தலைமை ஏற்போம் வாருங்கள் : 29. நுண்ணியல் மேலாண்மை வெற்றிக்கு...


தலைமை ஏற்போம் வாருங்கள் : 29. நுண்ணியல் மேலாண்மை வெற்றிக்கு...
x
தினத்தந்தி 14 Oct 2019 7:03 AM GMT (Updated: 14 Oct 2019 7:03 AM GMT)

தலைமைப்பதவி வகிக்க விரும்புபவர்கள் முதலில், எத்தகைய தன்மைகொண்ட நிறுவனத்தில் தலைமைப்பதவி வகிக்க அவர்கள் விரும்புகிறார்கள் என்பதை முதலிலேயே தெளிவாகத் தெரிந்து கொள்வது நல்லது.

சில நிறுவனங்கள் முழுமையான சுதந்திரம் வழங்கி தலைவர்களை பணியாற்ற அனுமதிப்பார்கள். இந்தத் தலைவர்கள் அவர்களாகவே பல முடிவுகளை எடுத்துக்கொள்ள இயலும்.

ஆனால், இன்னும் சில நிறுவனங்கள் தலைவர்கள் தன்னிச்சையாக முடிவெடுக்க தலைவர்களை அனுமதிப்பதில்லை. எல்லா முடிவுகளையும் மேற்கொள்வதற்குமுன்பு, மேலிட அனுமதி வாங்கி அதன்பின்னர்தான், முடிவுகள் எடுக்க வேண்டும் என தலைவர் களுக்கு வழிகாட்டல்கள் வழங்கி இருப்பார்கள்.

வேறுசில நிறுவனங்கள், “சில முக்கிய முடிவுகளுக்கு மட்டும் மேலிட அனுமதி தேவை” என்பதை தலைவர்களுக்கு கோடிட்டுக்காட்டி தலைவர்களை தாராளமாக செயல்பட வைப்பார்கள்.

தலைவர்களாக பதவி ஏற்பதற்குமுன்பே நிறுவனங்களின் தன்மையை தெரிந்துகொண்டு, பின்னர் தலைமைப் பதவியை ஏற்றுக்கொள்வது நல்ல தலைவருக்கு அழகாகும்.

சில நிறுவனங்கள் ‘நுண்ணியல் மேலாண்மை’ (Micro Management) பாணியைப் பின்பற்றி நிர்வாகம் செய்கிறார்கள். மிக நெருக்கமான மேற்பார்வையோடு பணியாளர்களின் பணியை கண்காணிப்பது “நுண்ணியல் மேலாண்மை” (Micro Management) என அழைக்கப்படுகிறது.

சமீபத்தில் ராபர்ட் ஹர்லே (Robert Hurley) என்னும் ஆய்வியல் அறிஞர் நிகழ்த்திய ஆராய்ச்சியின் முடிவுகள் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன.

“சுமார் 30 முதல் 35 சதவீத செயல் தலைவர்கள் மேலாண்மைப் பணிகளை சிறப்பாக நிறைவேற்றி மேலாளர்களாக வெற்றி பெறு கிறார்கள். ஆனால், தலைமைத்துவம் தேவைப்படுகின்ற உயர்நிலைப்பதவிகளில் அவர்கள் தடுமாறுகிறார்கள். தலைமைத்துவப் பண்புகள் இல்லாமல் அவர்கள் இருப்பதால், சாதாரண மேலாளராகவே திகழ்கிறார்கள்” என்பது அந்த ஆய்வின் முடிவாகும்.

“மாறிவருகின்ற நுண்ணியல் மேலாண்மை செயல்பாடுகள் பற்றி தற்போது பல மேலாளர்கள் தெரிந்துகொள்ளவில்லை. அவர்களது பணியாளர்கள் பின்னூட்டம் (Feedback) எனப்படும் கருத்துக்கூறல் நிகழ்வில் பங்கேற்க தயங்குகிறார்கள்” என்றும் அந்த ஆராய்ச்சியின் முடிவு தெரிவிக்கிறது.

பல ஆண்டுகளாக நுண்ணியல் மேலாண்மைப் பாணியை பின்பற்றிவரும் நிறுவனங்கள், “இந்த முறைதான் சிறந்த தலைமைக்கு அழகு” என்பதில் நம்பிக்கை கொண்டிருப்பார்கள். நுண்ணியல் மேலாண்மை சிறந்த வெற்றிகளை அள்ளிக் குவித்த வரலாறும் உண்டு.

ஆனால், அசுர வேகத்தில் மாறிவரும் பொருளாதார சூழல்களும், பண்பாட்டு மாற்றங்களும், தொழில்நுட்ப வளர்ச்சிகளும் பல சமூக மாற்றங்களை நாளும் ஏற்படுத்திவிடுகின்றன. இத்தகைய சூழலில் தலைமைத்துவத்தில் விரிசல்களை உருவாக்கும் “நுண்ணியல் மேலாண்மை” பற்றி விரிவாகத் தெரிந்து கொள்வது சிறந்தது.

நுண்ணியல் மேலாளர்கள் (Micro Managers) மிக நல்ல குறிக்கோளோடு பணியாளர்களை வழிநடத்தி, நிறு வனத்தின் குறிக்கோளை நிறைவேற்ற பணிபுரிகிறார்கள். மிகவும் சரியான முறையில் பணியாற்றுவதால் மிக அதிக கட்டுப்பாட்டு உணர்வோடு செயல்படுகிறார்கள்.

இவர்கள் இணக்கமான தலைமைத்துவத்தை (Personal Leadership) விரும்புவதில்லை. இந்த மேலாளர்கள் அதிகார ஒப்படைப்புக்கு (Delegation) தடையாய் அமைகிறார்கள். நிறுவனத்தில் நடக்கும் சின்னஞ்சிறு செயல்களில் அதிக கவனம் செலுத்துவார்கள். மிகப்பெரிய விஷயங்களை ‘கோட்டை’ விட்டுவிடுவார்கள். சிறிய தவறையும் ‘பைனாக்குலார்’ மூலம் பார்த்து பெரிதாக்கி சிக்கலை உருவாக்குவார்கள்.

தனக்குக்கீழ் பணியாற்றுபவர்களை முடிவுகள் எடுக்க இவர்கள் அனுமதிப்பதில்லை. தனது பணியாளர்களிடம் கலந்து ஆலோசிக்காமல் (Without Consulting) அவர்களின் வேலையில் மூக்கை நுழைத்து தேவையற்ற பிரச்சினைக்கு வடிவம் கொடுப்பார்கள்.

சின்னஞ்சிறு நிகழ்வுகளுக்கும் அறிக்கை (Report) கேட்டு பணியாளர்களின் நேரத்தை வீணடிக்க ஆர்வம் காட்டுவார்கள்.

பணியாளர்களின் அனுபவம் மற்றும் அறிவு ஆகியவற்றை இத்தகைய மேலாளர்கள் கருத்தில் கொள்வதில்லை. தன்னோடு பணியாற்றுபவர்களின் திறமையை ஒதுக்கி வைத்துவிட்டு, தன்னை முன்னிலைப்படுத்தவே தயார்நிலையில் இருப்பார்கள்.

நிறுவனத்தின் மீது உண்மையான விசுவாசம் இல்லாமல் இருப்பார்கள். இருந்தபோதும் அதனை வெளிக்காட்டாமல் நல்லவர்கள்போல் வேஷம் போட்டுக்கொள்வார்கள்.

தனது பணியில் உண்மையான ஈடுபாடு இல்லாத நிலையிலும் தன்னை பிறர் புகழும்படி பார்த்துக்கொள்வார்கள்.

இத்தகைய மேலாளர்களின் தவறான முன்னுரிமைகள், பல தவறான முடிவுகளுக்கு வழி வகுக்கும். இதனால், ஊக்கமற்ற குழுவினர் இவர்கள் பின்னால் வலம்வருவார்கள். இந்தத் தன்மைகொண்ட மேலாளர்கள் நேர்மையான தலைமைப்பண்புகள் இல்லாமல் காணப்படுவார்கள்.

நுண்ணியல் மேலாளர்களிடம் பணியாற்றும் தலைவர்கள் தங்களை சூழலுக்குஏற்ப மாற்றிக்கொள்ளும் திறன் படைத்தவர்களாக உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

நுண்ணியல் மேலாளர்களிடம் தலைவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? என்பதை ரோனால்ட் ரீகன் (Ronald Reagan) அருமையாக விளக்குகிறார்.

“தலைவர்களான உங்களைச்சுற்றி சிறந்தவர்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். அவர்களுக்கு தேவையான அதிகாரங்களைக் கொடுங்கள். நிறுவனக் கொள்கைகளை அவர்கள் நடை முறைப்படுத்தும்போது தேவையற்ற முறையில் அவர்கள் பணியில் தலையிடுவதை தவிர்த்துவிடுங்கள்” என்பது அவரது அறிவுரையாகும்.

நுண்ணியல் மேலாளர்களின் பண்புகளை மாற்றுவது சற்று கடினமான செயலாகும். எனவே, இவ்வகை மேலாளர்களோடு இணைந்து பணியாற்றும் தலைவர்கள் சில வழிமுறைகளைப் பின்பற்றி வெற்றி காணலாம். அவற்றுள் சில:

உங்கள் நடவடிக்கைகளை மதிப்பீடு செய்யுங்கள்
தலைவரான உங்களுக்கும், மேலாளருக்கும் உள்ள தொடர்பின் அடிப்படையில் கீழே குறிப்பிட்டுள்ள கேள்விகளை உங்களுக்குள் கேட்டு சரியான பதிலைத் தெரிந்துகொள்ளுங்கள். அதாவது

உங்கள் செயல்பாடுகள் உங்களின் மேலாளருக்கு வருத்தம் அளிக்கிறதா?

நீங்கள் உங்கள் மேலாளர் அதிகமாக மகிழும் வகையில் நடந்துகொள்கிறீர்களா?

-இந்தக் கேள்விகளுக்கு விடையளிப்பதன்மூலம் உங்கள் தற்போதைய நிலையை உணர்ந்துகொள்ளலாம்.

உங்கள் மேலாளரிடம் தொடர்புகொள்ளும்போது பதற்றம் இல்லாத நிலையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். மேலாளரின் நம்பிக்கைகளையும், நெறிசார் உணர்வுகளையும் தெரிந்துகொண்டு அவற்றுக்கு ஏற்றாற்போல் உங்கள் செயல்பாடுகளை மாற்றிக்கொள்ளுங்கள்.

உங்கள் மேலாளரைப் புரிந்துகொள்ளுங்கள்
உங்கள் மேலாளரின் நுண்ணியல் மேலாண்மை அணுகுமுறைகளையும், அறிகுறிகளையும் தெளிவாகப் புரிந்துகொண்டால், உங்கள் மேலாளர் எந்தச் செயலை நிறைவேற்ற விரும்புகிறார்? என்பதைத் தெரிந்துகொள்ளலாம். மேலும், அவரது குறிக்கோளை நிறைவேற்ற அவருக்கு உதவி செய்யலாம். இதன்மூலம் உங்களுக்கும், மேலாளருக்கும் இடையே நல்ல நம்பிக்கை உருவாகும். இதனால், அதிக சுதந்திரத்தோடு செயல்பட மேலாளர் உங்களுக்கு அனுமதி வழங்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளது.

தகவல்தொடர்பை மேம்படுத்துங்கள்
உங்கள் மேலாளருக்கும், உங்களுக்கும் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தும்வகையில் தகவல் தொடர்பை மேம்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் மேலாளருக்குத் தெரியப்படுத்த வேண்டிய முக்கியத் தகவல்களை அவ்வப்போது தெரியப்படுத்துவதை வாடிக்கையாக்கிக்கொள்ளுங்கள். உங்கள் பணிகளின் ஒவ்வொரு நிலையிலும் ஏற்பட்டுள்ள மேம்பாட்டுத் தன்மையை விரிவாக மேலாளருக்கு எடுத்துக் கூறுங்கள்.

நம்பிக்கையை உருவாக்க முயற்சி செய்யுங்கள்
நுண்ணியல் மேலாளர்கள் சின்னஞ்சிறு செயல்களுக்கும் விளக்கம் கேட்பார்கள். குறிப்பாக- தலைவர்கள் செய்யும் தவறுகளையும், மோசமான சூழ்நிலைகளையும் சுட்டிக்காட்டி விளக்கம் கேட்பார்கள். இந்த நிலையில் தலைவர்கள் உண்மை நிகழ்வுகளை திறந்த உள்ளத்தோடு மேலாளரிடம் பகிர்ந்துகொண்டால், மிகப்பெரிய பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்த்துவிடலாம். உங்கள் மீது மேலாளருக்கு நம்பிக்கை ஏற்படும்.

மேலாளர் தலையீடு அதிகம் இருந்தாலும், அவரோடு இணக்கமான சூழலை ஏற்படுத்திக்கொண்டால், உங்கள் பணியில் வெற்றியை உருவாக்கலாம். பெற்ற வெற்றியை தக்க வைத்துக்கொள்ளவும் முடியும்.

எதிர்காலத்தைப் பற்றி அதிக கவனம் செலுத்துங்கள்
உங்கள் மேலாளரோடு கலந்துரையாடல் செய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ளுங்கள். நீங்கள் கடந்த காலத்தில் செய்த பணிகளையும், எதிர்காலத்தில் என்னென்ன திட்டங்களை செயல்படுத்த விரும்பு கிறீர்கள்? என்பதையும் மேலாளரோடு மனம்விட்டுப் பேசுங்கள். அவரது கருத்துக் களையும் தெரிந்துகொள்ளுங்கள். மேலாளர் தருகின்ற அனுபவக் குறிப்புகளையும் ஏற்றுக்கொண்டு எதிர்காலத் திட்டத்தை வடிவமைத்துக்கொள்ளுங்கள்.

எந்தச்சூழலிலும் முரண்பாடுகளை உருவாக்கிக் கொள்ளாதீர்கள்.
நுண்ணியல் மேலாளர் மற்றும் தலைவர் ஆகிய இருவரின் உறவுகள் நிறுவனத்தின் மேம்பாட்டுக்கு நாள்தோறும் தேவையான ஒன்றாகும். எனவே, நிறுவனத்தில் யார் பெரியவர்? என்ற போட்டி மனப்பான்மை உருவாகாதவாறு பார்த்துக்கொள்வதும், தேவையற்ற முரண்பாடுகள் ஏற்படாமல் கவனத்தோடு செயல்படுவதும் நல்ல தலைவருக்கு அழகாகும்.

மேலே குறிப்பிட்டுள்ள வழிமுறைகள் நுண்ணியல் மேலாண்மையின் வெற்றிக்கான தலைவரின் செயல்பாடுகளை தீர்மானிக்க நிச்சயம் உதவும். தலைவர்களின் செயல்கள் சிறப்பானதாக அமையும்போது நுண்ணியல் மேலாண்மையை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள்.

- நெல்லை கவிநேசன்

Next Story