அணுக்கழிவு மையமா? உயிரை அழிக்கும் மையமா?


அணுக்கழிவு மையமா? உயிரை அழிக்கும் மையமா?
x
தினத்தந்தி 11 Jun 2019 7:16 AM GMT (Updated: 11 Jun 2019 7:16 AM GMT)

அணு உலையிலிருந்து உயர்தரக் கழிவு, நடுத்தரக் கழிவு, கடைத்தரக் கழிவு என்று மூன்று வகைக் கழிவுகள் உருவாகின்றன.

அணு உலைகளில் பயன்படுத்தப்படும் யுரேனிய எரிகோல்கள் தொடங்கி பணியாளர்களின் கையுறைகள், காலணிகள் வரை எல்லாமே கதிர்வீச்சை வெளியிடுவதால் அல்லது கதிர்வீச்சுக்குள்ளாகி இருப்பதால், அவற்றை பிற திடக்கழிவுகள் போல கண்ட இடங்களில் வீசியெறிய முடியாது.

இந்தியாவில் அணு உலைகளிலிருந்து வெளிவரும் திரவக்கழிவுகளை பெரும்பாலும் கடலுக்குள்ளேயே விட்டுவிடுகிறார்கள். ஆனால் அணு உலைகளில் எரிக்கப்பட்ட எரிகோல்கள் போன்ற உயர்தரக் கழிவுகள் மிக அதிக கதிர்வீச்சுத்தன்மை கொண்டவையாக, மிகவும் ஆபத்தானவையாக இருப்பதால், அவற்றை மிக கவனமாகக் கையாண்டு, மிகவும் கண்ணும் கருத்துமாக போற்றிப் பாதுகாத்தாக வேண்டும். ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் ஓர் அணு உலையில், ஆண்டொன்றுக்கு சராசரியாக 27 ஆயிரம் கிலோ எடையுள்ள எரிக்கப்பட்ட எரிகோல்கள் வெளிவரும். இவற்றைப் பாதுகாக்க ‘எரிகோல் சேமிப்புத் தேக்கம்’ ஒன்று அணுஉலைக் கட்டிடத்துக்குள்ளேயே அமைக்கப்படுகிறது. அதில் ஏழு இயங்கு வருடங்களில் எரிக்கப்பட்ட எரிகோல்களை மட்டுமே சேமித்து வைக்கமுடியும்.

பின்னர் அந்தக் கழிவுகளை பாதுகாப்பான இடத்துக்கு மாற்றியாக வேண்டும். அந்த எரிகோல் கழிவுகளை பாதுகாத்து வைப்பதற்கு ‘அணுஉலைக்கு அகலே’ எனும் அமைப்பு கட்டப்படுகிறது. அணுக்கழிவுகளின் அளவு அதிகரிக்கும்தோறும், அவற்றை சேமித்துவைக்கும் கிட்டங்கிகளின் தேவையும் அதிகரிக்கிறது. அணுக்கழிவுகளை மறுசுழற்சி செய்தாலும் கழிவுக் கிட்டங்கிகளின் தேவை அதிகரிக்கத்தான் செய்யும். இந்த உயர்தரக் கழிவுகள் தங்களின் கதிர்வீச்சுத் தன்மையில் பாதியை இழப்பதற்கே 24 ஆயிரம் ஆண்டுகள் ஆகும். ஏறத்தாழ 48 ஆயிரம் ஆண்டுகள் பாதுகாக்கப்பட வேண்டிய உயர்தர அணுக் கழிவுகளை ‘ஆழ்நிலக் கருவூலம் ஒன்றில் மட்டுமே பத்திரமாகப் பாதுகாக்க முடியும். இந்த ‘ஆழ்நிலக் கருவூலம்’ ஒன்று இதுவரை இந்தியாவில் உருவாக்கப்படவேயில்லை. இதற்கான தொழிற்நுட்பம் தங்களிடம் இல்லை என்று அணுசக்தித் துறை உச்சநீதிமன்றத்திடம் எழுத்துபூர்வமாகவே ஒத்துக்கொண்டிருக்கிறது.

2011-2014 காலகட்டத்தில் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான இடிந்தகரை போராட்டம் நடந்துகொண்டிருந்தபோது, கூடங்குளம் அணுக்கழிவுகளை கர்நாடக மாநிலம் கோலாரில் உள்ள பயன்பாட்டில் இல்லாத பழைய தங்கச் சுரங்கங்களில் புதைப்போம் என்று 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய அணுசக்தித் துறை அறிவித்தது.

அப்போதைய முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரும், காங்கிரஸ் கட்சியின் மத்திய மந்திரி வீரப்ப மொய்லியும் கோலாரில் மட்டுமல்ல, கர்நாடகத்தில் எங்கேயும் புதைக்க விடமாட்டோம் என்று போர்க்கொடி தூக்கினார்கள். மேற்குறிப்பிட்ட கட்சிகளும், கர்நாடக மாநில அ.தி.மு.க.வும் இணைந்து நடத்திய மூன்று நாள் போராட்டத்தினால், அந்தத் திட்டம் உடனே கைவிடப்பட்டது. கோலாருக்கு மாற்றாக, அப்போது மத்திய இணை அமைச்சராக இருந்த நாராயணசாமி கூடங்குளம் அணுஉலைக் கழிவுகள் கூடங்குளத்திலேயே சேமித்து வைக்கப்படும் என்று அறிவித்தார்.

கூடங்குளம் அணு உலைத் தொடர்பான வழக்கு ஒன்றின் தீர்ப்பில் உச்சநீதிமன்றம் 15 நிபந்தனைகளோடு அணுஉலை செயல்படுவதற்கு அனுமதி அளித்தது. அவற்றுள் முக்கியமான ஒரு நிபந்தனை அணுக்கழிவுகளை பாதுகாக்கும் ‘அணுஉலைக்கு அகலே’ அமைப்பை 5 ஆண்டுகளுக்குள் ஏற்படுத்தியாக வேண்டும் என்பது. அந்த நிபந்தனையை நிறைவேற்றுவதற்கான காலக்கெடு 2018 மார்ச் மாதம் முடிவடைந்த நிலையில், ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பினர் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் மீது வழக்கு தொடுத்தனர். உச்சநீதிமன்றம் கூடங்குளம் அணுஉலையில் 2022 ஏப்ரல் 30-ந் தேதிக்குள் ‘அணுஉலைக்கு அகலே’ அமைப்பு கட்டப்படவேண்டும் என்று ஆணையிட்டது.

அதற்கான ஆயத்த வேலைகளை மத்திய அரசும், அணுசக்தித் துறையும், தமிழக அரசும் தற்போது தொடங்குகின்றன. இதற்கான கருத்துக்கேட்பு கூட்டம் ஜூலை 10 அன்று ராதாபுரத்தில் வைத்து நடக்கும் என்று அறிவித்திருக்கிறார்கள். ஆனால் இதன் தொடர்புடைய அறிக்கைகளை, தகவல்களை மக்கள் அனைவரும் அறியும்பொருட்டு இணையத்தில் பதிவேற்றவில்லை, பத்திரிகைகளில் வெளியிடவில்லை.

கூடங்குளம் அணுஉலை வளாகம் 5.40 கி.மீ. நீளமும், 2.5 கி.மீ. அகலமும் கொண்டது. இந்த 13.5 சதுர கி.மீ. பரப்பில் ஆறு முதல் எட்டு அணுஉலைகள், அணுக்கழிவு மறுசுழற்சி ஆலை உப்பகற்றி ஆலைகள் நிர்வாக அலுவலகங்கள் என அனைத்தையும் சேர்த்து அடர்த்தியாகக் கட்டுவது மிகவும் ஆபத்தானது.

12 அணுஉலைகளுக்கும், 34 அணுஉலைகளுக்கும் இடையே வெறும் 804 மீட்டர் இடைவெளிதான் இருக்கிறது. அதேபோல, 34 அணுஉலைகளுக்கும் 56 அணு உலைகளுக்கும் இடையே அதைவிடக் குறைவாக 344 மீட்டர் தூரம்தான் உள்ளது. இப்படிப்பட்ட நெருக்கடியானச் சூழலில் ‘அணு உலைக்கு அகலே’ அமைப்பை இதே வளாகத்தில் கட்டுவது உள்ளூர் மக்களுக்கும், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கும் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்துக்கும், கேரளத்துக்கும் பெரும் கேடுகளை, ஆபத்துக்களை உருவாக்கும்.

ஓர் அணுஉலையில் எழும் ஆபத்துக்களைப் போலவே ‘அணு உலைக்கு அகலே’ அமைப்பிலிருந்தும் பெரும் அபாயங்கள் எழும். எனவே இது நிலநடுக்கங்களால் பாதிக்கப்படாத வகையில் அமைக்கப்பட வேண்டும். இதிலிருந்து கசியும் தண்ணீரும், வெளியேறும் காற்றும் மிகுந்த நச்சுத்தன்மை கொண்டவை. இங்கே உருவாகும் கதிர்வீச்சைக் கண்காணிக்க, பராமரிக்க சிறப்பு அறைகள் அமைக்கப்படுகின்றன. ‘பட்ட இடத்திலேப் படும், கெட்டக் குடியே கெடும்’ என்பதுபோல, ஆறு மிகப்பெரிய அணுஉலைகளை மட்டுமல்லாமல், அவற்றிலிருந்து வெளிவரும் அணுஉலைக் கழிவுகளையும் தமிழ் மக்கள் தலைகளில் கட்டுவது என்ன நியாயம்?

கூடங்குளத்தில் தயாரிக்கப்படும் மின்சாரம் 5 தென் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. ஆனால் இங்கே உருவாகும் அணுக்கழிவுகளை எந்த மாநிலமும் ஏற்றுக்கொள்ள முன்வராமலிருப்பது என்ன நீதி? நாற்பது முதல் அறுபது ஆண்டுகள் இயங்கும் அணுமின் நிலையங்களையே கேரளா, குஜராத், மேற்கு வங்கம் போன்ற பல மாநிலங்கள் கடுமையாக எதிர்க்கும் நிலையில், 48 ஆயிரம் ஆண்டுகள் அணுக்கழிவுகளைப் புதைத்து வைக்கும் ‘ஆழ்நிலக் கருவூலம்’ ஒன்றை ஏற்றுக்கொள்ள எந்த மாநிலமும் முன்வராது.

இந்தியாவில் ‘ஆழ்நிலக் கருவூலம்’ ஒன்று கட்டப்படாத நிலையில், இந்தியாவின் அனைத்து அணுஉலைகளிலிருந்தும் வெளிவரும் அணுக்கழிவுகளை கூடங்குளத்திற்கு கொண்டுவந்து கொட்டிவிடுவார்கள் என்று தமிழக மக்கள் அஞ்சுகிறார்கள். தமிழகம் அழிவுத்திட்டங்களின் புகலிடமா, இந்தியாவின் குப்பைத்தொட்டியா? என்று அவர்கள் கேட்கும் கேள்வி நியாயமானதுதானே?

சுப.உதயகுமாரன், 
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்.

Next Story