‘புரத’ பெண்மணி


‘புரத’ பெண்மணி
x
தினத்தந்தி 16 Jun 2019 9:52 AM GMT (Updated: 16 Jun 2019 9:52 AM GMT)

புரதசத்து நிறைந்த உணவுப் பொருட்களை மட்டுமே கொண்டு நொறுக்கு தீனிகள், கேக் வகைகளை தயார் செய்யும் பேக்கரியை நடத்தும் இந்தியாவின் முதல் பெண்மணி என்ற சிறப்பை பெற்றவர், ராஷி சவுதாரி.

புரதசத்து நிறைந்த உணவுப் பொருட்களை மட்டுமே கொண்டு நொறுக்கு தீனிகள், கேக் வகைகளை தயார் செய்யும் பேக்கரியை நடத்தும் இந்தியாவின் முதல் பெண்மணி என்ற சிறப்பை பெற்றவர், ராஷி சவுதாரி. மும்பையை சேர்ந்த இவர் ஊட்டச்சத்து நிபுணராக விளங்குகிறார். நொறுக்கு தீனி உணவு பதார்த்தங்களில் இனிப்பும் கிரீமும் அதிகம் சேர்க்கப் படுகின்றன. அதற்கு மாற்றாக ஆரோக்கியமான உணவுகளை தயார் செய்யும் நோக்கத்தில் புரதத்தை கையில் எடுத்திருக் கிறார். ஆரோக்கியத்தை விரும்பும் அனைத்து தரப்பினரும் ருசித்து சாப்பிடும் விதத்தில் ஏராளமான பதார்த்தங்களை புரதத்தில் உருவாக்கி இருக்கிறார்.

‘‘ஊட்டச்சத்து நிபுணர் என்ற முறையில் உடல் நல பாதிப்புகள், வளர்சிதை மாற்ற பிரச்சினைகள் கொண்ட பல்வேறு தரப்பு மக்களை சந்தித்திருக்கிறேன். குறிப்பாக 6 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்- சிறுமியர்கள் உடல்பருமன் பிரச்சினையால் அவதிப்படுகிறார்கள். பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் சாக்லேட், துரித உணவுகளை சாப்பிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள். ஆனால் அதை டாக்டர்களோ, ஊட்டச்சத்து நிபுணர்களோதான் தங்கள் குழந்தை களுக்கு புரிய வைக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள். தாங்கள் சொன்னால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற எண்ணம் அவர்களிடம் இருக்கிறது.

சிறுவர் - சிறுமியர்களாலும் இனிப்பு உணவு பதார்த்தங்களை தவிர்க்கமுடிவதில்லை. அவற்றின் சுவைக்கு அடிமையாகிவிடுகிறார்கள். அதற்கு நிரந்தர தீர்வு காணும் நோக்கத்தில் ஆரோக்கியமான உணவு வகைகளை தயார் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன். சில உணவு பதார்த்தங்களில் ‘சர்க்கரை சேர்க்கப்படவில்லை’ என்று அச்சிடப்பட்டிருக்கும். அவைகளின் உண்மை தன்மையில் சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது.

நான் புரத சத்து உணவு பதார்த்தங்களை தயார் செய்தபோது மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? எனது தயாரிப்புகள் சுவையாக இருக்குமா? என்ற கவலை இருந்தது. முதலில் எனது நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களிடம் சுவைக்க கொடுத்து கருத்து கேட்டேன். அவர்கள் சுவையாக இருக்கிறது என்று என்னை ஊக்கப்படுத்தினார்கள. அதன்பிறகுதான் முழுவீச்சில் இந்த தொழிலில் இறங்கினேன்’’ என் கிறார், ராஷி.

தனது உணவு தயாரிப்புகளில் புரதத்தை முதன்மையாக பயன்படுத்துவதற்கான காரணத்தையும் ராஷி விவரிக்கிறார்.

‘‘நான் எனது டீன் ஏஜ் பருவத்தில் உடல் பருமன் பற்றி விழிப்புணர்வு இல்லாமல் இருந்தேன். விரும்பிய பலகாரங்களையெல்லாம் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டேன். அதன் காரணமாக ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பு, உடல் பல வீனம் போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டேன். அதன் பிறகு உடல் நலத்தில் அக்கறை செலுத்தியபோதுதான் ஊட்டச்சத்தியல் பற்றிய படிப்பில் ஆர்வம் ஏற்பட்டது. உடல் நலன் சார்ந்த ஏராளமான விஷயங்களை அறிந்துகொள்ளவும் முடிந்தது. தற்போதுதான் உடல் நலனை பேணுவதில் புரதத்தின் முக்கிய பங்களிப்பையும் புரிந்து கொண்டேன்.

சாப்பிடும் உணவு வகைகளில் புரதத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க தொடங்கினேன். எனது தயாரிப்புகளில் மைதா மாவை பயன்படுத்துவதில்லை. அதற்கு பதிலாக தேங்காய் மாவைத்தான் உபயோகிக்கிறேன். அதில் புரதம் அதிகமாக இருக்கிறது. மேலும் நல்ல கொழுப்பும், நார்ச்சத்தும் அதிகம் உள்ளது. சர்க்கரையும் குறைவு. கார்போஹைட்ரேட்டும் எளிதில் செரிமானமாகும் விதத்தில் இருக்கிறது. உணவு பலகாரங்களை தயார் செய்வதற்கும் தேங்காய் எண்ணெய்தான் பயன்படுத்துகிறோம். ஓட்ஸ், கோதுமை, சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை போன்றவற்றையும் பயன்படுத்துவதில்லை. இனிப்புக்கு தேனைத்தான் உபயோகப்படுத்துகிறோம். உப்புக்கு பதிலாக இந்துப்புவை பயன்படுத்துகிறோம்’’ என்கிறார்.

எந்தெந்த பொருட்களில் எல்லாம் புரத சத்து அதிகமாக இருக்கிறது என்பதை கணக்கிட்டு அவைகளையே இவர் தயாரிக்கும் உணவுகளில் அதிகம் உபயோகப்படுத்தி வருகிறார்.

Next Story