சிறப்புக் கட்டுரைகள்

உஷாரய்யா உஷாரு.. + "||" + Usharaya Usharu ..

உஷாரய்யா உஷாரு..

உஷாரய்யா உஷாரு..
அவள் அழகு நிறைந்தவள். கலைத்துறை ஈடுபாடும் இருந்ததால் காண்போரை வசீகரிக்கும் நேர்த்தியுடன் காட்சியளிப்பாள்.
வள் அழகு நிறைந்தவள். கலைத்துறை ஈடுபாடும் இருந்ததால் காண்போரை வசீகரிக்கும் நேர்த்தியுடன் காட்சியளிப்பாள். மணவாழ்க்கையைவிட கலை வாழ்க்கை அவளுக்கு பிடித்திருந்ததால், பருவ வயதில் தேடிவந்த வரன்களை எல்லாம் தட்டிக்கழித்தாள். கலை தந்த புகழுக்குள்ளே அமுங்கிக் கிடந்ததால், கல்யாண சிந்தனையே அவளுக்குள் அப்போது எழவில்லை.

அவள் அடிக்கடி வெளிநாடுகளுக்கு கலை நிகழ்ச்சி நடத்தச் செல்வாள். ஒருமுறை அவள் வெளிநாட்டு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, திரும்பிக்கொண்டிருந்தபோது அவளுக்குள் மனமாற்றம் ஏற்பட்டது. வெளிநாட்டில் நிறைய சம்பாதித்து வசதியாக வாழும் வரனை திருமணம் செய்துகொண்டு அங்கேயே தங்கிவிடலாம் என்றும், அங்கேயே தனது கலைப் பணியை தொடங்கி நடத்தலாம் என்றும் முடிவு செய்தாள். இந்த முடிவுக்கு அவள் வந்தபோது வயது 35-ஐ கடந்திருந்தது.

திருமண ஆசை அவளுக்கு வந்ததை அறிந்து பெற்றோரும், உற்றோரும் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். நீண்ட தேடு தலுக்கு பிறகு, அவள் விரும்பியபடியே குறிப்பிட்ட நாட்டில் வேலைபார்க்கும் வரன் ஒன்று அமைந்தது. தென்னிந்தியாவில் பிறந்து வளர்ந்த அவர் பதினைந்து வருடங்களாக வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். அவர் 45 வயதை நெருங்கிக்கொண்டிருப்பவர்.

அவரது பெற்றோர் வசிக்கும் நகரத்திற்கும்- இவளது குடும்பத்தினர் வசிக்கும் ஊருக்கும் 400 கி.மீ.தூரம். அவரது பெற்றோர் இவளது வீட்டிற்கு வந்தார்கள். பெண் பார்த்தார்கள். பேசினார்கள். பிடித்துவிட்டது. அங்கிருந்துகொண்டே வெளிநாட்டில் வசிக்கும் மகனை செல்போனில் தொடர்புகொண்டார்கள். அவர் போனில் முகம் காட்டிப்பேசினார். போனை பெண்ணிடம் கொடுத்தார்கள். அவளும் முகம் காட்டி பேசினாள். அவர் வயதில் அரை செஞ்சுரியை நெருங்கினாலும் பார்க்க இளைஞராக காட்சியளித்தார். வெளிநாட்டுக்காரர் போலவே தோன்றினார்.

‘ஜோடிப் பொருத்தம் சூப்பராக இருக்கும்’ என்றார்கள் சுற்றியிருந்த உறவினர்கள். முதல்கட்ட பேச்சுவார்த்தை வெற்றி கரமாக முடிவடைந்தது. அன்றே சம்பிரதாயத்திற்காக நிச்சயமும் செய்துகொண்டார்கள்.

அவர் உடனடியாக நேரடியாக வந்து பெண் பார்க்க விரும்பவில்லை. வேலை தொடர்பாக தனக்கு வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் இருப்பதால் தான் இரண்டொரு மாதங்களுக்கு பிசியாக இருப்பதாக சொன்னார்.

அதனால் அவளே வெளிநாடு சென்று அவரை சந்தித்து பேசிவிட்டு வரும் விதத்தில் திட்டம் வகுக்கப்பட்டது. அந்த நாட்டில், இவள் கலந்துகொள்வதற்காக கலை நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். வெளிநாடு போய், அந்த நிகழ்ச்சியில் கலந்துவிட்டு, அப்படியே தனது வருங்கால கணவரை சந்திக்கும் விதத்திலும், திருமண தேதியை முடிவுசெய்யும் விதத்திலும் அவளது பயணத்திட்டம் தயாரானது.

அவள் வெளிநாட்டுக்கு பயணம் செய்யும் நாள் நெருங்கிக்கொண்டிருந்தபோது, அவளது செல்போனுக்கு சில படங்கள் வந்தன. அது ஆண்களோடு அவளது வருங்கால கணவர் நெருக்கமாக இருக்கும் படங்கள். அதை அவள் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை. வருங்கால கணவரின் நண்பர்கள் யாரோ கேலிக்கிண்டலுக்காக அதுபோன்ற படங்களை அனுப்புவதாக நினைத்தாள். அதோடு அவளிடம் அவளது கலைத்துறை சார்ந்த அறிவே அதிகம் இருந்தது. பொது அறிவுத்திறன் குறைவுதான். நட்பு வட்டமும் கிடையாது. அதனால் அதுபோன்ற படங்கள் உணர்த்தும் பாடங்கள் என்ன என்பதை அவள் தெரிந்திருக்கவில்லை.

வழக்கமான மகிழ்ச்சியோடு அந்த நாட்டிற்கு பயணப்பட்டாள். நிகழ்ச்சியை உற்சாகமாக நடத்தினாள். வருங்கால கணவரை சந்தித்தாள். அவர் சொன்ன தகவலைக்கேட்டு அதிர்ச்சியடைந்தாள். ஆனாலும் அதிர்ச்சியை வெளிக்காட்டிக்கொள்ளாமல் சொந்த ஊர் வந்து இறங்கியிருக்கிறாள்.

அவர், ‘நான் ஓரினச்சேர்க்கையாளர். நான் வசிக்கும் நாட்டு சட்டப்படி என்னைப் போன்ற ஒருவரை திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன். நீங்கள் என்னைப் பற்றி புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் சில படங்களை உங்களுக்கு அனுப்பினேன். நீங்கள் அதை பற்றி புரிந்துகொள்ளாமலும், என்னிடம் அது பற்றி பேசாமலும் கிளம்பிவந்துவிட்டீர்கள். எனது இந்த வாழ்க்கைமுறையை புரிந்துகொள்ளும் பக்குவம் என் பெற்றோருக்கு கிடையாது. அதனால் உண்மையை அவர்களிடம் சொல்ல முடியவில்லை. உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறேன்’ என்றிருக்கிறார்.

இதை தனது பெற்றோரிடம் வெளிப் படையாக பேச விரும்பாத அவள், ‘வரனை எனக்கு பிடிக்கலேப்பா.. அவரது பழக்க வழக்கம் எதுவும் சரியில்லை..’ என்று மட்டும் கூறிவிட்டு, ‘இனி சொந்த ஊரிலே ஏதாவது வரன் தேடுங்கள்’ என்றிருக்கிறாள்.

எந்த புற்றில் எந்த பாம்பு இருக்குமோ?!

- உஷாரு வரும்.