சிறப்புக் கட்டுரைகள்

தினம் ஒரு தகவல் : கொடூர பாம்புகள் + "||" + Day One Info: Terrible snakes

தினம் ஒரு தகவல் : கொடூர பாம்புகள்

தினம் ஒரு தகவல் : கொடூர பாம்புகள்
பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள். உண்மையில் பாம்புகள் தங்கள் உயிருக்கு ஆபத்து என்று வரும் போது தான் அவை தாக்க முற்படுகின்றன.
ஆப்பிரிக்க காடுகளில் காணப்படும் மிகப் பெரிய பாம்பு வகையான பிளாக் மம்பா கடித்தால் நேரடியாக நரம்பு மண்டலத்தை பாதிக்கும். அடுத்த 20 நிமிடங்களில் கடிபட்டவரால் பேச முடியாது. ஒரு மணி நேரத்தில் கோமா நிலை. அடுத்த 6 மணி நேரத்தில் மரணம் என்று கதை முடிந்து விடும்.

மற்ற பாம்புகள் கடித்தால் ரத்தம் வழியாக மெதுவாய் தான் விஷம் ஏறும். அதற்குள் கடிபட்டவர் மருத்துவம் செய்து கொள்ளலாம். இந்த பாம்பிடம் கடிபட்டால் அதற்கு சாத்தியமில்லை. என்றாலும் இப்போது ஆன்டிவெனின் என்ற மருந்தை கண்டுபிடித்திருக்கிறார்கள். இதை உடனடியாக உடலில் செலுத்தினால் 75 சதவீதம் பிழைக்க வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.

எஜிப்தியன் கோப்ரா எனப்படும் பாம்பு வகைகள் ஆப்பிரிக்காவில் காணப்படுகிறது. இவற்றை பாலைவனங்களில் பார்க்கமுடியும். எலிகள் மற்றும் கோழிகளை தேடி சில சமயங்களில் மனிதர்களின் வீட்டுக்கே வந்து விடும். கோப்ரா வகையில் இது மிக கொடிய விஷம் கொண்ட பாம்பாகும். 5 அடி முதல் 8 அடி வரை இது வளரும். இது கடித்தால் விஷம் நரம்பு மண்டலத்தை தாக்கி, இதயத்திற்கும், நுரையீரலுக்கும் செல்லும் நரம்புகளை செயலிழக்கச் செய்து விடும். அதனால் மரணம் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

குரோட்டலஸ் அடமென்டஸ் என்ற பாம்பு, வைபர் வகையை சார்ந்தது. இது முயல்கள் தங்கும் குழிகளை தேர்ந்தெடுத்து வாழும். இது கடித்தால் ரத்தம் வராதே தவிர, கடிபட்டவர் உடம்பில் உள்ள பைப்ரோஜென்னை உறைய வைத்து விடும்.

ருசெல் வைப்பர் என்பது ஆசிய கண்டத்தில் காணப்படும் பாம்பு வகையாகும். இந்தியாவில் உள்ள முதல் நான்கு விஷத்தன்மை கொண்ட பாம்புகளில் ஒன்று. இதன் நீளம் சுமார் 5½ அடி. இந்த பாம்பு கடித்தால் முதலில் வலி உண்டாகும். பின்பு கடிபட்ட இடம் வீங்கும். ரத்தம் வரும். ரத்த அழுத்தம் குறையும். இதயத் துடிப்பு குறையும். சிலருக்கு வாந்தி வரும். முகம் வீங்கும். இந்தக் கடியின் வலி இரண்டு வாரங்கள் முதல் 4 வாரங்கள் வரை நீடிக்கும். அதன்பிறகு இதயத்துடிப்பு நிற்கும்.

மொயாம்பிக் ஸ்பிட்டிங் கோப்ரா என்ற பாம்பு வகையின் தாயகமும் ஆப்பிரிக்கா தான். ஆப்பிரிக்காவில் காணப்படும் விஷப்பாம்பு வகைகளில் இதற்கு இரண்டாவது இடம். இது விஷத்தை கக்கி எதிரிகளை செயலிழக்க வைத்துவிடும். விஷம் கண்ணில் பட்டால் பார்வை போய்விடும். தற்காப்புக்காகவே இது விஷத்தை கக்குகிறது. இதன்விஷம் 5½ முதல் 8½ அடி தூரம் வரை மிகத்துல்லியமாக சென்று எதிரியை பதம் பார்த்து விடும். இதனால் தான் சிங்கம், புலி போன்ற பெரிய விலங்குகள் கூட இதன் எதிரில் நின்று ரிஸ்க் எடுப்பதில்லை.

ஆஸ்திரேலியன் பிரவுன் ஸ்நேக் என்ற வகை ஆஸ்திரேலியாவில் வாழும் பாம்பு இனமாகும். தரையில் வாழும் கொடிய விஷம் கொண்ட பாம்புகளில் இதற்கு இரண்டாவது இடம். இது தன்னைவிட மிகவும் பலம் கொண்ட விலங்குகளாக பார்த்து வேட்டையாடும். இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த பாம்பின் எதிரில் நீங்கள் ஆடாமல் அசையாமல் நின்றால் உங்களை ஒன்றும் செய்யாது. நீங்கள் அசைந்தால் மட்டுமே உங்களைத் தாக்கும். இதன் விஷம் முதலில் நரம்பு மண்டலத்தை தாக்குவதோடு, ரத்தத்தையும் உறைய வைத்து விடும். மற்ற பாம்புகள் எதிரிகளை எதிர்கொள்ளும்போது தோற்பது போல் தெரிந்தால் உயிர் பிழைக்கும் பொருட்டு ஓடி தப்பித்து கொள்ளும். இந்த பாம்போ உயிர் உள்ள வரை போராடும்.