‘நிபா வைரசில்’ இருந்து காக்கும் வழிமுறைகள்...!


‘நிபா வைரசில்’ இருந்து காக்கும் வழிமுறைகள்...!
x
தினத்தந்தி 15 Jun 2019 7:35 AM GMT (Updated: 15 Jun 2019 7:35 AM GMT)

அளப்பரிய தொழில் நுட்பங்கள் மருத்துவத் துறையில் வளர்ந்திட்டாலும் பலநோய் கிருமிகளும், நோய்களும், மருத்துவர்களுக்கு சவாலாகவே உள்ளது.

நோய்களை தடுப்பது எப்படி , எவ்வாறு கையாளுவது, எவ்வாறு பரவாது தடுப்பது, மரணத்தை தடுப்பது எப்படி எனபல சவால்களுடன் தான் மருத்துவத் துறை பயணிக்கிறது. பாக்டீரியாக்களினால் உருவாகும் நோய்கள் குறைந்து வரும் சூழலில், புதிய வைரஸ் கிருமிகள் புதிய நோய்களோடு விஸ்வரூபம் எடுத்து வருகிறது. டெங்கு, சிக்குன்குனியா, பன்றிக்காய்ச்சல், பறவைக்காய்ச்சல், எபோலா, சிகா போன்ற வைரஸ் நோய்களை தொடர்ந்து நிபா வைரஸ் அதிவீரியமாக பரவி வருகிறது. கடந்த 2018-ம் ஆண்டு உலகசுகாதார நிறுவனம் ‘நிபாவைரஸ்“ குறித்த ஆராய்ச்சிக்கு முன்னிலை கொடுக்க அனைத்து நாடுகளையும் வற்புறுத்தியது. இந்த வைரஸ் கிருமிகளால் பாதிக்கப்படும் நபர்களில் 40-75 சதவிதத்தினர் மரணத்தை சந்திக்க நேருவதால் உலக சுகாதார நிறுவனம் இதை வலியுறுத்தியது.

விலங்கின் மூலம் மனிதர்களுக்கு பரவும் இந்நோய் தொடர்ந்து மனிதர்களிடையே பரவும். 1998-ம் ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் மலேசியாவில் உள்ள கிராமங்களில் உள்ள பன்றி வளர்க்கும் பண்ணைகளில் பணிபுரியும் நபர்களிடம் இந்தநோயின் அறிகுறிகள் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் பாதித்த நபர் மலேசியாவிலுள்ள, ‘சன்கைய் நிபா’ என்னும் கிராமத்தில் இருந்து கண்டறியப்பட்டதால் இந்த வைரசுக்கு ‘நிபா’ என பெயர் சூட்டப்பட்டது. தொடர்ந்து வங்காளதேசத்திலும், இந்தியாவில் மேற்கு வங்காளம் மாநிலத்தின் ஜல்பய்குரி மாவட்டத்திலுள்ள சிலிகுரி என்ற இடத்தில் 2001-ம் ஆண்டு இந்நோய் பரவல் கண்டறியப்பட்டது.

சாதாரண காய்ச்சல், இருமல், தலைவலி, உடல்வலி, வாந்தி மற்றும் தொண்டை வலியுடன் ஆரம்பிக்கும் இந்நோய் அறிகுறி இரண்டு நாள்களுக்குள் நோயாளிகளை கோமாநிலைக்கு கொண்டு சென்று மரணிக்க வைத்துவிடும். நிபா வைரஸ் உடலுக்குள் சென்ற 4 நாட்கள் முதல் 14 நாள்களுக்குள் நோய் அறிகுறிகள் ஆரம்பமாகும். சாதாரண அறிகுறிகளுடன் தோன்றும் நோயானது பின் நினைவிழத்தல், தள்ளாட்டம், மற்றும் நரம்புமண்டல பாதிப்புகளை உருவாக்கி மூளை காய்ச்சலுக்கு இட்டு செல்லும். சில நோயாளிகளுக்கு நிமோனியா போன்ற அறிகுறிகளும், மூச்சு திணறலையும் உண்டாக்கும்.

ஆர்.என்.ஏ வகையை சார்ந்த இந்த வைரஸ் ஜெனிபா வைரஸ் குடும்பத்தை சேர்ந்தது. சாதாரணமாக இந்த வைரஸ் கிருமிகள் வவ்வால்களின் உடலில் காணப்படுகின்றன. குறிப்பாக டெரோபஸ் வவ்வால் இனங்களில் இவை காணப்படுகின்றன. கம்போடியா, கானா, இந்தோனேசியா, மடகாஸ்கர், பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் தாய்லாந்தில் உள்ள வேறு சிலவகை வவ்வால்களிலும் ‘நிபா’ வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. 1999-ம் ஆண்டு தாக்குதலுக்கு பின் தொடர்ந்து பல ஆண்டுகளாக இந்நோயின் தாக்கம் கண்டறியப்பட்டுவருகிறது. 2018-ம் ஆண்டு மே மாதம் 700 நோயாளிகள் உலகளவில் பாதிக்கப்பட்டனர்.

இவற்றில் 50 முதல் 70 சதவீத நோயாளிகள் மரணத்தை சந்தித்தனர். இவற்றுள் இந்தியாவில் கேரள மாநிலத்தில் 17 பேர் மரணம் அடைந்தனர். இவர்களில் 14 பேர் கோழிக்கோடு மாவட்டத்திலும், 3 பேர் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இந்த ஆண்டு முதல்முறையாக கொச்சியில் ஒரு கல்லூரி மாணவர் இந்நோய்க்கு ஆட்பட்டுள்ளார் அவரோடு தொடர்புடைய 311 நபர்கள் தற்போது மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

1999-ம் ஆண்டு மலேசியாவில் இந்நோய் கண்டறியப்பட்ட சமயத்தில், பன்றிகள் வளர்க்கும் பண்ணைகளில் பல பன்றிகளின் உடலில் ‘நிபா’ வைரஸ் கண்டறியப்பட்டது. தாக்குதல் அடைந்த பன்றிகள் வித்தியாசமான முறையில் உறுமும். பலஆயிரம் பன்றிகள் இந்நோயால் மடிந்தன. பன்றியின் மூலம் பரவிய இந்நோயை கட்டுப்படுத்த லட்சக்கணக்கான பன்றிகள் அந்நாட்டில் கொல்லப்பட்டன. வவ்வால்களின் உமிழ்நீர் மற்றும் சிறுநீரில் இக்கிருமிகள் அதிகம் இருப்பதால் இவை கலந்த பழங்கள், தண்ணீர் உணவுகளை உட்கொள்ளும்போது பன்றிகளுக்கும் அதிலிருந்து மனிதர்களுக்கும் பின் மனிதர் களினிடையே பரவுகின்றன.

வவ்வால் கடித்த பழங்களை உண்டாலும். திறந்த கிணற்றில் வாழும் வவ்வால்களின் சிறுநீர் கிணற்று தண்ணீரில் கலந்து அந்த தண்ணீரை குடிப்பதாலும், பனைமரத்தில் இறக்கும் ‘கள்’ களில் வவ்வால்களின் உமிழ்நீர் சிறுநீர் கலப்பதாலும் இதை உட்கொள்பவர்களுக்கும் இந்தநோய் தாக்கம் அதிகமாக இருக்கிறது. கேரள மாநிலத்தில் திறந்த கிணறுகள் அதிகமாக இருப்பதாலும், ‘கள்’ அதிகமாக பயன்படுத்துவதாலும் இந்த நோய் தொற்று அதிகமாக இருப்பதாக கண்டறியப்படுகிறது.

இந்த நோயை எளிதாக கண்டறிய முடியாத சூழல் இருப்பதாலும் குறிப்பிட்ட தடுப்புமுறைகள் (தடுப்பூசிகள்) மற்றும் மருந்துகள் இல்லாததாலும் 50 முதல் 75 சதவீதத்தினர் மரணம் அடைகின்றனர். நோய்களை கண்டறிய நுணுக்கமான தொழில்நுட்பங்கள் குறிப்பாக ஆர்.டி.பி.சி.ஆர் எலிசா போன்ற முறைகள் பயன்படுத்த வேண்டியுள்ளது. நோயாளிகளின் உமிழ்நீரில் வைரஸ் கிருமிகளின் ஆர்.என்.ஏ உள்ளதா அல்லது வைரஸ் கிருமிகள் உள்ளதா என்பதை திசுவளர்ப்பு முறைகள் கையாள வேண்டியுள்ளதால் சாதாரண மருத்துவமனைகளில் இந்த வசதிகள் இருப்பதில்லை.

அப்படியே நோய்கள் கண்டறியப்பட்டாலும் அவற்றை குணமாக்கும் குறிப்பிட்ட மருந்துகள் இல்லை. நோய்களை தடுக்கும் முறைகளும் தற்சமயம் இல்லை. தடுப்பு மருந்துகளும் ஆராய்ச்சி நிலையிலே உள்ளது. நோய் தாக்கியவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அழிப்பதும், வைரஸ் அடங்கிய பழங்களையோ, பழச்சாறுகளையோ, தண்ணீரையோ, பனை ‘கள்’ போன்ற வகைகளை உட்கொள்ளாமலும், நோய் பாதித்த பன்றி மற்றும் வேறு விலங்குகளிடமிருந்து ஒதுங்கியிருப்பதும், கைகளை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பதின் மூலம் இந்நோயை தடுக்கஇயலும். இந்நோயை வரும்முன் காத்தலே சாலச் சிறந்தது. கேரள மாநில எல்லையோர மாவட்டங்களில் உள்ள மக்கள் கவனமுடன் இருப்பது நல்லது. இதற்கான முயற்சியில் தமிழ்நாடு அரசும் சிறப்பான பணிகள் ஆற்றிவருகிறது.

முனைவர் எஸ்.பிரகாஷ்,
நுண்ணுயிரியல்துறை பேராசிரியர், தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாகர்கோவில்.

Next Story