நிறைவேறுகிறது, கர்தார்பூர் கனவு


நிறைவேறுகிறது, கர்தார்பூர் கனவு
x
தினத்தந்தி 2 Nov 2019 9:34 AM GMT (Updated: 2 Nov 2019 9:34 AM GMT)

கண்ணுக்கு எட்டும் தொலைவில்தான் கர்தார்பூர் சாகிப் குருத்வாரா! - ஆனால் சீக்கியர்கள் நினைத்த உடனேயே அங்கு நேரில் சென்று வழிபட்டு விட முடியாது. அங்கே சென்று வழிபட வேண்டும் என்றால் அதற்கு பாஸ்போர்ட் வேண்டும், விசா வேண்டும் என்றால் எப்படி இருக்கும்? அப்படித்தான் ஆனது சீக்கிய மக்களுக்கு. காரணம், அந்த குருத்வாராவின் அமைவிடம் பாகிஸ்தான்.

சமீப காலமாக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்து வரும் கர்தார்பூர் சாகிப் குருத்வாராவை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் கொஞ்சம் வரலாற்றின் பக்கங்களை திருப்பித்தான் பார்த்தாக வேண்டும்.

சீக்கிய மதத்தை நிறுவி, அதன் முதல் குருவாய் விளங்கியவர், குருநானக்.

அவர் தன் வாழ்நாளில் இறுதி 18 ஆண்டுகளை கழித்த இடம்தான் இந்த கர்தார்பூர். இது, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், நரோவால் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது.

அங்கு வாழ்ந்த குருநானக் 1539-ம் ஆண்டு மறைந்தார். ராவி ஆற்றங்கரையில் அவரது நினைவிடத்தின் மீது எழுப்பப்பட்டதுதான் கர்தார்பூர் சாகிப் குருத்வாரா. உலகிலேயே மிகப்பெரிய குருத்வாரா இதுதான். இதன் பரப்பளவு கொஞ்ச நஞ்சமல்ல, 1,500 ஏக்கர்! இதில் இருந்து அதன் பிரமாண்டத்தை புரிந்து கொள்ளலாம்.

இந்த குருத்வாரா இந்திய, பாகிஸ்தான் எல்லையில் இருந்து 3 கி.மீ. தொலைவில்தான் அமைந்துள்ளது. முக்கிய பண்டிகை நாட்களின்போது சீக்கிய மக்கள் இந்திய எல்லை பகுதிக்கு திரண்டு வந்து கர்தார்பூர் சாகிப் குருத்வாராவை தொலைவில் இருந்து வழிபட்டு செல்வது உண்டு. ஆனாலும், என்றேனும் இந்த நிலை மாறும், நேரில் சென்று வழிபடும் நிலை வரும் என கனவு வளர்த்தனர்.

கர்தார்பூருக்கு சீக்கிய மக்கள் நேரில் சென்று வழிபடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கித்தர வேண்டும் என இந்தியாவும் ஆசைப்பட்டது.

இதற்கான முதல் அடியை எடுத்து வைத்தவர், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய். அவர் 1999-ம் ஆண்டு லாகூருக்கு பஸ் பயணம் மேற்கொண்டபோது இது பற்றி பேசினார். 2000-ம் ஆண்டு அதிபராக இருந்த முஷரப் இதற்கு ஒப்புதல் அளித்தார். ஆனால் அடுத்து இந்த திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது.

கடந்த ஆண்டு பாகிஸ்தானில் இம்ரான்கான் பிரதமரான பின்னர் குருநானக்கின் 550-வது பிறந்த நாளையொட்டி எல்லையில் இருந்து கர்தார்பூருக்கு வழித்தடம் அமைக்க பாகிஸ்தான் முடிவு எடுத்தது. அது உலகளவில் சீக்கியர்களால் வரவேற்கப்பட்டது.

சீக்கியர்களுக்கு வசதியாக இங்குள்ள பஞ்சாப் மாநிலம், குருதாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாராவில் இருந்து எல்லைவரையில் வழித்தடம் அமைக்க இந்தியாவும் நடவடிக்கை எடுத்தது.

அதாவது எல்லைக்கு அப்பால் பாகிஸ்தானும், எல்லை வரை இந்தியாவும் வழித்தடம் அமைக்க முடிவானது.

இந்த வழித்தடங்கள் தொடர்பாக பாகிஸ்தானுடன் இந்தியா பலகட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தியது. கர்தார்பூரில் உள்ள தர்பார் சாகிப் குருத்வாராவுக்கு இங்குள்ள சீக்கியர் ஒருவர் சென்று வருவதற்கு பாகிஸ்தான் 20 டாலர் (சுமார் ரூ.1,400) கட்டணம் விதிப்போம் என அடம் பிடித்தது. முதலில் இதை ஏற்காத இந்தியா, பின்னர் ஒப்புக்கொண்டது.

அதைத் தொடர்ந்துதான் கடந்த மாதம் 24-ந்தேதி எல்லையில் கர்தார்பூர் வழித்தட ஒப்பந்தம் போடப்பட்டது. இதில் இந்திய தரப்பில் மத்திய உள்துறை இணைச்செயலாளர் எஸ்.சி.எல். தாஸ்சும், பாகிஸ்தான் சார்பில் அதன் வெளியுறவுத்துறை அலுவலக செய்தி தொடர்பாளர் முகமது பைசல் ஆகியோரும் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தத்தில் பல்வேறு நிபந்தனைகள் உண்டு. முக்கியமாக சொல்ல வேண்டும் என்றால், பாகிஸ்தானுக்கு 20 டாலர் (சுமார் ரூ.1,400) கட்டணம் செலுத்த வேண்டும். விசா கிடையாது என்றாலும் கர்தார்பூருக்கு காலையில் சென்று, தர்பார் சாகிப் குருத்வாராவில் வழிபாடு நடத்திவிட்டு மாலையில் திரும்பி விட வேண்டும். தினந்தோறும் குறைந்தது 5 ஆயிரம் பேர் அனுமதிக்கப்படுவார்கள். அங்கு செல்கிறவர்கள் பட்டியல், அவர்களது பயணத்துக்கு 10 நாட்களுக்கு முன்பாகவே பாகிஸ்தானுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.

வரும் 9-ந்தேதி, குருநானக்கின் 550-வது பிறந்த நாளில் கர்தார்பூர் வழித்தடம் திறந்து வைக்கப்படுகிறது. அங்கு செல்வதற்கு ஆன்லைன் பதிவு தொடங்கி உள்ளது.

இந்த தருணத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் புதிய சலுகைகளை அறிவித்து இருக்கிறார். முதலில் கர்தார்பூர் புனித பயணத்துக்கு விசாதான் தேவையில்லை என்று கூறப்பட்ட நிலையில் இப்போது அவர் பாஸ்போர்ட்டும் தேவையில்லை. ஆதார் அடையாள அட்டை போன்ற செல்லுபடியாகத்தக்க அடையாள அட்டையே போதுமானது என்று அறிவித்திருப்பது வரவேற்கத்தகுந்தது.

கர்தார்பூர் வழித்தடம் தொடங்குகிற நாளில் (9-ந்தேதி) மட்டும், அங்கு வருகிற சீக்கிய பயணிகளுக்கு 20 டாலர் கட்டணம் கிடையாது.

10 நாட்களுக்கு முன்பாகவே கர்தார்பூர் பயணம் குறித்து சீக்கியர்கள் தகவல் தர வேண்டும் என்ற நிபந்தனையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சீக்கியர்கள் வாழ்நாளில் ஒரு முறையேனும் கர்தார்பூர் சாகிப் குருத்வாரா சென்று வழிபாடு நடத்த வேண்டும் என்பது அவர்களது கடமையாக இருக்கிறது.

அந்த கடமை இனி நிறைவேற தடை ஏதும் இல்லை. 

Next Story