சிறப்புக் கட்டுரைகள்

தாராவி: குட்டி தமிழ்நாடு + "||" + Dharavi: Kutty Tamil Nadu

தாராவி: குட்டி தமிழ்நாடு

தாராவி: குட்டி தமிழ்நாடு
உலகில் தமிழர்கள் இல்லாத நாடுகளே இல்லை. இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் தமிழர்கள் வசிக்கிறார்கள்.
லகில் தமிழர்கள் இல்லாத நாடுகளே இல்லை. இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் தமிழர்கள் வசிக்கிறார்கள்.

பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் தமிழர்கள் பெரும்பாலும் ஒரே பகுதியில் அதிகளவில் வசிக்கின்றனர்.

ஆனால் தமிழகத்துக்கு வெளியே வேறு எந்த இடத்திலும் இல்லாத வகையில் மராட்டிய மாநில தலைநகர் மும்பையில் உள்ள தாராவியில் தமிழர்கள் அதிக அளவில் வசிக்கிறார்கள். உலகிலேயே மிகப்பெரிய குடிசைப்பகுதியாக கருதப்படும் தாராவியில் தமிழ்நாட்டில் உள்ள எல்லா சமூக மக்களும் இங்கு வசிக்கின்றனர். தமிழகத்தின் எல்லா அரசியல் கட்சிகளும் இங்கு உள்ளன. தாராவி தமிழ்நாட்டில் இல்லையே தவிர, தமிழகத்தில் உள்ள எல்லாமே இங்கு கிடைக்கும்.

ஒருவரை கண்ணை கட்டி அழைத்து வந்து தாராவியில் விட்டால், நிச்சயமாக அவர் தமிழ்நாட்டில் எதோ ஒரு பகுதியில் இருப்பதாகவே உணர்வார். இதனால்தான் தாராவி ‘குட்டி தமிழ்நாடு’ என அழைக்கப்படுகிறது.

உலகில் மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் தாராவியும் ஒன்று. சுமார் 500 ஏக்கர் பரப்பளவு கொண்ட தாராவியில் 7 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கிறார்கள். அதாவது 10 பேர் வாழவேண்டிய இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வசிக்கிறார்கள்.

இங்கு அட்டை பெட்டி அளவிலான 100 சதுர அடி வீடுகளிலும் மக்கள் வசித்து வருகின்றனர். குடிசைப்பகுதியில் உள்ள குறுகலான தெருக்களில் ஒருவர் கையை வீசி நடந்து செல்வதே சிரமம்தான். தாராவி குடிசை பகுதியை வெளிநாட்டு பயணிகள் ஆச்சரியத்துடன் சுற்றி பார்க்கிறார்கள். எனவே இந்த குடிசை பகுதி சுற்றுலாத்தலமாக மாறியுள்ளது.

மும்பை நகரில் மையப் பகுதியில் அமைந்துள்ள தாராவியின் வரலாறு மிகவும் பழமையானது. 18-ம் நூற்றாண்டில் இந்த பகுதி ஒரு தீவாகவே இருந்தது. சேறும், சகதியுமாக கழிமுகப்பகுதியாக இருந்த தாராவியில் 19-ம் நூற்றாண்டில் கோலி சமூகத்தினர் என அழைக்கப்படும் மீனவ மக்கள் குடியேறினர். அதன்பிறகு அங்கு தோல்பதனிடும் ஆலைகள் அதிக அளவில் தொடங்கப்பட்டன. அங்கு வேலை செய்ய தமிழகத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வந்தனர்.

இதேபோல் குஜராத்தில் இருந்து மண்பாண்டங்கள் தயாரிக்கும் கும்பர் இனமக்களும் வந்தனர். எனவே ஆரம்ப காலத்தில் தோல் பதனிடும் தொழிலும், மண்பாண்ட தயாரிப்பும்தான் தாராவியில் அதிக அளவில் நடந்ததாக கூறப்படுகிறது.

1850-க்கு பிறகு மும்பை அசுர வேகத்தில் வளர தொடங்கியது. குறிப்பாக தெற்குமும்பை பகுதியில் பல புதிய தொழில்கள் மற்றும் ஆலைகள் தொடங்கப்பட்டன. இந்த நேரத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட கடும் வறட்சியினால் பஞ்சம் தலைவிரித்தாடியது. இதனால் வேலைவாய்ப்பை தேடி தென்மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் அதிக அளவில் மும்பைக்கு படையெடுத்தனர். அந்த சமயத்தில் மும்பையின் வளர்ச்சிக்கு உழைக்கும் வர்க்கத்தினரின் தேவை அதிகமாக இருந்ததால் வேலைவாய்ப்பு தேடி வந்த தமிழர்களை மும்பை வாரி அணைத்துக் கொண்டது.

வேறு மாநிலத்தில் இருந்து புலம் பெயர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பை கொடுக்க முடிந்த மும்பையால், அவர்கள் வாழ்வதற்கு தேவையான இடத்தை கொடுக்க முடியவில்லை. அந்த நேரத்தில் தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுத்த இடமே தாராவி.

இன்று இருப்பது போல அன்று இல்லை தாராவி. மும்பையின் ஒட்டு மொத்த கழிவுகளும் இங்கு தான் கொட்டப்பட்டன. மும்பையின் கழிவுகள் அனைத்தும் மித்தி நதி வழியாய் தாராவியை கடந்தே கடலுக்கு சென்றது. அங்கு வசித்த மக்களுக்கு மின்சாரம், குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் கூட கிடையாது.

ஆரம்ப கால தாராவி தமிழர்களின் வாழ்க்கை வேதனை நிறைந்தது. வேலை காரணமாக மும்பை வந்தவர்களுக்கு பெண் கிடைப்பது கூட சிரமமாகவே இருந்தது. எனினும் தமிழர்களின் கடின உழைப்பால் இன்று தாராவியின் முகம் மாறி இருக்கிறது. நல்ல வளர்ச்சியை கண்டு இருக்கிறது.

ஆரம்ப காலம் முதல் தாராவியில் சுகாதார பிரச்சினை தலைவிரித்தாடி வருகிறது. இன்று வரை தாராவியில் உள்ள குடிசை வீடுகளில் கழிப்பறை கட்டும் வசதியை அரசு செய்து கொடுக்கவில்லை. இங்குள்ள மக்கள் பொது கழிவறைகளை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். தாராவியில் உள்ள மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் இங்குள்ள பொது கழிவறைகள் எண்ணிக்கை சொற்ப அளவில்தான் உள்ளது. 500 பேருக்கு ஒரு கழிவறை இருப்பதாக சமீபத்திய புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இதுதவிர பொது இடங்களில் குவிந்து கிடக்கும் குப்பை, அடிக்கடி சாக்கடை கால்வாய் உடைந்து தெருக்களில் கழிவுநீர் தேங்குவதும் தீராத தலைவலியாக உள்ளது.

எனினும் தாராவியில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகளும், சிறு தொழில் கூடங்களும், மும்பையின் எந்த பகுதிக்கும் எளிதில் செல்லக்கூடிய போக்குவரத்து வசதியும் அங்குள்ள மக்களை வேறு இடங்களுக்கு செல்லவிடாமல் பிடித்து வைத்துக்கொண்டு இருக்கிறது. கல்வி, பொருளாதார ரீதியில் முன்னேறியவர்கள் கூட இங்கிருந்து வேறு பகுதிகளுக்கு செல்ல விரும்புவது இல்லை. இங்கு வாழ்ந்து பழக்கப்பட்ட மக்கள் தாராவியை சொர்க்கபுரியாகவே கருதுகின்றனர்.

தாராவியில் உள்ள சிறு தொழிற்கூடங்களில் தோல் பொருட்கள் உற்பத்தி, போல்ட், நட்டு போன்ற இரும்பு பொருட்கள் தயாரிப்பு, ரெடிமேட் ஆடைகள் தயாரிப்பு, எம்பிராய்டரின், தென்னிந்திய தின்பண்டங்கள் தயாரிப்பு போன்றவை அதிக அளவில் நடைபெறுகின்றன. இங்கு தயாராகும் பொருட்கள் வெளி மாநிலங்களுக்கு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பல முன்னணி ஆடை நிறுவனங்களுக்கு தாராவியில் இருந்துதான் துணிகள் தைத்து கொடுக்கப்படுகின்றன.

தாராவியில் இருந்து 4 கி.மீ. தொலைவில் தாதர் ரெயில் நிலையமும், 10 கி.மீ. தூரத்தில் விமானநிலையமும் உள்ளது. தாராவிக்கு மிக அருகில் பன்னாட்டு நிறுவனங்களின் கூடாரம் என அழைக்கப்படும் பாந்திரா குர்லா காம்ப்ளக்ஸ் (பி.கே.சி.) உள்ளது. ஒருகாலத்தில் மத்திய, மாநில அரசுகளின் கடைக்கண் பார்வை கூட படாத தாராவியின் மீது இன்று பெரும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் பார்வை விழுந்து இருக்கிறது.

வளர்ச்சி, தூய்மை என்ற கோஷங்களுடன் 1990-ம் ஆண்டுக்கு பிறகு ரியல் எஸ்டேட் அதிபர்களும், அரசாங்கமும் தாராவியை கையகப்படுத்த பலமுறை முயற்சித்திருக்கின்றன. தாராவி மேம்பாட்டு திட்டம் (டி.ஆர்.பி.), செக்டார் திட்டம் என பல பெயர்களில் தாராவியை குடிசையில்லா பகுதியாக மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் ஒரு திட்டம் கூட வெற்றி பெற்றதில்லை. நிதிபற்றாக்குறை, அரசியல்வாதிகளின் சுயநலம், கட்டுமான அதிபர்களின் பேராசை மற்றும் குடிசைவாசிகளின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியாமை போன்ற காரணங்களால் தாராவி மேம்பாட்டு திட்டங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்து வருகின்றன.

மாநகரின் மையத்தில், மிக துரிதமான போக்குவரத்து இணைப்பில் தாராவி இருப்பதால் எப்போதும் இந்த இடத்துக்கு கடும் கிராக்கி. இப்போது அரசாங்கம் தன்னால் இயன்ற அளவுக்கு பல நலத்திட்டங்களை தாராவியில் செயல்படுத்தி வருகிறது. ‘சீலிங்’ என்ற துபாய் நாட்டு கட்டுமான நிறுவனத்தின் மூலம் ரூ.26 ஆயிரம் கோடி செலவில் தாராவியை குடிசையில்லா பகுதியாக மாற்ற மாநில அரசு முயற்சி செய்து வருகிறது. இந்த திட்டத்துக்காக தாராவியை ஒட்டியுள்ள 45 ஏக்கர் ரெயில்வே நிலத்தை ரூ.3,800 கோடி கொடுத்து மாநில அரசு வாங்கி உள்ளது. தாராவி புதிய பி.கே.சி.யாக மாறும் என்று மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சமீபத்தில் கூறி இருக்கிறார்.

எனினும் மேம்பாட்டு திட்டம் என்ற பெயரில் தாராவியை விட்டு தங்களை துரத்திவிடுவார்களோ? என்ற அச்சம் அப்பகுதி மக்களிடம் இல்லாமல் இல்லை. இதுவே தாராவி சீரமைப்பு திட்டங்கள் தோல்வி அடைய முக்கிய காரணமாக உள்ளது.

இதுகுறித்து தாராவியைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், “மேம்பாடு என்றால் கண்ணாடி கட்டிடங்களும், வணிக வளாகங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் மட்டுமல்ல. உயர்ந்த கட்டிடங்களை கட்டினால், தாராவியில் தற்போது உள்ள சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு எங்கு இடம் இருக்கும்.? நாடெங்கிலும் இருந்து மும்பைக்கு பிழைக்க வருகிறவர்கள் தாராவியில்தான் அடைக்கலமாகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் வாழ்வளிக்கும் தாய், ஒருபோதும் வணிக வளாகங்கள், கண்ணாடி கட்டிடங்களால் தன்னை அலங்கரித்து கொள்ளமாட்டாள்” என்றார்.

குடிசைவாசிகளின் அச்சத்தை போக்கி அவர்களுடைய எல்லா கோரிக்கைகளுக்கும் அரசு செவிமடுத்தால் இன்னும் சில ஆண்டுகளில் தாராவி குடிசையில்லாத பகுதியாக மாறி, வானுயர கட்டிடங்கள் நிறைந்த பகுதி ஆகலாம்.

ஏற்கனவே தாராவியில் இருந்து வெளியேறிய தமிழர்கள் மும்பையில் உள்ள செம்பூர், காட்கோபர், பாண்டுப், அந்தேரி, வாஷி, சயான், மாட்டுங்கா, மலாடு, கோரேகாவ், அம்பர்நாத், டோம்பிவிலி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். எதிர்காலத்தில் தாராவியில் தமிழர்களின் எண்ணிக்கை மேலும் குறையலாம்.

ஆனால் வாழவே தகுதியில்லாமல் இருந்த தாராவியை செல்வம் கொழிக்கும் பூமியாக மாற்றிய பெருமை தமிழர்களையேச் சாரும். அந்த வகையில் இன்றும், என்றும் தாராவி ‘தமிழனின் தாராவி’தான்...

உரிமைக்குரல்

விழுதுகள் எவ்வளவு தூரம் பரவி இருந்தாலும், அவை ஒருபோதும் வேர்களை மறப்பது இல்லை.

அப்படித்தான் தமிழர்களும். தமிழ் மண்ணை விட்டு அவர்கள் எங்கு சென்று வசித்தாலும் தங்கள் கலாசாரம், பண்பாடு, பழக்க வழக்கங்கள், பண்டிகைகளை மறப்பது இல்லை.

வேலைவாய்ப்பு தேடி மும்பைக்கு வந்திருந்தாலும் தமிழர்களின் எண்ணமும், சிந்தனையும் எப்போதும் தமிழ்நாட்டை பற்றியே இருந்து வருகிறது. எனவேதான் அவர்கள் தாராவியை தமிழ்நாடாகவே மாற்றி வைத்து உள்ளனர்.

உலகில் தமிழர்களுக்கு எங்கு அநீதி இழைக்கப்பட்டாலும் அவர்களுக்கு ஆதரவாகவும், அவர்களுடைய உரிமைகளுக்காகவும் முதலில் குரல் கொடுப்பவர்களாக மும்பை தமிழர்கள் இருந்து வருகின்றனர். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக வரதராஜ முதலியார் தலைமையில் மும்பை ஆசாத் மைதானத்தில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட்டதை யாரும் மறந்துவிட முடியாது. அந்த போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கில் தமிழர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் ஜல்லிக்கட்டு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்காகவும் மும்பையில் தமிழர்கள் மிகப்பெரிய போராட்டங்களை நடத்தி இருக்கிறார்கள்.

மராட்டிய அரசியலில் தமிழர்கள்

ரம்ப காலங்களில் தமிழர்கள் மும்பையில் நடந்த தேர்தல்களின் போது தேசிய கட்சிகளுக்கு ஆதரவு அளித்து வந்தனர். இந்தநிலையில் 1980-களில் நடந்த மும்பை மாநகராட்சி தேர்தலில் தாராவி பகுதியில் செல்வாக்குமிக்கவராக இருந்த எஸ்.கே.ஆர். என அழைக்கப்பட்ட எஸ்.கே. ராமசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அதன்பிறகு நடந்த மேயர் தேர்தலில் எஸ்.கே.ஆரின் ஒரு ஓட்டால் சிவசேனா மேயர் நாற்காலியை பிடித்தது. இதுவே பின்னாளில் சிவசேனா கட்சியினர் தமிழர் விரோதபோக்கை கைவிட காரணமாக இருந்தது என கூறப்படுகிறது.

இதையடுத்து தாராவி மற்றும் மும்பையில் தமிழர்கள் அதிகம் உள்ள இடங்களில் இருந்து பலர் மாநகராட்சி கவுன்சிலர்களாக தேர்வு செய்யப்பட்டனர். மராட்டியத்தின் முதல் தமிழ் எம்.எல்.ஏ. சுப்ரமணியம் ஆவார். இவர் 1980 மற்றும் 1985-ம் ஆண்டுகளில் மாட்டுங்கா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2014-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சயான் கோலிவாடா தொகுதியில் வெற்றி பெற்று கேப்டன் தமிழ்ச்செல்வன் (பா.ஜனதா) எம்.எல்.ஏ.யாக உள்ளார். இவர் அந்த பகுதியில் முன்பு கவுன்சிலராக இருந்தவர்.

மும்பை மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவராக தமிழரான ரவிராஜாவும்(காங்கிரஸ்), கவுன்சிலராக நெல்லை மாவட்டத்தை சேர்ந்த மாரியம்மாள் முத்துராமலிங்கமும் (சிவசேனா) உள்ளனர்.

மும்பையும்... தமிழ் சினிமாவும்...

மிழ்நாட்டுக்கு இணையாக மும்பையிலும் தமிழ் திரைப்படங்கள் கொண்டாடப்படுகின்றன. மாட்டுங்காவில் உள்ள அரோரா தியேட்டரில் 100 நாட்களை கடந்து ஓடிய தமிழ் படங்கள் ஏராளம். மல்டி பிளக்ஸ் திரையரங்குகளின் வருகைக்கு முன் அங்கு மட்டுமே தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்டன. எனவே தமிழ்ப் படங்கள் என்றாலே அரோரா தியேட்டர் தான் மும்பை தமிழர்களின் நினைவுக்கும் வரும்.

இன்றும் ரஜினி, கமல், அஜித், விஜய் என முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது மாட்டுங்கா பகுதியே திருவிழா கோலம் காணும். முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் நாளில் கட்அவுட், பேனர்கள், பாலாபிஷேகம், கோவில்களில் சிறப்பு பூஜை என தமிழகத்துக்கு சற்றும் சளைக்காமல் கொண்டாட்டங்கள் களைகட்டும். தற்போது மும்பையின் பல்வேறு பகுதிகளிலும் மல்டி பிளக்ஸ் அரங்குகளில் தமிழ்ப்படங்கள் திரையிடப்படுகின்றன. எனினும் அரோரா தியேட்டருக்கான மவுசு அப்படியே தான் உள்ளது.

கல்வி சேவையில் தமிழர்கள்

தாராவியில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் பள்ளி கூடங்களை தொடங்கினர். முதலில் இந்த பள்ளிகளில் தமிழ் குழந்தைகள் மட்டுமே படித்து வந்தனர். தற்போது தாராவி மட்டும் இன்றி மும்பை, தானே உள்பட பல்வேறு பகுதிகளில் தமிழர்கள் மிகப்பெரிய கல்வி நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். இந்த கல்வி நிலையங்கள் தமிழர்கள் மட்டுமின்றி மராத்தியர்கள் உள்பட எல்லா சமூகத்தினருக்கும் கல்வி சேவையை அளித்து வருகின்றன. தாராவி காமராஜர் பள்ளி, சயான் எஸ்.ஐ.இ.எஸ்., பாண்டுப் பிரைட் கல்வி நிறுவனம், என்.இ.எஸ். கல்வி குழுமம் உள்ளிட்ட பல்வேறு தமிழ் கல்வி நிறுவனங்கள் நீண்ட காலமாக சிறந்த கல்வி சேவையை அளித்து வருகின்றன.

மும்பையில் தமிழர்களின் கல்வி சேவை குறித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கிங்சர்க்கிள் பகுதியில் நடந்த விழாவில் கவர்னர் வித்யாசாகர் ராவ் பாராட்டி பேசினார்.

மேலும் தமிழர்கள் மும்பையில் பல இடங்களில் தமிழ்ச்சங்கங்களை நிறுவி தமிழை வளர்த்து வருகின்றனர். மிகப்பழமையான மும்பை தமிழ் சங்கம் சயான் பகுதியில் உள்ளது. மும்பையில் உள்ள பிரபல சண்முகானந்தா அரங்கமும் தமிழர்களுக்கு சொந்தமானதாகும்.