ஆள்மாறாட்டம் சட்ட திருத்தம் தேவை


ஆள்மாறாட்டம் சட்ட திருத்தம் தேவை
x
தினத்தந்தி 19 Oct 2019 5:55 AM GMT (Updated: 19 Oct 2019 5:55 AM GMT)

ரெயில் டிக்கெட் பரிசோதகர் (டி.டி.இ.) ஒருவர் தஞ்சாவூர் ரெயில் நிலையத்தில் பல மாதங்களாக பணியாற்றுகிறார்.

ரெயில் டிக்கெட் பரிசோதகர் (டி.டி.இ.) ஒருவர் தஞ்சாவூர் ரெயில் நிலையத்தில் பல மாதங்களாக பணியாற்றுகிறார். இவரது நடவடிக்கை மீது ஒரு ரெயில்வே காவலருக்கு சந்தேகம் வருகிறது. ஏனென்றால் இவர் பிளாட்பாரத்தில் மட்டும் நின்று கொண்டிருக்கிறார். ரெயிலில் ஏறி பயணிப்பதில்லை. பிடித்து விசாரித்தால் இவர் உண்மையான டிக்கெட் பரிசோதகர் இல்லை. ஒரு போலி ரெயில் டிக்கெட் பரிசோதகர். ஆள்மாறாட்டம் செய்து சில அப்பாவி பயணிகளிடம் அபராத கட்டணம் வசூல் செய்து சில ஆயிரம் ரூபாய் தினமும் சம்பாதித்திருக்கிறான். இந்த 26 வயது வேலையில்லா பட்டதாரி, ரெயிலில் டி.டி.இ. என்று பொய் கூறி நம்பவைத்து திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்திக்கொண்டிருப்பதும் தெரியவந்தது.

ஆள்மாறாட்டம் என்பது மூன்று ஆண்டுகள் சிறை தண்டனைக்குரிய குற்றமாகும். தன்னை இன்னொருவராக கூறிக்கொண்டு ஒரு மோசடி செயலை செய்து, அதனால் ஆதாயம் தேடுவதுதான் இந்த குற்றத்தின் சாராம்சமாக இருக்கிறது.

ஆள்மாறாட்டம் அன்றாடம் நடத்தப்படும் குற்றம் என்பதிலும், அது பல விதங்களில் அரங்கேற்றப்படும் குற்றம் என்பதிலும் சந்தேகமில்லை. ஆனால் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கும் நீட் தேர்வில் நடந்த ஆள்மாறாட்டம் நமக்கு அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. நீட் தேர்வு எழுதியது ஒருவர், கல்லூரியில் சேர்ந்து மருத்துவ படிப்பு படிப்பவர் இன்னொருவர்.

நுழைவுத்தேர்வே எழுதாமல் மருத்துவம் படித்தவர், பின் ஒரு நாள் பலரின் உயிருடன் அல்லவா விளையாடுவார்? அரும்பாடு பட்டு படித்த பிள்ளைகளுக்கு இடம் மறுக்கப்பட்டு, ஒன்றும் படிக்காதவனுக்கு மருத்துவ கல்லூரியில் இடமா? என்ற கேள்விகள் பொதுமக்களின் மனசாட்சியை உலுக்கியிருக்கிறது. அவர்களை ஆத்திரமடையச் செய்திருக்கிறது.

இந்த ஆள்மாறாட்ட குற்றத்தை அரங்கேற்றி மருத்துவ கல்லூரியில் படித்த மூன்று மாணவர்களும், அவர்களது பெற்றோரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கும், இவர்களுக்கு துணையாக இந்த மோசடி நாடகத்தை அரங்கேற்றிய அனைவருக்கும் சரியான தண்டனைகள் கிடைத்துவிடும் என்றும் எதிர்பார்க்கலாம்.

ஆள்மாறாட்ட குற்றத்தின் மைய தத்துவம், இதில் சிலருக்கு இழப்பும், சிலருக்கு தவறான ஆதாயமும் ஏற்படுவதுதான். ஒருவர் தான் அல்லாத இன்னொருவராக பொய் தோற்றம் அளித்து ஒரு செயலை செய்ததால் இன்னொருவருக்கு இழப்பை ஏற்படுத்தியிருக்கிறார். அதே வேளையில் ஆள்மாறாட்ட குற்றம் புரிந்தவரும், அவர் தரப்பினரும் தவறான லாபம் அடைந்திருக்கிறார்கள். நீட் வழக்கில் போட்டித்தேர்வு எழுதிய உண்மையான போட்டியாளர்களுக்கு பேரிழப்பு ஏற்பட்டிருக்கிறது.

போலி டாக்டர்களும், போலி வழக்கறிஞர்களும், போலி காவலரும், போலி ஆசிரியர்களும் கூட இதே சட்டத்தின்படி தண்டிக்க கூடியவர்கள்தான். இவர்கள் இன்னொரு குறிப்பிட்ட நபரின் பெயரில் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லைதான். இருந்தாலும் ஒரு கற்பனை நபர் என்று அடையாளப்படுத்தியிருப்பதால் இந்த ஆள்மாறாட்ட குற்றம் புரிந்துவிட்டார்கள் என்று பொருளாகிறது. அதாவது கற்பனை மனிதர்களான ஒரு டாக்டர், ஒரு வழக்கறிஞர், ஒரு போலீஸ் அதிகாரி, ஒரு ஆசிரியர் என்று அவர்கள் மற்றவர்களை நம்பவைத்ததால் ஆள்மாறாட்டம் என்ற குற்றத்தை புரிந்துவிட்டனர். எனவே அவர்கள் தண்டனை பெற தகுதியானவர்கள் ஆகிவிட்டனர்.

முந்தைய கால தமிழ் திரைப்படத்தில் ஒருவர் மன்னார் அன் கம்பெனியில் வேலை பார்ப்பதாக மனைவியிடம் டூப் விடும் ஒரு காட்சி வரும். அதை கெட்டிக்கார மனைவி கண்டுபிடித்து அவரின் முகத்திரையை கிழித்து விடுவார். அந்த வேடிக்கை காட்சியில் அரங்கமே சிரித்தது. இது ஒரு ஆள்மாறாட்ட குற்றம் என்றாலும் இதில் யாரும் ஏமாற்றப்படவில்லை அல்லது யாருக்கும் பெரிய இழப்பு ஏற்படவில்லை. ஆனால் தன்னை, பெரிய பதவியில் இருப்பவர்களிடம் தொடர்பு உள்ளவர் என்றும், தன்னால் மருத்துவ கல்லூரி இடம் அல்லது அரசு வேலை அல்லது பணி மாறுதல் வாங்கித் தந்துவிட முடியும் என்றும் பொய்யாக கூறிக்கொண்டு ஏமாற்றுபவர்கள் ஏராளம் உண்டு. இவர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் காவல் நிலையத்திற்கும், நீதிமன்றங்களுக்கும் பல ஆண்டுகள் நடையாய் நடப்பதை பார்க்கிறோம்.

இதுபோன்ற ஆள்மாறாட்ட கும்பல்களிடம் கொடுத்த பணம் திருப்பி வருவதும் கடினம், ஏனென்றால் இந்த குற்றத்தில் ஈடுபடுபவர்கள் தனிநபர் அல்ல. இவர்கள் ஒரு குழுவாக செயல்படுவார்கள். கிடைக்கும் பணத்தை உடனே பிரித்துக்கொள்வார்கள். அந்த பணத்தை உடனே ஆடம்பர செலவு செய்தும் விடுவார்கள். போலீஸ் விசாரணை தொடங்கினால் உடனே தலைமறைவாகி விடுவார்கள், அப்படியே முன்ஜாமீன் வாங்கி விடுவார்கள். இவர்களிடமிருந்து பணம் மீட்டெடுக்க முயன்றால், அவர்களிடம் பணமும் இருக்காது. வாங்கி குவித்த பணத்தை வேறு சிலரின் பெயரில் பாதுகாப்பார்கள். இவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்வது சுலபமான காரியம் அல்ல. அதற்கு பல ஆண்டுகள் ஆகும். அதற்குள் போலீஸ் அதிகாரிகள் பலர் அந்த காவல் நிலையத்திற்கு மாறுதலில் வந்து சென்றிருப்பார்கள்.

ஆள்மாறாட்டம் செய்து பெரிய இழப்புகள் ஏற்படுத்தும் கொடிய குற்றவாளிகள் பலரும் வலம் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். நீட் தேர்வு ஆள்மாறாட்டம் போன்ற செயல்களையும் இந்த கொடியவர்கள் செய்வார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் குற்றச்செயல்களில் ஈடுபட வழிவகுத்து தருபவர்கள், இந்த குற்ற நிகழ்வால் பாதிக்கப்பட்டு பணத்தை இழந்து தவிப்பவர்கள்தான். அதே வேளையில் நீட் தேர்வு ஆள்மாறாட்டம் போன்ற நிகழ்வுகளில் இவர்களுக்கும் குற்றத்தில் சமபங்கு உண்டு என்ற நிலை உருவாகிறது.

குறுக்கு வழியில் இலக்கை அடையவே சிலர் இந்த செயலை செய்ய துணிகிறார்கள். இது போன்ற ஆள்மாறாட்ட கும்பலிடம் சிக்கிக்கொண்டு சீரழிகிறார்கள். எனவே மோசடி மன்னர்களிடம் சிக்காமலும், அந்த மோசடியில் பங்கு பெறாமலும், அதனால் அவமானப்படாமலும், பெரிய இழப்புக்கு உள்ளாகாமலும் தங்களை தாமே காத்துக்கொள்வது சட்டத்தை மதிக்கும் அனைவரின் கடமையாக உள்ளது.

குடும்ப சொத்தை அபகரிக்க ஆள்மாறாட்டம் செய்து, ஒருவரின் கையெழுத்தை இன்னொருவர் போடுவது போன்ற குற்ற வழக்குகள் அரவமின்றி சிவில் நீதிமன்றங்களில் நடந்து வருகின்றன. இது அந்த குடும்ப பிரச்சினை என்று சொல்லலாம். இணையதள பாலியல் குற்றவாளி ஒருவன் கல்லூரி மாணவனாக தன்னை அறிமுகம் செய்து கொண்டு பள்ளி மாணவியை வீட்டிற்கு வரச்சொல்லி, அவளது நிர்வாண புகைப்படங்களை எடுத்து, பின்னர் மிரட்டி பாலியல் குற்றத்தில் ஈடுபடுகிறான். அந்த புகைபடங்களை வைத்துக்கொண்டு மாணவியை துன்புறுத்துகிறான். தனிநபர் துன்பம் இந்த குற்றத்தில் மேலோங்கி நிற்கிறது. ஆனால் நீட் மோசடி போன்ற ஆள்மாறாட்டத்தில் சமுதாய தாக்கம் இருக்கிறது. சில ஆள்மாறாட்ட குற்றத்தால் பாதிப்பு தனி நபர்களுக்கு மட்டுமல்ல, சமுதாயத்திற்கே ஏற்படுகிறது. எனவே ஆள்மாறாட்ட குற்றங்கள் தரம் பிரிக்கப்பட்டு புதியதாக வரையறுக்கப்பட்டு, அவற்றிற்கான தண்டனைகள் அதிகப்படுத்துவது காலத்தின் கட்டாயமாகி விட்டது. இது குறித்து விவாதங்கள் நடத்துவதும், சட்ட வல்லுனர்கள் ஆய்வதும் பொருத்தமாக இருக்கும். வாய்மையே வெல்லும்; வாய்மை மட்டுமே இறுதிவரை வெல்லும்.

முனைவர் செ.சைலேந்திரபாபு , ஐ.பி.எஸ்., காவல்துறை இயக்குனர்.

Next Story