புதிய எம்.பி: அரசியல் அரங்கத்தில் ஆறு மொழி பேசும் நடிகை


நவ்நித், 25 சினிமாக்களில் நடித்திருக்கிறார்; நவ்நித் மக்கள் செல்வாக்கு பெற்றவராகத் திகழ்கிறார்
x
நவ்நித், 25 சினிமாக்களில் நடித்திருக்கிறார்; நவ்நித் மக்கள் செல்வாக்கு பெற்றவராகத் திகழ்கிறார்
தினத்தந்தி 23 Jun 2019 9:38 AM GMT (Updated: 23 Jun 2019 9:38 AM GMT)

நவ்நித் மக்கள் செல்வாக்கு பெற்றவராகத் திகழ்கிறார்.. நவ்நித் ரானா 25 சினிமாக்களில் நடித்திருக்கிறார். அவைகள் பெரும்பாலும் தெலுங்கு சினிமாக்கள். மலையாளத்தில் மம்மூட்டிக்கு ஜோடியாக ‘லவ் இன் சிங்கப்பூர்’ என்ற சினிமாவிலும் நடித்துள்ளார். “நான் தென்இந்திய சினிமாக்களில் நடித்ததால் ஆறுமொழிகள் பேச கற்றுக்கொண்டேன்.

அவை எல்லாம் இனி என் அரசியல் வாழ்க்கைக்கு கைகொடுக்கும்” என்று கூறும் இவர், புதிய எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு பாராளுமன்றத்தில் பதவி ஏற்றுக்கொண்டுள்ளார்.

33 வயதான நவ்நித் ரானா மராட்டிய மாநிலத்தில் உள்ள அம்ராவதி தனிதொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு ஜெயித்தவர். இவர் அந்த தொகுதியில் 5 முறை சிவசேனை கட்சி சார்பில் போட்டியிட்டு வென்ற ஆனந்த்ராவ் அட்சலை 37 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.

அம்ராவதியில் தற்போது வெயில் வெளுத்து வாங்குகிறது. ஆனாலும் அங்கு சங்கர்நகரில் இருக்கும் நவ்நித் ரானாவின் வீட்டு முன்பு தொண்டர்கள் கூட்டம் குவிந்துகிடக்கிறது. அவர்களில் பெரும்பாலானவர்களின் ஆசை, அரசியலுக்கு வந்திருக்கும் இந்த நடிகையுடன் செல்பி எடுக்கவேண்டும் என்பதாக இருக்கிறது. அந்த கூட்டத்தி்னருக்கு மத்தியில் ஷேக் அலி குருஜி என்பவர் கையில் மனுவோடு வந்து காத்திருந்தார். ரிதாபூர் என்ற கிராமத்தை சேர்ந்த அவர், தனது கிராமத்தில் இருக்கும் மசூதி இடத்தை சிலர் அபகரிக்க முயற்சிப்பதாக கூறி, அதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு வந்திருந்தார்.

கிராமத்து மக்களையும் சேர்த்துக்கொண்டு கூட்டமாக வந்திருந்த அவரிடம் நவ்நித் பொறுமையாக விஷயங்களை எல்லாம் கேட்டறிந்துவிட்டு, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதி அளித்தார். அந்த நேரத்தில் நவ்நித்தின் கணவர் ரவி ரானா அங்கு வர, அவரிடமும் ஷேக் அலி குருஜி அதே கோரிக்கையை வலியுறுத்தி விளக்கினார். அவரும் கேட்டுவிட்டு, நடவடிக்கை எடுப்பதாககூறி நம்பிக்கையோடு அனுப்பிவைத்தார். ரவி ரானா, பத்னேரா தொகுதி எம்.எல்.ஏ.ஆக இருக்கிறார்.

தன்னை சந்திக்க காலை நேரத்திலே கூடி விடும் மக்களிடம் சிரித்த முகத்தோடு உரையாடுவது நவ்நித்தின் வழக்கமாக இருக்கிறது. தற்போது மக்கள் அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்திருந்தாலும், 2014-ல் நடந்த தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு அதே தொகுதியில் தோற்றார். இப்போது இவரிடம் தோற்றிருக்கும் ஆனந்த்ராவ் அட்சல், அப்போது இவரை தோற்கடித்தார்.

“ஆனந்த்ராவ், தொகுதி மக்களோடு தொடர்பில் இல்லாதவர். அவர் இந்த தொகுதிக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. ஆனாலும் அவர் மோடி அலையில் எப்படியோ கடந்த தேர்தலில் வென்றுவிட்டார்” என்கிறார், நவ்நித்.

கடந்த தேர்தலில் இவர் தேசிய வாத காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டாலும் இந்த முறை சுயேச்சையாகிவிட்டார். அதற்கு அவரது கணவர் ரவி ரானாதான் காரணம். ரவி, எந்த கட்சியையும் சாராதவர். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி மீது பற்றுகொண்டவர். அதோடு மராட்டிய மாநில முதல் மந்திரி தேவேந்திர பட்நாவிசுடனும் நெருக்கமான நட்பில் இருக்கிறார்.

“அம்ராவதி தொகுதி தற்போது சிவசேனைக்கு ஒதுக்கப்பட்டது. அதனால் நான் பாரதிய ஜனதா கட்சி சார்பில் அந்த தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்காது என்பது எனக்கு தெரியும். அதே நேரத்தில் நான் இப்போதும் தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் மற்றும் அஜித் பவார் போன்றவர்களை மதிக்கிறேன். அதனால் யாருக்கும் நெருக்கடி கொடுக்காமல் இருக்க சுயேச்சையாக போட்டியிடுவதென்று கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பே முடிவு செய்துவிட்டேன்” என்கிறார், நவ்நித்.

மும்பை அந்தேரி பகுதியில் பிறந்து வளர்ந்த இவருக்கு 14 வயதிலே நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

“அப்போது நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தேன். எனது ஆசிரியை ஒருவர், இசை ஆல்பம் ஒன்றில் நடிப்பதற்காக காஷ்மீர் சிறுமி போன்ற தோற்றம் கொண்டவர் தேவை என்றார். அதற்கான தேர்வுக்கு என்னையும் அனுப்பினார். எனக்கு நீளமான கூந்தல் உண்டு. என் கன்னங்கள் காஷ்மீர் சிறுமிகளுக்கு இருப்பதுபோல் பிங்க் கலரில் இருக்கும். அதனால் நானும் நடிகை தேர்வுக்கு சென்றேன். என்னை தேர்வு செய்தார்கள். இரண்டு இசை ஆல்பங்களில் நடித்த பின்பு, கன்னட மொழி சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தென்னிந்திய மொழிப் படங்களில் அதிகம் நடித்ததால் 6 மொழிகளை கற்றுக்கொண்டேன். அதில் எனக்கு மலையாளம்தான் கடினமாக இருந்தது” என்கிறார்.

நவ்நித்தும், ரவி ரானாவும் பாபா ராம்தேவின் யோகா அமைப்புடன் தொடர்பில் இருப்பவர்கள். அவரை பின்பற்றுகிறவர்கள். இவர்களது முதல் சந்திப்பு பாபா ராம்தேவ் நடத்திய யோகா பயிற்சி முகாம் ஒன்றில்தான் நடந்திருக்கிறது.

“முதல் சந்திப்பிற்கு பிறகு நாங்கள் நண்பர்களானோம். ஆனாலும் பயிற்சி முகாம் முடிந்து நான் நடிப்பில் பிசியானேன். அவர் அரசியலில் பரபரப்பாகிவிட்டார். அப்போதே அவர் எம்.எல்.ஏ. ஆக இருந்தார். பின்பு அடுத்தடுத்த யோகா முகாம்களில் பங்குபெற்றபோது நெருக்கமான நண்பர்களாகிவிட்டோம்” என்று புன்னகையோடு சொல்கிறார், நவ்நித்.

இவர்களது திருமணம் 2011-ம் ஆண்டு நடந்திருக்கிறது. ஆடம்பரமாக அல்ல, அமைதியாக 3100 ஜோடிகளுக்கு ஒரே இடத்தில் திருமணம் நடந்தபோது, இவர்களும் கூட்டத்தோடு கூட்டமாக புதுமணத்தம்பதிகளாகி இல்லற வாழ்க்கைக்குள் அடியெடுத்துவைத்திருக்கிறார்கள். அதன் பின்பு நடிப்பில் இருந்து விலகி, சமூக சேவையில் காலடி எடுத்துவைத்திருக்கிறார், நவ்நித்.

எம்.பி.யானதும் இவர் அரசியல் அதிரடி களப் பணிகளில் இறங்கிவிட்டார். மராட்டிய மாநில முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிசை சந்தித்து தனது தொகுதியில் மருந்து தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றுக்கு இடம் ஒதுக்கும்படி கோரிக்கைவைத்திருக்கிறார். அதற்கு முதல் மந்திரி ஒத்துக்கொண்டதாகவும் சொல்கிறார். அந்த தொழிற்சாலை அமைந்தால் 3 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்குமாம்.

தொகுதிக்கான தனது அடுத்தடுத்த திட்டங்கள் பற்றியும் சொல்கிறார்:

“விதர்பா பகுதியில் அம்ராவதி இரண்டாவது மிகப்பெரிய நகரம். ஆனால் இங்கு விமான நிலையம் இல்லை. விமான நிலையத்தை உருவாக்குவது எனது முதல் திட்டம். அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தையும் உருவாக்க ஆசைப்படுகிறேன். சிக்கல்தாரா மலைப்பகுதியை தேசிய சுற்றுலாத்தலமாக உருவாக்கும் திட்டமும் இருக்கிறது. தொகுதி மக்களின் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க பிரம்மசதி அணையையும் கட்டவேண்டும். அம்ராவதி தொகுதி மிகப் பெரியதாக இருப்பதால், அசால்பூரை தனி மாவட்டமாக உருவாக்கவேண்டும் என்பது என் எதிர்கால திட்டம்” என்றும் நவ்நித் சொல்கிறார்.

சுயேச்சையாக வெற்றிக்கொடி நாட்டிய இவர், அரசியலில் சூறாவளியாக சுழன்றடிப்பார் என்று நம்பலாம்!

Next Story