சிறப்புக் கட்டுரைகள்

தகவல் தொடர்பில் புரட்சி ஏற்படுத்தும் 5ஜி அலைக்கற்றை சேவை + "||" + 5G Broadband service that will revolutionize communication

தகவல் தொடர்பில் புரட்சி ஏற்படுத்தும் 5ஜி அலைக்கற்றை சேவை

தகவல் தொடர்பில் புரட்சி ஏற்படுத்தும் 5ஜி அலைக்கற்றை சேவை
5ஜி தொழில்நுட்பம் நம் வாழ்க்கை முறையை முற்றிலும் மாற்றப்போகிறது. தானாக இயங்கும் கார்கள், வீட்டுவசதி உபகரணங்கள் மற்றும் எந்திரங்களை, அமர்ந்த இடத்தில் இருந்து இயக்கும் வசதிகள் பற்றிய கற்பனை காட்சிகள் இனி நிஜமாக போகின்றன.
இவை அனைத்தையும் சாத்தியமாக்கப்போகும் 5ஜி அலைபேசி தொழில்நுட்பத்தை அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் விரைவில் செயல்படுத்த உள்ளன. அடுத்த 100 நாட்களில் 5ஜி தொழில்நுட்பத்தை இந்தியா சோதனை செய்ய உள்ளது. இந்திய தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ, இந்த சேவைகளை அடுத்த ஆண்டில் (2020) தனது சொந்த கைப்பேசிகள் மூலம் அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

5ஜி தொழில்நுட்பம் என்றால் என்ன?

இந்த புதிய தலைமுறை கம்பியில்லா தொழில்நுட்பத்தின் மூலம் தகவல்களை மின்னல் வேகத்தில் அனுப்ப முடியும். 4ஜி தொழில்நுட்பத்தைவிட இது ஆயிரம் மடங்கு அதிக வேகம் கொண்டது. இதனால் வலைப்பின்னல் நெரிசல்கள் இனி பழங்கதைகளாகிவிடும். இந்த தொழில்நுட்பம் செயல்படுத்தப்பட்ட பின், தகவல்களை உடனடியாக தரவிறக்கம் செய்ய முடியும். ஒரு முழு நீள திரைப்படத்தை சில நிமிடங்களிலும், அலைபேசி செயலிகளை சில வினாடிகளிலும் தரவிறக்கம் செய்யவும் முடியும்.

ஆன்-லைன் ‘கேம்ஸ்’ விளையாடுபவர்கள் இனி உடனடியாக எதிர்வினை ஆற்ற முன்பு போல் காத்திருக்க வேண்டியதில்லை. டி.வி.கள், பிரிட்ஜ்கள் (குளிர்சாதன பெட்டிகள்), ஏ.சி.கள், வாஷிங் மெஷின்கள் (துணி துவைக்கும் எந்திரங்கள்) ஆகிய அனைத்தும் தொலைவில் அமைந்திருக்கும் ஒரு கருவியுடன் இணைக்கப்பட்டு, வெளியில் இருந்து கட்டுப்படுத்த முடியும். பொருட்களின் இணையம் (ஐ.ஒ.டி) என்ற கருத்தியலின் அடிப்படையில் ‘ஸ்மார்ட் வீடுகள்’ திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனங்களுக்கு 5ஜி ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.

ரோபோடிக்ஸ் துறையில் 5ஜி தொழில்நுட்பம் பெரும்மாறுதல்களை ஏற்படுத்தும். ஆபத்துகளில் இருந்து மனிதர்களை மீட்டெடுக்கும் பணிகளில் ஈடுபடும் அரை தானியங்கும் ரோபோக்களை, அதிவேகமாக கட்டுப்படுத்த முடியும்.

மருத்துவத்துறையில் இந்த தொழில்நுட்பம் புரட்சிகரமான மாறுதல்களை ஏற்படுத்தி, தொலைதூரத்தில் இருந்து அறுவை சிகிச்சை செய்யும் தொழில்நுட்பத்தை சாத்தியப்படுத்தும். இந்தியாவில் செய்யப்படும் ஒரு அறுவை சிகிச்சையை, பிரிட்டனில் உள்ள ஒரு மருத்துவர் வழிநடத்த முடியும். இந்த தொழில்நுட்பம் நடைமுறையில் செயல்பட இன்னும் சில வருடங்கள் ஆகும்.

இந்த தொழில்நுட்பம் செயல்படுத்தப் படும்போது, இதை சுற்றி ஒரு புதிய அமைப்பு உருவாகும். உலகளவு விரிந்த கம்பியில்லா வலை (டபிள்யு டபிள்யு டபிள்யு டபிள்யு) என்ற புதிய சொல்லாடல் இதற்காக உருவாக்கப்படுகிறது. 5ஜி தொழில்நுட்பத்தை ஆதரிக்கும் வகையில் உருவாக்கப்படும் ரேடியோ தொழில்நுட்பத்திற்கு, புதிய ரேடியோ என்று பெயரிடப்பட்டுள்ளது.2025–ல் இந்தியாவில் 5ஜி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 8.8 கோடியை எட்டும் என்று கணிக்கப்படுகிறது. 

*  மின்னல் வேகம்: கம்பியில்லா அலைக்கற்றையில் உள்ள அதிவேக அதிர்வெண்களில் வலைப்பின்னல்கள் இயங்கும். அதிக எண்ணிக்கையிலான, சிறிய வடிவ ஆண்டனாக்களை பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் இணைப்புகளின் வேகத்தையும், திறனையும் அதிகரிக்கும். குறைவான காலவரம்பு, அலைக் கற்றை பயன்பாட்டின் செயல்திறன் அதிகரிப்பு, மென்பொருள் மற்றும் வன்பொருட்களில் உள்ள சாதகமான அம்சங்களின் மூலம் 5ஜி மின்னல் வேகத்தில் செயல்படும். ஆனால் இது படிப்படியாகவே அமல்படுத்தப்படும்.

*   உயர்நிலை பயன்பாடுகள்: தகவல் பரிமாற்றத்திற்கான காலதாமதம் 4 மில்லி வினாடிகளுக்கும் கீழாக குறைக்கப்பட்டால் தான் தொலைதூர அறுவை சிகிச்சை முறை, ஆளில்லா கார்கள், ராணுவ பயன்பாடுகள் போன்ற உயர்நிலை பயன்பாடுகளில் செயல்படுத்த முடியும்.

*   பங்கேற்பாளர்கள்: 5ஜி அலைக்கற்றையில் பல வகையான பங்கேற்பாளர்கள் இருப்பார்கள்: ஐ.டி.யு போன்ற ஒழுங்குமுறை ஆணையம், ஏடி அன் டி, வோடோபோன், சைனா மொபைல், ஜியோ, ஏர்டெல் போன்ற தொலைதொடர்பு நிறுவனங்கள், எரிக்சன், நோக்கியா, ஹுவாய் போன்ற வலைப்பின்னல் சேவை அளிக்கும் நிறுவனங்கள், செர்வர் தயாரிப்பு நிறுவனங்கள், சாம்சங், ஹுவாய், ஆப்பிள் போன்ற கைபேசி தயாரிப்பாளர்கள் மற்றும் பல்வேறு மென்பொருள் நிறுவனங்கள். இந்த நிறுவனங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, தொழில்நுட்பத்தை மிக துல்லியமாக்கி, வேகத்தை மிகவும் அதிகரிக்க செய்து, செயல் திறனை மேப்படுத்துவார்கள். 

*   தொழில்நுட்பத்தில் ஆதிக்கம்: கம்பியில்லா தொழில்நுட்பத்திலும் இணைய தொழில்நுட்பத்திலும், மேற்குலக நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் தான் பாரம்பரியமாக ஆதிக்கம் செலுத்தின. சீனாவை சேர்ந்த தொலைதொடர்பு பெரு நிறுவனமான ஹுவாய், கம்பியில்லா தொழில்நுட்பத்துறையில் பெரிய அளவில் கால் பதிக்க ஆரம்பித்து, மேற்குலக நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு சவாலாக மாறிய பின், அமெரிக்கா, அதை தனிமைபடுத்த முயற்சி செய்தது. அந்நிறுவனம் சீனாவிற்காக உளவு பார்ப்பதாக குற்றம் சாட்டி, அதை புறக்கணிக்கும்படி தன் நேச நாடுகளை வற்புறுத்தியது. இந்தியாவில் 5ஜி தொழில்நுட்ப செயல்பாட்டில், ஹுவாய் நிறுவனம் பங்கெடுக்க இன்னும் இந்திய அரசு அனுமதி அளிக்கவில்லை.

*  உபகரணங்களை இணைக்கும் திறன்: 4ஜி தொழில்நுட்பத்தின் மூலம் 10,000 உபகரணங்களை ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட வலைப்பின்னல் பகுதியில் இணைக்க முடியும். 5ஜி மூலம் அதே பரப்பளவில் ஒரு கோடி உபகரணங்களை இணைக்க முடியும்.