க சக்திகளுக்கும் அடிப்படை என்று அவர்கள் நம்பினார்கள்.

‘கடலால் சூழப்பட்ட மேரு மலையே, இறைவன் இருக்கும் இடம்’ என்ற இந்து மத கொள்கையில் அவர்கள் அழுத்தமான நம்பிக்கை வைத்து இருந்தார்கள்.

இதனை அடையாளப்படுத்தும் விதமாக அனைத்து கோவில்களைச் சுற்றியும், கோவில் களுக்கு உள்ளேயும் நீர் நிலைகளைக் கட்டினார்கள்.

பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடையும் காட்சியை பல கோவில்களில் இடம்பெறச் செய்தனர்.

கம்போடியாவின் ஜீவ நதியான, ‘மா கங்கா’ - அதாவது ‘கங்கைத் தாய்’ எனப்படும் ‘மேகாங்’ நதியின் நீரோட்டத்தை முறையாகப் பயன்படுத்த மிகப் பிரமாண்ட நீர்த்தேக்கங்களை கம்போடியா மன்னர்கள் கட்டினார்கள்.

கோவில்களைக் கட்டுவதற்கு அவர்கள் எந்த அளவு ஆர்வம் காட்டினார்களோ, அதற்கு சற்றும் குறைவில்லாத உத்வேகத்துடன் ஏராளமான நீர்த்தேக்கங்களையும் அமைத்தனர்.

யசோவர்மன் என்ற மன்னர் 9-ம் நூற்றாண்டில் அங்கோர் நகருக்கு கிழக்கே, மிகப் பிரமாண்ட நீர்த்தேக்கத்தைக் கட்டினார்.

7½ கிலோ மீட்டர் நீளம், 2 கிலோ மீட்டர் அகலம் என்று செவ்வக வடிவில் அமைந்துள்ள அந்த நீர்த்தேக்கத்தை முழு அளவில் பார்க்க வேண்டும் என்றால், வானத்தில் பறந்து சென்றால் மட்டுமே காணமுடியும் என்ற ராட்சத அளவில் அது கட்டப்பட்டுள்ளது.

அந்த நீர்த்தேக்கத்தில் இப்போது தண்ணீர் இல்லை. ஆனால் செயற்கைக்கோள் மூலம் எடுத்த படத்தில் அந்த நீர்த்தேக்கத்திற்கான விளிம்புகளைக் காணமுடிகிறது.

முதலாம் சூர்யவர்மன் என்ற மன்னர், 11-ம் நூற்றாண்டில் அங்கோர் நகருக்கு மேற்கே 8 கிலோ மீட்டர் நீளம், 2½ கிலோ மீட்டர் அகலம் என்ற அளவில் பெரிய நீர்த்தேக்கத்தைக் கட்டினார்.

இப்போதும் செயல்பாட்டில் உள்ள அந்த நீர்த்தேக்கம் 1,760 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்து இருக்கிறது. எந்திரங்கள் ஏதும் இல்லாமல் கட்டப்பட்ட நீர்த்தேக்கங்களில் உலகிலேயே பெரியது என்ற புகழுடன் இது விளங்குகிறது.

தண்ணீரை இவ்வாறு தங்கள் வாழ்வாதாரத்தின் முக்கிய அங்கமாக ஆக்கிக்கொண்ட அங்கோர் நகர மக்கள், அதே தண்ணீரால் அழிந்தனர் என்பது தான் வாழ்க்கையின் விதி.

ஜெயவர்ம பரமேஸ்வரா என்ற மன்னர் 1327-ல் ஆட்சிக்கு வந்தார். இவரே கெமர் பரம்பரையின் கடைசி மன்னர் என்று அறியப்படுகிறார்.

1362 முதல் 1392 வரையும், மீண்டும் 1415 முதல் 1440 வரையும் அங்கோர் நகரில் தொடர்ச்சியாக ஏற்பட்ட கடுமையான வறட்சியால் தண்ணீர் கிடைக்காததாலும், 1431-ல் தாய்லாந்து நாட்டு படையெடுப்பின் போது நீர் நிலைகள் அழிக்கப்பட்டு அங்கோர் நகரம் தண்ணீருக்குள் மூழ்கியதாலும், அங்கு வாழ்ந்த மக்கள் தற்போதைய தலைநகரான புனாம் பென் நகருக்கு 1432-ல் குடிபெயர்ந்ததாக கூறப்படுகிறது.

1431-ம் ஆண்டு அங்கோரில் வாழ்ந்த அனைத்து மக்களும் அங்கு இருந்து வெளியேறியதால், அந்த நகரம் மயான பூமி போல ஆனது.

அதி அற்புதமான சிற்பங்களைக் கொண்ட ஆயிரக்கணக்கான கோவில்கள், பராமரிப்பு இன்றி கைவிடப்பட்டன.

அவை எல்லாம் புதர்களால் சூழப்பட்டு, வெளிஉலகுக்குத் தென்படாமல் மறைந்து போயின.

இடிபாடுகளுடன் இருந்த அந்த கோவில்களை வவ்வால்களும், வனவிலங்குகளும் தங்கள் வசிக்கும் இடமாக ஆக்கிரமித்துக் கொண்டன.

இரும்பு நாகரிக காலத்தில் உலகிலேயே மிகப்பெரிய நகராகவும், கம்போடியாவின் தலைநகராகவும் திகழ்ந்த அங்கோர், தன் தலைவிதியால் யாரும் எட்டிப்பார்க்காத வனாந்திரப் பிரதேசமானது.

அங்கோரில் அரங்கேறிய இந்த இறுதிக்கால மாற்றங்கள் எப்படி நிகழ்ந்தன?

அங்கோர் நகரில் மக்கள் பெருக்கம் கட்டுக்கடங்காமல் அளவை மீறியது தான் காரணமா?

பல ஆண்டுகளாக நீடித்த தொடர் வறட்சியும், அதன் பிறகு தொடர்ந்து பல ஆண்டுகள் கொட்டித் தீர்த்த மழையும், விவசாயத்தை அடியோடு பாழ்படுத்தியதால் உணவுக்குக் கடும் பஞ்சம் உருவாகி மக்கள் அனைவரும் அங்கு இருந்து புறப்பட்டு புதிய வாழ்விடம் நோக்கிச் சென்றார்களா?

தாய்லாந்தின் ‘ஆயுத்யா’ என்ற பகுதியின் மன்னர் இரண்டாம் பரம ராஜா படையெடுத்து வந்து தாக்குதலை நடத்தியதோடு, அங்கு இருந்த அனைத்து பெரிய நீர்த்தேக்கங்களையும் உடைத்து நாசப்படுத்தியதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் அனைவரும் மாண்டார்களா? என்று பல வினாக்கள், அங்கோர் அழிவுக்குக் காரணிகளாக கேட்கப்படுகின்றன.

ஆனால் இந்த வினாக்களுக்கு இன்னும் விடைகள் கிடைக்கவில்லை.

மொத்தத்தில், அங்கோர் மக்களின் வீழ்ச்சிக்கு அடிப்படைக் காரணம், தண்ணீர் தொடர்பான பிரச்சினை தான் என்று ஆய்வாளர்கள் பொதுவாகக் கருதுகிறார்கள்.

செல்வச் செழிப்பாக வாழ்ந்த அங்கோர் வாட் நகரம், எவ்வாறு தனது அழிவைச் சந்தித்தது என்ற உண்மையான ரகசியத்தைக் கண்டுபிடிப்பதற்கான ஆய்வு இன்னும் நீடித்துக் கொண்டே இருக்கிறது.

பேரழிவைச் சந்தித்த அந்த நகரம், ஏறத்தாழ 400 ஆண்டுகளாக அஞ்ஞாத வாசம் போல, நிசப்தத்தில் ஆழ்ந்து கிடந்தது. யாருமே அங்கு எட்டிக்கூடப் பார்க்கவில்லை.

‘அங்கோர்’ என்றொரு சிறப்பான நகரம் அங்கே இருந்தது என்பதையே அனைவரும் மறந்து போனார்கள்.

6 தலைமுறைகளாக அனாதரவாகக் கிடந்த அந்த நகரம், திடீர் என்று ஒரு நாள் தனது நித்திரை கலைந்து, பீனிக்ஸ் பறவை போல மீண்டும் உயிர் பெற்று எழுந்தது.

இந்த அதிசயம் எவ்வாறு நடந்தது?

அடர்ந்த காடுகளுக்குள் பதுங்கிக் கிடந்த அந்த நகரம், மத மாற்றத்திற்கு ஆள் பிடிக்க வந்தவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி என்பது சுவையான வரலாறு.

அதனை அடுத்துப் பார்க்கலாம்.

(ஆச்சரியம் தொடரும்)

Next Story