ஜூன் காலாண்டில் டாட்டா கன்சல்டன்சி லாபம் 11% வளர்ச்சி


ஜூன் காலாண்டில் டாட்டா கன்சல்டன்சி லாபம் 11% வளர்ச்சி
x
தினத்தந்தி 11 July 2019 8:32 AM GMT (Updated: 11 July 2019 8:32 AM GMT)

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

மும்பை,

ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த முதல் காலாண்டில் டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 11 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

வருவாய் அடிப்படையில் நாட்டின் மிகப்பெரிய ஐ.டி. நிறுவனமாக இருக்கும் டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ், ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.8,131 கோடியை நிகர லாபமாக ஈட்டி உள்ளது. கடந்த நிதி ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது இது 11 சதவீத வளர்ச்சியாகும். முந்தைய காலாண்டில் (ஜனவரி-மார்ச்) அது ரூ.8,126 கோடியாக இருந்தது.

கணக்கீட்டுக் காலத்தில், இந்நிறுவனத்தின் வருவாய் 11 சதவீதம் உயர்ந்து ரூ.38,172 கோடியாக அதிகரித்துள்ளது. டாலர் மதிப்பில் அது 8.6 சதவீதம் வளர்ச்சி கண்டு 548 கோடி டாலராக உள்ளது.

இந்நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு ரூ.1 மதிப்பு கொண்ட பங்கு ஒன்றுக்கு ரூ.5-ஐ இடைக்கால டிவிடெண்டாக அறிவித்து இருக்கிறது. ஜூன் இறுதி நிலவரப்படி இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த பணியாளர்கள் எண்ணிக்கை 4,36,641-ஆக அதிகரித்துள்ளது.

மும்பை பங்குச்சந்தையில், புதன்கிழமை அன்று வர்த்தகம் தொடங்கியபோது டாட்டா கன்சல்டன்சி பங்கு ரூ.2,081-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.2,127.650-க்கும், குறைந்தபட்சமாக ரூ.2,070.10-க்கும் சென்றது. இறுதியில் இப்பங்கு ரூ.2,107.70-ல் நிலைகொண்டது. முந்தைய நாள் இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது இது 1.11 சதவீத சரிவாகும்.

Next Story