நிற்பதுவே.. நடப்பதுவே.. இருப்பதுவே..


நிற்பதுவே.. நடப்பதுவே.. இருப்பதுவே..
x
தினத்தந்தி 8 Dec 2019 1:00 AM GMT (Updated: 7 Dec 2019 12:45 PM GMT)

உடலில் வலி எதுவும் இன்றி வாழவேண்டும் என்றால், உடல் இயக்க முறைகளை சரிசெய்துகொள்ளவேண்டும்.

பெரும்பாலானவர்கள் நடப்பது, இருப்பது, படுத்து தூங்குவது போன்றவைகளில் சரியான உடல் இயக்க விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. அதனை சரியாக பின்பற்றினால் வலி எதுவுமின்றி வாழமுடியும்.

சரியாக உட்காருவது எப்படி?

உட்கார்ந்திருப்பதுதான் உடலுக்கு ஏற்றது, நல்லது என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால்  நின்று  கொண்டிருக்கும் போதுதான் உடல் தனது இயக்கத்தை சிறப்பாக செய்கிறது. இதயம், தமனிகள், நரம்புகள், இரைப்பை போன்றவை அனைத்தும் தடை எதுவும் இல்லாமல் செயல்படுவது, நாம் நிற்கும்போதுதான். நிற்பது மூலம்தான் கால் தசைகளும் வலுப்பெறுகின்றன.

உட்கார்ந்திருக்கும்போது முதுகின் அடிப்பகுதிக்கு அதிகமான அழுத்தம் ஏற்படுகிறது. அப்போது உடலின் முழு எடையையும் முதுகெலும்புதான் தாங்குகிறது. அதன் மூலம் லம்பார்டிஸ்க் மென்மை குறைந்து கடினமாகும். டிஸ்க்கின் இடையில் நரம்புகள் சிக்கி நெரி படுவதும், டிஸ்க் வெளியே தள்ளும் சூழலும் ஏற்படலாம். அதனால் டிஸ்க் ப்ரோலாப்ஸ், டிஸ்க் பல்ஜிங் போன்றவை ஏற்படும்.

சரியான முறையில் உட்கார்ந்திருக்காவிட்டால் கழுத்து எலும்புகளுக்கு தேய்மானம் தோன்றும். அது கழுத்து, தோள், கைப்பகுதிகளில் வலியை உருவாக்கும். நாம் உட்கார்ந்திருக்கும்போது கொழுப்பினை சக்தியாக மாற்றும் என்சைம்களின் செயல்பாடு மந்தநிலைக்கு செல்லும். அதை தொடர்ந்து உடலில் ஏற்படும் சில மாற்றங்களால் ரத்தத்தில் இருக்கும் குளுகோசை கட்டுப்படுத்தும் இன்சுலின் செயல்பாடு தாமதப்படுத்தப்பட்டு சர்க்கரையின் அளவு உயர்வதோடு, கொலஸ்ட்ரால் அளவும் அதிகரிக்கும்.

தொடர்ச்சியாக உட்கார்ந்து வேலைசெய்யும்போது கால் மற்றும் இடுப்பு பகுதி தசைகள் பலவீனமாகும். அதனால் வலி தோன்றும். இருந்து வேலைசெய்யும்போது கலோரி செலவாவதும் குறைந்துபோய்விடும். நடக்கும்போது மூன்று கலோரி செலவானால், உட்கார்ந்து வேலைசெய்யும்போது ஒரு கலோரி மட்டுமே செலவாகும். இதனால் உள் உறுப்புகளின் இயக்கம் குறைவதோடு, உடல் எடையும் அதிகரித்துவிடும். அதிக நேரம் உட்கார்ந்திருந்தால் கால்களில் ரத்தக்கட்டு ஏற்பட்டு அது வெரிக்கோஸ் வெயின் என்ற நோய் தோன்ற காரணமாகிவிடும்.

அதனால் அதிக நேரம் உட்கார்ந்தே வேலைபார்க்கக்கூடாது. சரியான நிலையில் உட்காரவும் வேண்டும். உட்கார்ந்தே வேலைபார்ப்பவர்கள் ஒவ்வொரு 45 நிமிடங்களுக்கு ஒருமுறையும் எழுந்து நிற்பது, சிறிது நேரம் நடப்பது, உடல் முழுவதற்கும் ஏதாவது வேலைகொடுப்பது போன்றவைகளை செய்யவேண்டும்.

சரியாக படுத்து தூங்குவது எப்படி?

உணவு, உடற்பயிற்சி போன்றவைகளில் கவனம் செலுத்துகிறவர்கள்கூட படுக்கும் முறையில் கவனம் செலுத்துவதில்லை. படுக்கையில்தான் உடல் முழு ஓய்வினை எடுக்கிறது. உடற்பயிற்சியின்போது முழுமையாக இயங்கும் தசைகள், உட்கார்ந்திருக்கும்போது இயக்கத்தை ஓரளவு குறைக்கிறது. படுக்கும்போது மிகக் குறைந்த அளவிலே இயங்குகிறது.

தூக்கம் உடல் ஆரோக்கியத்திற்கும், மன ஆரோக்கியத்திற்கும் மிக அவசியம். தினமும் ஒரே மாதிரியான நேரத்தில் படுக்கச்சென்றாலும், தூங்குவதற்கு போதுமான நேரம் கிடைத்தாலும் சிலரால் நிம்மதியாக தூங்கமுடியாது. அவர்கள் படுக்கும் முறை சரிதானா என்று பரிசீலிக்கவேண்டும்.

தலையணை இல்லாமலே தூங்கலாமா? என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. கழுத்து வலி இருப்பதாக கருதுகிறவர்களும் தலையணையை தவிர்க்கவேண்டியதில்லை. கனமான தலையணை கூடாது. இரண்டு, மூன்று தலையணை வைப்பதும் சரியல்ல. மென்மையான, உயரம் குறைந்த தலையணை ஏற்றது. மல்லாந்து தூங்கும்போதும், சரிந்து தூங்கும்போதும் கழுத்துக்கு தேவையான தாங்கும் தன்மையை தலையணை தருகிறது.

நன்றாக தூங்கினாலும் சிலர் காலையில் எழும்போது சோர்வடைந்து காணப்படுவார்கள். அவர்கள் தங்கள் தலையணையில் கவனம் செலுத்தவேண்டும். தலையின் மேல்பாகத்திற்கு கொண்டுபோய் தலையணையை வைக்கக்கூடாது. வைத்தால், சுவாசத்தி்ல் தடை உருவாகி தூக்கத்திற்கு இடைஞ்சல் உருவாகும். இந்த இடைஞ்சலை நீங்கள் உணராமல் உருண்டும், புரண்டும் படுத்துக்கொண்டே இருப்பீர்கள். இதனால் காலையில் விழிக்கும்போது உடல் சோர்வு தோன்றும்.

படுக்கையிலும் கவனம் செலுத்தவேண்டும். படுக்கை கெட்டியானதாக இருக்கக்கூடாது. மேடு பள்ளமாக இருப்பதும் ஆகாது. விலை உயர்ந்த படுக்கை வாங்கினால் ஆழ்ந்து போதுமான அளவு நிம்மதியாக தூங்கிவிடலாம் என்று கருதுவது தவறு. சரியான முறையில் படுத்தால்தான் நிம்மதியாக தூங்கமுடியும்.

சரியாக நடப்பது எப்படி?

எல்லோரும் குழந்தைப் பருவத்தில் இருந்தே நடந்துகொண்டிருப்பதால், தங்கள் நடையே சரியான நடை என்று கருதிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் உடலில் பல்வேறு பாகங்களில் அவ்வப்போது வலி தோன்றுவதாகவும் சொல்வார்கள். மூட்டுவலி, மூட்டு தேய்மானம், முதுகுவலி, பாதங்களில் வலி போன்றவை இருந்துகொண்டிருந்தால், உங்கள் நடை சரியான முறையில் அமையவில்லை என்று எடுத்துக்கொள்ளலாம்.

நோயாளிகளுக்கும், உடல் எடை அதிகமாக இருப்பவர்களுக்கும் நடைப் பயிற்சி ஏற்றது. இதில் உடல் எடை அதிகமாக இருப்பவர்களில் சிலர் முதல் நாள் நடைப் பயிற்சியிலே ‘நம்மால முடியலேப்பா’ என்று அலுத்துக்கொள்வார்கள். அவர்கள் சரியான முறையில் நடக்கவில்லை என்பதுதான் அந்த அலுப்புக்கு காரணம்.

நடைப் பயிற்சியை தொடங்குவதற்கு முன்னால் நிமிர்ந்து நேராக நில்லுங்கள். தலை உயர்ந்து நேராக நிற்கவேண்டும். முன்னும், பின்னுமாக அசையக்கூடாது. உயரமான பகுதியில் ஏறும்போது மட்டும்தான் உடல் முன்னோக்கி வளையவேண்டும். சமதளத்தில் நடக்கும்போது அவ்வாறு வளைந்தால் அது சரியான நடை அல்ல.

கண்கள் நேராக பார்க்கவேண்டும். பார்வைபடும் தூரத்தை நோக்கி வேகமாக நடக்கவேண்டும். உயர்ந்திருக்கும் தோள்களை இயல்பான நிலைக்கு கொண்டு வாருங்கள். வயிற்றை சற்று உள்நோக்கி இழுத்துப்பிடியுங்கள். அப்படி இழுத்துப் பிடிக்காமல் வயிறு தளர்ந்துபோயிருந்தால், முதுகு பின்னோக்கி வளைந்திருக்கும் நிலை உருவாகும். நன்றாக மூச்சை இழுத்துவிட்டபடி நடைப்பயிற்சியை தொடங்கவேண்டும். இதே முறையை பின்பற்றி தொடர்ந்து நடைப்பயிற்சியை மேற்கொள்ளவேண்டும்.

Next Story