சிறப்புக் கட்டுரைகள்

அந்தஸ்தின் அடையாளமான செல்லப்பிராணிகள்...! + "||" + Pets in symbol of status ...!

அந்தஸ்தின் அடையாளமான செல்லப்பிராணிகள்...!

அந்தஸ்தின் அடையாளமான செல்லப்பிராணிகள்...!
இன்று உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் செல்லப்பிராணிகள் பராமரிப்பு சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளது. 2017-ல் இதன் மதிப்பு 26.5 கோடி டாலர்களாக இருந்தது.
2020-ல் இது 43 கோடி டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பெட்டெக்ஸ் இந்தியா (இந்தியாவின் மிகப்பெரும் செல்லப்பிராணிகளுக்கான கண்காட்சி நிகழ்வு) கூறுகிறது. இந்தியர்கள் சுமார் 1.9 கோடி செல்லப்பிராணிகளை வளர்க்கின்றனர். ஆண்டுக்கு ஆறு லட்சம் செல்லப்பிராணிகள் தத்தெடுக்கப்படுகின்றன.

மிகப்பிரபலமான செல்லப்பிராணி

நாய்கள் தான் இந்தியாவின் மிகப்பிரபலமான செல்லப்பிராணியாக, மீன்கள், பறவைகள், பூனைகளை விஞ்சி முதல் இடத்தில் உள்ளது. மென் முடிகள் கொண்ட வெளிநாட்டு நாய் ரகங்களைதான் செல்லப்பிராணி உரிமையாளர்கள் அதிகம் விரும்புகிறார்கள். ஹஸ்கீ, செயின்ட் பெர்னார்ட், ஜெர்மன் ஷெப்பர்ட், லாபராடர்கள், டாபர்மேன், டெர்ரியர், பீகிள், புல்லி குட்டா (இந்திய பெரிய நாய்), ஷிட்சு, பக் மற்றும் பிட்புல் ரகங்களை விரும்புகின்றனர்.

இவற்றை சொந்தமாக வைத்திருப்பது சமூக அந்தஸ்தின் அடையாளமாக கருதப்படுகிறது.

மென் முடிகள் கொண்ட இந்த செல்லப்பிராணிகளை பராமரிப்பது சுலபமல்ல. அவற்றிற்கு தடுப்பூசிகள் போட வேண்டும். முடியை தினமும் வார வேண்டும்.

சென்னையில் உள்ள செல்லப்பிராணிகளுக்கான சலூன்கள் சிகையலங்காரத்துக்கு ரூ.3,000 முதல் ரூ.20,000 வரை கட்டணம் வசூலிக்கின்றன. சைபீரிய ஹஸ்கி ரக நாயின் விலை ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.45 ஆயிரம் வரை இருக்கிறது. சீனாவை சேர்ந்த ஷவ் ரக நாய்களும் சென்னையில் உள்ளன. இதன் விலை சுமார் ரூ.80 ஆயிரம்.

மிகவும் பிரபலமாக இருந்தாலும், இறக்குமதி செய்யப்படும் நாய் ரகங்கள் நம் நாட்டிற்கு ஏற்றவை அல்ல. “டெங்கு போன்ற உண்ணி காய்ச்சல் சென்னையில் உள்ள நாய்களிடம் அதிகம் பரவி வருகிறது. ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்கள் மிகவும் அடர்த்தியான ரோமம் கொண்டவை என்பதால், அவற்றின் தோலில் உள்ள உண்ணிகளை கண்டெடுப்பது கடினமான காரியமாக உள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட நாய்கள் வெயில் தாக்குதல் நோயினால் அதிகம் பாதிக்கப்படுகின்றன.

எனவே ஹஸ்கீகள் போன்ற நாய்களை குளிரூட்டப்பட்ட அறைகளில் வளர்க்க வேண்டியுள்ளது. வெளிநாட்டு நாய் ரகங்களின் எண்ணிக்கை இங்கு மிகக் குறைவாக இருப்பதால், உள்ளினச்சேர்க்கைக்கு இது வகை செய்து அதன் விளைவாக பரம்பரை நோய்கள் உருவாகின்றன. நம்முடைய வெப்ப மண்டல வானிலை சூழல்களுக்கு அவை பொருத்தமற்றவை. அவற்றின் சராசரி ஆயுட்காலங்களும் குறைந்து வருகிறது” என்கிறார் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறையின் முன்னாள் துணை இயக்குனரும், கால்நடை மருத்துவருமான டாக்டர் ஜி.பால் பிரெட்ரிக்.

வணிக ரீதியாக இனப்பெருக்கம் செய்யும் நோக்கத்தில், வெளிநாட்டு நாய்களை இறக்குமதி செய்வதை, 2016-ல் இந்திய அரசு தடை செய்தது. பாதுகாப்பு துறை மற்றும் ஆராய்ச்சிகளுக்கு மட்டும் இதில் விலக்கு அளிக்கப்பட்டது.

இகுவானா (பல்லி வகை), மலைப்பாம்பு, சர்க்கரை கிளைடர், வெள்ளெலி, முள்ளெலி, கழுகு, பாரசீக பூனை, அபூர்வ மீன் ரகங்கள் போன்ற வெளிநாட்டு செல்லப்பிராணிகளுக்கான தேவை அதிகரித்து வருவதால், தமிழகத்திற்கு இவை சட்ட விரோதமாக கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுவது அதிகரித்துள்ளது. மக்காவ் கிளி, காக்கட்டூ கிளி போன்ற பறவைகள், அவற்றின் அழகான சிறகுகளுக்காக விரும்பப்படுவதால், சுமார் ரூ.1.5 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை விற்பனையாகின்றன. பர்மா ரக மலைப்பாம்பு சுமார் ரூ.3 லட்சம் வரை விலையாகிறது. மிக அபூர்வமான அல்பினோ இகுவானா ரூ.2 லட்சம் வரை விலையாகின்றது.

“வேறு யாரிடமும் இல்லாத செல்லப்பிராணி ரகங்களை சொந்தமாக்கிக்கொள்ள பலரும் விரும்புகின்றனர். இதனால் தங்களுக்கு பொருத்தமற்ற செல்லப்பிராணிகளை வாங்குகின்றனர். சினிமாக்கள், யு டியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் வீடியோக்களை பார்த்த பின், ஒரு உந்துதலில் 90 சதவீதத்தினர் வெளிநாட்டு செல்லப்பிராணிகளை வாங்குகின்றனர்” என்கிறார் சென்னையில், வெளிநாட்டு செல்லப்பிராணிகள் விற்பனையகத்தை நடத்தும் கிரியென்.

“வெளிநாட்டு செல்லப்பிராணிகளை எப்படி பராமரிப்பது, அதற்கு எப்படி உணவு அளிப்பது என்பதை அறிந்து கொள்ளாமல் இருக்கும் பலரும், அவற்றை தவறாக நடத்துகின்றனர் அல்லது அலட்சியப்படுத்துகின்றனர். இதனால் ஓராண்டிலேயே அந்த செல்லப்பிராணிகள் இறக்கின்றன அல்லது அவற்றை அதன் உரிமையாளர்கள் திருப்பி அளிக்கின்றனர் அல்லது விடுதலை செய்கின்றனர். குளத்தை சுத்தப்படுத்தும் மீன்கள், கர் முதலை ரக மீன்கள், அரபைமா, பிளெக்கோ மற்றும் சிவப்பு காது சறுக்கும் ஆமைகள் போன்ற வேகமாக பரவும் இனங்களை செங்கல்பட்டு, வேளச்சேரி ஏரிகளில் விடுகிறார்கள். இதனால் உள்ளூர் ரக மீன்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது.

இகுவானாக்கள் ஒரு காலத்தில் மிகவும் விரும்பி வளர்க்கப்பட்டன. ஆனால் அவை சில சமயங்களில் முரட்டுத்தனமாக நடப்பதாலும், அவற்றின் உரிமையாளர்களுடன் பிணைப்பை ஏற்படுத்திக்கொள்வதில்லை என்பதாலும், தப்பி செல்ல முயலும் என்பதாலும் இன்று முன்பு போல் பிரபலமாக இல்லை” என்கிறார் கிரியேன்.

கடந்த ஆண்டு, 7 ஆயிரத்துக்கும் அதிகமான சிவப்பு காது சறுக்கும் ஆமைகள் சென்னை விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டன. பிப்ரவரியில் ஒரு சிறுத்தை குட்டியும், மார்ச்சில் ஒரு ஆப்பிரிக்க கொம்பு குழி விரியன் பாம்பும், 2 காண்டாமிருக இகுவானாக்களும், 3 பாறை இகுவானாக்களும், 22 எகிப்திய ஆமைகளும், 4 நீல நாக்கு ஸ்கிங்க்குகளும், 3 பச்சை மர தவளைகளும் கைப்பற்றப்பட்டன.

வன விலங்குகள் பாதுகாப்பு சட்டம், 1972-ல் இருக்கும் ஓட்டைகளை, வெளிநாட்டு செல்லப்பிராணிகள் துறையினர் தவறாக பயன்படுத்துகின்றனர். “இந்த சட்டம் சுமார் 1,800 இந்திய ரக உயிரினங்களை மட்டுமே பாதுகாக்கிறது. ஆனால் அழிவை எதிர்நோக்கியுள்ள சுமார் 35 ஆயிரம் உயிரினங்களுக்கு பாதுகாப்பு எதுவும் இதில் அளிக்கப்படவில்லை. இவற்றை உலகெங்கும் விற்பனை செய்வதை ‘ஆபத்தை எதிர்நோக்கியுள்ள வன விலங்குகள், தாவரங்கள் மற்றும் இதர இனங்களின் பன்னாட்டு வியாபார ஒப்பந்தத்தின்’ கீழ் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே இவை இந்தியாவிற்குள் நுழையாமல் தொடக்க நிலையிலேயே தடுத்து நிறுத்துவதற்கு விசாரணை அமைப்புகளால் முடியும். ஆனால் இங்கு ஏதாவது ஒரு வகையில் கடத்தப்பட்டு உள்ளே கொண்டுவரப்பட்டுள்ளவற்றின் விற்பனையை தடுக்க முடியாது” என்கிறார் டி.ஆர்.எப்.எப்.ஐ.சி அமைப்பின் (மிருகங்கள் மற்றும் தாவரங்களின் வர்த்தக ஆவணங்கள் ஆராய்ச்சி அமைப்பு) தலைவரான டாக்டர் சாகேத் கடோலா, இ.கா.ப.“சென்னையில் ஏறக்குறைய 95 சதவீத செல்லப்பிராணிகள் கடைகளில் வர்த்தகம் தொடர்பாக, ஒழுங்கான ஆவணங்கள் பராமரிக்கப்படுவதில்லை. வெளிநாட்டு செல்லப்பிராணிகளை வாட்ஸ்அப் மூலம் பாதி விலைக்கு அவை விற்பனை செய்கின்றன” என்கிறார் கிரியென்.

“அமலில் இருக்கும் சட்டங்களை வலுப்படுத்துவது, தேவைகளை குறைப்பது, மக்களின் நடத்தையில் மாற்றங்கள், அமலாக்க அமைப்புகளின் ஆள் பலத்தை கூட்டுவது, பல்வேறு அமலாக்க அமைப்புகளிடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்துவது போன்றவற்றின் மூலம் அவற்றை பாதுகாக்க முடியும்” என்கிறார் டாக்டர் சாகேத்.

உள்நாட்டு இனங்களின் கதி என்ன?

படிப்படியாக உள்நாட்டு நாய் ரகங்கள் தமிழகத்தில் மீண்டும் பிரபலமாகி வருகின்றன. சிப்பிப்பாறை, ராஜபாளையம், கோம்பை மற்றும் கன்னி ரக நாய்கள் முன்பு மதுரை மற்றும் திருநெல்வேலி அரச குடும்பங்களினால் வளர்க்கப்பட்டன. பெரும்பாலும் இவை வேட்டைக்கு பயன்படுத்தப்பட்டன. ஆனால் பல வருடங்களாக இவற்றை புறக்கணித்ததாலும், இறக்குமதி ரக நாய்களுக்கு முன்னுரிமை அளித்ததாலும், உள்நாட்டு நாய் ரகங்கள் காணாமல் போயின.

“பன்னாட்டு நாய் கண்காட்சிகளில், இந்திய நாய் இனங்கள் பங்கெடுக்க ஆகும் செலவுகளை பாதியாக குறைத்து, அதன் மூலம் அவற்றை சென்னை நாய்கள் சங்கம் மற்றும் இந்திய நாய்கள் சங்கங்களில் வளர்த்தெடுக்கிறோம்” என்கிறார் சென்னை நாய்கள் சங்கத்தின் தலைவரான சி.வி.சுதர்சன். “உள்நாட்டு நாய் ரகங்களுக்கு எப்.சி.ஐ. சான்றிதழ் பெற விண்ணப்பம் செய்திருக்கிறோம். அடுத்த ஆண்டு சான்றிதழ்கள் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கிறோம். இதன் மூலம் இவற்றிற்கு உலகெங்கும் அங்கீகாரம் கிடைக்கும். சிப்பிப்பாறை மற்றும் கன்னி நாய்கள் மிக வேகமாக ஓடும் திறன் பெற்றவை என்பதால் அவற்றை வளர்க்க பெரிய இடம் தேவை. ராஜபாளையம் மற்றும் கோம்பை நாய்களை நகரங்களில் உள்ள அடுக்ககங்களில் வசிப்பவர்கள் வளர்க்க முடியும்” என்றும் அவர் கூறுகிறார்.

“சென்னையில் சுமார் 200 உள்நாட்டு நாய் இனங்கள் உள்ளன” என்கிறார் உள்நாட்டு நாய் இனங்களுக்கான சங்கம் மற்றும் அண்ணாமலை நாய்பட்டி சங்கத்தின் தலைவரான டாக்டர் வி.எஸ்.ரவி. “உள்நாட்டு நாய் இனங்கள் நம்முடைய வெப்ப மண்டல வானிலையை தாக்குப்பிடிக்கும் அளவுக்கு வலிமை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி பெற்றவை” என்கிறார் டாக்டர் பிரெட்ரிக்.

இதுவரை புறக்கணிக்கப்பட்டிருந்த இந்திய கலப்பின நாய்கள், இப்போது பிரபலமடைந்து வருகின்றன. 

தமிழகத்தின் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் இப்போது இந்திய கலப்பின நாய்களை செல்லப்பிராணிகளாக வளர்க்கின்றனர். 

வெளிநாட்டு பயணிகளின் கவனத்தையும் இவை ஈர்த்துள்ளன. 

2017-ல் உக்ரைன் நாட்டை சேர்ந்த ஒரு தம்பதியினர் ஒரு இந்திய கலப்பின நாயை தத்தெடுத்து, அதற்கு ‘சப்பாத்தி’ என்று பெயரிட்டுள்ளனர். 

டிராவலிங் சப்பாத்தி என்று ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கை இதற்கு தொடங்கி, உலகில் புகழ் பெற்ற சுற்றுலா தளங்களில் அதை புகைப்படம் எடுத்து, அதன் மூலம் இந்திய கலப்பின நாய்களை பற்றிய விழிப்புணர்வை பரப்புகின்றனர். 

ஆசிரியரின் தேர்வுகள்...