மோடியை வாழ்த்துவோம்! தமிழைப் போற்றுவோம்!


மோடியை வாழ்த்துவோம்! தமிழைப் போற்றுவோம்!
x
தினத்தந்தி 13 Oct 2019 6:32 AM GMT (Updated: 13 Oct 2019 6:32 AM GMT)

பொது நிகழ்ச்சிகளிலே தமிழை மிகுதியாகப் போற்றுவது நமது பிரதமர் மோடிக்கு மிகவும் விருப்பமான செயலாக விளங்குகிறது.

பொது நிகழ்ச்சிகளிலே தமிழை மிகுதியாகப் போற்றுவது நமது பிரதமர் மோடிக்கு மிகவும் விருப்பமான செயலாக விளங்குகிறது. “இந்திய மொழிகளிலேயே மூத்த மொழி தமிழ்” என இரு தருணங்களிலே குறிப்பிட்டுள்ளார். இந்திய நாடாளுமன்றத்தில், சுதந்திர நாளில் கொடியேற்றும் போது எனப் பல சூழல்களில் தமிழைப் பெருமைப்படுத்தியும், திருக்குறளிலிருந்து மேற்கோள் வழங்கியும் உரையாற்றியுள்ளார். எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தது போல உலக நாடுகள் ஒன்று கூடும் பேரவையாகிய ஐ.நா. சபையில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்னும் புறநானூற்றுப் பாடலை மேற்கோள் காட்டி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலக ஒருமைப்பாட்டுக்கு வழிகாட்டிய தமிழின் மேன்மையைக் கூறினார். இப்பாடலை இயற்றியவர் ‘கணியன் பூங்குன்றனார்’ என்னும் சங்கப் புலவர் என்னும் செய்தியையும் அவர் சுட்டிக் காட்டியது குறிப்பிடத்தக்கது.

மோடி தமிழின் மேன்மையைப் பல முறை குறிப்பிட்டுப் பாராட்டி வருவதில் வேறு எத்தகைய உள்நோக்கமும் தெரியவில்லை. தமிழின் மீது அவர் கொண்டுள்ள உண்மையான ஈடுபாடே இதற்குக் காரணம் எனலாம். ஏனெனில் அவர் தமிழைக் குறிப்பிடும் ஒவ்வொரு சூழலிலும் தலைப்புக்கும் இடத்துக்கும் பொருத்தமாகவே அவை அமைந்துள்ளதைக் காண்கிறோம். இந்திய பிரதமர்களிலேயே தமிழின் மீது தணியாத பேரன்பும், இணையில்லாத ஈடுபாடும் கொண்டு விளங்கும் மோடியை கட்சிப் பாகுபாடு கடந்து ஒவ்வொரு தமிழரும் பாராட்டவேண்டும்.

சீன அதிபரைச் சந்திக்கும் உயர்நிலைச் சந்திப்பைத் தமிழ்நாட்டில் அமைத்ததுடன் தமிழ்ப் பண்பாடு உணர்த்தும் கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ததும் மகிழ்வளிக்கின்றன. அத்துடன் நில்லாமல் வேட்டி, சட்டை அணிந்து தமிழ் உடையில் காட்சியளிக்கும் மோடி தமது சுட்டுரையை (டுவீட்) தமிழில் வெளியிட்டு வருவதும் அவருடைய தமிழ்ப்பற்றை வெளிப்படுத்துகின்றன. இந்த மகிழ்வான சூழலில் தமிழின் நிலை குறித்த சில பெருங் கவலைகளையும் வெளிப்படுத்த வேண்டியுள்ளது.

தமிழ்நாட்டில் தமிழில் பயில வழிவகுக்கும் அரசுப் பள்ளிகளும், அரசு உதவிபெறும் பள்ளிகளும் மெல்ல மெல்லக் குறைந்து வருகின்றன. தமிழ்வழிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி எட்டாக்கனியாய் ஆகிவிட்டது. மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் பொதுவான பட்டியலில் இருந்த கல்வி, இப்போது முழுமையும் மத்திய அரசின் தனியுடைமையாகிவிட்டது. தமிழ்க்கல்வி பொய்யாய்ப் பழங்கதையாய் மாறிவிட்டது.

தேசிய அளவில் புழக்கத்திற்கு வரும் எல்லா விண்ணப்பங்களிலும், விளம்பரங்களிலும் தமிழைக் காணமுடியாது. “எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு, நாம் எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு’ என்று பாடிய பாரதியார் இன்று இருந்தால் என்ன பாடியிருப்பார்?

‘எங்கும் இந்தி என்பதே பேச்சு, நாம் எல்லோரும் இந்திக்கு அடிமை என்னும் நிலையாச்சு’ என்று தானே பாடியிருப்பார்?

பாரதியார், பரிதிமாற்கலைஞர், மறைமலையடிகள் முதலான பல தமிழ்ச் சான்றோர்கள் கண்ட கனவு நனவாகித் தமிழ் செம்மொழி என்னும் தகுநிலை பெற்றது. இதற்குத் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியே காரணம் என்னும் உண்மையையும் மறைத்துவிடமுடியாது. ஆனால் இன்று நாம் காண்பது என்ன? 47 பேர் பணியாற்றவேண்டிய ஒரு பெரிய நிறுவனத்தில் ஏழு அலுவலர் மட்டுமே பணியில் இருக்கும் அளவு வீழ்ச்சியுற்றதன் காரணம் என்ன?ஆண்டுக்கு 12 கோடி ரூபாய் வழங்கி வந்த மத்திய அரசு, ஒரு சில லட்சங்கள் ஒப்புக்கு வழங்கிவருவதன் காரணம் என்ன? தமிழ்ப் பேராசிரியர் அமரவேண்டிய இயக்குநர் பதவியில் தமிழுக்கே தொடர்பு இல்லாத ஐ.ஐ.டி.பேராசிரியர் பொறுப்பேற்றிருப்பதன் மர்மம் என்ன?.

யாருமே பேசாத சமஸ்கிருத மொழிக்கு 13 பல்கலைக்கழகங்கள் உள்ளன. நூறு கோடி மத்திய அரசால் வழங்கப்படுகிறது. செம்மொழி நிறுவனத்திற்குப் பேராசிரியர் பதவிகளில் பணியமர்த்த மட்டும் என்ன தயக்கம்?

காதல், பாசம், பரிவு, நேசம் என எல்லாமே போற்றத் தகுந்தவைதான். குடும்பம் வலுவாக அமைய அவையே அடிப்படையாகும். ஆனால் அவற்றை வைத்துச் சோறு பொங்கமுடியுமா?.

பிரதமரின் தமிழ்ப்பற்றைத் தலைவணங்கி வாழ்த்துவோம். ஆனால் பாராட்டு மட்டுமே தமிழை வளர்த்துவிடாது என்னும் உண்மையை நினைவூட்டல் நமது கடமை. ஐ.நா. சபையில் தமிழை முழங்குவது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் அஞ்சல் அலுவலகத்திலோ, வங்கிகளிலோ, வருமானவரி அலுவலகத்திலோ தமிழைக் காணமுடியவில்லையே?.

கணினி வழியாக மொழி பெயர்ப்பது எளிமையாக்கப்பட்டுவிட்ட இக்காலத்தில் அந்த அந்த மாநிலத்தில் அந்த அந்த மாநிலமொழியில் மத்திய அரசு இயங்குமாறு செய்தால் மாநில மொழிகளின் மூலம் மக்கள் திறம்படத் தங்கள் பணிகளை முடித்துக்கொள்ளலாம். அனைத்து மாநில மொழிகளும் வளர்ச்சியடையும் அல்லவா?.

அத்தகைய சூழல் ஏற்பட்டால்தான் நாடு உண்மையிலேயே சுதந்திரத்தின் பயனை அடையும். நமது அன்புக்கும் வாழ்த்துக்கும் உரிய பிரதமர் இத்தகைய நிலை உருவாக ஆவன செய்யவேண்டும்.

பிரதமர் மோடியின் தமிழ்ப்பற்றை உளமாரப் பாராட்டுவோம். தமிழையும் அரசு அலுவலகங்களிலும், கல்விநிலையங்களிலும் இதுபோன்றே எல்லாத் துறைகளிலும் பயன்படுத்திப் போற்றுவோம்.

மறைமலை இலக்குவனார், சிறப்பு வருகைப் பேராசிரியர், கலிபோர்னியா பல்கலைக்கழகம், அமெரிக்கா.

Next Story