தகவல் தொழில் நுட்பத்துறையின் இன்றைய நிலை?


தகவல் தொழில் நுட்பத்துறையின் இன்றைய நிலை?
x
தினத்தந்தி 23 Oct 2019 5:01 AM GMT (Updated: 23 Oct 2019 5:01 AM GMT)

தகவல் தொழில் நுட்பத்துறையில் இந்தியாவில் ஏறத்தாழ 31 லட்சம் பேர் வேலை செய்கின்றனர். இவர்களில் 10 லட்சம் பேர் பெண்கள். 20 லட்சம் பேர் கடந்த பத்தாண்டுகளில் பணி நியமனம் செய்யப்பட்டவர்கள்.

கட்டுமானத்திற்குப் பிறகு, சேவைத்துறையின் மிகப்பெரிய அங்கமாக இந்த தகவல் தொழில் நுட்பத்துறை விளங்குகிறது. இதனுடைய மொத்த பணியாளர்களில் 90 சதவீதம் பேர் இந்தியாவில் 8 முக்கிய நகரங்களில் உள்ளனர்.

தகவல் தொழில் நுட்பத்துறையானது உற்பத்தி மற்றும் வணிகத்துறையில் எந்திரமயமாதலின் காரணமாக வளர்ச்சி பெற்றது. எது எந்திரமயமாதலுக்குக் கருவியாக இருந்ததோ அந்த தகவல் தொழில் நுட்பத்துறையே அதற்கு இரையாகிப்போன அவலத்தை இன்று நாம் கண்கூடாக பார்க்கிறோம். எந்திரமயமாக்கலினால் தகவல் தொழில் நுட்பத்துறையில் மிகத்திறமை வாய்ந்த வெகு சொற்பமானவர்களே இன்றைய நிலையில் தேவைப்படுகின்றனர். தனியார் பொறியியல் கல்லூரிகள் பல மடங்கு பெருகி போயுள்ளதால் லட்சக்கணக்கான பொறியியலாளர்கள் ஆண்டுதோறும் படிப்பு முடிந்து வெளியில் வருகின்றனர். ஆனால் தகவல் தொழில் நுட்பத்துறையில் ஆண்டிற்கு 70 ஆயிரம் பேர் வேலைக்கு அமர்த்தப்பட்ட காலம் போய் தற்போது ஆண்டிற்கு 30 ஆயிரம் பேர் மட்டுமே பணியமர்த்தப்படுகின்றனர். இதை உணர்ந்த தகவல் தொழில்நுட்ப பட்டதாரிகள் நம்பிக்கையிழந்து பல பேர் வீடுகளுக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றனர். இரவு நேர காவலாளிகளாக அல்லது சிப்பந்திகளாக கிடைத்த வேலைகளில் பணி புரிபவர்களாக மாறிப்போயுள்ளனர். கார்ப்பரேட் நிறுவனங்கள் தற்போது இவர்களை மிகவும் குறைந்த சம்பளத்திற்கு பணியமர்த்திக் கொள்கிறது. இப்படி பணியிலமர்த்தப்பட்டவர்கள் பணிப்பாதுகாப்பின்மை, மற்றும் மிகக் குறைந்த ஊதிய உயர்வு அல்லது ஊதிய உயர்வே இல்லாமல் வேலை செய்து வருகின்றனர். பணி நியமனம் என்பது மிகவும் குறைந்து போயுள்ளது. ஆட்குறைப்பு என்பது பரவலாக காணப்படுகிறது.

தகவல் தொழில் நுட்பத்துறையில் ஒவ்வொரு தனி நபரின் செயல்திறன் பற்றிய அனைத்து விவரங்களும் கால நேரத்துடன் ஆவணப்படுத்தப்படுகின்றன. வேலையை முடிப்பதற்கான கெடுவும், மதிப்பீட்டு முறையும் குறிப்பிடப்படுகின்றன. அவர்களது சம்பளம் என்பது இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவது பகுதி தொகுப்பூதியம், இரண்டாவது பகுதி அந்தத் தனி நபரின் செயல் திறனின் மதிப்பீட்டின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. பொதுவாக மொத்த சம்பளத்தில் இந்த இரண்டாவது பகுதிதான் 50 சதவீதமாக இருக்கிறது. ஒரு குழுவில் உள்ள அனைத்து ஊழியர்களும் ஒரு செயல் திறன் குறியீட்டினை பெறுவர். ஒவ்வொரு தனிநபரின் வருமானமும் இதைப் பொறுத்தே அமைகிறது. இதனால் அந்த குழுவில் யார் மிகச் சிறப்பாக செயலாற்றுகின்றாரோ அவர் அதிக ஊதியம் பெறுவார் என்று சொல்ல முடியாது. மருத்துவக் காப்பீடு மற்றும் வருங்கால வைப்பு நிதி போன்றவை அவர்களுடைய முதல் பகுதியான தொகுப்பூதியத்தின் அடிப்படையிலேயே வழங்கப்படுகிறது.

தகவல் தொழில் நுட்பப் பணியாளர்கள் அதிக நேரம் வேலை செய்யவேண்டியுள்ளது. அதிகாலையில் தொடங்கி இரவு வெகு நேரம் கழித்தே அவர்கள் தங்கள் வேலையை நிறைவு செய்கின்றனர். நிர்ணயிக்கப்படும் கால அளவுக்குள் எங்கிருந்து வேண்டுமானாலும் வேலை செய்யலாம்; என்ற சாத்தியக்கூறுகளும் அவர்களை வீடுகளில் இருந்தும் பணி செய்ய நிர்ப்பந்தப்படுத்துகிறது, அதனால் அவர்களது வேலை நேரம் அதிகரித்து 8 மணி நேரம் என்பது சட்ட விதியாக இருந்தாலும் அவர்களுடைய உண்மையான வேலை நேரம் என்பது குறைந்தது 11-ல் இருந்து 12 மணி நேரமாகவே உள்ளது.

ஒருவர் செய்யும் வேலைக்கு வாடிக்கையாளரிடம் வசூலிக்கப்படும் கட்டணத்தில் அவர் பெறும் சம்பளம் என்பது மிகவும் சொற்பமான பங்காகவே இருக்கிறது. அவர்களுடைய உழைப்பு சுரண்டலின் பெரும்பகுதி கார்ப்பரேட்டுகள் உருவாக்கிய உபரி மதிப்பில் உள்ளடங்கியிருக்கும். இந்தத்துறையில் பொதுவாகவே உழைப்பு சுரண்டல் அதிகமாக உள்ளது. மேலும் இத்துறையில் பணி பாதுகாப்பின்மை என்பது வளர்ந்து கொண்டே இருக்கிறது. பணிதொடர்பான மன அழுத்தங்களும் வளர்ந்து கொண்டிருக்கின்றன. ஆட்குறைப்பு தொடர்பான பயம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. இலக்குகளை எட்டவில்லை என்றால் செயல்படாதவர் என்ற முத்திரை குத்தப்பட்டுவிடுமோ என்ற அச்சமும் பெருகிக்கொண்டே போகிறது. இதனால் மனஅழுத்தத்தினால் உருவாகும் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகள் அதிகரித்துக்கொண்டே போகின்றன. 30 வயதிற்கு கீழ் உள்ளவர்களில் மாரடைப்பால் பாதிக்கப்படுவர்கள் 80 சதம் பேர் இந்த துறையைச் சார்ந்தவர்கள் என இருதய நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.

உளவியல் பிரச்சினைகளுக்காக கவுன்சிலிங் செய்து கொள்ள உளவியலாளர்களையும், மனநல மருத்துவர்களையும் தேடிச்செல்பவர்களின் எண்ணிக்கை இத்துறையில் அதிகரித்துள்ளது. இந்த துறையைச் சார்ந்த பல இளைஞர்கள் பணி தொடர்பான பிரச்சினைகளாலும் பிற அழுத்தங்களாலும் தற்கொலை செய்துகொள்கின்றனர். இவர்களில் பெரும்பகுதியினர் மிகுந்த செலவாளிகளாகவும், வாங்கிய கடனுக்கு மாதந்தோறும் அதிக இ.எம்.ஐ செலுத்த வேண்டியவர்களாகவும் உள்ளனர். இவர்கள் பெறும் சம்பளத்தின் பெரும்பகுதியை உண்வியில் கார்ப்பரேட்டுகளால் வழங்கப்படும் கடன்களின் மீதான அதிகரிக்கப்படும் வட்டி விகிதங்களாலும் விலைவாசி உயர்வு போன்றவற்றாலும் பறித்துக்கொள்ளப்படுகின்றன.

நிச்சயமற்ற பணிச்சூழல், நிச்சயமற்ற வருமானம், சமூகப் பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் இல்லாத நிலை, சட்ட பாதுகாப்பின்மை போன்றவற்றால் பாதிக்கப்படும் தகவல் தொழில்நுட்ப பணியாளர்களின் நிலை என்று மாறும்? இத்துறையில் மீண்டும் மறுமலர்ச்சி என்று ஏற்படும்? என இத்துறையில் பணியாற்றும் பணியாளர்களும், தகவல் தொழில்நுட்ப பட்டதாரிகளும் அவர்தம் குடும்பங்களும் ஏக்கத்தில் உள்ளனர். இவர்களின் மனஉளைச்சலை களைவதற்கான திட்டங்களை முறைப்படுத்தி கார்ப்பரேட் நிறுவனங்கள் செயல்பட மத்திய, மாநில அரசுகள் முயற்சிக்க வேண்டும். இத்துறையில் வேலைவாய்ப்பை அதிக அளவில் வழங்குவதற்கான திட்டங்களை செயல்படுத்தினால் மட்டுமே இன்று படித்து பட்டம் பெற்று வெளியேறும் இளைஞர்கள் எதிர்கால இந்தியாவை வளப்படுத்த முடியும்.

மகா.பாலசுப்பிரமணியன், துணைப்பதிவாளர், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி.

Next Story