இப்படியும் வேலை இருக்கிறதா...? இதற்கு லட்சக்கணக்கில் சம்பளமா...!


இப்படியும் வேலை இருக்கிறதா...? இதற்கு லட்சக்கணக்கில் சம்பளமா...!
x
தினத்தந்தி 6 Dec 2019 11:15 PM GMT (Updated: 6 Dec 2019 12:18 PM GMT)

இந்தியாவில் வேலை கிடைப்பதே குதிரை கொம்பாக பார்க்கப்படும் சூழலில், இந்தியர்களை கடுப்பேற்றுவதற்காகவே சில நாடுகளில் சில வேலைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது போலும்.

ஆம்...! நம்ம இந்தியாவில் அடுத்தவர் வேலையை சேர்த்து செய்தாலும், 20 ஆயிரம் ரூபாயைதான் சம்பளமாக தருவார்கள். ஆனால் ஒருசில உலக நாடுகளில், ஒன்றும் இல்லாத வேலைக்கு கூட, லட்சக்கணக்கில் சம்பளத்தை அள்ளி வீசுகிறார்கள். அப்படி, நம்மை ஆச்சரியப்படுத்தும் சில வேலைகளையும், அந்த வேலைகளுக்கு கொடுக்கப்படும் சம்பள தொகையையும் பார்க்கலாம் வாங்க....!

கரடியை கவனிக்க...

கரடியை சந்தோஷமாக பராமரிக்கவேண்டும், இதுதான் வேலை. நிஜக்கரடிதான். ஆனால் பெரிய கரடி இல்லை. குட்டி பாண்டா கரடிகள். சீனாவின் பாண்டா பாதுகாப்பு மையத்தில்தான் இந்த வேலை. குட்டிக்கரடிகளை சந்தோஷமாக பராமரிக்கவேண்டும். குட்டி கரடிகளுக்கு உதவியாளராக இருக்க வேண்டும் என்றுகூட சொல்லலாம். சம்பளம் சுமார் 15 லட்சம் ரூபாய். மேற்படி ஊக்கத்தொகையும் தருகிறார்களாம். பிறகு என்ன, கரடிகளுக்கு உதவியாளராக மட்டுமின்றி, ஆயாம்மா வேலைக்கூட செய்யலாம்.

படுத்து தூங்க...

அமெரிக்காவின் நாசா ஆராய்ச்சி மையம் வித்தியாசமான ஒரு வேலையை அறிவித்து இருந்தது. சுமார் 25,000 பேர் விண்ணப்பித்து இருந்த வேலையில், இறுதியாக ஐவானிக் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். நாசா தரும் கட்டிலில் 70 நாட்கள் தொடர்ச்சியாக படுத்துத் தூங்க வேண்டும். அந்த அறையைவிட்டு வெளியே செல்ல முடியாது. இதற்கு ஐவானிக்குக்கு பேசப்பட்ட சம்பளம் 10 லட்சம் ரூபாய்தான்!

கடல் கன்னியாக நடிக்க...

கதை புத்தகத்தில் கடல்கன்னி பற்றி படித்து இருப்போம். அமெரிக்காவில் சுமார் ஆயிரம் பேர் கடல் கன்னியாக வேலை பார்க்கிறார்கள். 22 கிலோ எடையிலான மீன் வாலை மாட்டிக்கொண்டு தண்ணீரில் மிதக்கவேண்டும். இதுதான் வேலை. ஆரம்பத்தில் ஒரு மணி நேரத்துக்கு 1,800 ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தவர்கள், இப்போது ஹாலிவுட் பிரபலங்களான ஜெஸ்ஸிகா அல்பா, ஜஸ் இன் டிம்பர்லேக் போன்றவர்களின் வீட்டு விழாக்களில் பல லட்சம் ரூபாய்க்கு மிதக்கிறார்களாம்.

ஒயின் குடிக்க...

காலையில் எழுந்ததுமே, சிலர் விதவிதமான ஒயின் பாட்டில்களுடன் வந்து, ‘சார்.. இது எப்படி இருக்குன்னு குடிச்சுட்டுச் சொல்லுங்களேன்’னு எழுப்பினா எப்படி இருக்கும்? அதுதான், ஒயின் சுவை பார்ப்பவரின் வேலை. தங்குவதற்கு இடம், இலவச வை-பை வசதியும் உண்டு. ஏனெனில், ஒயினைக் குடித்துப் பார்த்த அனுபவத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துகொள்ள வேண்டும். சம்பளம் ரூ.7 லட்சம்!

மெத்தையில் படுத்து உருள...

பெரும்பாலான நாடுகளில் பகுதி நேரமாகக் கிடைக்கும் வேலை இது. மாதத்திற்கு ஒருநாள் வேலை பார்த்தால் போதும். சம்பளமாக ரூபாய் 75 ஆயிரம் வரை கிடைக்கும். மெத்தை நிறுவனங்கள் தயாரித்திருக்கும் புதிய வகை சொகுசு மெத்தையைப் பயன்படுத்திப் பார்த்து, நிறை குறைகளைச் சொல்ல வேண்டியது முக்கியமான வேலை. கூடுதல் வேலையாக ‘இந்த மெத்தையில் தூங்கும்போது தூக்கம் எப்படி இருக்கிறது?’ போன்ற சர்வே கேள்விகளுக்குப் பதில் சொல்லிவிட்டு, சம்பளத்தை வாங்கிக்கொண்டு கிளம்பலாம்!

சறுக்கி விளையாடி மகிழ...

சுற்றுலாத் தலங்கள், பூங்காக்கள், பெரிய பெரிய சொகுசு விடுதிகளில் சறுக்கிக்கொண்டே தண்ணீரில் விழும் ‘வாட்டர் ஸ்லைட்’ டைப் பரிசோதிப்பதுதான் வேலை. ஒருமுறை, இருமுறை அல்ல எத்தனை முறை வேண்டுமானாலும் சறுக்கி விளையாடலாம். ஆட்டம் முடிந்ததும், ‘வாட்டர் ஸ்லைடின்’ உயரம் போதுமானதாக இருக்கிறதா, வேகம் எப்படி, செலுத்தும் தண்ணீரின் அளவைக் குறைக்கலாமா, அதிகரிக்கலாமா? என்பதை சொல்வதற்கே இருபது லட்சம் சம்பளமாம்!

சாக்லேட்டை சுவைக்க...

சிறுவர்களுக்குத்தான் இந்த வேலையில் முன்னுரிமை. பகுதி நேர வேலைக்கே ‘பல்க்’கான சம்பளம் கைக்கு வரும். சாக்லேட் நிறுவனங்கள் மட்டுமல்ல, நொறுக்குத் தீனிகளை உற்பத்தி செய்யும் பல்வேறு நிறுவனங்கள் இந்த வேலைக்கு ஆட்களைத் தேர்வு செய்வார்கள். புதிதாகத் தயாரித்த நொறுக்கு தீனியை அல்லது கொஞ்சம் மாற்றியமைத்த சாக்லேட், கேக், ஸ்நாக்ஸ் வகைகளைத் தின்று வாசனை, சுவை எப்படி இருக்கிறது எனக் கமெண்ட் கொடுக்க வேண்டியதுதான் வேலை.

கூகுளுக்காக புகைப்படம் எடுக்க...

‘கூகுள் மேப்’பில் பயன்படுத்துவதற்காகப் புகைப்படங்களை எடுப்பதுதான் இந்த வேலை. வரலாற்றுப் பிரசித்திபெற்ற இடங்கள், முக்கியமான கட்டிடங்கள், லேண்ட் மார்க், வணிக வளாகங்கள் எனக் கண்ணில் பட்டதை புகைப்படம் எடுக்கலாம். ‘ஸ்ட்ரீட் வியூ’ வசதியும் அறிமுகமாகிவிட்டதால், தெருத் தெருவாக அலைய வேண்டிய அவசியமும் இருக்கும். புகைப்படப் பிரியர்களுக்கு இது சுலபமான வேலைன்னு சொல்லியாத் தெரியணும்?

இதே மாதிரி பலதரப்பட்ட வேலை இருக்கிறதாம்.

பெயிண்ட் அடிக்க, அதை கவனிக்க...

சுவற்றில் பெயிண்ட் அடித்ததும் என்றாவது அது காயும்வரை உட்கார்ந்து பார்த்து இருப்போமா? அப்படிப் பார்ப்பதும் ஒரு வேலைதான். ஆனால் இங்கு இல்லை, இங்கிலாந்தில். பெயிண்ட் காய்ந்ததும் அது பெயர்ந்து விழுகிறதா இல்லை அப்படியே ஒட்டிக்கொண்டதா என்பதை சோதித்து சொல்ல வேண்டும். இதற்கு வெளியே சொல்ல முடியாத அளவு சம்பளமாம்!

Next Story