முயல் கொடுத்த வாழ்க்கை


முயல் கொடுத்த வாழ்க்கை
x
தினத்தந்தி 10 Nov 2019 7:20 AM GMT (Updated: 10 Nov 2019 7:20 AM GMT)

மண வாழ்க்கையில் கிடைத்த தோல்வி, மகனுக்கு ஏற்பட்ட இருதய கோளாறு, படித்த படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காத ஏமாற்றம்..

ண வாழ்க்கையில் கிடைத்த தோல்வி, மகனுக்கு ஏற்பட்ட இருதய கோளாறு, படித்த படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காத ஏமாற்றம்.. இப்படி தோல்வி மேல் தோல்வி கண்டு துவண்டு போயிருந்த இளம் பெண் ஒருவருக்கு, நம்பிக்கையூட்டி முயல்கள் அவருக்கு நல் வாழ்க்கை வழங்கிக் கொண்டிருக்கிறது. இது கதை அல்ல நிஜம். அந்த பெண்ணின் பெயர் சத்யா, வயது 29. மதுரை, கொட்டாம்பட்டியை சேர்ந்தவர். கணவர் கைவிட்டு கலங்கி நின்ற இவருக்கு முயல்கள் வாழ்க்கை கொடுத்ததால் இப்போது அவர் அந்த பகுதி மக்களால் ‘முயல் சத்யா’ என்று அழைக்கப்படுகிறார்.

கொட்டாம்பட்டி- திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் முயல் பண்ணை வைத்திருக்கும் சத்யாவை, அவரது பண்ணையில் முயல்களுக்கிடையே சந்தித்தோம். அவரிடம் பேச ஆரம்பித்த போது, அங்கிருந்த முயல்கள் அவரை ஒரு வித ஏக்கத்துடன் பார்த்தன. அந்த ஏக்கத்திற்கான காரணத்தை புரிந்து கொண்ட சத்யா, அங்குள்ள பானையில் ஒரு குடம் நீருடன் குளுக்கோசை கலந்து ஊற்றினார். அந்த நீர் சிறு குழாய் வழியாக அங்குள்ள முயல்களின் கூட்டிற்கு சென்றது. உடனே முயல்களும், கூட்டினுள் இருந்த சிறு குழாயில் வாயை வைத்து உறிஞ்சியபடி தண்ணீரை வேகமாக குடிக்க தொடங்கின. அவைகளின் ஏக்கத்தை போக்கிவிட்டு, அவரது வாழ்க்கையை நம்மிடம் விவரிக்கத் தொடங்கினார்.

“நான் எம்.ஏ., பி.எட். படித்துவிட்டு கொட்டாம்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் மாதம் ரூ.2 ஆயிரத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியையாக வேலை பார்த்து கொண்டிருந்தேன். அப்போது என்னுடைய அப்பா இறந்து விட்டார். அதன் காரணமாக, திருமணம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 2013 பிப்ர வரியில் திருமணம் நடந்தது. அவர் ஆசிரியர் வேலை செய்வதாக கூறி என்னை திருமணம்செய்து கொண்டார்.

திருமணத்திற்குபின், கணவர் வீட்டில் வற்புறுத்தியதால் என்னுடைய வேலையை விட வேண்டிய கட்டாயம் வந்தது. அவர் களுக்காக வேலையில் இருந்து விலகினேன். ஆனால் திரு மணம் நடந்த சில நாட்களில், என் கணவர் ஆசிரியர் வேலையில் இல்லை என்பதும் என்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது. அதன்பின்னர் 3 மாதத்தில் கருத்து வேறுபாடு காரணமாக என் கணவர் என்னை பிரிந்து சென்று விட்டார். அப்போது கர்ப்பிணியாக இருந்த நான் தாயார் வீட்டுக்கு வந்து அம்மாவுடன் தங்கினேன். எனக்கான செலவுகளை அம்மா கவனித்து வந்தார். மகன் பிறந்தான்.

அவனை பார்த்து நான் ஆறுதல் அடைந்துகொண்டிருந்தபோது, அவனுக்கு இருதயத்தில் பிரச்சினை இருப்பதாக டாக்டர்கள் சொன்னார்கள். அறுவை சிகிச்சை செய்தால் தான் மகன் உயிரோடு இருப்பான் என டாக்டர்கள் கூறினார்கள். அதன்பின்பு பல இடங்களில் கடன் வாங்கி ரூ.5 லட்சம் செலவு செய்து மகனுக்கு அறுவை சிகிச்சை செய்தேன். தற்போது அவன் நலமுடன் இருக்கிறான். அவன் பெயர் அபிஷேக். கொட்டாம்பட்டியில் உள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வரு கிறான்.

மகனை வளர்க்க வேண்டும், அம்மாவையும் பராமரிக்க வேண்டும் என்பதற்காக எங்கள் வீட்டின் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் வேலைக்கு சேர்ந்தேன். அங்கு கிடைத்த சம்பளம் வீட்டு வாடகைக்கு மட்டுமே போதுமானதாக இருந்தது. நாங்கள் மூன்று பேரும் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் தவித்தோம்” என்றார். அப்போதுதான் இவரது சிந்தனையில் முயல் வந்திருக்கிறது.

“சின்ன வயதிலே எனக்கு முயல் மீது கொள்ளை ஆசை. அப்போதே மூன்று முயல்களை வளர்த்தேன். அன்று நான் வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது பெரியவர் ஒருவரை சந்தித்தேன். அவர் என்னிடம், ‘என்னை குடும்பத்தில் யாரும் கவனிக்கவில்லை. நான் முயல் வளர்த்து, விற்பனை செய்து என் வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கிறேன்’ என்றார்.

அவர் கொடுத்த அறிவுரையின்படி வீட்டில் சிறிய இடத்தை ஒதுக்கி அதில் 10 முயல்களை வளர்த்தேன். அதில் ஓரளவு அனுபவம் கிடைத்ததும், பண்ணைவைக்க விரும்பினேன். எனது அண்ணனுக்கு சொந்தமான இடத்தில் பண்ணை நடத்த அனுமதி கேட்டேன். அவரும் சம்மதிக்க, கொட்டகை அமைத்து முதலில் ஒரு யூனிட் முயல் வளர்த்தேன்” என்றார்.

ஒரு யூனிட் என்பது 7 பெண், 3 ஆண் முயல்களைக் கொண்டது. அந்த முயல்களை வைத்துதான் சத்யா பண்ணைத் தொழிலை தொடங்கியிருக்கிறார். ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை பார்த்துக்கொண்டே முயல்களையும் வளர்த்திருக்கிறார். அதன்பின்பு ஒரு யூனிட், 4 யூனிட்டாக உயர்ந்திருக்கிறது. முயல்களை வாங்க வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகியிருக்கிறது.

“முயலை விற்பனை செய்து வருமானம் வரத் தொடங்கிய பின்பு தான் எனக்கு நம்பிக்கை வந்தது. முயல்களை நம்பி முழுநேர வளர்ப்பில் இறங்கினேன். இப்போது 300-க்கும் மேற்பட்ட முயல்கள் என்னிடம் உள்ளன” என்று கூறியவர், முயல்களைப் பராமரிக்கும் முறைகளை விளக்கினார்.

“முயல்களால் அதிக வெப்பத்தை தாங்க முடியாது. அதனால் கூரை கொட்டகைதான் நல்லது. அது, காற்று மழையைத் தாங்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். முயல்களின் ஆரோக்கியத்திற்கு மண் தரைதான் ஏற்றது. பாத்திரத்தில் முயல்களுக்கு தண்ணீர் வைத்தால் அது சிந்தும். அதனால் குழாய் வழியாக அதற்கு தண்ணீர் வழங்கும் கட்டமைப்பை உருவாக்கினேன். முயல்களுக்கு செரிமானத் தன்மை குறைவு. ஆகவே அடிக்கடி தீவனம் கொடுக்கக் கூடாது.

அதனை காதுகளை பிடித்து தூக்க வேண்டும் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், காதுகளை பிடித்து தூக்கக்கூடாது. முதுகுபகுதியை பிடித்துதான் தூக்க வேண்டும். அப்போதுதான் முயல்களுக்கு வலிக்காமல் இருக்கும். காலை 7 மணியில் இருந்து 8.30 மணிக்குள் அடர் தீவனம் கொடுக்கவேண்டும்.

அடர் தீவனம் என்பது கம்பு, சோளம், மக்காச்சோளம், கேழ் வரகு, பருத்திக்கொட்டை, பச்சரிசி, புழுங்கலரிசி, பாசிப்பருப்பு, உளுந்து, கடலைப் புண்ணாக்கு, பொட்டுக்கடலை உள்ளிட்ட பொருட்களை கொண்டது. குட்டி முயல்களுக்கு 40 கிராம், பெரிய முயல்களுக்கு 80 கிராம், தாய் முயலுக்கு 120 கிராம் என்ற அளவில் அடர் தீவனம் கொடுக்க வேண்டும்.

மாலை வேளையில் பச்சை புல், கோரை, பொன்னாங்கண்ணி கீரை, குதிரை மசால், வேலி மசால், சோளப்பயிர்கள் போன்ற பசுந்தீவனங்களை கொடுத்தால் போதுமானது. வாரம் ஒருமுறை குளுக்கோசும், நெல்லிக்காய் சாறும் தண்ணீரில் கலந்து கொடுப்பது நல்லது. முயல்கள் சோர்வாக இருக்கும்போது பழங்கள், கேரட் போன்றவற்றை வெட்டி கொடுக்கலாம்.

கழிச்சல்நோய் ஏற்பட்டால் ஓமத்தை நசுக்கி, பெருங்காயம் சேர்த்து, வெந்நீரில் கலந்து கொடுக்கலாம். தென்னைக் குறும்பை, பச்சை ஓலைகளை சிறிய துண்டுகளாக நறுக்கியும் கொடுக்கலாம். கழிச்சல்நோய் உடனடியாக சரியாகிவிடும். காதுகளில் சொறி ஏற்பட்டால், மஞ்சள், வேப்பிலை சேர்த்து அரைத்துத் தடவி விட்டால் சரியாகிவிடும். சளிப் பிரச்சினை இருந்தால், நாட்டு வெற்றிலையை கொடுக்கலாம். கறிக்கு விற்பனையாகும் முயல் களுக்கு கோதுமைத் தவிடு மற்றும் கடலைப் புண்ணாக்கு கொடுத்தால் அதிக எடை கிடைக்கும். முடிந்தவரை பண்ணையைச் சுத்தமாக வைத்திருந்தால் போதும், நோய்த் தாக்குதல் ஏற்படாது” என்றவர், கூண்டின்மேல் இருந்த அங்கோரா வகை முயலை கையில் எடுத்து தடவிக்கொடுத்தபடி தொடர்ந்தார்.

“நான் மிகுந்த ஈடுபாட்டோடு வளர்ப்பதால் என்னிடம் வளரும் முயல்கள் ஆரோக்கியமாக இருக்கின்றன. பொதுவாக முயல்கள் 40 முதல் 90 நாட்களுக்குள் குட்டிகள் போடும். ஒவ்வொரு முறையும் 8 முதல் 10 குட்டிகளை ஈனும். அதற்கும் அதிகமாக குட்டிகள் ஈன்றால் அனைத்து குட்டிகளுக்கும் தாய் முயலால் பால் கொடுக்க முடியாது. அதனால் சில குட்டிகள் இறந்துவிடும்.

குட்டி போட்டு ஒரு மாதம் கழிந்த பிறகுதான் இனப்பெருக்கத்துக்குத் தயார்படுத்த வேண்டும். அப்படியானால்தான் எல்லாக் குட்டிகளுக்கும் பால் கொடுக்க முடியும். என்னிடம் பல ஊர்களில் இருந்து வியாபாரிகளும், முயல்களை வளர்க்க விரும்புகிறவர்களும் வாங்கிச் செல் கிறார்கள். முயல்களின் வகைகள், எடையைப் பொறுத்து விலையில் வித்தியாசம் இருக்கும். எங்கள் பண்ணையில் நியூசிலாந்து ஒயிட், சோவியத் டச், சோவியத் சின்சில்லா, அங்கோரா, ரெட் ஜெயின்ட், ஒயிட் ஜெயின்ட், பிளாக் ஜெயின்ட், கலிபோர்னியா, இங்கிலீஷ் பிரீடர் வகைகளில் முயல்கள் உள்ளன.

கறி முயல் ஒரு கிலோ ரூ.400-க்கும், மொத்தமாக வாங்குவோருக்கு ரூ.300-க் கும் கொடுக்கிறேன். வளர்ப்புக்கு என்றால் ஒரு மாத முயலை ரூ.600 முதல் 800 வரை விற்பனை செய்கிறேன். மொத்தமாக வாங்கினால் விலைகுறைத்து கொடுப்பேன். முயல்களை வளர்ப்பதன் மூலம் மனநிறைவும், அதிக பணமும் கிடைக்கிறது.

பண்ணையை விரிவுபடுத்த வேண்டும் என்பதற்காக வங்கியில் கடன் கேட்டேன். ஆனால் இதுவரை கடன் கிடைக்கவில்லை. வங்கி அதிகாரிகள் பல முறை வந்து பார்த்து விட்டு சென்றனர். ஆனால் கடன் தரவில்லை. காரணம் புரியவில்லை. என்னை போன்ற வர்களுக்கு அரசு மானியத்துடன் கடன் வழங்க வேண்டும்.

முயல் பண்ணை மூலம் கிடைக்கும் வருமானம்தான் என்னை தன்னம்பிக்கை நிறைந்த பெண்ணாக மாற்றியது. என்னை போல் கஷ்டப்படும் பெண்களுக்கு நான் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதற்காக எனக்கு தெரிந்தவர்களுக்கு பண்ணை அமைத்து கொடுக்கிறேன். அதற்கான ஆலோசனையும் வழங்குகிறேன். குறைந்த விலையில் முயல்களையும் கொடுக்கிறேன். திருச்சி, அரியலூர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் 27 இடங்களில் முயல் பண்ணை அமைத்து கொடுத்திருக்கிறேன். மேலும், முயல்பண்ணை வைக்க விரும்புபவர்களுக்கு பயிற்சியும் கொடுக் கிறேன். கல்லூரி மாணவ, மாணவிகளும் இங்கு வந்து பயிற்சி எடுத்து செல்கிறார்கள். இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கற்று கொடுத்திருக்கிறேன். முயல் வளர்ப்புடன் சேர்த்து கிண்ணிக்கோழி, நாட்டுக் கோழி, கருங்கோழி, புறா, நாய் இப்படி பல பிராணிகளை வளர்த்து வருகிறேன்” என்று தன்னம்பிக்கையூட்டுகிறார், முயல் சத்யா.

Next Story