மனிதனை உயர வைத்த அளவைகள்


மனிதனை உயர வைத்த அளவைகள்
x
தினத்தந்தி 11 Oct 2019 11:44 AM GMT (Updated: 11 Oct 2019 11:44 AM GMT)

நீங்கள் உங்கள் நண்பனைவிட உயரமானவரா? என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? ஆம், நான்தான் உயரம். அவன் எனது தோள் உயரத்திற்குத்தான் இருப்பான், எனது உயரம் இவ்வளவு அடி, சென்டிமீட்டர் என்று சொல்லிவிடுவீர்கள் இல்லையா?

நீளம், உயரம், எடை ஆகியவற்றை அளவிடும் அளவீட்டு கருவிகளை உருவாக்கியது மனித குல வளர்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் உதவியது. இந்த அளவீட்டு கருவிகள் பற்றிய சுவையான தகவல்களை இந்த வாரம் தெரிந்து கொள்வோமா?

* உலகம் முழுவதும் பலவித அளவீட்டு முறைகள் உள்ளன. அங்குலம், அடி, மீட்டர், அவுன்ஸ், பவுண்டு, கிலோ, லிட்டர், கேலன் என அவை வேறுபடுகிறது. இதை சரிசெய்து, உலகம் முழுவதும் ஒரேவிதமான பொது அளவை முறைகளை கொண்டு வருவதற்கு உலகத் தர நிர்ணய அமைப்பு (ஐ.எஸ்.ஓ.) உருவாக்கப்பட்டது.

* உங்கள் கைகளை அளவீட்டு கருவியாக பயன்படுத்த முடியும் தெரியுமா? எனது நாய் 8 கை அளவு உயரமுடையது என்று சொல்லலாம். எப்போதும் ஒரே அளவுடையதாக இருக்கும் பொருட்களை அளவீட்டு கருவியாக பயன்படுத்தலாம். அப்படி உருவாக்கப்பட்டவைதான் அளவீட்டு கருவிகள் அனைத்தும். சோளவிதை, சிப்பி என பல்வேறு பொருட்களையும் எடை அளவீட்டு பொருட்களாகப் பயன்படுத்தலாம். 10 சோப்புக் கட்டிகள் சேர்ந்து ஒருகிலோ எடை இருக்குமானால், எடைக்கல் இல்லாதபோது அந்த சோப்புக்கட்டிகளை எடைக்கல் போல பயன்படுத்தலாம். பக்கத்து கடைக்கார மாமா, சில நேரங்களில் சிறிய எடைக்கல்லை தேட முடியாவிட்டால் அதற்குப்பதிலாக அதே எடையுள்ள ஒரு பொருளையோ, பாக்கெட்டையோ தராசில் எடைக்கல்லுக்குப் பதிலாக வைத்து அளவிடுவதை நீங்கள் பார்த்திருக்கலாம்.

* தெர்மாமீட்டர் என்பது வெப்பத்தை அளவிடும் கருவியாகும். அமெரிக்காவில் பாரன்ஹீட் அளவையில் வெப்பம் அளவிடப்படுகிறது. பெரும்பாலான இடங்களில் செல்சியஸ் அளவை முறையில் வெப்பநிலை அளவிடப்படுகிறது. தெர்மாமீட்டரைக் கொண்டு குளிர்ச்சியையும் அளவிடுவது உண்டு.

* எடையும், நிறையும் ஒன்றல்ல. எடை எண்பது கிலோ அல்லது பவுண்டு போன்ற அலகுகளால் குறிக்கப்படுகிறது. நிறை என்பது ஒரு பருப்பொருள் உள்ளீடு அளவை குறிப்பிடுவதாகும். நிறை என்பது ‘ஆட்டம்ஸ்’ எனும் அளவால் குறிக்கப்படுகிறது.

* நீளம் மற்றும் உயரம் போன்றவற்றை அளக்க அங்குலம் அல்லது அடி, மீட்டர் போன்ற அளவை முறைகள் பயன்படுத்தப்படுகிறது. பொருள், அறை ஆகியவற்றின் நீளம், அகலம் உயரத்தை இந்த அளவீடுகளால் குறிப்பிடுவோம்.

* கொள்ளளவு என்பது லிட்டர் மற்றும் கேலன் போன்ற அளவீட்டு முறைகளால் குறிக்கப்படுகிறது. பெட்ரோல், டீசல், பால் போன்றவை இந்த அளவை முறையில்தான் அளக்கப்படுகின்றன. ஒரு டப்பா எவ்வளவு கொள்ளளவு உடையது என்பதை அதில் நீரை ஊற்றி லிட்டர் அளவையில் அளந்து சொல்லிவிடலாம்.



நாம் இப்படி அளவிடுவதால் என்ன பயன்?

ஒரு பொருளை அளவிட்டு கொடுப்பது பொது பயன்பாட்டில் முக்கியமானதாகும். உயரத்தை அளந்து கட்டிடம் கட்டினால்தான் அது நமது பயன்பாட்டிற்கு ஏற்றதாக அமையும். சரியான அளவில் பால் அல்லது தண்ணீர் போன்ற பொருட்களை அளந்து கொடுப்பது விற்பனையில் வாடிக்கையாளர் மற்றும் விற்பனையாளருக்கு இழப்பில்லாமல் சரியான பலன் தருவதாக அமையும். உடல் வெப்பத்தை அளவிட்டால்தான் மருத்துவரால் சரியான அளவில் மருந்துகளை வழங்க முடியும்.

வீட்டில் அளவை முறைகளை பயன்படுத்துவது எப்படி?

வீட்டில் ‘ஸ்கேல், மீட்டர் டேப்’ போன்ற கருவிகள் கொண்டு அளவிடலாம். ஒருவேளை அவை இல்லாத சமயத்தில் மாறாத உயரமுள்ள ஒரு பொருளைக் கொண்டு ஒன்றை அளவிட்டுச் சொல்லலாம். உதாரணமாக 2 டம்ளர் அரிசியை அளந்து வேக வைத்தால் நமது குடும்பத்திற்கு போதுமானது என்று அம்மா அளந்து போடுவதை நீங்கள் கவனித்திருப்பீர்கள் இல்லையா? அதுபோல ஒரு நோட்டு புத்தகம், வெறும் கை போன்ற எந்த ஒரு பொருளையும் அளவுக் கருவியாக பயன்படுத்தலாம்.

* கடலில் தூரத்தை அளக்க மைல் என்ற அளவை பயன்படுகிறது. இதை நாட்டிக்கல் மைல் என்றும் குறிப்பிடுவார்கள். நிலத்தில் பயன்படுத்தும் மைல் அளவை முறைக்கும், இதற்கும் வேறுபாடு உண்டு. கடலில் ஒரு மைல் தூரம் என்பது 6 ஆயிரத்து 80 அடிகளை குறிக்கும். நிலத்தில் ஒரு மைல் தூரம் என்பது 5 ஆயிரத்து 280 அடி தூரத்தை குறிக்கும்.

* அளவை மற்றும் தரத்தை நிர்ணயம் செய்யும் ஐ.எஸ்.ஓ. அமைப்பு 1946-ல் அக்டோபர் 14-ந் தேதி 25 நாடுகள் இணைந்து உருவாக்கப்பட்டது. அந்த நாள் (அக்டோபர் 14) 1970 முதல் உலக தர தினமாக அங்கீகரிக்கப்படுகிறது.


Next Story