குரங்கு-மனித கலவை உயிரினம்... மனிதன்-குரங்கு கலப்பின ஆய்வு


குரங்கு-மனித கலவை உயிரினம்... மனிதன்-குரங்கு கலப்பின ஆய்வு
x
தினத்தந்தி 12 Aug 2019 10:13 AM GMT (Updated: 12 Aug 2019 10:13 AM GMT)

இந்த உலகம் கோடிக்கணக்கான உயிரினங்களை இதுவரை கண்டு கடந்து வந்திருக்கிறது. இதில் வேறு எந்த உயிரினத்துக்கும் இல்லாத புத்திக்கூர்மை உள்ளிட்ட பல பிரத்தியேக திறன்களைக் கொண்டது மனித இனம் மட்டுமே.

சாகாவரம் பெற்று இந்த உலகில் தொடர்ந்து வாழ பல்வேறு ஆய்வுகளை மனித இனம் தொடர்ந்து செய்து வருகிறது. மருத்துவ மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, பண்டைய காலத்தில் மூலிகைகளில் ஆரம்பித்து, தற்போது விஞ்ஞான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல மருத்துவ பரிசோதனைகளை மனிதன் செய்து வருகிறான்.

மனிதனுக்கு வயதாகும் போது, அவனது உடல் உறுப்புகளின் செயல் திறன் குறையும். அல்லது நோய் தாக்குதல், விபத்து போன்ற காரணங்களால் மனிதனின் உடல் உறுப்புகள் சேதம் அடையும் வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற நிலையில் மாற்று உடல் உறுப்புகளை பொருத்தி உயிர்வாழ முடியும்.

ஆனால், தேவைக்கு ஏற்ப தகுதியான உடல்உறுப்புகள் கிடைப்பதில்லை. எனவே, விலங்குகளை பயன்படுத்தி உடல் உறுப்புகளை உற்பத்தி செய்து, அவற்றை மனித உடலில் பொருத்திக்கொண்டு தொடர்ந்து உயிர்வாழ இதுவரை பல மருத்துவ ஆய்வுகள் மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. துரதிர்ஷ்டவசமாக, அவற்றில் பெரும்பாலான முயற்சிகள் தோல்வியையே தழுவியுள்ளன.

இந்த நிலையில், அமெரிக்காவில், கலிபோர்னியாவில் உள்ள சால்க் இன்ஸ்டிடியூட்டின் விஞ்ஞானியான யுவான் கார்லோஸ் என்பவர் சீனாவின் உள்ள, குரங்கு மீதான ஆய்வுகளை மேற்கொள்ளும் சில விஞ்ஞானிகளுடன் இணைந்து குரங்கு மற்றும் மனித உயிரணுக்கள் கொண்ட கலவை உயிரின சிசுக்களை உருவாக்கி வருவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

மனித-விலங்கு கலவை உயிரினங்களை உருவாக்கும் நோக்கத்திலான ஆய்வுகளில் ஒன்றான இந்த புதிய ஆய்வில், ஒரு நாள் வயதான குரங்கு சிசுக்களை எடுத்து அவற்றில் மனித ஸ்டெம் செல்களை புகுத்தி, குரங்கு-மனித கலவை உயிரினத்தை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இத்தகைய ஆய்வு களின் இலக்கு என்னவென்றால், மனிதர்களுக்கு தேவையான சிறுநீரகம் அல்லது கல்லீரல் உள்ளிட்ட உடல் பாகங்களை மனித-விலங்கு கலவை உயிரினங்களில் உற்பத்தி செய்து அவற்றை மனிதர்களுக்கு பயன்படுத்திக்கொள்வதுதான் என்று கூறப்படுகிறது.

இதற்கு முன்னர் ஒரு முறை, மனித ஸ்டெம் செல்களை பன்றியின் சிசுக்களில் புகுத்தி மனித-பன்றி கலவை உயிரினத்தை உருவாக்கும் முயற்சியை ஆய்வாளர் யுவான் கார்லோஸ் மேற்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், மனித ஸ்டெம் செல்கள் பன்றியின் சிசுக்களில் நீண்ட நாள் உயிர்வாழவில்லை என்பதால் அந்த ஆய்வு தோல்வியில் முடிந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த புதிய ஆய்வு முயற்சியில், பன்றிகளுக்கு பதிலாக குரங்கு சிசுக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஏனெனில், மரபியல் அடிப்படையில், பன்றிகளை விட குரங்குகள் மனிதர்களுக்கு மிக நெருக்கமானவை என்பதால், இந்த மனிதன்-குரங்கு கலவை ஆய்வு வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் முக்கியமாக, மனித உயிரணுக்கள் குரங்கு சிசுக்களில் நிலைத்து உயிர்வாழ்வதற்காக, குரங்கு சிசுக்களில் உள்ள சில வகையான உயிரணுக்களை செயலிழக்கச் செய்ய மரபணுத் திருத்த (gene editing) தொழில்நுட்பமும் இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மனித-குரங்கு கலவை உயிரினத்தை உருவாக்க அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ள காணத்தால், அத்தகைய தடைகள் ஏதுமில்லாத சீனாவில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. விநோதமாக, தற்போது சுமார் இரண்டு வாரங்கள் வரை மட்டுமே வளர்க்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாகவும், அதன்பிறகு இந்த குரங்கு-மனித சிசுக்கள் அழிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

முக்கியமாக, மனித உடல் பாக வளர்ப்புக்கு மட்டுமின்றி, பரிணாமம் சார்ந்த ஆழமான சில கேள்விகளுக்கான விடைகளைக் கண்டறிவதற்காகவும் இந்த வகையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாக சில விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதில் எது உண்மை என்பதற்கு காலம்தான் பதில்சொல்ல வேண்டும்.

Next Story