ஜூலை 1 முதல் 5-ந் தேதி வரை பங்குகளில் இருந்து வெளியேறிய அன்னிய முதலீடு ரூ.3,710 கோடி


ஜூலை 1 முதல் 5-ந் தேதி வரை பங்குகளில் இருந்து வெளியேறிய அன்னிய முதலீடு ரூ.3,710 கோடி
x
தினத்தந்தி 8 July 2019 11:25 AM GMT (Updated: 8 July 2019 11:25 AM GMT)

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

மும்பை

ஜூலை 1 முதல் 5-ந் தேதி வரை பங்குகளில் இருந்து ரூ.3,710 கோடி அன்னிய முதலீடு வெளியேறி உள்ளது.

புதிய பிரிவு

இந்தியாவில் பல்வேறு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்து வருகிறார்கள். அன்னிய நிதி நிறுவனங்கள், துணை கணக்குகள் மற்றும் தகுதி வாய்ந்த அன்னிய முதலீட்டாளர்களை ஒன்றாக இணைத்து வெளிநாட்டு போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் (எப்.பி.ஐ) என்னும் புதிய பிரிவை பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி அமைப்பு உருவாக்கி இருக்கிறது.

செபி அமைப்பில் பதிவு பெற்ற அன்னிய நிதி நிறுவனங்கள் வழங்கும் பங்கேற்பு ஆவணங்கள் வாயிலாகவும் உலக பெரும் பணக்காரர்கள், பாதுகாப்பு நிதியங்கள் இந்திய பங்குகள், கடன்பத்திரங்கள் மற்றும் முன்பேர வர்த்தக சந்தைகளில் முதலீடு செய்கின்றனர்.

நடப்பு ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் நிகர அடிப்படையில் இந்திய மூலதன சந்தையில் (பங்கு+கடன் சந்தைகள்) ரூ.11,182 கோடியை முதலீடு செய்தனர். மார்ச் மாதத்தில் அது ரூ.45,981 கோடியாக உயர்ந்தது. ஏப்ரல் மாதத்தில் ரூ.16,093 கோடியாக குறைந்தது. மே மாதத்தில் ரூ.9,031 கோடியாக சரிந்தது. ஜூன் மாதத்தில் ரூ.10,385 கோடியாக அதிகரித்தது.

இந்த நிலையில், நடப்பு ஜூலை மாதத்தில், 1 முதல் 5-ந் தேதி வரையிலான காலத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் பங்குகளில் இருந்து ரூ.3,710 கோடி முதலீட்டை விலக்கி உள்ளனர். இதே காலத்தில் கடன் சந்தையில் அவர்களுடைய முதலீடு ரூ.3,234 கோடியாக உள்ளது. ஆக, இந்திய மூலதன சந்தையில் இருந்து நிகர அடிப்படையில் ரூ.476 கோடி அன்னிய முதலீடு விலகி இருக்கிறது.

மத்திய அரசு அனுமதி

நம் நாட்டில் முதலீடு செய்ய அன்னிய நிதி நிறுவனங்களுக்கு 1992 நவம்பர் மாதத்தில் மத்திய அரசு அனுமதி அளித்தது. அப்போது முதல் ஏறக்குறைய 28 வருடங்களாக அந்த நிறுவனங்கள் பங்கு மற்றும் கடன் சந்தைகளில் முதலீடு செய்து வருகின்றன. இந்திய பங்குச்சந்தைகளின் வளர்ச்சியில் அன்னிய முதலீட்டாளர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.      

Next Story