காகிதத்தில் கவுன்.. மரத்தில் கிரீடம்..


காகிதத்தில் கவுன்.. மரத்தில் கிரீடம்..
x
தினத்தந்தி 22 Sep 2019 9:10 AM GMT (Updated: 22 Sep 2019 9:10 AM GMT)

ஆடை வடிவமைப்புத்துறை இப்போது ஆச்சரியப்படும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது.

டை வடிவமைப்புத்துறை இப்போது ஆச்சரியப்படும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. பொருத்தமான உடைகளை தேர்ந்தெடுத்து அணிந்தால் தங்களை கூடுதலாக அழகாக்கிக்கொள்ளலாம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமாகிவிட்டதால், அனைவருமே ஆடைத் தேர்வில் அதிக அக்கறைசெலுத்துகிறார்கள். ஒருவர் அணியும் ஆடையை வைத்து அவரது அழகுணர்ச்சியை கணித்துவிடமுடியும். அதோடு அவரது குணாதிசயத்தையும் கண்டுபிடித்துவிடலாம். அதனால் ஆடைக்கும், அலங்காரத்திற்கும் பெண்கள் இப்போது அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

நவீன உடைகளை தேர்ந்தெடுத்து அணியும் பெண்களில் பலர் ஆடைகளை பற்றிய அடிப்படை உண்மைகளை தெரிந்துவைத்திருக்கிறார்கள். ஆடை வடிவமைப்பு பற்றியும் அவர்கள் ஓரளவு தெரிந்துவைத்திருக்கிறார்கள். அதனால் ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கும் ஆடைகளை தேர்ந்தெடுப்பதில் ஆர்வம்காட்டாமல், தங்களுக்கு பிடித்த வடிவமைப்பாளர்களிடம் சென்று தங்களுக்கு பிடித்ததுபோன்ற உடைகளை வடிவமைக்கச்செய்து அணிகிறார்கள். அதனால் தற்போது சிறந்த ஆடை வடிவமைப்பாளர்களுக்கு மவுசு அதிகரித்திருக்கிறது. அதை தொடர்ந்து பேஷன் டிசைனிங் கல்வியை கற்பதிலும் பெண்கள் அதிக ஆர்வம் காட்டிவருகிறார்கள்.

பேஷன் டிசைனிங் கல்வி கற்றவர்கள் திரைப்படத் துறையிலும் கால்பதித்து சாதனை படைத்து வருகிறார்கள். சினிமாக்களில் நடிகர், நடிகைகளுக்கு உடை அலங்காரம் செய்யும் இவர்கள், நடிகர்-நடிகைகளுக்கு தனிப்பட்டமுறையிலும் உடைகளை வடிவமைத்துக்கொடுக்கிறார்கள். பிரபலமான நடிகைகள் அனைவருமே தங்களுக்கென்று தனியாக ஆடை வடிவமைப்பாளர்களை நியமித்திருக்கிறார்கள். அவர்கள் அந்த நடிகை களுக்கு நிகழ்ச்சிக்குதக்கபடி, கலந்துகொள்ளும் விழாக்களுக்கு தக்கபடி புதிதுபுதிதாக உடைகளை வடிவமைத்து வழங்குகிறார்கள். அவைகளை அணிந்து பொதுநிகழ்ச்சிகளில் நடிகைகள் ஜொலிக்கிறார்கள். சமூக வலைத்தளங்களிலும் அவர்களது உடை அலங்காரம் பாராட்டுக்களை குவிக்கிறது.

நூல்களில் தயார்செய்வதுதான் ஆடை என்றாலும், இப்போது வேறு பல பொருட்களில் இருந்தும் ஆடைகள் தயார் செய்யப்படுகின்றன. மூங்கில், வாழை நார் போன்றவைகளில் இருந்தும், மூலிகைகளை பயன்படு்த்தியும் ஆடைகள் தயார்செய்கிறார்கள். அந்த வரிசையில் கன்னட திரையுலக ஆடை வடிவமைப்பாளர் லட்சுமி கிருஷ்ணா காகிதத்தில் ஆடை வடிவமைக்கிறார். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பதுபோல் சிறந்த கலைஞனுக்கு காகிதமும் (ஆடை) ஆயுதம் என்று நிரூபித்துக்கொண்டிருக்கிறார். இவர் தனது கலைத்திறனால் செய்தித்தாள்களை பயன்படுத்தி கவுன்(மெட்-காலா) தயாரித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

நவீன ஆடை வடிவமைப்பாளர் லட்சுமி கிருஷ்ணா நம்மோடு பகிர்ந்துகொண்டவை:

``நான் கர்நாடக மாநிலம், பல்லாரி மாவட்டம் ஒசப்பேட்டையில் பிறந்தேன். எனது பெற்றோர் பாண்டுரங்கா- அனுராதா. இருவரும் டாக்டர்கள். அவர்கள் டாக்டர் அல்லது என்ஜினீயரிங் படிப்பை தேர்ந்தெடுக்கும்படி என்னிடம் கூறினார்கள். நான் பள்ளிப்படிப்பை முடித்ததும் கம்ப்யூட்டர் என்ஜினீயரிங்கை தேர்வுசெய்தேன். பின்பு எம்.பி.ஏ. படித்தேன். படித்து முடித்து இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளில் பணியாற்றிவிட்டு பெங்களூரு திரும்பினேன்.

எனது கணவர் பெயர் கிருஷ்ணகாந்த். மகன் வியான் கிருஷ்ணா. திருமணத்துக்கு பிறகு லண்டன் சென்றேன். அங்குதான் பேஷன் டிசைனிங் கல்வியை கற்றேன். சிறுவயதில் இருந்தே எனக்கு அழகுணர்ச்சி அதிகம் உண்டு. விதவிதமாக உடைகள் உடுத்துவேன். என்னை நானே நன்றாக அலங்காரம்செய்துகொள்ளவும் செய்வேன். நான் தேர்ந்தெடுத்துக்கொடுக்கும் ஆடைகள் பொருத்தமாக இருப்பதாகக்கூறி தோழிகள் பாராட்டுவார்கள். அவர்களுக்கு ஆடைகளை நேர்த்தியாக அணியவும் சொல்லிக்கொடுப்பேன். அடுத்து விளம்பர படங்களுக்காக ஆடை வடிவமைப்பு, நகைகளை தேர்வுசெய்தேன்.

ஆடை வடிவமைப்பாளராக திரைப்பட துறைக்குள் நுழைய வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்ததில்லை. காலத்துக்கு ஏற்ப ஆடையில் என்னென்ன மாற்றங்கள் உருவாகிக்கொண்டிருக்கின்றன என்பதை பற்றி மக்களிடம் எடுத்துச்சொல்லவேண்டும் என்பதே என் ஆசையாக இருந்தது. ஆடை நாகரிகத்தில் விழிப்புணர்வை நான் உருவாக்கிக்கொண்டிருந்தபோது நடிகை ரூபா நடராஜனுடன் எனக்கு நட்பு ஏற்பட்டது. அந்த நட்புதான் என்னை திரை உலகத்திற்குள் அழைத்துச் சென்றது.

நான் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய முதல் படம் ‘லிசா’. ‘விசித்திர பிரேமா கதே’, ‘நமோ’, ‘கிப்ட்பாக்ஸ்’, ‘ரங்கநாயகி’ ஆகிய கன்னட திரைப் படங்கள் குறிப்பிடத்தக்கவை. இரண்டு வருடத்தில் 10 சினிமாக்களுக்கும், இரண்டு குறும்படங்களுக்கும், டெலிவிஷன் தொடர்களிலும் ஆடை வடிவமைப்பு பணியை செய்துள்ளேன்.

திரைப்படத்தில் நடிப்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரத்துக்கு அவர்கள் அணியும் ஆடை முக்கிய பங்காற்றுகிறது. இதனால் படங்களில் பணியாற்றும்போது நான் அந்த கதாபாத்திரமாகவே மாறி விடுவேன். அப்போதுதான் அந்த கதாபாத்திரத்துக்கான உணர்வுகள், சூழல் ஆகியவற்றை முழுமையாக புரிந்து கொண்டு அதற்கான உடைகளை வடிவமைத்து வழங்க முடியும்.

ஒரு கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுக்கும் நடிகை கறுப்பா, சிவப்பா என்று நாங்கள் பார்ப்பது இல்லை. எந்த வகையான ஆடைகள் அணிந்தால் அவர் அந்த கதாபாத்திரத்துக்கு தத்ரூபமாக பொருந்துவார் என்பதுதான் எங்கள் சிந்தையில் இருக்கும். அதுதான் ஆடையாக உருவாகும். அவரது சருமம் எந்த நிறம் என்று பார்ப்போம். அதற்கு ஏற்ப வடிவமைக்கப்படும் உடைகளே அவருக்கு நேர்த்தியையும் சேர்த்து தரும்.

ஆடை வடிவமைப்பு துறையில் நான் தனித்துவத்துடன் திகழ விரும்புகிறேன். அந்த தனித்துவத்திற்காக ஒவ்வொரு நாளும் சிந்திக்கிறேன், செயல்படுகிறேன். நமது படைப்பில் தனித்துவம் தெரிந்தால்தான் நம்மை பலரும் தேடிவருவார்கள். இதற்காக கண்ணாடி களை பயன்படுத்தி மிளிரும் ஆடை, தாமரை வடிவிலான உடை, திருமணத்தின் போது அணியும் வெவ்வேறு வடிவிலான வண்ண வண்ண கவுன்கள், செய்தித்தாள்களை பயன்படுத்தி தயாரித்த ‘கவுன்’, ஆடைகளின் வண்ணத்துக்கு ஏற்ப மரக்கிளைகளை பயன்படுத்தி தலைகிரீடம் தயாரித்தது உள்ளிட்டவை என்னுடைய தனித்துவ படைப்பு களாகும். 200 செய்தித்தாள் பக்கங்களை பயன்படுத்தி ‘கவுன்’ தயாரிக்க 2 மாதங்கள் எடுத்து கொண்டேன்.

நாம் ஒரு செயலை விரும்பி செய்யும்போது அதற்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்க வேண்டும். அங்கீகாரம்தான் மகிழ்ச்சி அளிக்கும். எனது பணியை சிறப்பாக செய்ததற்கான அங்கீகாரமாகத்தான் விருதை கருதுகிறேன். நான் கர்நாடக பெண் சாதனையாளர் விருது பெற்றுள்ளேன். தனியார் தொலைக்காட்சி சார்பில் சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான விருதுக்கு தேர்வாகி உள்ளேன். அடுத்தமாதம்(அக்டோபர்) அந்த விருதினை பெறஉள்ளேன்.

நான் முறையாக பரதநாட்டியம் கற்று தேர்ந்துள்ளேன். முகபாவனையை வெளிப்படுத்தி நடிப்பதிலும் தங்கப்பதக்கம் வென்றுள்ளேன். தமிழ் படத்தில் ஆடை வடிவமைப்பிற்கு வாய்ப்பு கிடைத்தால் ஏற்றுக்கொள்வேன். அதன் மூலம் புதிய கலாசாரத்தை கற்றுக்கொள்வேன். நிறைய அனுபவங்களும் எனக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

எனது கணவர் கிருஷ்ணகாந்த் எனக்கு மிகுந்த ஊக்கம்தருகிறார். அவருடைய உந்துதலில் தான் நான் திரைப்படத்துறையில் பணியாற்றி வருகிறேன். எனது மாமனார், மாமியாரும் என்னை உற்சாகப்படுத்துகிறார்கள். தொடக்கத்தில் எனக்கு ஆதரவு வழங்காத என் பெற்றோரும் தற்போது எனக்கு உற்சாகம் தரு கிறார்கள்.

சிறுவயதில், எதிர்காலத்தில் விமானப் பணிப்பெண்ணாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அது எனக்கு கற்பனை வளத்தை உருவாக்கியிருந்தது. என் சிந்தனையையும் உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றது. அதுபோலவே ஆடை வடிவமைப்பு துறையும் என் கற்பனை சிறகுகளை விரியச்செய்தது. அதுதான் நான் இந்த துறைக்கு வரவும் காரணமாகிவிட்டது. இந்த துறைக்கு நிறைய இளம்பெண்கள் வரவேண்டும். இந்த துறையில் நிறைய அற்புதங்களை பெண்களால் செய்யமுடியும். ஆடை வடிவமைப்புத்துறைக்கு வரும் பெண்கள் ஒன்றை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். நீங்கள் வடிவமைக்கும் ஆடைகளை இலவசமாக கொடுத்துவிடாதீர்கள். உரிய விலைக்கு வழங்குங்கள். உங்கள் பல நாள் உழைப்பிற்குரிய பலன் எப்போதும் கிடைக்கவேண்டும்''

Next Story