சிறப்புக் கட்டுரைகள்

யுவராஜ்சிங்குக்கு மறுக்கப்பட்ட கவுரவம் + "||" + Honor denied to yuvaraj singh

யுவராஜ்சிங்குக்கு மறுக்கப்பட்ட கவுரவம்

யுவராஜ்சிங்குக்கு மறுக்கப்பட்ட கவுரவம்
இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம், யுவராஜ்சிங். அதிரடி பேட்டிங், பகுதி நேர சுழற்பந்து வீச்சோடு வியப்புக்குரிய வகையில் பீல்டிங்கும் செய்யக் கூடியவர்.
2000-ம் ஆண்டு முதல்முறையாக இந்திய அணிக்குள் அடியெடுத்து வைத்த போது, அப்போதைய கேப்டன் சவுரவ் கங்குலி, ‘நீண்ட காலத்திற்கு பிறகு இந்திய அணிக்கு சிறந்த ஒரு பீல்டர் கிடைத்திருக்கிறார்’ என்று புகழ்ந்தார்.

நமது அணியில் மிடில் வரிசை பிரச்சினைக்கு தீர்வு கண்டவர்களில் யுவராஜ்சிங் முக்கியமானவர். அந்த வரிசையில் 10 ஆண்டுகளுக்கு அவரது சிம்மாசனத்தை யாராலும் அசைக்க முடியவில்லை. ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் தனி வீரராக வெற்றி தேடித்தரக்கூடிய அசாத்திய திறமைசாலியாக மின்னினார். அவரது முதல் 12 அரைசதங்களில் 11-ல் வெற்றிக்கனியை பறித்ததே அதற்கு சான்று.

யுவராஜ்சிங்குக்கு என்று சில தனிப்பட்ட சிறப்புகள் உண்டு. 20 ஓவர் போட்டியில் ஒரு ஓவரில் 6 பந்துகளையும் சிக்சராக்கிய முதல் வீரர், 20 ஓவர் கிரிக்கெட்டில் குறைந்த பந்தில் அரைசதம் (12 பந்து) விளாசியவர், ஒரு நாள் போட்டி உலக கோப்பையில் ஒரே ஆட்டத்தில் 50 ரன்களுக்கு மேலாக எடுத்து 5 விக்கெட்டும் எடுத்த முதல் வீரர், 300-க்கும் மேற்பட்ட ஒரு நாள் போட்டிகளில் விளையாடியும் ஒரு முறை கூட கேப்டன் பதவியை அலங்கரிக்காத அரிதானவர் இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

2000-ம் ஆண்டு ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்டின் தொடர்நாயகன் (203 ரன் மற்றும் 12 விக்கெட்), 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையை வென்ற தொடரில் அரைஇறுதி ஆட்டத்தின் ஹீரோ, 2011-ம் ஆண்டு (50 ஓவர்) உலக கோப்பை போட்டியில் 4 முறை ஆட்டநாயகனோடு ஒட்டுமொத்தத்தில் தொடர்நாயகன் விருது (362 ரன் மற்றும் 15 விக்கெட்) என்று உலக கிரிக்கெட்டில் வைரமாக ஜொலித்தார்.

எல்லாவற்றுக்கும் மேலாக நுரையீரல் பகுதியில் புற்றுநோய் பாதிக்கப்பட்ட போது, இனி அவரது கதை அவ்வளவு தான் என்று விமர்சித்தவர்களுக்கு மத்தியில் பீனிக்ஸ் பறவை போல் எழுச்சி பெற்று ஆச்சரியப்படுத்தினார். புற்றுநோய் தாக்கத்தில் இருந்து மீண்டு வந்த பிறகு கூட 3 அரைசதம், ஒரு சதம் அடித்திருக்கிறார். ‘எந்த தருணத்திலும் நம்பிக்கையை இழக்காதே’ என்பதே அவரது தாரக மந்திரம். இல்லாவிட்டால் அவரால் 17 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் நீடித்திருக்க முடியாது. புற்றுநோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப முடியும் என்று மற்றவர்களுக்கு யுவராஜ்சிங் ஒரு முன்மாதிரியாக இருக்கிறார் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

தனது நளினமான பேட்டிங்கின் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்கள் மனம் கவர்ந்த வீரராக வலம் வந்த யுவராஜ்சிங் சில தினங்களுக்கு முன்பு கிரிக்கெட்டுக்கு முழுக்கு போட்டார். ஆனால் அவருக்கு என்று ‘பிரியாவிடை போட்டி’ கொடுக்கப்படவில்லையே என்ற வருத்தம் எல்லோருக்கும் இருக்கிறது. மைதானத்தில் ரசிகர்களின் முன்னிலையில் உணர்வுபூர்வமாக விடைபெறும் போது தான், அந்த கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை ஏறக்குறைய முழுமை பெறும். அந்த கவுரவத்தை கொடுப்பதாக சொல்லிவிட்டு பிறகு இந்திய கிரிக்கெட் வாரியம் கண்டுகொள்ளாமல் போய் விட்டது என்று யுவராஜ்சிங் வெளிப்படையாகவே கூறிவிட்டார்.

இவருக்கு மட்டுமல்ல, 20 ஓவர் மற்றும் 50 ஓவர் உலக கோப்பை (2011-ம் ஆண்டு) போட்டியின் இரண்டு இறுதி ஆட்டத்திலும் இந்திய அணிக்காக அதிக ரன்கள் எடுத்த சாதனையாளரான கவுதம் கம்பீரும் பிரிவு உபசார போட்டி கிடைக்கும் என்று காத்திருந்து ஏமாற்றத்துடன் கடந்த டிசம்பர் மாதம் ஓய்வு பெற்றார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமைக்குரிய ஷேவாக்குக்கும் இதே ஏக்கம் உண்டு. ‘தேர்வாளர்கள் என்னிடம், உனக்கு இனி அணியில் இடம் கிடைக்காது. நீக்கப்போகிறோம் என்று ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் அவர்களிடம் நான், சொந்த ஊரில் கடைசியாக டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பு தாருங்கள். அதன் பிறகு ஓய்வு பெற்றுவிடுகிறேன் என்று வேண்டுகோள் விடுத்திருப்பேன். அந்த வாய்ப்பை எனக்கு அவர்கள் தரவில்லை. இந்திய அணிக்காக 12-13 ஆண்டுகள் விளையாடிய நான் அதற்கு தகுதியானவன் இல்லையா? இந்த மனக்குறை எனது வாழ்நாள் முழுவதும் இருந்து கொண்டே இருக்கும்’ என்று ஷேவாக் அடிக்கடி புலம்புவது உண்டு.

ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் ஓய்வு பெறுவதற்காக அவருக்கு என்று வெஸ்ட் இண்டீஸ் அணியை வரவழைத்து அவரது 200-வது டெஸ்ட் போட்டியை மும்பையில் நடத்தி பிரமாண்ட மான முறையில் வழியனுப்பி வைத்தார்கள். வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹராவுக்கு 38-வது வயதில் சொந்த ஊரில் ஆட வைத்து அவரை மைதானத்தில் தோளில் சுமந்து வந்து விடை கொடுத்தனர்.

அதே கவுரவம் இவர்களுக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம் வழங்கியிருக்க வேண்டும். அதே சமயம் சீனியர் வீரர்களும் தங்களது ஆட்டத்திறன் குறைந்து, இளம் வீரர்கள் வரிசை கட்டி நிற்கும் போது தாமாக முன்வந்து ஓய்வு முடிவை எடுப்பதில் தயங்கக் கூடாது!

-ஜெய்பான்.

ஆசிரியரின் தேர்வுகள்...