கல்யாணமாம் கல்யாணம்: சீனா-ஜப்பான் பெண்களும்.. இந்திய இளைஞர்களும்..


கல்யாணமாம் கல்யாணம்: சீனா-ஜப்பான் பெண்களும்.. இந்திய இளைஞர்களும்..
x
தினத்தந்தி 25 Aug 2019 5:30 AM GMT (Updated: 24 Aug 2019 8:10 AM GMT)

இந்திய இளைஞர்களின் அன்பு வலைக்குள் சீன, ஜப்பான் பெண்கள் எளிதாக சிக்கிக்கொள்கிறார்கள். இந்தியர்களை திருமணம் செய்துகொள்ள விரும்பும் அவர்கள், இங்குள்ள கலாசார முறையிலான சடங்கு சம்பிரதாயங்களை ரசித்து, ஏற்று குடும்ப வாழ்க்கைக்குள் அடியெடுத்துவைத்து, மகிழ்ச்சியாக தாம்பத்ய வாழ்க்கையும் நடத்துகிறார்கள்.

ஸ்வாய் லி, சீனாவை சேர்ந்த அழகான இளம்பெண். அவரும் ஸ்ரீநாத்தும் வாழ்க்கையில் இணைந்திருக்கிறார்கள். இவர்கள் திருமணம் தமிழகம் மற்றும் கேரள கலாசாரப்படி நடந்தது. பளபளக்கும் பட்டுப்புடவை கட்டி அழகாக காட்சியளித்த அவரை தலையில் சூடிய மல்லிகைப்பூவும், முகத்தில் ஜொலித்த புன்னகையும் தேவதையாக மாற்றியிருந்தது.

“என்னை திருமணம் செய்துகொள்வாயா? என்று அவர் கேட்டார். எனக்கு ரொம்ப பிடித்த நண்பர் இந்த கேள்வியை கேட்டதும், நான் தாமதிக்காமல் சரி சொல்லிவிட்டேன். நான் வாழ்க்கையில் முதல் முறையாக இப்போதுதான் பட்டுப்புடவை கட்டியிருக்கிறேன். பூச்சூடியிருக்கிறேன். இந்த திருமண நிகழ்வு என் வாழ்க்கையில் மறக்க முடியாதது..” என்கிறார், லி.

கேரள சினிமா டைரக்டர் அழகப்பன்- உமா தம்பதியரின் மகன், ஸ்ரீநாத். லி, சீனாவில் ஷான்க்சி மாநிலத்தை சேர்ந்தவர். ஸ்ரீநாத் அமெரிக்காவில் விருந்தினர் உபசரிப்புத்துறையில் பணியாற்றுகிறார். லி, சீனாவில் கல்வியியல் நிபுணராக பணியாற்றுகிறார்.

“முன்பு நாங்கள் இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலைபார்த்தோம். அப்போது பயணங்களிலும், கொண்டாட்டங்களிலும் லியும் உடனிருந்தார். அப்படியே என் இதயத்தில் இடம்பிடித்துவிட்டார். அந்த உறவை நிரந்தரமாக்கிக்கொள்ளலாம் என்று முடிவு செய்தோம்” என்று ஸ்ரீநாத் சொல்லும்போது “ஸ்ரீநாத் ரொம்ப தமாஷாக பேசுவார். பெரிய கண்களும், நிறைய அன்பும் கொண்டவர் அவர். இனியுள்ள வாழ்க்கையில் நாம் இருவரும் இணைவோம் என்று அவர் சொன்னபோது, அவர்தான் என் வாழ்க்கைத்துணைவர் என்று நான் முடிவு செய்துவிட்டேன்” என்கிறார், லி.

முதலில் லியின் குடும்பத்தினர் ஸ்ரீநாத்தை மருமகனாக்கிக்கொள்ள சற்று தயங்கியிருக்கிறார்கள்.

“நான் ஸ்ரீநாத்தை திருமணம் செய்துகொள்ள விரும்பும் தகவலை சொன்னதும், இன்னொரு நாட்டுக்காரர் எப்படி உனக்கு சரியான வாழ்க்கைத்துணையாக இருக்கமுடியும் என்று என் பெற்றோர் கேள்வி எழுப்பி, தயக்கத்தை வெளிப்படுத் தினார்கள். நான் அவர்களை சமாதானப்படுத்தினேன். பின்பு ஸ்ரீநாத்தை நேரில் பார்த்ததும் சம்மதித்துவிட்டார்கள். இப்போது என்னைவிட ஸ்ரீநாத்தை என் குடும்பத்தினருக்கு அதிகம் பிடிக்கிறது.

ஸ்ரீநாத்தின் பெற்றோரை நான் முதன்முதலில் 2017-ல் இங்கிலாந்தில் சந்தித்தேன். அதற்கு முன்பு நான் அவர்களிடம் போனில்தான் பேசியிருக்கிறேன். எப்போது பேசினாலும் மகளே என்று அன்பொழுக என்னை அழைப்பார்கள். அப்போதே அவர்களது சொந்த மகளைப் போன்று என்னிடம் அன்பு செலுத்துவார்கள் என்பதை உணர்ந்தேன்.

அப்பா (அழகப்பன்) டைரக்டு செய்திருக்கும் ‘பட்டம்போல’ என்ற சினிமா எனக்கு ரொம்ப பிடிக்கும். ரொமான்டிக்கான படம். அவர் ஷூட்டிங்குக்காக அமெரிக்காவிற்கு வந்திருந்தபோது நானும் அவருடைய படப்பிடிப்புத் தளங்களுக்கு செல்வேன். அவரது அடுத்தடுத்த சினிமாக்களை ரசிக்கவும் நான் காத் திருக்கிறேன்.

இந்தியர்களின் வாழ்க்கை கலர்புல்லாக இருக்கிறது. இங்குள்ள அனை வருக்கும் நடனம் தெரியும் என்று நான் நினைக்கிறேன். இங்குள்ள மக்கள் என்னிடம் அன்பாக பழகுகிறார்கள். எங்கள் இரு குடும்பத்தினரோடு ஆலப்புழை காயலில் படகுவீட்டில் பயணித்தோம். அது மறக்க முடியாத அனுபவம். அப்போது சீன உணவுகளையும், அந்த பகுதியிலே பிடித்த கடல்உணவுகளையும் தயார்செய்து ருசித்தோம். வாழை இலையில் வேகவைத்த மீனையும், பரோட்டாவையும் நான் விரும்பி சாப்பிடுகிறேன்” என்று புன்னகை முகமாய் சொல்கிறார், லி.

“இந்திய மற்றும் சீன பாரம்பரிய முறையில் எங்கள் திருமணம் நடைபெறவேண்டும் என்று இருவருமே விரும்பினோம். சீனாவில் அத்தகைய திருமண சடங்கினை நடத்துவதற்காக காத்திருக்கிறோம். நான் இதுவரை லியின் சொந்த ஊருக்கு சென்றதில்லை. அங்குள்ள உணவுகளும், அங்குள்ள சம்பிரதாயங்களும் லிக்கு பிடிப்பதுபோல் எனக்கும் பிடிக்கும். சீன மொழிதான் எனக்கு சவாலாக இருந்துகொண்டிருக்கிறது. அதை புரிந்து கற்றுக்கொண்டிருக்கிறேன். இரண்டு நாடுகளுக்கும் இடையேயுள்ள கலாசார வித்தியாசம் எதுவும் எங்களை பாதிக்காது. ஏன்என்றால் அவைகளை தெரிந்துகொள்ளவும், அவைகளில் பங்கெடுக்கவும் நாங்கள் ஆர்வமாக உள்ளோம்.



நாங்கள் அமெரிக்காவில் சீனா டவர் பகுதியில் அமர்க்களமாக சீன புத்தாண்டு கொண்டாட்டத்தை நடத்தியிருக்கிறோம். நண்பர்களோடு இரவு விருந்திலும் பங்கேற்போம். அதுபோல் தீபாவளி, நவராத்திரி பண்டிகைகளையும் கொண்டாடுவோம். வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் அழகாக கொண்டாட நாங்கள் ஆசைப்படுகிறோம்” என்று, மனைவியை அணைத்தபடி சொல்கிறார், ஸ்ரீநாத்.

சா கித்ய அகாடமி விருதினை 2018-ம் ஆண்டு பெற்றவர் கேரள எழுத்தாளர் அமல். இவர் தனது வாழ்க்கைத்துணையாக ஜப்பான் நாட்டுப் பெண் குமிகோ தனாகாவை தேர்ந்தெடுத்திருக்கிறார். அமலுக்கு ஓவியர், ஆசிரியர் போன்ற பல முகங்கள் உண்டு.

“ஏழ்மையாலும், குடும்ப பிரச்சினையாலும் மனோரீதியாக தளர்ந்து போயிருந்த அனுபவங்கள் நான் கதைகள் எழுத உதவின. கவின்கலை கல்வியை முடித்ததும், சாந்தி நிகேதன் சென்று அங்கு கலையின் பூர்வீகத்தை கற்று, அந்த அனுபவங்களோடு புதிய நாவல்கள் எழுத ஆசைப்பட்டு சென்றேன்.

அங்கு சிற்பக்கலை பிரிவில் குமிகோ மாணவியாக இருந்தார். அவர் ஒரு சைக்கிளில் கலர்புல்லான உடை அணிந்து கல்வி நிலையத்திற்கு வருவார். அலட்டல், அமர்க்களம் என்று எப்போதும் பரபரப்பாக இருந்துகொண்டிருக்கும் மாணவிகளுக்கு மத்தியில் குமிகோ மட்டும் சாந்தசொரூபியாக வந்துசெல்வது என்னை கவர்ந்தது. காலை முதல் இரவு வரை வாசிப்புசாலையில் உட்கார்ந்திருந்து புத்தகங்கள் வாசித்து குறிப்புகள் எடுப்பார். அதை நான் அடிக்கடி கவனித்திருக்கிறேன்.

ஜப்பானை சேர்ந்த கேயோ என்ற மாணவியும் அங்கு படித்தார். அவர் என்னைவிட சீனியர். அவரிடம் நான் ஜப்பானிய இலக்கியங்கள் பற்றி பேசுவேன். ஆனால் அவருக்கு அந்த அளவுக்கு இலக்கிய ஈடுபாடு இல்லை. அதனால் ஒருநாள், ‘உன்னோடு இலக்கியம் பேச குமிகோதான் சரியான ஆள். அவளை நான் உனக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன்’ என்று குமிகோவை எனக்கு அறிமுகம் செய்துவைத்தார்.

இந்த நிலையில் பஞ்சாப்பை சேர்ந்த எது தோழி மனீத் கவுர், சுவர்சித்திரங்கள் பற்றிய பயிற்சி முகாம் ஒன்றில் கலந்துகொள்ள குக்கிராமம் ஒன்றுக்கு சென்றார். என்னையும் உதவிக்கு அழைத்ததால் நானும் அங்கு சென்றேன். அங்கும் குமிகோ வந்திருந்தார். அங்கு சில நாட்கள் தங்கியதால் எங்களுக்குள் நல்ல நட்பு ஏற்பட்டது.

ஒருநாள் கல்வி வளாகத்திற்குள் வந்தபோது, அவர் சைக்கிள் இன்றி நடந்து வந்தார். நான் ஒரு பழைய சைக்கிளில் கடந்துபோனேன். அப்போது சைக்கிளில் ஏறிக்கொண்டால் அங்கு கொண்டுபோய் விட்டுவிடுகிறேன் என்றேன். ஏறினார். வளாக மைதானத்தை இரண்டு சுற்றுசுற்றிவிட்டு கொண்டுபோய் விட்டேன். அடுத்து அவர் ஆங்கிலம் கற்க உதவினேன். இருவரும் சேர்ந்து அருகில் உள்ள கிராமங்களையும் சுற்றிப்பார்க்க செல்வோம்.

முதல் வருட கல்வியை முடித்துக்கொண்டு நான் சொந்த ஊரான திருவனந்த புரம் வந்ததும், கேரளாவை சுற்றிப்பார்க்க குமிகோ வந்தார். எங்கள் வீட்டிற்கும் வந்தார். இரண்டாம் வருடம் தொடங்கும்போதே நான் காதலை சொல்லிவிட்டேன். கல்விக் காலம் முடிந்ததும், கல்யாணத்தை நினைவுபடுத்தினேன்” என்கிறார், அமல்.

குமிகோவின் பெற்றோர் ஜப்பானில் இதோகவா என்ற பகுதியில் வசித்து வருகிறார்கள். அங்கு அவர்கள் சிற்பக்கூடம் ஒன்றை நடத்திவருகிறார்கள். குமிகோ தற்போது அங்கே சிற்பங்கள் வடிவமைக்கும் பணியை மேற்கொள்கிறார்.

குமிகோ- அமலின் திருமணத்திற்கு பெற்றோர் அனுமதிகிடைத்ததும், டோக்கியோவில் மரத்தால் உருவான ஆலயமான ஷின்டோவில் வைத்து இவர்களது திருமணம் நடந்தது. இருவரும் திருமண சடங்குக்குரிய கிமோனோ உடைகளை அணிந்து, சடங்குகளை செய்து மணவாழ்க்கையில் இணைந்திருக்கிறார்கள்.

“அன்று மாலையில் எங்கள் திருமணம் நடந்தது. கிமோனோ உடையை எனக்கு ஒரு பெண் அணிவித்துவிட்டார். அது நட்சத்திரங்கள் அடங்கிய வேலைப்பாடுகள் நிறைந்ததாக இருந்தது. வெகுசிலரே எங்கள் திருமண சடங்குகளில் கலந்து கொண்டார்கள். திருமணத்தை நடத்திவைத்த பூசாரி தீர்த்தமாக அரிசியில் தயார்செய்த ஒருவித மதுவை தந்தார்.

மணவிழா சடங்குகள் நிறைவடைந்ததும் அந்த ஆலயத்தில் வேலைபார்க்கும் பெண்கள் எல்லோரும் எங்களுக்காக ஆனந்தமான நடனம் ஒன்றை ஆடினார்கள். ஜப்பானில் நடக்கும் விருந்துகளில் கலந்துகொள்பவர்கள் மேற்கத்திய கலாசாரம் கொண்ட உடைகளை அணிந்து வருகிறார்கள். அவர்களுக்கு மத்தியில் குமிகோ பட்டுப்புடவையிலும், நான் வேட்டிசட்டையிலும் தோன்றினேன். அதனால் எங்களை அனைவரும் வித்தியாசமாக பார்த்து வாழ்த்தினார்கள். நாங்கள் அவர்களுக்கு கேக்கும், பரிசுகளும் வழங்கினோம். நிகழ்ச்சி முடிவில் நான் ஜப்பான் மொழியில் ஏற்புரை நிகழ்த்தவேண்டும். எனக்கு மொழி தெரியாது என்பதால் நிகழ்ச்சியை சீக்கிரமாகவே முடித்துக்கொண்டோம்” என்கிறார், அமல்.

இவர் இப்போது ஜப்பானிய மொழியை கற்றுக்கொண்டிருக்கிறார். அந்த மொழி எளிதானதல்ல. சிலமுறை தோல்வியடைந்த பின்பும் மனைவியிடமும், ஜப்பானிய மக்களிடமும் உரையாடவேண்டும் என்பதற்காக தொடர்ந்து அந்த மொழியை கற்க முயற்சித்துக்கொண்டிருக்கிறார். தனது மனைவியை அழைத்துவந்து கேரளாவையும் சுற்றி காட்டியிருக்கிறார்.


Next Story