மாறி வரும் மழைப்பொழிவு


மாறி வரும் மழைப்பொழிவு
x
தினத்தந்தி 18 Oct 2019 5:26 AM GMT (Updated: 18 Oct 2019 5:26 AM GMT)

உள்ளூர் காலநிலையில் ஏற்படும் மாற்றங்களினால், அதி தீவிர நிகழ்வுகள் உருவாகி, வெள்ளப் பெருக்குகளினால் பேரழிவுகள் மற்றும் இடையே வறட்சிகளும் ஏற்படுகின்றன.

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் வழக்கத்தைவிட முன்கூட்டியே தொடங்கிவிட்ட நிலையில், மேற்கு மற்றும் வட இந்தியாவின் பல பகுதிகளில் மிக கனமழை மற்றும் வெள்ளப் பெருக்குகள் ஏற்பட்டுள்ளது. கணிக்க இயலாத வானிலை நிகழ்வுகளே இனி அதிகமாக நடைபெறும் என்று வானிலை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

உள்ளூர் அளவில் மழை பொழிவின் அளவுகளில் மாறுபாடுகள் அதிகரித்து வரும் வேளையில், எவ்வளவு மழை எப்போது பொழியும் என்று துல்லியமாக முன் கணிப்பதில் உள்ள பிரச்சினைகளை இந்திய வானிலை ஆய்வு மையம் எதிர்கொண்டு வருகிறது. போதுமான உள் கட்டமைப்பு வசதிகள் இல்லாததாலும், முன் கணிக்க இயலாத வகையில் காலநிலை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதுமே இதற்கு காரணங்கள்.

ஒழுங்கற்ற மழை பொழிவுகள் அதிகரித்து வருவதால், அதி தீவிர மழை பொழிவுகள் உருவாகி, வெள்ளப் பெருக்குகளினால் பேரழிவுகள் ஏற்படுவது அதிகரித்துள்ளதாக கால நிலை நிபுணர்கள் கூறுகின்றனர். உதாரணமாக 2015-ல் பெரும் மழையையும், வெள்ளப் பெருக்கையும் எதிர்கொண்ட சென்னை, 2016-ல் ஒரு புயலினால் மீண்டும் வெள்ளத்தை சந்தித்தது. இந்த ஆண்டு கோடை காலத்தில், மிக மோசமான குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொண்டது.

பருவமழை காலங்களில், மழை பெய்யும் நாட்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக, வானிலை ஆய்வு மையத்தை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறுகிறார். ஆனால் மழைப் பொழிவின் தீவிரம் அதிகரித்து வருகிறது என்கிறார். முன்பு 10 முதல் 12 நாட்களில் பெய்யும் மழை, இப்போது இரண்டு அல்லது மூன்று நாட்களில் கொட்டித்தீர்க்கிறது. இதை எதிர்கொள்ள தயார் நிலையில் இல்லாத பகுதி, அதன் விளைவுகளை சமாளிக்க முடியாமல் தடுமாறுகிறது.

“இந்தியாவின் பருவமழையில் ஒரு புதிய பாணி உருவாகியுள்ளது. அதிகரிக்கும் வறட்சி காலங்களுக்கிடையே கனமழை நிகழ்வுகள் ஏற்படுகிறது. கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளின் இதர பகுதிகளில் 2018 மற்றும் 2019-ல் தொடர்ந்து வெள்ளப் பெருக்குகள் ஏற்பட்டது. இந்த பகுதி, இந்தியாவின் ஏனைய பகுதிகளைப் போல, 2015 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் தொடர்ந்து வறட்சியை சந்தித்தது” என்கிறார் புனேவில் உள்ள வெப்பமண்டல வானிலைக்கான இந்திய நிறுவனத்தைச் சேர்ந்த வானிலை நிபுணரும், கால நிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கு இடையேயான குழுவின் 2019-ம் ஆண்டுக்கான அறிக்கையை முன்னின்று உருவாக்கியவர்களில் ஒருவருமான ராக்சி மாத்யூ கோல். 1950-ம் ஆண்டுக்கு பிறகு, அதி தீவிர நிகழ்வுகளின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

மழை பொழிவின் அளவுகள் சொல்வது என்ன?

மழை பொழிவுகளின் அளவை ஆய்வு செய்யும்போது, அதன் சராசரி எண்ணிக்கைகளை கொண்டு, மாநிலத்தில் அல்லது நாட்டில் மழை பொழிவு இயல்பாக உள்ளது போன்ற தோற்றம் ஏற்படும். ஆனால் யதார்த்தத்தில், உள்ளூர் அளவிலான வேறுபாடுகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

“உள்ளூர் அளவிலான அளவுகளை நாம் கணக்கில் கொள்ள தவறி விடுகிறோம். ஒரு மாவட்டம் அல்லது மாநிலம் அல்லது ஒரு பிராந்தியத்தின் மழைபொழிவின் சராசரி அளவை மட்டும் எடுத்துக் கொள்வது, கள நிலவரத்தையும், மக்களுக்கு ஏற்படும் பல்வகை அனுபவங்களை பற்றியும் சரியான பார்வையை அளிக்காது.” என்று டி.இ.ஆர்.ஐ. மேம்பட்ட ஆய்வுகளுக்கான கல்லூரியின் இணை பேராசிரியரும், வானிலை நிபுணருமான அஞ்ஜல் பிரகாஷ் கூறுகிறார்.

உதாரணமாக, மாராட்டிய மாநிலத்தின் சில பகுதிகளில், இந்த பருவமழை காலத்தின்போது, மழை பெய்தது, ஆனால் அம்மாநிலத்தின் இதர பகுதிகளில் வறட்சி நிலை தொடர்கிறது. இதை ஆமோதிக்கும் கோல் கூறுகிறார், “அகில இந்திய மழை அளவை பார்த்து, நாம் சில அனுமானங்களை உருவாக்கிக் கொள்கிறோம். மொத்த மழை பொழிவின் அடிப்படையில், பிராந்திய ரீதியான வேறுபாடுகள் உள்ளன. வறட்சி மற்றும் வெள்ளப் பெருக்குகள் எப்படி உருவாகின்றன என்பதிலும் இந்த வேறுபாடுகள் உள்ளன. ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் ஒரு உள்ளூர் செயல் திட்டம் தேவை என்பது இதன் மூலம் தெளிவாகிறது.”

பூமி அறிவியல் துறை அமைச்சகத்தை சேர்ந்த எம்.ராஜீவன் மற்றும் புனே வானிலை ஆய்வு மையத்தை சேர்ந்த புலக் குகத்தகுர்தா ஆகியோர், இந்தியாவின் மழை அளவில் உள்ள போக்குகள் பற்றி செய்த ஆய்வில், ஜூன் மற்றும் ஆகஸ்டு மாதங்களில் மழை பொழிவின் அளவு அதிகரித்து வருகிறது என்றும், ஜூலை மாதத்தில் மழை அளவு குறைந்து வருவதையும் கண்டறிந்துள்ளனர். ஜூன் மாத மழையின் ஆண்டு அளவு 19 துணைப் பிரிவு பகுதிகளில் அதிகரித்தும், 17 துணைப் பிரிவு பகுதிகளில் குறைந்தும் காணப்படுகிறது.

கண்காணிப்பு நிலையங்களின் போதாமை மற்றொரு பிரச்சினை. இந்தியா முழுவதும் உள்ள வானிலையை துல்லியமாக கண்டறிய, ஒவ்வொரு 100 சதுர கிலோ மீட்டருக்கும் ஒரு கண்காணிப்பு நிலையம் இருக்க வேண்டும் என்று வானிலை நிபுணர்கள் கூறுகின்றனர். வெப்பமண்டல நாடுகளில் 100 சதுர கிலோ மீட்டர்களுக்கு ஒரு முறை காலநிலை வேறுபாடுகள் இருப்பதால், மழையின் அளவை கண்டறிய, அடர்த்தியான கண்காணிப்பு முறை தேவை. இதை செயல்படுத்த, எந்த பகுதிகளில் கண்காணிப்பு நிலையங்கள் அதிகம் தேவை என்பதை கண்டறிந்து, அங்கு அவற்றை உருவாக்க வேண்டும். இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கட்டுப்பாட்டில், 1901-ம் ஆண்டு முதல் உருவாக்கப்பட்ட 5 ஆயிரத்திற்கும் அதிகமான கண்காணிப்பு நிலையங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 2 ஆயிரம் நிலையங்கள் செயல்பாட்டில் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த நூறு ஆண்டுகளில் மழையின் அளவு குறைந்து வருவதாக, தென்மேற்கு பருவமழை மற்றும் (தமிழகத்திற்கு மழை அளிக்கும்) வட கிழக்கு பருவ மழை பற்றிய ஆய்வுகள் கூறுகின்றன; சில பகுதிகளில் இது மிகவும் மோசமாக உள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம், புனேவை சேர்ந்த குகத்தகுர்தா மற்றும் இதர விஞ்ஞானிகள், கடந்த 115 ஆண்டுகளில் இந்திய பருவ மழையின் போக்குகள் (தரப்படுத்தப்பட்ட மழை அளவு குறியீட்டு முறையை பயன்படுத்தி எஸ்.பி.ஐ. வளிமண்டலம்) பற்றி ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். இதில் தமிழ்நாட்டில், கடலூர், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழையின் அளவு குறைந்து வருவது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வறட்சி நிலையில் உள்ள பகுதிகளின் விகிதத்தின் அடிப்படையில், தமிழ்நாட்டை “அதிகரித்து வரும் ஆனால் குறிப்பிடத்தக்க அளவில் இல்லாத நிலையில்” என்று இந்த ஆய்வு வகைபடுத்துகிறது. தமிழகத்தின் தென்மாவட்டங்களில் வறட்சிக்கான சாத்தியம் அதிகமாக, 15-20 சதவீதமாக உள்ளது.

இந்திய அளவில், இயல்பான மழை அளவை விட பத்து சதவீதம் குறைவாக, 24 வருடங்களில் இருந்தது. கிழக்கு உத்தரபிரதேசம், பீகார், அசாம், மேகாலயா ஆகிய பகுதிகளில் உருவாகும் வறட்சிகள் கவலையை அளிக்கின்றன. கேரளா, தமிழ்நாடு, சத்தீஷ்கார், ஜார்கண்ட், ஒடிசா, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், பஞ்சாப், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சில பகுதிகளில் வறட்சி நிகழ்வுகள் அதிகரித்துள்ளன.

115 வருடங்களின் மழை அளவின் போக்குகளை கொண்டு, வறட்சி உருவாகும் வாய்ப்பு 10 முதல் 26 சதவீதம் உள்ளதாக கணிக்கப்படுகிறது. மத்திய மற்றும் தீபகற்ப இந்திய பகுதிகளில் வறட்சி ஏற்பட சாத்தியம் அதிகமாக உள்ளது.

தமிழ்நாட்டின் ஆண்டு மழை அளவில் 48 சதவீதத்தை அளிக்கும் வடகிழக்கு பருவமழையின் 100 வருட அளவுகளை (1910-2010) பார்க்கையில், மழையின் சராசரி அளவின் வேறுபாடு மிகக் குறைவாக 27.3 சதவீதமாக உள்ளது. இதர மாநிலங்களோடு ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவு என்று தென்மாநிலங்களுக்கான வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் தலைவர் ஒய்.இ.ராஜ், வடகிழக்கு பருவமழை பற்றி செய்த ஆய்வறிக்கையில் கூறுகிறார். இதர தென் மாநிலங்களில் இந்த வேறுபாடு 30 முதல் 40 சதவீதமாக உள்ளது. 26 ஆண்டுகள் மழையின் அளவு அதிகமாகவும், 25 ஆண்டுகள் பற்றாக்குறையாகவும் இருந்தது என்று அவரின் ஆய்வு தெரிவிக்கிறது.

ஆனால் இந்த வேறுபாடுகள் அனைத்தும் உள்ளூர் அளவிலேயே உள்ளன. இவற்றை மாநில அல்லது உட்பிரிவு அளவில் விரிவுபடுத்தி கணிக்க முடியாது. இதனால் இந்த அளவுகளை கொண்டு ஒரு முழு சித்திரத்தை கட்டமைப்பது மிகவும் கடினமாக உள்ளது.

அதி தீவிர எல் நினோ (சூடான நீரோட்டம்) மற்றும் லா நினோ (குளிர்ந்த நீரோட்டம்) நீரோட்டங்கள் இந்த நூற்றாண்டில் அதிகரிக்கும் என்று கடந்த மாதம் (செப்டம்பர்) வெளியிடப்பட்ட, காலநிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கு இடையிலான குழுவின் (ஐ.பி.சி.சி) அறிக்கை எச்சரிக்கிறது. இந்த இரண்டு நீரோட்டங்களும் இந்தியாவின் பருவமழைகள் மீது தாக்கத்தை ஏற்படுத்துபவை. குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தேவையான நீரின் அளவை இவை பாதிக்க வாய்ப்புள்ளது. இதனால் உணவு பாதுகாப்பையும் இவை பாதிக்கும்.

காலநிலைகளை முன் கணிக்கும் முறையின் வெற்றி வாய்ப்புகள்

காலநிலைகளை முன்கூட்டியே கணிக்கும் முறையில் பிரச்சினைகள் உள்ளதா? இது காலாவதியான முறையா? இந்திய வானிலை ஆய்வு மையம், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் வானிலை ஆய்வு மையங்களுக்கு இணையாக, மிக நவீனமான முன் கணிக்கும் முறைகளை பயன்படுத்துகிறது. அந்த நாடுகளில் காலநிலை மற்றும் பருவ காலங்கள் ஒரே சீராக இருப்பதால், அவற்றை முன் கணிப்பது எளிது. “ஐரோப்பா மற்றும் அமெரிக்கா மீது உருவாகும் காலநிலை அமைப்புகள் பல ஆயிரம் கிலோ மீட்டர்கள் அகலமுள்ளவை. ஒரு வாரம் அல்லது அதற்கும் அதிகமாக காலம் நிலையாக இருப்பவை. எனவே அடுத்த 10 நாட்கள் வரையிலான காலநிலை முன் கணிப்புகளை அங்கு தவறுகள் ஏற்படாத வகையில் செய்ய முடிகிறது. ஆனால் இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில், காலநிலை அமைப்புகளின் அகலம் சிறிதாக இருப்பதாலும், துரிதமாக அவை மாறுவதாலும், அவற்றை மேலை நாடுகளில் பயன்படுத்தும் வகை மாதிரிகளின் அடிப்படையில் முன் கணிப்பது விஞ்ஞானிகளுக்கு மிகவும் கடினமான காரியமாக உள்ளது” என்கிறார் கோல்.

சமீப காலங்களில் உருவான புயல்களை இந்திய வானிலை ஆய்வு மையம் துல்லியமாக முன் கணித்து, உயிர் சேதங்களை குறைத்தாலும், மழை பொழிவுகளின் அளவை பற்றிய அதன் கணிப்புகளை மேம்படுத்தப்பட வேண்டிய தேவை உள்ளது. “அதன் வகை மாதிரி மழை பற்றிய சமிக்ஞைகளை சரியாக கணிக்கிறது. ஆனால் மழை பெய்யும் இடங்கள் மற்றும் அதன் அளவுகளில் சற்று மாறுபடுகிறது” என்கிறார் கோல்.

“முன் கணிப்புகளை மேலும் துல்லியமாக்கவும், அவற்றின் செயல் திறனை அதிகரிக்க செய்யவும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. விவசாயிகளுக்காக இரண்டு வார முன் கணிப்புகளை விவசாய காலநிலை பிரிவின் மூலம் செய்கிறோம். இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கான முன் கணிப்பு மிகவும் மேம்பட்டுள்ளது” என்கிறார் குகத்தகுர்தா.

Next Story