அரசின் சலுகைகள் -விளைபொருட்களுக்கு நல்ல விலை இயற்கை விவசாயத்துக்கு திரும்பும் விவசாயிகள்


அரசின் சலுகைகள் -விளைபொருட்களுக்கு நல்ல விலை இயற்கை விவசாயத்துக்கு திரும்பும் விவசாயிகள்
x
தினத்தந்தி 23 Sep 2019 7:18 AM GMT (Updated: 23 Sep 2019 7:18 AM GMT)

பாரம்பரிய விவசாயத்தை நஞ்சில்லா இயற்கை விவசாயத்தை மீண்டும் தழைத்தோங்க வைக்க நமது அரசு பல்வேறு திட்டங்கள் தீட்டி விவசாயிகளுக்கு மானியங்கள், சலுகைகள் ஆகியவற்றை தருகிறது.

எப்படியாவது நாம் மீண்டும் பாரம்பரிய இயற்கை விவசாயத்திற்கு திரும்ப மாட்டோமா? என்ற ஆதங்கங்கள் இன்று அனைத்து தரப்பு மக்களிடமும் மேலோங்கி உள்ளது.

அந்த அளவுக்கு நஞ்சாகிப் போனது நவீன விவசாயம். நஞ்சானது மட்டுமல்ல, அதீத செலவையும் தந்து விவசாயிகளை என்றென்றும் கடனாளியாகவும் தவிக்கவிட்டுள்ளது நவீன விவசாயம்.

செலவில்லாத இயற்கை விவசாயம்

தற்போது இயற்கை வேளாண்மை விளைபொருட்கள் எனப்படும் ‘ஆர்கானிக்’ பொருட்கள் கடைகளில் அதிகமான விலை வைத்து விற்கப்படுகின்றன. ஆனால் உண்மையில் இயற்கை வேளாண்மை என்பது செலவில்லாதது. வெளியில் இருந்து அதிக விலை கொடுத்து ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி, பயிர் ஊக்கி... என எதுவுமே தருவிக்க அவசியமற்றது.

அது இலை, தழை, மாட்டுச்சாணம், ஆட்டுப்புழுக்கை, காய்கறிகழிவுகள் ஆகிய இருக்கும் பொருட்களை கொண்டும் இயற்கையை நம்பியும் செய்யப்படுவதாகும். ஆயினும் இன்று ஏன் அதிக விலை வைக்கப்படுகிறது என்றால், அது கிடைத்ததற்கரியதாக ஆகிவிட்டது தான் காரணமாகும். பசுமை புரட்சி என்ற பகாசூர உற்பத்தி முயற்சியில் நாம் காலப்போக்கில் நம் இயற்கை வேளாண்மையை தொலைத்து விட்டோம்.

தேவைப்படும் அளவுக்கேற்ற உற்பத்தி இல்லாத நிலையில் சந்தையானது சாதாரண பொருட்களின் விலையை அசாதாரணமானதாக்கி விடுகிறது. ‘ஜெர்சி’ இன மாட்டின் பால் லிட்டர் ரூ.40 என்றும், நாட்டு மாட்டின் பால் ரூ.80 என்பதை போல ரசாயனம், மருந்து போட்டு உற்பத்தியாகி சந்தையில் கிடைக்கும் அரிசி கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை விற்கப்படுகிறது என்றால் இயற்கை வேளாண்மை அரிசி ரூ.80 முதல் ரூ.100 வரை அல்லது அதற்கும் அதிகமாகக் கூட விற்கப்படுகிறது.

பெருகும் நோய்கள்; திரும்பும் கவனம்

ரசாயன உரம், ஆபத்தான பூச்சி கொல்லி மருந்துகளால் உருவான வேளாண்மை விளை பொருட்களில் நிச்சயம் ‘ஆர்கனோ குளோரின்’ மற்றும் ‘ஆர்கனோ பாஸ்பேட்’ இருக்கும். இவற்றை உட்கொள்வதால் தொற்றும் தன்மையற்ற நோய்களான புற்றுநோய்கள், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், பக்கவாதம், மாரடைப்பு, ஆண்மை குறைவு உள்ளிட்ட ஏராளமான நோய்களை விலை கொடுத்து வாங்கி உள்ளோம்.

“பயிர்களில் களை வராமல் இருக்க பயன்படுத்தும் ‘கிளைபோசேட்’ என்ற களை கொல்லிகளால் கர்ப்பிணி பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படும். மேலும் இது பெண்களுக்கு கரு உருவாவதையே தடுத்துவிடும்” என்கிறார் இயற்கை விவசாயியும், மருத்துவருமான தஞ்சை கோ.சித்தர்.

சமீப காலமாக உணவே நஞ்சாகி வருகிறது என்ற புரிதல் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் என்ன செய்வது? இயற்கை விளைபொருட்கள் விலையோ சாதாரண மக்களுக்கு எட்டாக்கனியாகிவிட்டதே!

“ஆகா நல்ல விலை கிடைக்கிறதே” என்று விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாறலாம் என்றால், இருக்கும் நிலம் ரசாயன உரப் பயன்பாட்டால் பாழ்பட்டுவிட்டதால் உடனே மாறுவதும் சாத்தியமற்றதாகி, விவசாயிகள் நிலை தடுமாறுகிறார்கள்!

கை கொடுக்கிறது மத்திய அரசு

தற்போது இயற்கை விவசாயத்திற்கு திரும்பும் விவசாயிகளுக்கு மத்திய அரசு ஏராளமான உதவிகள், மானியங்கள் தந்து ஊக்குவிக்கிறது. ஏனெனில் ஏற்கனவே பாழ்பட்ட நிலத்தை இயற்கை விவசாயத்திற்கு ஏற்ப பண்படுத்துவதற்கு கொஞ்சம் காலகட்டம் தேவைப்படும். ‘பாரம்பரகட் கிரிஷி யோஜனா’ என்ற திட்டத்தின் மூலமாக 2015-ம் ஆண்டு முதல் இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவோருக்கு உதவும் திட்டம் வகுக்கப்பட்டது.

அதன்படி விவசாயிகள் முதலில் ஒரு குழுவை உருவாக்க வேண்டும். அதில் ஒன்று முதல் ஐந்து ஏக்கர் நிலமுள்ள விவசாயிகள் குறைந்த பட்சம் 10 பேராவது சேரவேண்டும். அந்தக்குழுவிடம் குறைந்தது ஐம்பது ஏக்கர் நிலம் இருக்க வேண்டும். அந்த குழுவிற்கு 3 ஆண்டுகளில் ரூ.14.95 லட்சம் மானியமாக தரப்படுகிறது.

இதில் தனிப்பட்ட வகையில் ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு முதலாம் ஆண்டு ரூ.4,858. 2-ம் ஆண்டு ரூ.4,000, 3-ம் ஆண்டு ரூ.3,644 மானியமாக வழங்கப்படுகிறது. இந்தக்குழுவிற்கு ‘ஸ்கோப்’ எனப்படும் இயற்கை விளைபொருட்களுக்கான சான்றிதழும் தரப்படுகிறது. குறிப்பாக இதில் சிறுதானிய பயிர்கள், பாரம்பரிய நெல் ரகங்கள் பயிரிட ஊக்குவிக்கப்படுகிறது.

ஒட்டு ரக பயிர்கள், வீரிய ரக விதைகள், விபரீத விளைவுகள்

1950-1960-ம் ஆண்டுகளில் உணவு பற்றாக்குறை நமது நாட்டில் ஏற்பட்டது. அன்று அரிசியும், கோதுமையும் அரிய பொருட்களாகி போயின. ‘ரேஷன்’ எனப்படும் பொது வினியோக முறை அறிமுகப்படுத்தப்பட்டு குறிப்பிட்ட அளவுகள் பகிர்ந்து தந்து சமாளிக்கப்பட்டது.

1960-களின் தொடக்கத்தில் உணவு பற்றாக்குறையை சமாளிக்க அன்றைய நிதி மந்திரி சி.சுப்பிரமணியம், அமெரிக்க அதிபர் லிண்டன் ஜான்சனை சந்தித்து உதவி கோரினார்.

இதைத்தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து பி.எல்.480 என்ற கப்பலில் ஒரு கோடி டன் கோதுமை இந்தியாவுக்கு அனுப்பப்பட்டது. “இனியும் இது போல அன்னிய நாட்டிடம் நாம் கையேந்தக்கூடாது” என்ற எண்ணம் நமக்கு வலுப்பட்டது. அதே சமயம் உதவி செய்ததன் மூலம் அமெரிக்கா அதீத உரிமை எடுத்து சில விஷயங்களை நம்மிடம் திணித்தது.

இதன்படி நார்மன் போலக் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட குட்டை ரக கோதுமையை மெக்சிகோவில் இருந்து 25 லட்சம் டாலர் செலவில் 1,800 டன்கள் முதல் தவணையாக இந்தியா இறக்குமதி செய்தது. அதே போல பிலிப்பைன்ஸ் சர்வதேச நெல் நிறுவனத்தின் கலப்பின நெல் ரகங்களான ‘ஐ.ஆர்-8’, ‘ஐ.ஆர்-20’ ஆகியவை நம்மிடம் திணிக்கப்பட்டது.

இந்த வீரிய ரக பயிர்கள் மூன்றே ஆண்டுகளில் நமது இந்திய நிலப்பரப்பின் பாதிப்பகுதியை ஆக்கிரமித்த அதிசயமும் நடந்தேறியது. அடுத்த பத்தாண்டுகளில் சத்து மிகுந்த நமது பாரம்பரிய உணவுப்பொருட்களை சந்தையில் பார்க்க முடியாத நிலைமை உருவாகிவிட்டது. எங்கெங்கும் ஒட்டு ரக, வீரிய ரக பயிர்களின் உணவுப்பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டன.

1960-களில் 6 லட்சம் ஹெக்டேரில் விளைந்த சிறுதானியங்கள் உள்ளிட்ட பாரம்பரிய பயிர்களின் நிலப்பரப்பளவு தற்போது 2.50 லட்சம் ஹெக்டேரில் மட்டுமே நடக்கிறது. ஒட்டு ரக, வீரிய ரக பயிர்கள் யாவும் நன்றாக ரசாயன உரங்களை தாங்கும் பயிர்கள் என சொல்லி ரசாயன உரங்களையும் இறக்குமதி செய்தனர்.

இதன் மூலம் இரண்டாம் உலகப்போரின் முடிவாக தங்களிடம் மிகுதியாக தேங்கிவிட்ட வெடி மருந்துகளை உரங்களாக நமக்கு அறிமுகப்படுத்தி நம் தலையில் கட்டிவிட்டார்கள். ரசாயன உரங்களை பயன்படுத்த தொடங்கியது முதல் நமது நிலத்தின் இயற்கையான தன்மை அழிந்தது.

எந்த ஒரு மண்ணின் சிறப்பும் அதில் உயிர்த்திருக்கும் நுண்ணுயிர்கள் மற்றும் மண் புழுக்களை பொறுத்தது. ஆனால் ரசாயன உரங்களோ இந்த நுண்ணுயிர்கள், மண் புழுக்களை முற்றிலும் இல்லாது அழித்துவிடுவதால் மண்ணே மலடாகிவிடுகிறது. இதன் மூலம் விளைச்சலும் படிப்படியாக வீழ்ச்சியடைந்து ஒரு கட்டத்தில் நிலம் கெட்டித்தட்டிப் போய் தரிசாகிவிடுகிறது.

தங்க சம்பா விளைந்த நிலம், தரிசான அவலம்

இந்த வகையில் இந்தியாவில் 50 மில்லியன் ஹெக்டேர் நிலங்கள் தரிசு நிலங்களாகிவிட்டன. தற்போது சாகுபடியில் உள்ள 266 மில்லியன் ஹெக்டேர் நிலத்தில் 175 மில்லியன் ஹெக்டேர் நிலங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி மெல்ல, மெல்ல உயிர்ப்பிழந்து வருகின்றன. ஆண்டு தோறும் 30 லட்சம் ஏக்கர் நிலங்கள் இந்தியாவில் தரிசாகி வருகின்றன.

இதில் தமிழகத்தில் 40 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் கடந்த 50 ஆண்டுகளில் தரிசாகி விட்டன. இப்படியே தொடர்ந்து ரசாயன உரப்பயன்பாடு தொடருமெனில் இன்னும் 50 ஆண்டுகளில் இந்தியா விவசாயத்திற்கே அருகதையற்ற நாடாகிவிடுமோ! என்ற கவலை எழுந்துள்ளது. “மாடுகட்டிப் போரடித்தால் மாளாது என்று ஆனைகட்டி போரடித்த தமிழ்நிலத்தை பாழ்படுத்திவிட்டோமே! என்ற குற்ற உணர்வு மேலோங்கியுள்ளது.

அதிகரித்த ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள்

ஐம்பது, அறுபது வருடத்திற்கு முன்பு நமது நாடு முழுமையுமே இயற்கை விவசாயத்தில் தான் இருந்தது. அப்போது ரசாயன உரங்கள், ஆபத்தான பூச்சிக்கொல்லி மருந்துகள் என்றால் என்னவென்றே நம் விவசாயிகளுக்கு தெரியாது. ஆனால், தற்போது இவை தவிர்த்த விவசாயமே என்னவென்று தெரியாத நிலைமை உருவாகிவிட்டது. அந்த அளவுக்கு அதீத ரசாயனப் பயன்பாடு விவசாயத்தில் வேரூன்றிவிட்டது.

தற்போதைய நிலவரப்படி நமது நாட்டில் ஆண்டு ஒன்றிற்கு யூரியா மட்டுமே 310 லட்சம் டன்கள் இறக்குமதியாகிறது. இது தவிர பாஸ்பேட் 110 லட்சம் டன்களும், என்.பி.கே. மற்றும் முரியேட் ஆப் பொட்டாசியம் உள்ளிட்டவை சுமார் 100 லட்சம் டன்களும் இறக்குமதியாகிறது.

அதே போல பூச்சிக்கொல்லிகளைப் பொறுத்தவரை 1958-ல் தான் அறிமுகமானது. அப்போது அவ்வளவு ஆபத்தில்லாத பி.எச்.சி., டி.டி.டீ. ஆகியவை மட்டுமே அதுவும் வெறும் 5,000 டன்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. ஆனால் காலப்போக்கில் ரசாயன உரங்களால் புதிய, புதிய பூச்சிகள் பெருகியதால் அவற்றை கட்டுப்படுத்த அதிக மருந்துகள் தேவைப்பட்டன.

அதன் விளைவு 1998-ல் நமது பூச்சிக்கொல்லி மருந்தின் தேவை 1.2 லட்சம் டன்களாக அதிகரித்தது. 2018-ல் இது விஸ்வரூபமெடுத்து நமது பூச்சிக்கொல்லிகள் மருந்து பயன்பாடு 7.8 லட்சம் டன்களாகி விட்டது. இதனால் நாம் உண்ணும் உணவே நஞ்சுள்ளதாகிவிட்டது. தற்போது 234 வகையான பூச்சிக்கொல்லிகள் விவசாய பயன்பாட்டில் உள்ளன.

அதிலும் வெளிநாட்டில் தடை செய்யப்பட்ட 18 வகையான கிளாஸ் 1, கிளாஸ் 1-ஏ கிளாஸ் 1-பி ஆகியவற்றை இந்திய விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றர். இந்த மருந்துகள் சமயங்களில் விவசாயிகளின் உயிரை பறித்துவிடுகின்றன. வாந்தி, மயக்கம், கண் எரிச்சல், தலைவலி, தோல் அரிப்பு போன்ற எண்ணற்ற பிரச்சினைகளை இன்று விவசாயிகள் அன்றாடம் சந்திக்கின்றனர்.

இந்த ஆபத்தான உரங்கள், மருந்துகளால் விவசாயம் என்பது மண் மீது நடத்தும் போராகிப்போனது. நலம் தந்த உணவுகள் நஞ்சாகிப் போனது. பல தலைமுறைகளுக்கு, நமக்கு சோறு தந்த பூமியை நாம் குற்றுயிரும், குலை உயிருமாய் சிதைத்துவிட்டோம்.

உஷாரான உலக நாடுகள்

“இயற்கை அழிந்து வருகிறதே” என்ற கவலை இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுமையும் ரசாயன உரங்களை பயன்படுத்தும் நாடுகள் அனைத்திலுமே தோன்றியுள்ளது. இதையடுத்துத் தான் 2000-ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து மீண்டும் உலகம் இயற்கை விவசாயத்திற்கு திரும்பிக்கொண்டுள்ளது.

உலக அளவில் இன்று மொத்தம் 7 கோடி ஏக்கர் நிலம் இயற்கை விவசாயத்திற்கு திரும்பியுள்ளது. உலகில் 30 லட்சம் விவசாயிகள் இயற்கை விவசாய களத்தில் செயல்பட்டு வருகின்றனர்.

எந்த மேற்கத்திய நாடுகள் நம் மீது ரசாயன உரத்தை திணித்தார்களோ அந்த நாடுகள் எல்லாம் கூட தற்போது மீண்டும் இயற்கை விவசாயத்திற்கு வேகமாக மாறி வருகின்றன.

நிலப்பரப்பின் அடிப்படையில் முதல் மூன்று நாடுகளாக ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, அமெரிக்கா ஆகியவை இயற்கை விவசாயத்தில் முன்னிலை வகிக்கின்றன. ஆனால் எண்ணிக்கை அடிப்படையில் இயற்கை விவசாயத்தில் அதிகமான சிறுவிவசாயிகளை கொண்ட நாடுகளாக இந்தியா, எத்தியோப்பியா, மெக்சிகோ ஆகியவை திகழ்கின்றன.

இன்றைய இந்தியாவில் இயற்கை விவசாயம்

கடந்த இருபதாண்டுகளாக தான் இயற்கை விவசாயத்தின் மீதான கவனம் அதிகரித்த வண்ணம் உள்ளது. வட இந்தியாவில் சுபாஷ் பாலேக்கர், தென் இந்தியாவில் நம்மாழ்வார் போன்றோரின் இடைவிடாத பிரசாரத்தாலும், உழைப்பாலும் இன்று இயற்கை விவசாயம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

2003-ம் ஆண்டில் இந்தியாவில் வெறும் 73,000 ஹெக்டேர் நிலங்கள் தான் இயற்கை விவசாய சான்றிதழ் பெற்ற நிலங்களாக இருந்தன. தற்போது இவை 15 லட்சம் ஹெக்டேர் நிலங்களாகக் கூடியுள்ளது. அப்போது 2 லட்சம் விவசாயிகளே இயற்கை விவசாயத்தை செய்து வந்தனர். தற்போது 8,35,200 விவசாயிகள் இயற்கை விவசாய களத்தில் உள்ளனர்.

சிக்கிம் மாநிலம் 100 சதவீத இயற்கை விவசாயத்திற்கு மாறிவிட்டது. இதையடுத்து மத்தியபிரதேசம், மராட்டியம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் முதல் 3 இடங்களில் உள்ளன. மத்தியபிரதேசம் இந்தியாவின் இயற்கை விவசாயத்தில் 46,413 ஹெக்டேர் கொண்டுள்ளது. மராட்டியம் 20,012 ஹெக்டேர் கொண்டுள்ளது.

உத்தரகாண்ட் 19,572 ஹெக்டேர் கொண்டுள்ளது. கேரளம், மிசோரம், கோவா, ராஜஸ்தான், மேகாலயா, சத்தீஷ்கார், குஜராத் ஆகிய மாநிலங்கள் தாங்கள் விரைவில் இயற்கை விவசாயத்திற்கு முழுமையாக மாற உள்ளதாக அறிவித்துள்ளன.

ஆனால் தமிழகமோ 12,675 ஹெக்டேர் ஆர்கானிக் சான்றிதழ் நிலப்பரப்பை கொண்டுள்ளது. ஆனால் ஆர்கானிக் சான்றிதழ் பெறாமல் இயற்கை விவசாயத்தில் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் சுமார் 10,000 விவசாயிகள் இயற்கை விவசாய களத்தில் உள்ளனர்.

இயற்கை வேளாண் பொருட்களுக்கான சந்தை வாய்ப்பு

‘ஆர்கானிக்’ எனப்படும் இயற்கை வேளாண் விளைபொருட்களுக்கான சந்தை உலக அளவில் தற்போது 97 பில்லியன் டாலர்களாக உள்ளது. அந்த வகையில் இந்தியா 2017-18 நிதியாண்டின் படி 1.7 மில்லியன் டன்கள் சான்றிதழ் பெற்ற ‘ஆர்கானிக்’ பொருட்களை உற்பத்தி செய்தது.

சான்றிதழ் பெறாத வகையில் ஏராளமான சிறு, குறு விவசாயிகள் இன்னும் அதிகமாக உற்பத்தி செய்து தங்கள் குடும்ப பயன்பாட்டிற்கும், வழக்கமான வாடிக்கையாளர்களுக்கும் தந்து வருகின்றனர். ஏற்றுமதி என்ற வகையில் ரூ.3,453 கோடி மதிப்புள்ள 4,58,000 டன்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த தகவல் இயற்கை விவசாயத்திற்கு நாளும் பெருகி வரும் வரவேற்பைக் காட்டுவதாக உள்ளது.

Next Story