‘பிரெஞ்சு பிரை’, ‘உருளை சிப்ஸ்’ உருவான கதை


‘பிரெஞ்சு பிரை’, ‘உருளை சிப்ஸ்’ உருவான கதை
x
தினத்தந்தி 6 Dec 2019 11:00 PM GMT (Updated: 6 Dec 2019 12:02 PM GMT)

உருளைக்கிழங்கை ருசிக்காதவர்கள் யாரும் இருக்கமுடியுமா?, அலாதியான சுவையும், அதில் இருக்கும் ஊட்டச்சத்துகளும், நம்மை மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டுகிறது.

பூமியில் உருளைக் கிழங்காக விளைந்து, பிரெஞ்சு பிரை, சிப்ஸ்.. என பல வடிவங்களில் மாறும் உருளைக் கிழங்கு பற்றி சில விஷயங்களை தெரிந்து கொள்வோம்...

உருளைக் கிழங்கின் தாயகம் பெரு. 16-ம் நூற்றாண்டில்தான் ஐரோப்பாவுக்கு அறிமுகமானது. ஐரோப்பியப் பயணிகள் மூலம் கடல் கடந்து, ஆசிய நாடுகளுக்கும் வந்து சேர்ந்தது.

உலகின் மிக நீளமான மலைத்தொடரான ஆண்டிஸ் மலைப் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகை உருளைக் கிழங்குகள் பயிரிடப்படுகின்றன. சிவப்பு, வெள்ளை, மஞ்சள், இளஞ்சிவப்பு, நீலம் போன்ற வண்ணங்களிலும் பலவித அளவுகளிலும் உருளைக் கிழங்குகள் விளைகின்றன.

130 ஆண்டுகளுக்கு முன்பு அலாஸ்காவில் தங்க வேட்டை நடந்தபோது, தங்கத்தைக் கொடுத்துவிட்டு உருளைக் கிழங்கை அந்த எடைக்கு வாங்கிக்கொண்டார்கள்! நிறைய சத்துகள் அதிகம் இருப்பதால், தங்கத்தைப் போல மதிப்பு மிக்கதாக உருளைக் கிழங்கை அலாஸ்கா மக்கள் கருதினார்கள்.

பிரெஞ்சு மன்னர் லூயி பிலிப் ஒருநாள் இரவு உணவுக்குத் தாமதமாக வந்தார். ஏற்கனவே பொரிக்கப்பட்ட உருளைக் கிழங்குகளை எடுத்து மீண்டும் சூடான எண்ணெயில் பொரித்துப் பரிமாறினார் சமையல்காரர். உருளைக் கிழங்குத் துண்டுகள் உப்பி, பலூன்களைப் போல இருந்தன. அந்தச் சுவை மன்னருக்கு மிகவும் பிடித்துப் போனது. அதிலிருந்து பிரெஞ்ச் பிரை என்ற புதிய உணவு அறிமுகமானது.

அமெரிக்காவின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான கார்னெலிஸ் வாண்டர்பில்ட், 1853-ல் உருளைக் கிழங்கு மிகவும் குண்டாக நறுக்கப்பட்டிருப்பதாகக் கூறிச் சமையலறைக்குத் திருப்பி அனுப்பினார். சமையல் கலைஞர் காகிதத்தைப் போல மிக மெல்லியதாக உருளைக் கிழங்குகளை நறுக்கி, எண்ணெயில் பொரித்து, உப்பு தூவிக் கொடுத்தார். சாப்பிட்ட அனைவரும் சுவையில் மயங்கிப் போனார்கள். இப்படித்தான் சிப்ஸ் உருவானது. இன்று பிரெஞ்ச் பிரையும், சிப்ஸும் உலகம் முழுக்கப் பரவிவிட்டன.

1995-ம் ஆண்டு விண்வெளியில் வளர்ப்பதற்காக நாசா மூலம் உருளைக் கிழங்குச் செடி அனுப்பி வைக்கப்பட்டது. நீண்ட காலம் விண்வெளியில் தங்குபவர்களுக்காகவும் எதிர்காலத்தில் விண்வெளிக்குச் செல்பவர்களுக்காகவும் இந்தப் பரிசோதனை நடத்தப்பட்டது. பூமியிலிருந்து விண்வெளிக்குச் சென்ற முதல் காய் உருளைக் கிழங்கு என்ற சிறப்பையும் பெற்றது.

உலகில் 155 நாடுகளில் உருளைக் கிழங்கு பயிரிடப்படுகிறது. சராசரியாக ஓர் அமெரிக்கர் ஓராண்டில் 56 கிலோ உருளைக் கிழங்கைச் சாப்பிடுகிறார்! ஜெர்மானியர்கள் இதைவிட அதிகமாகச் சாப்பிடுகிறார்கள்.

பெரு நாட்டில் வசித்த இன்கா மக்கள் உருளைக் கிழங்கைப் பல விதங்களிலும் பயன்படுத்தி வந்தனர். உடைந்த எலும்புகள் மீது உருளைக் கிழங்கை நறுக்கிக் கட்டிவைத்தனர். உருளைக் கிழங்கைச் சாறு எடுத்து முகப் பொலிவுக்குப் பூசினர். தொண்டை வலிக்கு உருளைக் கிழங்கைச் சூடுபடுத்தி ஒத்தடம் கொடுத்தனர்.

Next Story