தங்கமே தங்கம்


தங்கமே தங்கம்
x
தினத்தந்தி 5 Aug 2019 4:36 AM GMT (Updated: 5 Aug 2019 4:36 AM GMT)

எது செய்தி ஆகிறதோ இல்லையோ தங்கத்தின் விலை சற்று உயர்ந்தாலும் அது பெரிய செய்தி ஆகிவிடுகிறது. அப்படித்தான் பலரையும் இப்போது நிமிர்ந்து பார்க்க வைத்திருக்கும் ஒரு செய்தி, திடீரென ஒரே நாளில் தங்கம் பவுனுக்கு ரூ.500-க்கும் அதிகமாக உயர்ந்தது.

‘நல்ல வேளை நான் வாங்கியாயிற்று’ என்று மகிழ்ந்தவர் சிலர்தான்’! தவறவிட்டு விட்டோமே!’ என்று வருத்தப்படுவர்களும், ‘மேலும் உயர்ந்து விடுமோ!’ என்று அச்சப்படுவோரும்தான் அதிகம். இந்த வருத்தம் தேவைதானா? பார்க்கலாம்.

சமீபகாலமாக தங்கம் ஏன் விலை உயர்ந்து கொண்டே போகிறது! என்று கேட்டால், அதற்கு சர்வதேச அரசியல் நெருக்கடிகள், பல்வேறு நாடுகளில் நிலவும் வியாபார சுணக்கம், அமெரிக்க சீன வர்த்தக போர் என்று பலவற்றையும் காரணங்களாக சொன்னாலும், இரண்டு நாட்களுக்கு முந்தைய விலை உயர்வுக்கு காரணம் அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்ததுதான்.

அமெரிக்காவில் வட்டி விகிதம் குறைந்தால் இந்தியாவில் ஏன் தங்கம் விலை உயர வேண்டும்? தங்கத்தை பொறுத்தவரை அது ஒரு சர்வதேச நுகர்வு மற்றும் வியாபார மற்றும் முதலீட்டு பொருள்.

பணத்தை சேர்த்து வைத்திருக்கும் எவருமே அதை பாதுகாப்பாக முதலீடு செய்யவே விரும்புவார்கள். அதிலும் குறிப்பாக பெரும் பணக்காரர்கள். அரசாங்கத்திடம் கொடுத்து வைப்பது அல்லது வங்கிகளிடம் கொடுத்து வைப்பதுதான், பாதுகாப்புக்கு பாதுகாப்பு மற்றும் வருமானத்திற்கும் வருமானம் (வட்டி) என்று நினைப்பவர்கள் அவர்கள்.

அப்படிப்பட்ட அமெரிக்க வங்கிகளின் வட்டி விகிதத்தை ஆண்டுக்கு 2 முதல் 2.25 சதவீதமாக குறைக்க கடந்த வாரம் முடிவு எடுத்திருக்கிறது.

இந்த சொற்ப வட்டிக்கு ஏன் வங்கியில் பணத்தை போடுவது? அதை விட, விலை அதிகரிக்க வாய்ப்பு இருக்கும் தங்கத்தில் முதலீடு செய்வதே சிறந்தது என்று, பெரும் முதலீட்டாளர்கள் பலரும் தற்போது தங்கத்தை வாங்குகிறார்கள். அதனால்தான் இந்த திடீர் விலையேற்றம். சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்தால் அதை இறக்குமதி செய்யும் நம் நாட்டிலும் விலை கூடத்தானே செய்யும்.

அரிசி, பருப்பு மளிகை போல தங்கம் அப்படி என்ன அத்தியாவசிய பொருளா? அது விலை ஏறினால் என்ன? என்று சிலர் நினைக்கலாம். தங்கத்தை அப்படி சர்வ சாதாரணமாக நினைத்துவிட முடியாது.

பணத்தை சேமிக்க, தங்கம் வாங்குவதை பலரும் ஒரு முக்கிய வழியாக வைத்திருக்கிறார்கள். செலவு போக கையில் பணம் சேர்ந்தால் அவர்கள் நினைவுக்கு முதலில் வருவது தங்கம்தான். சிறுகசிறுக நகைகளாக சேர்ப்பது அவர்கள் பழக்கம். நாளடைவில் அதுவே கணிசமான சேமிப்பாகி விடுகிறது.

எதிர்பாராத மற்றும் பெரிய தேவைகளுக்கு மற்றவரிடம் கைநீட்டுவதை விட, சொந்த நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுக் கொள்கிறார்கள். மிகப்பெரிய தேவைகளுக்கு நகைகளை விற்கவும் தயங்குவதில்லை.

வேறு சிலர் வாங்கிய நகைகளை விற்பதே இல்லை. வாங்கிச் சேர்த்து, மகிழ்ச்சி அடைகிறவர்கள் இவர்கள். தானே எடுத்துக் கொண்ட இலக்கோ அல்லது வேறு எவரையும் பார்த்து செய்த முடிவோ, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வகைவகையாக வாங்குவார்கள். பொருளாதார வசதி காரணமாக விலை அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல.

பொருளாதார வசதியில் இவர்களை எல்லாம் விட மிக சாதாரணமாக இருப்பவர்களாலும், ‘எனக்கு எதற்கு?’ என்று தங்கத்தை அலட்சியம் செய்ய முடியவில்லை. கடன் வாங்கியாவது தங்கம் வாங்க வேண்டிய நிலை.

தங்க நகைகள் மீது இவர்களுக்கே இருக்கும் ஆசை தவிர, கையில் காதில் ஒன்றும் போடாமல் இருந்தால் ஊரும் உலகமும் மதிக்காதே, கேலி பேசுமே! என்று அஞ்சுபவர்கள். அதனால் வாங்குபவர்கள்.

ஏனைய நாடுகள் எப்படியோ சீனாவும் இந்தியாவும் தங்கம் வாங்குவதில் ஒரே போல. அதிலும் இந்தியாவைப் பற்றி கேட்கவே வேண்டாம்.

தங்கம் கலாசாரத்துடன் கலந்துவிட்ட ஒன்று. மதங்கள் வேறுபாடின்றி இந்தியர்கள் குறிப்பாக, பெண்கள் பொன் நகையை ஆராதிப்பவர்கள். ‘பொட்டுத் தங்கமாவது’ என்பது பரம ஏழையாக இருந்தாலும் வாழ்நாள் குறிக்கோள்.

பெண்களுக்கு சீதனமாக கொடுப்பவர்கள், குழந்தைகளுக்கு தங்களின் அன்பை காட்ட வாங்கி கொடுப்பவர்கள், கோவில்களில் காணிக்கையாக போடுகிறவர்கள் என்று தேவைகள் பெருகிக் கொண்டிருக்கின்றன. தங்கத்தை, மக்கள் மட்டும் வாங்கவில்லை. அரசாங்கங்களும் வாங்குகின்றன.

சரித்திர காலம் தொட்டே, அரசு கஜானாக்களில் தங்கம் குவிந்து இருக்க வேண்டும் என்பது ஆள்பவர்களின் கட்டளை.

தற்போதைய அரசாங்கங்களும் அன்னிய செலாவணி காக, அவரவர் ரிசர்வ் வங்கிகள் மூலம் டன்கள் கணக்கில் தங்கம் வாங்கி கட்டிகளாக அடுக்கி வைத்துக் கொள்கிறார்கள். அமெரிக்கா முதலிடம்.

ஆக, தங்கம் என்ன விலை ஏறினாலும் மக்கள் வருத்தப்படலாம், அங்கலாய்க்கலாம். இயலாமையால் வாங்கும் அளவை கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம். ஆனால், இந்தியாவில் தங்கத்தில் தேவை குறைவது போல தெரியவில்லை.

மக்களின் இந்தப் போக்கு சரிதானா? மக்கள் தொடர்ந்து தங்கம் வாங்குவது அவர்களுக்கு லாபமா நஷ்டமா?

ஆசைக்கு நகையாக வாங்குவது சரி. வீடு, கார், ஐ போன்கள் வாங்குவது போல அதில் தேய்மானம் இருக்கும்தான். பரவாயில்லை.

வேறு சிலர் பெண்ணுக்கு கொடுக்க வேண்டிய கட்டாயத்தினால் வாங்குகிறார்கள். அவர்களால் நிறுத்த முடியாது. ஆகவே, அவர்களையும் ஏதும் சொல்வதற்கில்லை. மூன்றாவது பகுதியினர் தொடர்ந்துவிலை உயரும், அதன் மூலம் லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து தங்கம் வாங்குகிறவர்கள். அவர்கள் சில விஷயங்களை கவனிக்க வேண்டும்.

தங்கம் விலை உயர்கிறதுதான். தங்கத்தின் விலை உயர்வால், அதில் போட்ட பணத்தின் மதிப்பு கூடுகிறதுதான். ஆனால், எவ்வளவு உயர்கிறது? எல்லா நேரமும் தொடர்ந்து உயர்கிறதா? உதாரணத்திற்கு, இப்போது தங்கம் வர்த்தகமாகும் விலை, முன்பு 2016 ஆண்டு இருந்த விலை. அதன்பின், குறைந்தது. இரண்டு இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் இப்போதுதான் மீண்டும் அந்த விலை வந்திருக்கிறது.

இன்றைக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு தங்கத்தின் விலை கிராமுக்கு சுமார் 314 ரூபாய். தற்போது விலை கிராம் ரூபாய் 3,400.

தங்கத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு போட்ட பணம் இப்போது 11 மடங்கு ஆகி இருக்கிறது. அதே அளவு பணத்தை முன்பிருந்த 10 அல்லது 12 மற்றும் தற்போதைய ஆண்டு வட்டி 8 சதவீதத்தில் வங்கியில் பிக்ஸட் டெபாசிட்டாக, கூட்டு வட்டிக்கு போட்டிருந்தால், அதன் மதிப்பு இப்போது ரூ. 5,400 ஆகியிருக்கும். அதாவது, இன்றைய விலையில் ஒன்னரை கிராமுக்கு ஒப்பு. தங்கமாக வைத்திருந்தால் ஒரு கிராம் மட்டுமே கையில் இருக்கும்.

நிலத்திலோ அல்லது வேறு லாபகரமான முதலீடுகளில் போட்டு இருந்தால் இன்னும் கூடுதலாக கிடைத்திருக்கும்.

ஆக, ஆசைக்கு, தேவைக்கு, ஆபரணமாக என்ற காரணத்துக்காக மற்றும் பணத்தை பாதுகாப்பாக வைக்க, அவசரத்திற்கு மாற்றிக்கொள்ள என்ற காரணங்களுக்காக தங்கம் வாங்குவது என்பது சரிதான். ஆனால், முதலீடு என்கிற நோக்கில் அதிலும் நீண்டகால முதலீடு என்கிற நோக்கில் பார்க்கிறபோது தங்கம் பெறும் மதிப்பெண் குறைவு தான்.

- டாக்டர் சோம வள்ளியப்பன்

Next Story