வானை அளந்த வல்லுனர் சந்திரசேகர்


வானை அளந்த வல்லுனர் சந்திரசேகர்
x
தினத்தந்தி 21 Aug 2019 6:09 AM GMT (Updated: 21 Aug 2019 6:09 AM GMT)

இன்று (ஆகஸ்டு 21-ந்தேதி). தமிழக அறிவியல் அறிஞர் எஸ்.சந்திரசேகர் நினைவுநாள். வானியலிலும், இயற்பியலிலும் மிகப்பெரிய சாதனை கண்டுபிடிப்பை செய்ததால் உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானியாக சந்திரசேகர் திகழ்கிறார்.

நட்சத்திரங்களைப் பற்றிய இவரது சிறப்பான ஆராய்ச்சிக்காக வில்லியம் பவுலர் என்பவருடன் சேர்த்து இவருக்கு 1983-ல் நோபல்பரிசு பகிர்ந்து தரப்பட்டது. பாகிஸ்தானில் உள்ள லாகூரில், ஒரு தமிழ்க் குடும்பத்தில் 1910-ம் ஆண்டு அக்டோபர் 19-ந்தேதி சந்திரசேகர் பிறந்தார். அங்கு ரெயில்வேயில் பணிபுரிந்து வந்த இவரது தந்தையார் சென்னைக்கு மாறுதலாகி வந்தார். அப்போது, திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப்பள்ளியிலும், சென்னை மாநிலக் கல்லூரியிலும் சந்திரசேகர் படித்தார். தனது 18-வது வயதிலேயே இயற்பியலில் ஒரு ஆய்வுக் கட்டுரையை இவர் எழுதினார். பட்டப்படிப்பில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றதால் இந்திய அரசின் உதவித்தொகை இவருக்கு கிடைத்தது. இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பில் இவர் சேர்ந்தார். இந்த சமயத்தில் தலைசிறந்த வான் இயற்பியல் அறிஞர்களின் அறிமுகமும் இவருக்கு கிடைத்தது. தனது 22-வது வயதில் கேம்பிரிட்ஜில் இவர் டாக்டர் பட்டம் பெற்றார். இயற்பியலில் நோபல்பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன் இவரது சித்தப்பா ஆவார்.

நட்சத்திரங்களுக்கு பிறப்பு, வாழ்க்கை, இறப்பு ஆகிய மூன்றும் உண்டு. நட்சத்திரங்கள் முடிவில் என்னவாகின்றன என்பது பற்றிய இவரது கண்டுபிடிப்பு வானியலில் மிகவும் போற்றத்தக்க ஒன்றாக ஆனது. அது பற்றி அறிந்து கொள்ளும் முன்பாக, நட்சத்திரங்களைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளவேண்டும். எளிதாகப் புரிந்து கொள்வதற்காக, பலூன் உதாரணத்தைப் பார்க்கலாம். ரப்பர் பலூன் எப்போதும் தளர்ந்த நிலையில் தான் இருக்கும். பலூனில் காற்றை ஊதும்போது, பலூனுக்குள் காற்று சென்று, அதனை விரிவடையச் செய்கிறது. பலூனை அதன் பழைய நிலைக்கு சுருங்க வைப்பதற்கு, ரப்பரின் இழுவிசையானது தொடர்ந்து முயற்சிக்கிறது. பலூனைப் பெரிதாக்கும் காற்றின் விசைக்கும், பலூனை சுருங்க வைப்பதற்கு முயற்சிக்கும் ரப்பரின் இழுவிசைக்கும் இடையிலான சமநிலை நீடிக்கும் வரை மட்டுமே அது ஊதப்பட்ட பலூனாக இருக்கும். இந்தச் சமநிலை கெடும் போது பலூன் வெடித்துச் சிதறிவிடும். நட்சத்திரங்களின் வாழ்க்கையும் அதுபோலத்தான்.

பேரண்டத்தின் வான மண்டலத்தில் இருக்கும் வாயுக்கள் ஏராளமான அளவில் ஒன்று திரண்டு நட்சத்திரங்களாக உருப்பெறுகின்றன. இந்த வாயுக்கூட்டத்தில் அதிகமான அளவில் இருப்பது ஹைட்ரஜன் எனும் வாயுவாகும். ஹைட்ரஜன் வாயுவில் உள்ள அணுக்கள் ஒன்றை ஒன்று ஈர்த்துக் கொள்வதால், இந்த ஈர்ப்பு விசையின் காரணமாக வாயுக்கூட்டம் நெருங்கிச் சுருங்குகிறது. இப்படிச் சுருங்கும் போது வாயு அணுக்கள் ஒன்றன் மீது ஒன்று அதிகவேகத்தில் மோதிக் கொள்கின்றன. இதன் காரணமாக வாயு சூடேறுகிறது. இப்படி பல காலம் நடந்து, அதன் விளைவாக வாயு மிக மிக அதிகமான அளவில் சூடேறும் போது, ஹைட்ரஜன் வாயு அணுக்கள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து ஹீலியம் அணுக்களாக மாறி விடுகின்றன. இத்தகைய அணுப்பிணைப்பு வினையின் காரணமாக வெப்பமும், ஒளியும் தொடர்ச்சியாக வெளியேறிய வண்ணம் இருக்கும். இதனால் நட்சத்திரங்கள் ஒளிர்கின்றன. சூரியனும் இப்படியான ஒரு நட்சத்திரம் தான்.

பலூனின் ரப்பரில் நாம் கண்ட இழுவிசையைப் போல, நட்சத்திரங்களில் தன்னைத்தானே உள்ளிழுத்துக் கொள்ளக்கூடிய ஈர்ப்புவிசை இருக்கிறது. அணுப்பிணைப்பு வினை காரணமாக நட்சத்திரங்களில் இருந்து வெளிப்படும் வெப்பம் இந்த ஈர்ப்பு விசையை சமன் செய்கிறது. இதன் காரணமாகவே நட்சத்திரங்கள் நீண்ட நெடிய காலத்திற்கு ஒளிர்ந்தபடி நிலைத்திருக்கின்றன.

நட்சத்திரங்களுக்குள் இருக்கும் எரிபொருள் தீர்ந்துபோனதும், அங்கு வெப்பம் உருவாவது குறைந்து விடுகிறது. இப்போது சமநிலை சீர்கெட்டு, நட்சத்திரம் சுருங்க ஆரம்பித்து விடுகிறது. சுருங்கும் போது நட்சத்திரம் குளிர்ச்சி அடைகிறது. உள்ளர்ப்பு விசை வெகுவாக அதிகரிப்பதன் காரணமாக, நட்சத்திரம் தனக்குள்ளேயே தகர்ந்து நொறுங்கிப் போகிறது. நட்சத்திரத்தின் வாழ்நாள் முடிந்து போய்விடுகிறது. இதுவே நட்சத்திரங்களின் வாழ்க்கை சுழற்சியாகும்.

சந்திரசேகர், எரிபொருள் தீர்ந்து வாழ்நாள் முடிந்துபோகும் நட்சத்திரங்களின் வடிவம் எத்தகைய அளவில் இருக்கும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக, கணக்குகளைப் போட்டுப் பார்த்தார். சூரியனின் நிறையை விடவும் 1.4 மடங்கு வரை பெரியதாக இருக்கும் ஒரு நட்சத்திரம் உயிர்விடும் போது, சில ஆயிரம் மைல்கள் நீளமும், ஒரு கன அங்குல பரப்பிலேயே நூற்றுக்கணக்கான டன்கள் அடர்த்தியும் கொண்டதாக அது மாறிவிடும் என்று அவர் கண்டுபிடித்தார். இதனை வெள்ளைக்குறளி அல்லது வெள்ளிக்குள்ளன்கள் என்கின்றனர். இத்தகைய வெள்ளைக்குள்ளன்கள் பேரண்டத்தில் ஏராளமாக இருக்கின்றன.

எல்லா நட்சத்திரங்களுமே இறுதியில் வெள்ளைக் குள்ளன்களாகத்தான் ஆகிவிடுகின்றன என்று விஞ்ஞானிகள் அதுவரை நம்பிவந்தனர். சந்திரசேகர்தான் சூரியனைவிட 1.4 மடங்கு அல்லது அதற்கும் குறைவான நிறைகொண்டிருக்கும் நட்சத்திரங்கள் மட்டுமே வெள்ளைக்குள்ளனாக ஆகின்றன என்று கண்டறிந்தார்.

வானியல் ஆராய்ச்சியில் இது சந்திரசேகர் வரம்பு என்று அறியப்படுகிறது. சந்திரசேகர் கண்டுபிடித்துக் கூறிய அளவையும் தாண்டி பெரிதாக இருக்கும் அசுர நட்சத்திரங்கள் எரிபொருள் தீர்ந்த பிறகு சக்திமிகுந்த பிரகாசமான வெடிப்பிற்கு ஆளாகி, அதன் பிறகு நியூட்ரான் நட்சத்திரமாகவோ, கருந்துளையாகவோ ஆகிவிடும் என்று பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

சந்திரசேகர் வரம்பு என்ற கண்டுபிடிப்பை அறிவியல் உலகம் ஏற்றுக்கொள்ள மறுத்தது. சந்திரசேகர் ஆசிரியர் பணிக்காக அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்திற்கு சென்றுவிட்டார். வான் இயற்பியல் மற்றும் வானவியல் ஆராய்ச்சிக்கான நாசா ஆய்வகத்தை நிறுவுவதில் அங்கு அவர் பணியாற்றினார். இவரது கண்டுபிடிப்பு சரியானதுதான் என்று 30 ஆண்டுகளுக்குப் பிறகு தான் ஒப்புக்கொள்ளப்பட்டது. சந்திரசேகருக்கு இந்தியா பத்மவிபூஷன் விருது வழங்கியது. பூமியின் சுற்றுப்பாதையில் இருக்கும் நாசாவின் எக்ஸ்ரே ஆய்வகம் இவரது பெயரில் சந்திரா ஆய்வுமையம் என்று அழைக்கப்படுகிறது. சந்திரசேகர்1995-ம் ஆண்டு ஆகஸ்டு 21-ந்தேதி சிகாகோவில் மரணம் அடைந்தார்.

- முனைவர்.த.சித்தார்த்தன், நிகழ்ச்சித்தலைவர் (ஓய்வு), சென்னை வானொலிநிலையம்.

Next Story