நயன்தாரா கடந்து வந்த பாதை


நயன்தாரா கடந்து வந்த பாதை
x
தினத்தந்தி 15 Sep 2019 3:30 AM GMT (Updated: 14 Sep 2019 3:55 PM GMT)

தென்னிந்திய திரை உலகில் 16 வருடங்களாக கோலோச்சிக் கொண்டிருக்கிறார், நயன்தாரா. “நான் நடிகை ஆவேன் என்றோ, இ்ந்த அளவுக்கு புகழ் பெறுவேன் என்றோ ஒருபோதும் எதிர்பார்த்ததில்லை. நாளை என்ன நடக்கும் என்று நான் நினைத்துப்பார்ப்பதும் இல்லை” என்று தத்துவார்த்தமாக பேசுகிறார், அவர்.

2003-ம் ஆண்டு சத்யன் அந்திக்காடு டைரக்டு செய்த ‘மனசினக்கர’ என்ற மலையாள சினிமாவில் கவுரி என்ற கதாபாத்திரத்தின் வாயிலாக சினிமாக்குள் வந்த இவர், கேரளாவில் திருவல்லா என்ற பகுதியை சேர்ந்தவர். இயற்பெயர் டயனா குரியன். அடுத்த இரண்டு ஆண்டில் ஐயா என்ற படத்தில் சரத்குமாருடன் ஜோடி சேர்ந்தார். அதன் பிறகு அவரது திரை உலக வாழ்க்கையில் திரும்பிப்பார்க்க நேரமில்லை. வெற்றி மீது வெற்றிதான். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அஜித்குமார், விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் எல்லாம் நடித்துவிட்டார்.

‘மனசினக்கர’ சினிமாவை பார்த்துவிட்டு டைரக்டர் பி.வாசுவின் மனைவி சாந்தி ‘சந்திரமுகி’க்கு கணவரிடம் சிபாரிசு செய்தார். அதில் சூப்பர் ஸ்டாருடன் சேர்ந்து நயன்தாராவும் புகழ்பெற்றார். அப்போது தமிழ் ரசிகர்கள் நயன்தாராவின் சொந்த ஊரான திருவல்லா வரை சென்று அவரது வீட்டை பார்த்துவிட்டு வந்த சம்பவங்களும் உண்டு. அடுத்து சிவாஜி படத்தில் மீண்டும் ரஜினியுடன் இணைந்தார். அதில் அவரது நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ‘கதைபறையும்போள்..’ என்ற மலையாள படத்தின் ‘ரீமேக்’கான குசேலனிலும் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு நயன்தாராவுக்கு கிடைத்தது.

சிம்புவுடன் நடித்த ‘வல்லவன்’ வெளிவந்த பின்பு நயன்தாராவை பற்றி நிறைய கிசுகிசுக்கள் வெளிவந்தன. உதட்டோடு உதடு பொருத்திக்கொடுத்த முத்தங்களும் விவாதமாகின. அப்போது சிம்புவும், நயன்தாராவும் காதலிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இருவரும் இணைந்திருக்கும் போட்டோக்களும் வெளிவந்தன. பின்பு அதில் கசப்பு ஏற்பட்டுவிட்டது.

2010-ம் ஆண்டு அடுத்து சூடான செய்திகள் வெளிவந்தன. அப்போது நயன்தாரா கொடுத்த பேட்டியில், ‘நடிகரும், இயக்குனருமான பிரபுதேவாவை தான் விரும்புவதாக’ சொன்னார். அப்போது கையில் பிரபுதேவாவின் பெயரையும் பச்சைக்குத்தியிருந்தார். அதற்கு அடுத்த விவாதம், அவர் இந்து மதத்திற்கு மாறியதாக எழுந்தது. சென்னையில் உள்ள ஆரிய சமாஜம் கோவிலில் அதற்கான சடங்கில் ஈடுபட்டு, நயன்தாரா என்ற பெயரை அதிகாரபூர்வமாக்கிக்கொண்டதாக கூறப்பட்டது. பிரபுதேவா வுடன் கொண்ட காதல் ஏகப்பட்ட சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால் 2012-ல் ‘பிரபுதேவாவுடனான தொடர்பு முடிந்துபோய்விட்டது’ என்று நயன்தாராவே ரசிகர்களிடம் அறிவித்தார்.

நயன்தாராவின் வேகமான திரை உலக வளர்ச்சியில் 2011 மற்றும் 2012 காலகட்டம் வீழ்ச்சியைகொடுத்தது. கை நிறைய தமிழ் சினிமாக்களோடு வலம்வந்துகொண்டிருந்த அவர், அந்த காலகட்டத்தில் இரண்டு தெலுங்கு சினிமாக்களில் மட்டுமே நடித்துக்கொண்டிருந்தார். சோர்ந்தும் காணப்பட்டார். ஆனால் அடுத்த ஆண்டே புதுவேகம் கொண்டு மீண்டுவந்தார். அட்லியின் ராஜாராணி சினிமாவில் நடித்து, சிறந்த நடிகைக்கான மாநில அரசின் விருதினையும் பெற்றார். கதாநாயகர்களின் துணை இல்லாமலே சூப்பர் ஹிட் படத்தை வழங்கி ‘தென்னிந்தியாவின் சூப்பர் ஹீரோயின்' என்ற பெருமையையும் பெற்றார். தமிழ் திரை உலகில் சில நடிகைகளுக்கே சொந்தமான அந்த பட்டம் நயன்தாராவுக்கும் கிடைத்தது. ‘மாயா’ என்ற அமானுஷ்ய படம் அதற்கு துணைபுரிந்தது. இதற்கிடையில் டைரக்டர் விக்னேஷ் சிவனுடன் நட்புறவு ஏற்பட்டது. அவரது குடும்பத்தினருடனும் நெருக்கமானார். குடும்பமாக கோவிலுக்கும் சென்றுவந்தார்கள்.

‘லவ் ஆக்‌ஷன் டிராமா’ என்ற படத்தின் மூலம் மீண்டும் மலையாளத்திற்கு சென்ற நயன்தாரா அதில் நிவின் பாலிக்கு ஜோடியானார். அடுத்து விஜய்யுடன் நடித்த பிகில், தெலுங்கில் சிரஞ்சீவியுடன் நடித்த ‘சைரா நரசிம்க ரெட்டி’ போன்ற படங்கள் வெளியாக வரிசைகட்டி நிற்கின்றன. அவை மட்டுமல்ல 11 வருடங்கள் கழித்து அவர் மீண்டும் சூப்பர் ஸ்டாருடன் இணைந்திருக்கும் தர்பாரும் தயாராகிக்கொண்டிருக்கிறது.

‘அறம்’ என்ற சினிமாவில் நயன்தாரா மாவட்ட கலெக்டராக நடித்து பாராட்டுபெற்றார். அதில் அவர் அநீதிக்கு எதிராக போராடியதால் மக்கள் அவரை ‘தலைவி’ என்ற அடைமொழியோடு அழைக்கத் தொடங்கினார்கள். இப்போது ரசிகர்கள் நயன்தாராவிடம் இரண்டு கேள்விகளுக்கான பதிலை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஒன்று: ‘தலைவி’ எப்போது அரசியல் தலைவியாக வலம் வருவார்? இரண்டு: எப்போது டைரக்டர் விக்னேஷ் சிவனுக்கும்- நயன்தாராவுக்கும் திருமணம்?

பதில்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்!

Next Story