மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் ‘மதிப்பெண் வங்கி’


மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் ‘மதிப்பெண் வங்கி’
x
தினத்தந்தி 21 Sep 2019 3:56 PM GMT (Updated: 21 Sep 2019 3:56 PM GMT)

சீனாவில் இயங்கும் பெரும்பாலான பள்ளிகளில், ‘மதிப்பெண் வங்கி’ என்ற திட்டத்தை பின்பற்றுகிறார்கள். 2017-ம் ஆண்டு நான்ஜிங் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில், சோதனை முயற்சியாக தொடங்கப்பட்ட திட்டம் இது. அதாவது இந்த மதிப்பெண் வங்கியில் மாணவர்கள் மதிப்பெண்களைக் கடனாகப் பெற்றுக்கொள்ளலாம்.

‘பாஸ்’ மார்க் வாங்க, சில மதிப்பெண்கள் தேவைப்படும் பட்சத்தில், இந்த வங்கியில் இருந்து கடன் பெற்றுக்கொள்ளலாம். அப்படி கடனாக பெற்ற மதிப்பெண்களை, அடுத்து வரக்கூடிய தேர்வுகளில் அதிகமான மதிப்பெண்களைப் பெற்று, திருப்பிஅடைத்துவிட வேண்டும். “இந்த மதிப்பெண் வங்கி மாணவர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. ஒரு மதிப்பெண்ணில் தோல்வியடைபவரும், 10 மதிப்பெண்களில் தோல்வி அடைபவரும் இந்த வங்கியில் மதிப்பெண்களைக் கடன் பெற்று, தேறிவிட முடியும். ஆனால் அடுத்து வரக்கூடிய தேர்வுகளில் அதிக மதிப்பெண்களைப் பெற்று, வட்டியுடன் சேர்த்து வங்கிக்குத் திருப்பியளித்துவிட வேண்டும்.

சில ஆசிரியர்கள் பரிசோதனைக் கூடம், பேச்சுப் போட்டி போன்றவற்றில் சிறப்பாக செயல்படும் மாணவர்களுக்கு மதிப்பெண்களை வழங்கி, கடனை அடைக்க உதவுகிறார்கள். பத்தாம் வகுப்பில் 49 மாணவர்களில் 13 மாணவர்கள் வங்கியிலிருந்து மதிப்பெண்களைக் கடனாகப் பெற்றிருக்கிறார்கள்” என்கிறார், இந்த திட்டத்தை அறிமுகப்படுத்திய நான்ஜிங் பள்ளியின் இயக்குநர் கான் ஹுவாங்.

மதிப்பெண் வங்கிக்கு மாணவர்கள் மத்தியில் ஆதரவு இருந்தாலும் பலரும் எதிர்க்கின்றனர். இது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படாத நடைமுறை.

Next Story