சிறப்புக் கட்டுரைகள்

கடற்கரைகளின் எழில் நகரம் புதுச்சேரி + "||" + City of Beaches at Puducherry

கடற்கரைகளின் எழில் நகரம் புதுச்சேரி

கடற்கரைகளின் எழில் நகரம் புதுச்சேரி
இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களில் தமிழகத்தை ஒட்டியுள்ள ஒரே பகுதி புதுச்சேரிதான். பிரெஞ்சு காலனியாதிக்கத்திலிருந்த இந்தப் பகுதியில் பிரான்ஸின் தாக்கத்தை பார்க்கலாம்.
உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி அதிக அளவில் வெளிநாட்டு பயணிகளை ஈர்க்கும் நகராகவும் இது உள்ளது.

அழகான கடற்கரை பகுதிகள், சாலைகள், நேர்த்தியான தெருக்கள் என பல பெருமைகளை உள்ளடக்கியது புதுச்சேரி.

பிரெஞ்சு கட்டிடக் கலையைப் பறைசாற்றும் புராதன கட்டிடங்கள், விளையாட்டுப் பூங்காக்கள், குதூகலிக்க கடற்கரை நீர் விளையாட்டு, கடல் பயணம், அருங்காட்சியகம் என அனைத்தும் உள்ள ஒரே ஊர் புதுச்சேரி. இந்த நகரின் சாலைகள் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளது இதன் தனிச் சிறப்பு. எந்தச் சாலையில் சென்றாலும் அது கடற்கரையில்தான் போய் முடியும்.

புதுச்சேரியில் பொழுது போக்கிற்கான முக்கிய இடங்களுள் கடற்கரை முக்கியமானது. தலைமைச் செயலகம் அருகே அமைந்துள்ள கடற்கரை 1.5 கிலோமீட்டர் நீளமுடையது. கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள சாலையில் ரசித்தபடி நடந்து செல்வது அழகான சுகம்தரும். மாலை நேரங்களில் காந்தி சிலை அருகே கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவதைக் காணலாம்.

கடற்கரைக்கு அருகே உள்ளது பாரதிபூங்கா. அங்கே குழந்தைகள் விளையாட வசதி உண்டு. குடும்பத்துடன் உட்கார்ந்து அமைதியாக பொழுதைக் கழிக்கலாம். மிகவும் ரம்மியமான பகுதி இது. இந்தப் பூங்காவை ஒட்டியே புதுச்சேரி சட்டப் பேரவை வளாகம், ஆளுநர் மாளிகை, மணக்குள விநாயகர் ஆலயம், அரவிந்தர் ஆசிரமம் ஆகியன உள்ளன. இவற்றை சற்று காலாற நடந்தே சென்று பார்க்க முடியும். அந்த அளவுக்கு இவை இப்பகுதியில் அருகருகே அமைந்துள்ளன. இங்குள்ள அருங்காட்சியகத்தில் ஏராளமான கலைப் பொக்கிஷங்கள் உள்ளன. ஆனந்தரங்கம் பிள்ளை அருங்காட்சியகம், பாரதியார், பாரதிதாசன் வாழ்ந்த வீடுகளையும் பார்க்கலாம். பேருந்து நிலையம் அருகே உள்ளது தாவரவியல் பூங்கா. இது 1826-ம் ஆண்டு அமைக்கப்பட்டதாகும். பிரெஞ்சு வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட இந்த தாவரவியல் பூங்கா, தென்னிந்தியாவின் சிறந்த பூங்காக்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. 1,500-க்கும் மேற்பட்ட தாவர வகைகள் இங்கு உள்ளன. இங்குள்ள இசை நீரூற்று அனைவரையும் கவரும்.

ரோமானியர்களின் வர்த்தக மையமாகத் திகழ்ந்த இடம் அரிக்க மேடு பகுதியாகும். புதுச்சேரியிலிருந்து 4 கி.மீ. தொலைவில் அரியாங்குப்பம் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. ரோமானியர்கள், சோழர்கள், பிரான்ஸ் நாட்டவர்கள் சார்ந்த குறிப்புகள் இங்குள்ளன.

இங்குள்ள கடற்கரை பகுதிகளில் 6 கடற்கரை பகுதிகள் மிகவும் பிரசித்தமானது. ஆரோவில் கடற்கரை, புரோமினேட் கடற்கரை, பாரடைஸ் பீச், செரினிடி பீச், மாஹே பீச், காரைக்கால் பீச்.

புதுச்சேரியிலிருந்து கடலூர் செல்லும் சாலையில் 7 கி.மீ. தூரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் சுண்ணாம்பாறு படகுத்துறை உள்ளது. வங்கக் கடலை ஒட்டி சுண்ணாம்பாறு கடலில் கலக்கும் பகுதியில் இப்படகுத்துறை உள்ளது. சுண்ணாம்பாற்றில் பயணம் செய்வது கடலில் செல்வது போன்ற உணர்வைத் தரும். பயணம் முடிவில் பாரடைஸ் பீச்சை அடையலாம். அழகான தீவு போல இது காட்சி தருகிறது. சுண்ணாம்பாற்று தண்ணீரும், கடலில் இருந்து வரும் பேக் வாட்டரும், எதிரே கடலும் தீவு போன்ற கடற்கரைப்பகுதி மணல் வெளியும் ரம்மியமான சூழலை அளிக்கும். இந்த பகுதியைப் பார்க்கும்போதே வெளிநாட்டில் இருப்பதை போன்ற உணர்வு மேலிடும். இங்கு நீர் விளையாட்டுகள் பல உள்ளன. சாகசப் பிரியர்களுக்கு ஏற்ற இடம்.

ஆரோவில் பீச்

இது 1968-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 121 நாடுகள் மற்றும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் மண் எடுத்துவரப்பட்டு தாமரை மொட்டு வடிவமைப்பு உள்ள இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு மாத்ரி மந்திர் என்ற தியான மண்டபமும் உள்ளது. இதைச் சுற்றி 12 பூங்காக்கள் உள்ளன. ஆரோவில் நுழைவுப் பகுதியிலேயே பார்வையாளர்கள் மையமும் உள்ளது. ஆரோவில் பற்றிய கண்காட்சி, படக்காட்சி ஆகியவற்றை காணலாம். உணவு விடுதியும் உள்ளது. ஆரோவில்லில் உற்பத்தி செய்யப்படும் கைவினைப் பொருட்களை விற்பனை செய்யும் அங்காடிகளும் இங்கு உள்ளன. காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பகுதிகளும் இதன் கட்டுப்பாட்டில் வருவதால் இங்குள்ள கடற்கரைப் பகுதிகளும் சிறப்பாக பராமரிக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. இப்பகுதியில் 50 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த குடிமக்களையுடைய சர்வதேச நகராக இது திகழ்கிறது.

புதுச்சேரியில் தங்குமிடங்கள் அதிகம் உள்ளன. அவரவர் வசதிக்கேற்ப அறைகளில் தங்கலாம். குடும்பத்தினருடன் தங்குவதற்கேற்ற விடுதிகளும் உள்ளன. அனைத்து வகையான உணவுகளும் கிடைக்கும். புதுச்சேரியை நடந்தே ரசிக்கலாம். மாலையில் சைக்கிள் ரிக்ஷாக்களில் பயணிப்பது சுகமான அனுபவமாக இருக்கும். சைக்கிளில் நகரைச் சுற்றி வர வாடகை சைக்கிளும் கிடைக்கிறது. குறைந்த செலவில் சுற்றுலா செல்ல விரும்புவோர் அவசியம் செல்ல வேண்டிய நகரங்களில் புதுச்சேரியும் ஒன்று. 

தொடர்புடைய செய்திகள்

1. புதுச்சேரியில் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை - நாராயணசாமி அறிவிப்பு
புதுச்சேரியில் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளிக்கப்படுவதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
2. புதுச்சேரியில் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.
3. புதுச்சேரி மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் - ரங்கசாமி
புதுச்சேரி மக்கள் மாற்றத்தை எதிர்பார்ப்பதாக ரங்கசாமி கூறினார்.
4. புதுச்சேரியில் புதுமாப்பிள்ளை கொலையில் தேடப்பட்டு வந்த 5 பேர் கைது
புதுச்சேரியில் திருமணமான ஒரு மாதத்தில் புதுமாப்பிள்ளை வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
5. புதுச்சேரியின் வளர்ச்சி பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளது - ரங்கசாமி குற்றச்சாட்டு
புதுச்சேரியின் வளர்ச்சி பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி குற்றஞ்சாட்டினார்.