அங்கோர் வாட்: கல்லிலே கலைவண்ணம் - கொலைகாரர்களின் கூடாரங்களான கலைக்கூடங்கள்


அப்சரஸ் சிலை; கில்லிங் பீல்டு; போல் பாட்; தீவிரவாதிகளால் கொன்றுகுவிக்கப்பட்ட எலும்புக்குவியல்
x
அப்சரஸ் சிலை; கில்லிங் பீல்டு; போல் பாட்; தீவிரவாதிகளால் கொன்றுகுவிக்கப்பட்ட எலும்புக்குவியல்
தினத்தந்தி 18 Aug 2019 8:39 AM GMT (Updated: 18 Aug 2019 8:39 AM GMT)

கம்போடியா நாட்டில், இப்போது கலைக்கூடங்களாக இருந்து உலக மக்களை எல்லாம் தங்களை நோக்கி இழுத்துக் கொண்டு இருக்கும் பழங்காலத்து அழகிய கோவில்கள், சில காலம் ரத்தக்கறை படிந்த கொலைகாரர்களின் பதுங்கு கூடாரங்களாக இருந்தன என்றால் வியப்பாக இருக்கும்.

அங்கே மறைந்து வாழ்ந்த கொலைகாரர்கள், குறிபார்த்து துப்பாக்கியால் சுட்டுப் பழகுவதற்கு அந்தக் கோவில்களில் இருந்த அழகிய சிலைகளையே தங்களின் இலக்காக வைத்துக் கொண்டனர் என்பதை, அந்தச் சிலைகளில் இப்போதும் காணப்படும் துப்பாக்கித் தோட்டாக்கள் ஏற்படுத்திய துளைகளைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

அந்தக் கொலைகாரர்கள் தான் கம்போடியாவின் 30 லட்சம் மக்களை ஈவு இரக்கம் இன்றி அடித்துக் கொன்றதன் மூலம், அந்த நாட்டின் மக்கள் தொகையில் 25 சதவீதம் பேரை துடைத்து எறிந்தவர்கள்.

இந்தக் கொலைகளில் அமெரிக்காவுக்கும் கணிசமான பங்கு உண்டு.

இந்த கொடூரமான சம்பவங்கள் எல்லாம் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன் நடந்தவை அல்ல.

சுமார் 45 ஆண்டு களுக்கு முன் அரங்கேறிய இந்தப் படு பாதக செயல்கள், அதிகமாக வெளிச்சத்துக்கு வராமலேயே, கொல்லப்பட்டவர்களின் ஆவிகளோடு காற்றில் கரைந்து விட்டன.

குண்டூசி விழுந்தாலே, ‘குண்டு போட்டு விட்டார்கள்’ என்று அலறும் ஆவேச ஊடகங்கள் அப்போது இல்லாததாலும், அங்கே விமானத்தில் இருந்து குண்டு வீச்சுகள் நடத்தியதை பாராளுமன்றத்துக்கே தெரிவிக்காமல் அமெரிக்க அரசு சாமர்த்தியமாக மறைத்து விட்டதாலும், கம்போடியாவில் நடந்த படுகொலைகள், பத்திரிகை செய்திகளில் பரபரப்பான இடத்தைப் பிடிக்க முடியாமல் ஒளிந்து கொண்டன.

தமிழர்களின் தாக்கத்தால் கம்போடியாவில் ஆயிரம் ஆண்டு களுக்கு முன் உருவான கலைச்செல்வங்களைப் பார்க்கும் இந்த நேரத்தில், 45 ஆண்டுகளுக்கு முன் அந்த நாட்டில் நடைபெற்ற பயங்கரமான கொலைச் சம்பவங்களையும் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

பிரான்ஸ் நாட்டு காலனி ஆதிக்கத்தின் கீழ் சில ஆண்டுகாலம் இருந்த கம்போடியா, 1953-ம் ஆண்டு விடுதலை பெற்றது.

அப்போது, வியட்நாமில் உள்நாட்டுப் போர் நடந்தது. வியட்நாம் நாடு, வடக்கு - தெற்கு என்று இரண்டு பிரிவாக மோதிக்கொண்டன.

வடக்கு வியட்நாம் கம்யூனிஸ்டு படைகளுக்கு, கம்போடியாவின் மன்னராக இருந்த நரோத்தம் சிகானுக் ஆதரவு அளித்தார். இதற்கு கம்போடிய மக்களும், அமெரிக்க ஆட்சியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், 1970-ம் ஆண்டு கம்போடியாவின் இடதுசாரி ராணுவத்தினர், அமெரிக்க உளவுப்படை உதவியுடன் திடீர் புரட்சி நடத்தி, சிகானுக் ஆட்சியைக் கவிழ்த்தனர்.

இதனைத் தொடர்ந்து, தென் வியட்நாமுக்கு எதிராகச் சண்டை போடும் வட வியட்நாம் ஆதரவுப் படைகள், கம்போடியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

கம்போடியக் காடுகளில் தஞ்சம் அடைந்த வட வியட்நாம் படையினர், கொரில்லா யுத்தம் நடத்தினார்கள். அவர்களுக்கு கம்யூனிஸ்டு கட்சியினரால் ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்டது.

அந்த கொரில்லாக்களுக்கு ஆதரவு அளித்த கம்போடிய மன்னர், அவர்களுக்கு ‘கெமெர் ரூஜ்’ (சிவப்பு கெமெர்) என்று பெயர் சூட்டினார்.

மக்களிடம் அதிக ஆதரவைப் பெற்ற கெமெர் ரூஜ் கொரில்லாக்கள், இடதுசாரி ராணுவத்தினர் மீதும், வடக்கு வியட்நாமில் இருந்த கம்யூனிஸ்டு எதிர்ப்பாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தினார்கள்.

ஏற்கனவே வியட்நாம் போரில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த அமெரிக்க ராணுவம், கம்யூனிஸ்டு ஆதரவாளர்களான கெமெர் ரூஜ் கொரில்லாக்கள், கம்போடியாவில் இருந்து கொண்டு தங்களைத் தாக்குகிறார்கள் என்று கூறி, கம்போடியா மீது ‘கார்ப்பெட் பாம்’ என்ற பயங்கரக் குண்டு வீச்சை நடத்தியது.

1969 மார்ச் 18-ந் தேதி முதல், அமெரிக்காவின் பி-52 ரக போர் விமானங்கள் கம்போடியா மீது குண்டு மழை பொழிந்தன. 4 ஆண்டுகளாக நீடித்த இந்தத் தாக்குதல்களின் போது, மொத்தம் 5 லட்சத்து 40 ஆயிரம் டன் எடை உள்ள குண்டுகள் வீசப்பட்டன.

இந்தத் தாக்குதலில் சுமார் 5 லட்சம் கம்போடியர்கள் வரை பலி ஆனார்கள். கம்போடியாவின் கலை அழகு மிக்க பழங்காலக் கோவில் கட்டிடங்கள் பல சேதம் அடைந்தன.

நிக்சன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில் இந்தத் தாக்குதல்கள் அமெரிக்க பாராளுமன்றத்துக்கே தெரிவிக்காமல் நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

அமெரிக்காவின் குண்டு வீச்சு சமயத்தில், கம்போடியாவில் பாழடைந்து கிடந்த கோவில் கட்டிடங்கள், கெமெர் தீவிரவாதி களின் மறைவிடங்களாகப் பயன்பட்டன.

அங்கோர் வாட் உள்பட அங்கு உள்ள கோவில்களுக்கு யாரும் வருவது இல்லை என்பது இந்தத் தீவிரவாதிகளுக்கு வசதியாகப் போய்விட்டது.

அந்தக் கோவில் வளாகங்களில் அவர்கள் முகாம்கள் அமைத்துக் கொண்டு போர் பயிற்சி பெற்றனர். துப்பாக்கியால் குறி பார்த்து சுட்டுப் பழகுவதற்கு, கோவில்களில் இருந்த சிலை களையே தங்கள் இலக்காக பயன்படுத்திக் கொண்டதால் பல சிலைகள் சேதம் அடைந்தன.

ஆடல் மகளிர் சிலைகளில் துப்பாக்கி தோட்டாக்களால் ஏற்பட்ட துளைகள், இப்போதும் அந்தக் கொடுமைக்குச் சான்றாக அங்கே காட்சி அளிக்கின்றன.

1973-ம் ஆண்டு அமெரிக்கா-வியட்நாம் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.

அப்போது நடைபெற்ற சமாதான பேச்சு வார்த்தைக்கு வர மறுத்து விட்ட கெமெர் ரூஜ் படையினர் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தியது. இதிலும் பலர் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் 1975-ம் ஆண்டு கெமெர் ரூஜ் படையினர், திடீர் என்று தலை நகர் புனாம் பென் மீது படையெடுத்துச் சென்று ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டனர்.

தங்கள் நாடு இனிமேல், ‘ஜனநாயகக் கம்பூச்சியா’ என்று அழைக்கப்படும் என்று அறிவித்தனர்.

‘நிலையான ஆட்சி ஏற்பட்டுவிட்டது; இனிமேல் நிம்மதியாக வாழலாம்’ என்று எண்ணிய கம்போடியர்களுக்கு கெமெர் ரூஜ் தீவிரவாதிகள், பயங்கரமான அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர்.

கெமெர் ரூஜ் தீவிரவாதிகள், முன்பு கம்போடியாவின் வட கிழக்குப் பகுதி மலையில் தலைமறைவு வாழ்க்கை நடத்தியபோது, அங்குள்ள மலைவாசிகள், பணம், மதம் எதையும் பயன்படுத்தா மலும், வெளி உலகத் தொடர்பே இல்லாமலும், விவசாயம் மட்டும் செய்து நிம்மதியான தன்னிறைவு வாழ்க்கை நடத்தி யதைக் கண்டார்கள்.

அதே போன்ற நிலையை கம்போடியா முழுவதும் அமல்படுத்த கெமெர் ரூஜ் தீவிரவாதிகள் முடிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து கெமெர் ரூஜ் படையின் தலைவனும், கம்போடியாவின் புதிய பிரதமராகப் பதவி ஏற்றவனுமான போல் பாட் என்பவன் ஓர் அறிவிப்பை வெளியிட்டான்.

‘இன்று முதல் கம்போடியாவின் ஆண்டு தொடங்குகிறது. கம்போடியர்கள் யாரும் வெளி உலகுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது. சமுதாயத்தில் மதத் தலைவர்கள், படித்தவர்கள், பட்டதாரிகள், மருத்துவர்கள், என்ஜினீயர்கள், தொழில் அதிபர்கள், அதிகாரிகள் என்ற எந்த விதமான பேதமும் இருக்கக் கூடாது. எல்லோரும் விவசாயிகள் என்ற ஒரே இனமாகக் கருதப்படுவார்கள். அனைவரும் ஒரே மாதிரியான உணவை சாப்பிட்டு ஒரே மாதிரியான வாழ்க்கை நடத்த வேண்டும். மக்கள் எல்லோருமே வயலில் வேலை செய்ய வேண்டும்’ என்பது போன்ற பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டான்.

இதைத்தொடர்ந்து, பெரும் நகரங்களில் இருந்த அனைவரும், வீடுகளில் இருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டு ஆடு, மாடுகளைப் போல கிராமப் புறங்களுக்கு கூட்டம் கூட்டமாக இழுத்துச் செல்லப்பட்டனர். ஆஸ்பத்திரிகளில் படுத்த படுக்கையில் இருந்த நோயாளி களுக்கும் இதே கதி ஏற்பட்டது. எல்லா கல்விக் கூடங்களும், ஆஸ்பத்திரிகளும், தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டன.

வெளிநாடுகளுடனான எல்லா தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன. தகவல் தொடர்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.

மதத்தலைவர்கள், பட்டதாரிகள், மருத்துவர்கள், என்ஜினீயர்கள் என்று மேல் தட்டு மக்கள் அனைவராலும் இனிமேல் பயன் இல்லை என்று கூறி, அவர்கள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். மூக்குக் கண்ணாடி அணிந்தவர்கள் கூட, அதிகார வர்க்கத்தினர் என்று அடையாளமிடப்பட்டு கொல்லப்பட்ட கொடுமை அரங்கேறியது.

ஆங்கிலம் உள்பட அந்நிய மொழி பேசிய அனைவரும் கொல்லப்பட்டனர்.

இந்தக் கொலைகளைச் செய்வதற்கென்றே ‘கில்லிங் பீல்டு’ என்ற இடம் ஒதுக்கப்பட்டது.

அங்கு அழைத்துச் செல்லப்படுபவர்கள், துப்பாக்கி ஏந்திய காவலர்கள் முன்னிலையில், தாங்களே தங்களது மரணக் குழியைத் தோண்ட வேண்டும். அந்தக் குழிக்கு முன்னால் மண்டியிட்டு அமர வேண்டும். அவர்களுக்குப் பின்னால் நிற்கும் தீவிரவாதி, அவர்களது தலையில் இரும்புக் கம்பியால் ஓங்கி அடிப்பார். இவ்வாறு அடிக்கப்படுபவர்கள் அப்படியே சரிந்து, அந்தக் குழிக்குள் பிணமாக விழுவார்கள். பின்னர் அந்தக் குழி மூடப்படும்.

இவ்வாறான கொடூர செயலை நிறைவேற்றுவதற்கு என்றே ஏராளமான ‘கில்லிங் பீல்டுகள்’ உருவாக்கப்பட்டன.

(மரண தண்டனை வழங்கப்பட்ட ‘கில்லிங் பீல்டுகள்’ இப்போதும் அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கின்றன. மரணத்தின் நெடி இன்னும் வீசும் அந்த இடங்களை நேரில் பார்த்தால், எப்படிப்பட்ட கல் மனது கொண்டவர்களும் அதிர்ச்சியில் உறைந்து போய்விடுவார்கள்).

பெண் அதிகாரிகள், மரத்தில் ஆணிகளால் அடித்து நிறுத்தப்பட்டு, அப்படியே உயிரோடு கொளுத்தப்பட்டார்கள். சிறுவர்கள், குழந்தைகள் என்று எந்த பேதமும் இன்றி அனைவருமே சவக்குழிக்கு அனுப்பப்பட்டனர்.

அதிர்ச்சியாலும், பசி, பட்டினியாலும் மரணத்தைத் தழுவியவர்கள் எண்ணிக்கை ஏராளம்.

5 ஆண்டுகள் நீடித்த கெமெர் ரூஜ் ஆட்சியின் போது, எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்ற கணக்கை எடுப்பதற்குக்கூட ஆட்கள் இல்லாமல் போய்விட்டனர்.

1977-ம் ஆண்டு முதல் கெமெர் ரூஜ் ஆதிக்கம் குறையத் தொடங்கியது. இதற்கு தனது படையில் உள்ள சில ராணுவ அதிகாரிகளே காரணம் என்று சந்தேகப்பட்ட போல் பாட், அவர் களைச் சுட்டுக்கொல்ல உத்தரவிட்டான். இதனால் பயந்து போன பல அதிகாரிகள், வியட்நாமுக்குத் தப்பிச் சென்று அங்குள்ள ராணுவத்திடம் சரண் அடைந்தார்கள்.

1978-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் நாளில், வியட்நாம் ராணுவம் கம்போடியா மீது திடீர் தாக்குதல் நடத்தியது. அதிலும் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டனர். ஏற்கனவே கெமெர் ரூஜ் தீவிரவாதிகளின் கொலைக்கரங்களில் இருந்து தப்பிய கம்போடியர்கள், இந்தப் போரில் சிக்கி மடிந்தார்கள். 4 லட்சம் பேர் அகதிகளாக தாய்லாந்துக்குத் தப்பிச் சென்றார்கள்.

ஒரு வழியாக 1979-ம் ஆண்டு கெமெர் ரூஜ் ஆட்சி அகற்றப்பட்டது. கெமெர் ரூஜ் தீவிரவாதிகள் அனைவரும் தப்பி ஓடினார்கள். ஒரு சிலர் மலைப்பகுதியில் மறைந்து இருந்து அவ்வப்போது தாக்குதல் நடத்திக் கொண்டு இருந்தனர். பின்னர் அவர்களும் அடக்கப்பட்டனர்.

அப்போது தான், கம்போடியாவில் போல் பாட் நடத்திய கொடூரச் செயல்கள் பற்றிய பயங்கரத் தகவல்கள் முதல் முறையாக வெளி உலகுக்குத் தெரிய வந்தன.

1984-ம் ஆண்டு இதை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட ‘கில்லிங் பீல்டு’ என்ற ஆலிவுட் படம், கம்போடியாவில் நிகழ்ந்த அவலங்களை அப்பட்டமாக்கியது. இதனைப் பார்த்து உலகமே அதிர்ச்சியில் உறைந்தது.

1989-ம் ஆண்டு கம்போடியாவில் இருந்து வியட்நாம் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து அங்கே, 1993-ல் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது.

சிகானூக் மீண்டும் மன்னர் ஆனார். நாட்டின் பெயர் கம்போடிய அரசு என மாற்றப்பட்டது.

1994-ம் ஆண்டு கெமெர் ரூஜ் கொரில்லாக்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.

கெமெர் ரூஜ் படையில் முக்கிய பதவிகளில் இருந்தவர்கள், போல் பாட் தலைமையை உதறிவிட்டு, அரசிடம் சரண் அடைந்தார்கள்.

1997-ம் ஆண்டு போல் பாட் மற்றும் இந்தப் படுகொலைகளுக்குக் காரணமானவர்கள் மீது கம்போடியா கோர்ட்டில் விசாரணை நடந்தது. அதில் சிலருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு இருந்த போல்பாட், 1998-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மரணம் அடைந்தான்.

1999-ம் ஆண்டு கெமெர் ரூஜ் தீவிரவாதிகள் அனைவரும் சரண் அடைந்ததைத் தொடர்ந்து, வரலாற்றில் ஒரு கரும்புள்ளி மறைந்தது.

இவ்வாறு கடந்த 45 ஆண்டுகளுக்கு முன்பு, மிகப்பெரிய அளவிலான கொடுமைகளைச் சந்தித்த கம்போடிய மக்கள், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மன்னர்கள் ஆட்சியில் எப்படி எல்லாம் கவலை இல்லாத வாழ்க்கையை நடத்தினார்கள் என்பதை அடுத்துப் பார்க்கலாம்.

(ஆச்சரியம் தொடரும்)

Next Story