வானவில் : ஹூண்டாய் கிரெடா டீசல் மாடல் அறிமுகம்


வானவில் :  ஹூண்டாய் கிரெடா டீசல் மாடல் அறிமுகம்
x
தினத்தந்தி 30 Oct 2019 3:45 AM GMT (Updated: 29 Oct 2019 4:28 PM GMT)

ஹூண்டாய் நிறுவனத்தின் சமீபத்திய தயாரிப்புகளில் மிகவும் பிரபலமான மாடல் கிரெடாவாகும். இதுவரையில் பெட்ரோல் மாடல் மட்டுமே வந்த நிலையில் தற்போது டீசல் மாடலில் கிரெடா இ-பிளஸ் மற்றும் இ-எக்ஸ் என்ற பெயர்களில் வந்துள்ளது.

கிரெடா இ-பிளஸ் மாடல் விலை சுமார் ரூ.10.88 லட்சம் மற்றும் இ-எக்ஸ் மாடல் விலை சுமார் ரூ.11.92 லட்சமாகும். முந்தைய மாடல்கள் 1.4 லிட்டர் என்ஜினைக் கொண்டவை. ஆனால் இப்புதிய மாடல் 1.6 லிட்டர் என்ஜினைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. கூடுதல் திறன் கொண்டிருப்பதால் விலையும் முந்தைய மாடலை விட ரூ.90 ஆயிரம் கூடுதல் ஆகும்.

இதில் ஹாலோஜென் முகப்பு விளக்கு, ரிமோட் லாக்கிங், மானுவல் ஏர்கண்டிஷனிங், மின்சாரம் மூலம் செயல்படும் விங்மிரர், முழங்கை வைத்துக் கொள்ளும் வசதி, அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான ஸ்டீரிங் மற்றும் பவர் விண்டோஸ் கொண்டது. இதில் இ-எக்ஸ் மாடலில் எல்.இ.டி., டி.ஆர்.எல். விளக்கு, பின் இருக்கையிலும் முழங்கை வைத்துக் கொள்ளும் வசதி, அட்ஜெஸ்ட் செய்யக் கூடிய ஹெட்ரெஸ்ட், ரியர் பார்க்கிங் கேமரா, 5 அங்குல தொடுதிரை ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ இயங்குதளம் கொண்டது. இரண்டு ஏர் பேக்குகள், ஏ.பி.எஸ். ரியர் பார்க்கிங் சென்சார், சீட்பெல்ட் ரிமைண்டர், ஸ்பீடு அலெர்ட் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் இதில் உள்ளது.

1.6 லிட்டர் என்ஜின் 128 ஹெச்.பி. திறன், 260 நியூட்டன் மீட்டர் டார்க் இழு விசையை வெளிப்படுத்தக்கூடியது. முந்தைய மாடல் 90 ஹெச்.பி. திறன் 220 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தக் கூடியதாக இருந்தது. இதில் பிரீமியம் மாடலில் ஆட்டோமேடிக் கியர் டிரான்ஸ்மிஷன் வசதி உள்ளது. வழக்கமான மாடல்கள் 6 கியர்களைக் கொண்டுள்ளன. நடுத்தர எஸ்.யு.வி. ரக சந்தையில் போட்டிகள் அதிகரித்துள்ள நிலையில், சந்தையை தக்கவைத்துக் கொள்ள டீசல் மாடலை இந்நிறுவனம் அறிமுகம் செய்து உள்ளது.

சான்ட்ரோ அனிவர்சரி எடிஷன்

ஹூண்டாய் நிறுவனம் சான்ட்ரோவின் புதிய மாடலை அறிமுகம் செய்து ஓராண்டாகி விட்டது. பட்ஜெட் ஹேட்ச்பேக் மாடல் காரான சான்ட்ரோவில் தற்போது முதலாமாண்டு (அனிவர்சரி) எடிஷன் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை சுமார் ரூ.5.17 லட்சத்தில் ஆரம்பமாகிறது. இதில் பல்வேறு மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.

இதனால் முந்தைய மாடலைக் காட்டிலும் ரூ.10 ஆயிரம் கூடுதலாகும். இதில் கியர் மாடலும், ஆட்டோமேடிக் கியர் மாடலும் கிடைக்கிறது. ஸ்போர்ட் டிரிம் மாடலில் பல மேம்பட்ட அம்சங்கள் சேர்க்கப்பட்டு அனிவர்சரி எடிஷனாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் மேற்கூரை கருப்பு வண்ணப் பூச்சில் வந்துள்ளது. ஏற்கனவே உள்ள மாடலில் இடம்பெற்றுள்ள என்ஜினில் எவ்வித மாறுதலும் செய்யப்படவில்லை. வழக்கம்போல 1.1 லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜினைக் கொண்டுள்ள இது 69 ஹெச்.பி. திறன், 99 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையைக் கொண்டது. 5 கியர்களைக் கொண்ட இந்த மாடலில் மானுவல் கியர் மாடலும், ஆட்டோமேடிக் கியர் மாடலும் கிடைக்கின்றன.

இதில் ஆட்டோமேடிக் கியர் மாடல் காரின் விலை சுமார் ரூ.5.75 லட்சமாகும். இந்த மாடல் கார் டாடா டியாகோ, மாருதி சுஸுகி வேகன் ஆர், செலரியோ ஆகிய மாடலுக்குப் போட்டியாக இருக்கும் என்று தெரிகிறது.

Next Story