பல்வேறு காரணங்களால் 355 உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான செலவு ரூ.3.88 லட்சம் கோடி உயருகிறது


பல்வேறு காரணங்களால் 355 உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான செலவு ரூ.3.88 லட்சம் கோடி உயருகிறது
x
தினத்தந்தி 11 Nov 2019 6:17 AM GMT (Updated: 11 Nov 2019 6:17 AM GMT)

கால தாமதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 355 உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான செலவு ரூ.3.88 லட்சம் கோடி உயருகிறது.

அதிக முதலீடு
உள்கட்டமைப்பு திட்டங்களின் கீழ் நெடுஞ்சாலைகள், பாலங்கள் நிர்மாணம், விமான நிலைய விரிவாக்கம் மற்றும் துறைமுகங்கள் மேம்பாடு உள்ளிட்ட பல முக்கிய பணிகள் வருகின்றன. மேலும் விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கல் போன்ற நடவடிக்கைகளில் அதிக அளவு முதலீடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்கள் பொது-தனியார் கூட்டு முயற்சியில் நடைபெற்று வருகின்றன.

மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் ரூ.150 கோடி மற்றும் அதற்கும் அதிக செலவினம் கொண்ட உள்கட்டமைப்பு திட்டங்களை கண்காணித்து வருகிறது. இதன்படி 1,623 கட்டமைப்புத் திட்டங்களைப் பற்றி இந்த அமைச்சகம் ஆய்வறிக்கை ஒன்றை அளித்துள்ளது. அதில் 355 திட்டங்களுக்கான (தலா ரூ.150 கோடி அல்லது அதற்கு அதிக செலவினம் கொண்டவை) செலவினம் ரூ.3.88 லட்சம் கோடி அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி நெருக்கடி, நிலங்களைப் பெறுவதில் சிக்கல், தேவையான அனுமதிகளைப் பெறுவதில் கால தாமதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் செலவினம் உயரும் நிலை உள்ளது.

மேற்கண்ட அடிப்படைக் கட்டமைப்பு பணிகளுக்கான செலவினம் ரூ.19.33 லட்சம் கோடியாக இருக்கும் என முதலில் மதிப்பீடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது அதற்கான செலவினம் ரூ.23.21 லட்சம் கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி செலவு ரூ.3.88 லட்சம் கோடி அதிகரிக்கிறது.

கூடுதல் காலம்
355 உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு கூடுதல் செலவினம் ஏற்படும் என தெரிய வந்துள்ள நிலையில் 552 திட்டங்களுக்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2019 ஜூலை இறுதி நிலவரப்படி 355 உள்கட்டமைப்புத் திட்டங்களில் ஏறக்குறைய ரூ.9.48 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது. இது மறுமதிப்பீட்டுத் தொகையில் (ரூ.23.21 லட்சம் கோடி) 40.82 சதவீதமாகும்.

Next Story