சிறப்புக் கட்டுரைகள்

தினம் ஒரு தகவல் : சாப்பிடும் நேரம் எது? + "||" + Day One Information: What time to eat?

தினம் ஒரு தகவல் : சாப்பிடும் நேரம் எது?

தினம் ஒரு தகவல் : சாப்பிடும் நேரம் எது?
ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்ட்ரான் ஹார்மோன்களின் சுரப்பு குறைவதுதான் பெண்களின் எடை அதிகரிப்பதற்கான முதல் காரணம்.
மெனோபாஸ் காலம்வரை ஒரு பெண் எடையை தாங்கும் எந்தப் பயிற்சியையும் மேற்கொள்ளாமல் இருந்தால், அவருக்கு தசைத் திசுக்கள் குறைவாக இருக்கும்.

அதாவது அவை கலோரிகளை எரிக்கும் ஆற்றலை இழந்திருக்கும். அதனால், அவர்களது எடை அதிகரிக்கும் என்கிறது, மருத்துவ ஆய்வு ஒன்று. மேலும் இளவயதில் பெண்களைவிட ஆண்களுக்கே தசைத்திசுக்களின் அடர்த்தி அதிகமாக இருக்கும். பெண்கள் தசைத்திசு அடர்த்தியை அதிகரிக்கும் முயற்சிகளை செய்வதில்லை. அதன் விளைவு அவர்களது மெனோபாஸ் பருவத்தில் பிரதிபலிக்கும். தசைத்திசுக்கள் அடர்த்தியின்றி இருந்தால் எலும்புமுறிவு ஏற்படும் அபாயமும் அதிகம். எனவே விளையாட்டு துறை சார்ந்த பிசியோதெரபிஸ்ட்களை சந்தித்து, தசைத்திசுக்களின் அடர்த்தியை அதிகரிக்கும் வழிகளை கேட்டுப் பின்பற்றலாம். புரதம் அதிகமுள்ள உணவுகளும் இதற்கு உதவும்.

உடல் உணர்த்தும் சிக்னல்களை கவனிக்காவிட்டால் நம்மையும் அறியாமல் அதிக அளவு சாப்பிடுவோம். உணவை நன்கு மென்று, அது கூழான பிறகே விழுங்க வேண்டும். குறைந்தது 30 முறையாவது மென்ற பிறகே உணவை விழுங்க வேண்டும். சரியான நேரத்துக்குச் சாப்பிடுங்கள். காலையில் தூங்கி எழுந்த 2 மணி நேரத்துக்குள் காலை உணவையும், மதியம் 12 முதல் 1 மணிக்குள் மதிய உணவையும், இரவு 7 மணிக்குள் இரவு உணவையும் சாப்பிடுங்கள். இரவு உணவு முடித்து 3 மணி நேரம் கழித்தே உறங்கச் செல்லுங்கள்.

உணவை அளந்து சாப்பிடுங்கள். அதற்கென அளவு கப்புகள் அல்லது எடை மெஷின் பயன்படுத்துங்கள். 2 கப் காய்கறியுடன், ஒரு கப் பருப்பு சாப்பிடுங்கள். குறைந்த ஸ்டார்ச் சத்துள்ள காய்கறிகளை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள். உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, கேரட், பீட்ரூட், மஞ்சள் பூசணி, அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் போன்றவற்றை அதிகம் சேர்ப்பதை தவிருங்கள். ஒரு நாளைக்கு 2 முதல் 3 டீஸ்பூனுக்கு மேல் எண்ணெய் பயன்படுத்த வேண்டாம். பாதாம், வால்நட், ஆளிவிதை போன்றவற்றை சேர்த்துக்கொள்வதன் மூலம் உங்கள் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு கிடைக்கும்.

ஒவ்வொரு வேளை உணவுக்கு முன்பும் ஒரு டம்ளர் மோர் அருந்துங்கள். அது நீங்கள் சாப்பிடும் உணவின் அளவைக் குறைக்கும். எந்த உணவை சாப்பிடும் போதும் அதில் புரதம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். புரதமும் நார்ச்சத்தும் வயிறு நிறைந்த உணர்வைத் தந்து, பசியை கட்டுப்படுத்துபவை. தவிர தினசரி உங்கள் உடலுக்குத் தேவையான ஆன்டிஆக்ஸிடன்ட், வைட்டமின் மற்றும் தாதுச்சத்துகளையும் தருபவை. உணவில் நார்ச்சத்து தவறாமல் இடம்பெறட்டும். காய்கறி, பழங்கள் மட்டுமன்றி, ஓட்ஸ் தவிடு, கோதுமைத் தவிடு போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

முழு தானியங்கள், சிறு தானியங்கள், சிவப்பரிசி அவல் போன்றவற்றை உணவுக்குப் பிறகும் தொடரும் பசியின் போது சாப்பிடலாம். மைதா, பொரித்த உணவுகள், செயற்கை நிறமிகள் சேர்த்த உணவுகள், கிரீம் சேர்த்த உணவுகள், துரித உணவுகள் போன்றவற்றைத் தவிர்த்தாலே உடல் பருமனாகும் வாய்ப்புகளை குறைக்கலாம்.