65 கோடி டாலருக்கு காபி ஏற்றுமதி


65 கோடி டாலருக்கு காபி ஏற்றுமதி
x
தினத்தந்தி 16 Oct 2019 6:48 AM GMT (Updated: 16 Oct 2019 6:48 AM GMT)

நடப்பு 2019-ஆம் ஆண்டில், அக்டோபர் 3 நிலவரப்படி 65 கோடி டாலருக்கு காபி ஏற்றுமதி ஆகி உள்ளது.

அராபிகா, ரோபஸ்டா
உலகில் அராபிகா, ரோபஸ்டா ஆகிய இரண்டு முக்கிய காபி ரகங்கள் பயிராகின்றன. காபி ஏற்றுமதியில் இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளது. பிரேசில் முதலிடத்திலும், வியட்நாம் இரண்டாவது இடத்திலும் உள்ளன. இந்தோனேஷியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் இருந்து இத்தாலி, ரஷ்யா, ஜெர்மனி, பெல்ஜியம் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் அதிக அளவில் காபி இறக்குமதி செய்கின்றன.

இந்தியாவில் அக்டோபர் முதல் செப்டம்பர் வரையிலான காலமும், பிரேசிலில் ஏப்ரல்-மார்ச் காலமும், கியூபா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் ஜூலை-ஜூன் மாத காலமும் காபி சந்தைப் பருவங்களாக உள்ளன. எனினும் சர்வதேச அளவில் அக்டோபர்-செப்டம்பர் மாத காலம் தான் காபி பருவமாக உள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டில் காபி ஏற்றுமதி 7.36 சதவீதம் குறைந்து 3.50 லட்சம் டன்னாக இருந்தது. முந்தைய ஆண்டில் அது 3.78 லட்சம் டன்னாக இருந்தது.

நடப்பு 2019-ஆம் ஆண்டில், ஜனவரி 1 முதல் அக்டோபர் 3-ந் தேதி வரையிலான காலத்தில் 65 கோடி டாலருக்கு காபி ஏற்றுமதி (மறுஏற்றுமதி உள்பட) ஆகி உள்ளதாக காபி வாரியம் தெரிவித்துள்ளது. இதே காலத்தில், அளவு அடிப்படையில், காபி ஏற்றுமதி (2.89 லட்சம் டன்னில் இருந்து) 2.90 லட்சம் டன்னாக உயர்ந்து இருக்கிறது.

மதிப்பீடுகள்
கடந்த பருவத்தில் (2018 அக்டோபர்-2019 செப்டம்பர்) 3.19 லட்சம் டன் காபி உற்பத்தி ஆகி இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டு இருக்கிறது. இது முந்தைய பருவத்தின் உற்பத்தியை விட 0.94 சதவீதம் மட்டுமே உயர்வாகும். அப்போது உற்பத்தி 3.16 லட்சம் டன்னாக இருந்தது.

கடந்த பருவத்தில் காபி உற்பத்தி 3 லட்சம் டன்னாக இருக்கும் என காபி உற்பத்தியாளர்கள் மதிப்பீடு செய்துள்ளனர். இது காபி வாரியத்தின் உற்பத்தி மதிப்பீட்டை விட சுமார் 5 சதவீதம் குறைவாகும். ரோபஸ்டா உற்பத்தி குறைந்ததே இதற்கு முக்கிய காரணமாகும்.

Next Story