மின்சார உலகில் புதுமை படைத்தவர்


மின்சார உலகில் புதுமை படைத்தவர்
x
தினத்தந்தி 22 Sep 2019 5:49 AM GMT (Updated: 22 Sep 2019 5:49 AM GMT)

மனிதன் இவ்வுலகில் ஏற்படுத்திய எத்தனையோ அறிவியல் புரட்சிகளில் தலையானது, மின்சாரத்தை கண்டுபிடித்தது.

ன்று (செப்டம்பர் 22-ந் தேதி) விஞ்ஞானி மைக்கேல் பாரடே பிறந்த நாள்.

மனிதன் இவ்வுலகில் ஏற்படுத்திய எத்தனையோ அறிவியல் புரட்சிகளில் தலையானது, மின்சாரத்தை கண்டுபிடித்தது. இன்றைக்கு உலகம் இயங்குவதற்கு உயிர்நாடியாக மின்சாரம் அமைந்துள்ளது. மின்சாரம் குறித்து மனிதன் பல நூற்றாண்டுகளாக அறிந்திருந்தாலும் அதனை கண்டுபிடித்த பெருமைக்கு பல அறிஞர்கள் உரியவர்கள். ஆனாலும், அதை உருவாக்குவதற்கான அடிப்படையை கண்டுபிடித்த பெருமை மைக்கேல் பாரடேவையே சேரும்.

இவர் 1791-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந் தேதி இங்கிலாந்து நாட்டில் லண்டன் நகரில் ஜேம்ஸ் பாரடேக்கு மகனாக பிறந்தார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த பாரடே 13 வயதாகியும் பள்ளிக்கூடம் செல்லும் வாய்ப்பினை பெறவில்லை. வறுமை சூழலை விரட்ட புத்தகக்கடையில் புத்தகங்களை வினியோகிக்கும் வேலை பார்த்தார். இவருடைய கடின உழைப்பாலும், ஈடுபாட்டாலும் விரைவிலேயே புத்தகங்கள் கட்டும் (பைண்டிங்) தொழிலுக்கு முன்னேறினார்.

பள்ளிக்கூடம் செல்ல முடியாத பாரடே, சற்றும் மனம் தளராது, புத்தகங்களை பைண்டிங் செய்யும்போது, புத்தகங்களை தேடி படித்தார். தன் அறிவை வளர்த்துக்கொண்டார். குறிப்பாக, வேதியியல் பாடத்தில் தீராத பற்று கொண்டிருந்தார். அப்போதிருந்த தலைசிறந்த வேதியல் விஞ்ஞானி ஹம்பி டேவி என்கிற அறிவியல் அறிஞர் உரைநிகழ்த்தும் போது அதைக் கேட்க செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். டேவியின் பேச்சிலிருந்து குறிப்புகள் எடுத்து பின்னர் அதை ஒரு புத்தகமாக கட்டமைத்து கொடுத்தபோது அவர் பாரடேவின் ஆர்வத்தைக் கண்டு தனக்கு உதவியாளராக வைத்துக் கொண்டார். தொடர்ந்து அறிவியல் பாடங்களை படிப்பதன் வாயிலாகவும் அறிவியல் அறிஞர்கள் தொடர்புகளாலும் தன்னுடைய அறிவியலறிவை வளர்த்துக்கொண்டார்.

இரவு நேரங்களில் சைக்கிள்களில் செல்லும்போது டைனமோ விளக்கு பிரகாசமாக எரிவதை பார்த்திருக்கிறோம். அதைப்போன்று மோட்டார் சைக்கிள், கார் இவைகளில் முகப்பு விளக்குகள் எரிவதை பார்த்திருக்கிறோம். இதற்கான மின்சாரம், வண்டி ஓடுகின்ற போது அதன் சுழற்சியில் இருந்து பெறப்படுகிறது என்பதை அறியும் போது நமக்கு ஆச்சரியமாக இருக்கும். இதற்குள் புதைந்து கிடக்கும் அறிவியல்தான் இன்றைக்கு உலகையே உலுக்கி கொண்டுள்ளது.

இரு காந்த துண்டுகளை எதிர் எதிர் துருவங்களாக ஒன்றுக்கு அருகில் இன்னொன்றை வைக்கின்றபோது ஈர்ப்பு சக்தியின் காரணமாக ஒட்டிக்கொள்ளும். இவ்விரு காந்தங்களையும் காற்றுப் புக முடியாத ஓர் உருளைக்குள் இருமுனைகளிலும் அசையாதவாறு ஆணி வைத்து பொருத்திக் கொள்வோம். இவைகளுக்கு இடையே காந்தபுலம் உள்ளது. இவைகளுக்கு நடுவே ஒரு செம்பு கம்பியை நீள் சதுரமாகவோ அல்லது நீள் வட்டமாகவோ வைத்துச் சுற்றும் போது காந்த புலத்தை வெட்டுகிறது. இதன் காரணமாக மின்சாரம் உருவாகிறது. அதாவது காந்த சக்தியில் இருந்து மின்சக்தி கிடைக்கிறது. அதனை கம்பிகளின் வழியே கடத்தி விளக்கு எரிப்பதற்கும், மின்விசிறி சுழல்வதற்கும் என எண்ணற்ற வகைகளில் பயன்படுத்திக்கொள்கிறோம். சைக்கிள் டைனமோ மற்றும் பிற வாகனங்களில் பயன்படுத்தும் டைனமோக்களில் இப்படிதான் மின்சாரம் உருவாக்கப்படுகிறது. இம்மாபெரும் அறிவியல் கண்டுபிடிப்பினை உலகிற்கு பறைசாற்றியவர் மைக்கேல்பாரடே.

காந்த புலங்களுக்கு இடையே உருளையை சுற்ற எத்தகைய சக்தியினை பயன்படுத்துவது என்பதுதான் இன்றைய அறிவியல் உலகில் முதன்மையான கேள்வி. அது மேலிருந்து கொட்டும் நீராக இருக்கலாம், நிலக்கரியை எரித்து அதன் மூலம் வருகின்ற நீராவியைக் கொண்டு சுற்றுவதாக இருக்கலாம், அணு உலைகளில் வெப்பத்தை உருவாக்கி அதன் மூலம் வருகின்ற நீராவியாக இருக்கலாம், சூரியஒளி, காற்று அல்லது கடல் அலைகளின் இயக்கமாக இருக்கலாம். எல்லாவற்றிற்கும், பாரடேவின் கண்டுபிடிப்பே ஆதாரமாக விளங்குகிறது.

இவருடைய பல படைப்புகள் வேதியியலில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. அவற்றில், முக்கியமானது மின்னாற்பகுப்பு விதிகள். மின்னாற்பகுப்பு என்பது மின்சக்தியை பயன்படுத்தி வேதியல் மாற்றங்களை ஏற்படுத்துதல். உதாரணமாக மின்னாற்பகுப்பின் மூலமாக தண்ணீரை ஹைட்ரஜன், ஆக்சிஜன் வாயுக்களாக பிரிக்கலாம். இவருடைய கண்டுபிடிப்புகள் பல கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுத்தது.

மற்ற அறிவியல் அறிஞர்களை ஒப்பிடும்போது பாரடே தனது கண்டுபிடிப்புகளை எளிமையாக அனைவரும் புரிந்துக் கொள்ளும் வகையில் விளக்கினார். அதுமட்டுமின்றி ஞாயிற்றுக்கிழமைகளில் தேவாலயத்திற்கு சென்று அறிவியல் உரை நிகழ்த்துவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

உலகிலுள்ள முன்னணி அறிவியல் கழகங்களும், பல்கலைக்கழகங்களும் பாரடேக்கு பல விருதுகளையும் அங்கீகாரங்களையும் அளித்தன. இருந்தபோதிலும் அதிலெல்லாம் அவருக்கு பெரிய அளவில் நாட்டம் இருந்ததில்லை. அதைப்போல தனது படைப்புகள் மனித குலத்திற்கு ஆக்கப்பூர்வமான வழிகளில் மட்டுமே பயன்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். பிரிட்டிஷ் அரசாங்கம் 1853-ல் ரஷியாவுடன் நடைபெற்ற கிரிமியன் யுத்தத்தின் போது ரசாயன ஆயுதங்கள் செய்துதர பணித்தபோது மறுத்துவிட்டார்.

பாரடே 1867-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 25-ந்தேதி காலமானார்.

கோ. ஒளிவண்ணன், எழுத்தாளர்.

Next Story