சிறப்புக் கட்டுரைகள்

தீர்வு காணா பாலியல் குற்றங்கள்! தீர்வாகுமா என்கவுண்ட்டர்கள்? + "||" + Unresolved Sexual Offenses! Is the solution for encounters?

தீர்வு காணா பாலியல் குற்றங்கள்! தீர்வாகுமா என்கவுண்ட்டர்கள்?

தீர்வு காணா பாலியல் குற்றங்கள்! தீர்வாகுமா என்கவுண்ட்டர்கள்?
தெலுங்கானா என்கவுண்ட்டரும் மனித உரிமை ஆர்வலர்களிடம் பலத்த எதிர்ப்பை பெற்றுள்ளதையும் நாம் புறக்கணிக்க முடியாது. சட்டம், நீதிமன்றம், விசாரணை எதுவுமே தேவையில்லை.
பாலியல் குற்ற வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள், குற்றவாளிகளுக்கு எதிராக வழக்குகள் தொடர்வதும், அதில் நீதி பெறுவதும் நம் நாட்டில் இன்னும் பெரும் சவாலாகவே உள்ளது. நீதிவழிமுறைகள் எளிதாக்கப்பட வேண்டும். அத்துடன், விரைவு நீதிமன்றங்களை விரைந்து அமைப்பதும், பாலியல் குற்ற புலன்விசாரணையை இரண்டு மாதத்திற்குள் முடித்து விரைந்து தீர்வு காண்பதுமான சட்ட அமலாக்கம் செயல்வடிவம் பெற வேண்டியதும் காலத்தின் கட்டாயமாகும்.

தெலுங்கானா என்கவுண்ட்டரும் மனித உரிமை ஆர்வலர்களிடம் பலத்த எதிர்ப்பை பெற்றுள்ளதையும் நாம் புறக்கணிக்க முடியாது. சட்டம், நீதிமன்றம், விசாரணை எதுவுமே தேவையில்லை. போலீசாரின் துப்பாக்கியே இனி தீர்ப்பு எழுதும் என்றால், நீதிபரிபாலனமுறை மதிப்பிழந்துவிடாதா? என்று மனித உரிமை அமைப்புகள் கேள்வி எழுப்பி உள்ளன.

“இந்தியாவின் 31 மாநிலங்களில் பெண் குழந்தைகளுக்கு எதிரான 1,66,882 பாலியல் வழக்குகள் தீர்வு காணாமல் தேங்கி யுள்ளன...”

இந்த தகவலை மத்திய உள்துறையின் இணை மந்திரி கிஷன்ரெட்டி மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.

இந்த பின்னணியில்தான் நாம் தெலுங்கானா பெண் மருத்துவர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் என்கவுண்ட்டர் செய்யப்பட்டதற்கு நாடெங்கும் வெளிப்பட்ட வரவேற்பை பார்க்க வேண்டியுள்ளது.

பொதுவாக கற்பழிப்பு விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் எல்லோருமே புகார் தர தைரியமாக முன்வருவதில்லை. அப்படியே முன்வந்தாலும் அதை காவல் துறையினர் இருக்கின்ற வேலைப்பளுவில் முன் உரிமை தந்து விசாரிப்பது அபூர்வம்! அப்படியே விசாரித்து வழக்கு பதிவு செய்தாலும் சாட்சிகள், ஆவணங்கள் போதுமானவையாக இல்லை என கூறி குற்றவாளிகள் சட்டத்தின் ஓட்டையிலும், வழக்கறிஞர்களின் வாதத்தாலும் தப்பித்து விடுகின்றனர். மேலும் குற்றவியல் நீதிமுறைகள் அவ்வளவு எளிதாக இல்லாத காரணத்தால் பெரும்பாலான குற்றவாளிகள் தப்பித்து விடுகின்றனர்.

திருப்புமுனையான விசாகா வழக்கு

மிகப் புகழ்பெற்ற விசாகா வழக்கை பார்ப்போம். 1997-ல் ராஜஸ்தானில் பெண்கள் முன்னேற்றத் திட்டத்தில் வேலை செய்த ஒரு சமூகசேவகி குழந்தை திருமணம் குறித்து காவல்துறைக்கு தகவல் தந்து தடுத்து விடுகிறார். இதனால், கோபமடைந்த 4 பேர் அந்த பெண்ணை பழிவாங்க கூட்டு பாலியல் வன்முறை செய்கின்றனர். பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றம் சென்றார். வழக்கு பல வருடங்கள் நடந்து, கடைசியில் குற்றவாளிகள் உயர் சாதியினர் எனவே அவர்கள் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த பெண்ணை தொட்டு பாலியல் வன்முறையில் ஈடுபட்டார்கள் என்பதை ஏற்க முடியவில்லை. மேலும் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரும் எப்படி கூட்டு பாலியல் வன்புணர்வில் ஈடுபடமுடியும்? அத்துடன் இதில் ஒருவர் வயதானவராக உள்ளதால் அவர் பாலியல் குற்றம் செய்திருப்பார் என்பதை நம்பமுடியவில்லை என்றெல்லாம் காரணங்களை கூறி நீதிமன்றம் அவர்களை விடுவித்தது.இது அப்போது நாட்டில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த தீர்ப்புக்கு எதிராக மக்கள் கருத்து வலுப்பட்டு, போராட்டங்கள் நாடெங்கும் நடந்தன. இதன் விளைவாக உச்சநீதிமன்றத்தில் பல பொதுநல அமைப்புகள் விசாகா என்ற சமூக சேவகர் தலைமையில் வழக்கு தொடர்ந்ததன் விளைவாக, பணியிடத்தில் பாலியல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம் 2013 கொண்டு வரப்பட்டது.

நிர்பயா வழக்கும், நிதி ஒதுக்கீடும்!

2012-ம் ஆண்டு டெல்லியில் பஸ்சில் சென்ற நிர்பயா என்ற பெண் கற்பழித்து தூக்கி வீசப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஒட்டு மொத்த தேசமே இதே போல அன்று பொங்கி எழுந்தது. ஆனால், அதில் ஈடுபட்ட குற்றவாளிகள் இன்றுவரை தண்டிக்கப்படவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இப்படி பெண்களுக்கு எதிரான பாலியல் புகார்களை விரைந்து விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்க நிர்பயா திட்டத்தின் மூலம் ரூ.3,600 கோடி ஒதுக்கப்பட்டது. அதில் ரூ.767 கோடி விரைவு நீதிமன்றங்களுக்காக ஒதுக்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் இன்னும் முழுமையான செயல்வடிவம் பெறவில்லை.

பாலியல் குற்றவழக்கு விசாரணைகளில் என்ன நடக்கிறது என்பதை அறிய மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு குழுவை நியமித்தது. அந்தக் குழு டெல்லி, அரியானா உள்ளிட்ட 7 வடஇந்திய மாநிலங்களில் ஏப்ரல் 2018 தொடங்கி பிப்ரவரி 2019 வரையிலான காலக்கட்டங்களில் மொத்தம் 24,000 பாலியல் வழக்குகள் பதிவாகி இருப்பதையும், அதில் 4.1 சதவீத வழக்குகளில் மட்டுமே தீர்வுகள் கிடைத்துள்ளன என்றும் அறிவித்தது.

காஷ்மீரில் கத்துவா பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி கோவிலில் வைத்து மதவெறியர்களால் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டாள். இதை தொடர்ந்து நாடெங்கும் வெளிப்பட்ட கொந்தளிப்பை அடுத்து, போக்சோ சட்டத்தில் சில திருத்தங்கள் செய்து, அதை வலுப்படுத்தி 2018- ல் மத்திய சட்ட அமைச்சகம் அறிவித்தது.

சட்டங்கள், சட்ட திருத்தங்கள் எல்லாம் கொண்டு வரப்படுகின்றன. ஆனால், நடைமுறையில் அவை செயல்வடிவம் பெறுகின்றனவா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

சமீபத்தில் உத்தரபிரதேச உன்னாவ் மாவட்டத்தில் பாலியல் பாதிப்புக்கு உள்ளான பெண்ணை ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் தீயிட்டு கொன்றுள்ளனர். இப்படிப்பட்ட ஆபத்தான குற்றவாளிகளுக்கு எப்படி நீதிமன்றம் ஜாமீன் கொடுத்தது என்ற கேள்வி மக்களிடம் கொந்தளிப்பாக எழுந்துள்ளது.

ஆக, நம் நாட்டில் குற்றவாளிகளை அதுவும் ஓரளவு செல்வாக்குள்ள குற்றவாளிகளை தண்டிப்பது என்பது மிக அரிதாகவே இருக்கிறது. இந்த கசப்பான அனுபவங்கள்தான் காவல்துறை நடத்தும் என்கவுண்ட்டர்களுக்கு மக்கள் தரும் பலத்த வரவேற்பிற்கு பின் புதைந்துள்ள உண்மையாகும்.தமிழகத்தின் நிலைமை

மிழ்நாட்டில் பொள்ளாச்சியில் இளம் பெண்களை காதலிப்பது போல நடித்து வலையில் வீழ்த்தி, அவர்களை அழைத்து சென்று பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியதோடு, அதை வீடியோவும் எடுத்து மிரட்டிய வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். ஆனால், அவர்களில் இருவர் தற்போது குண்டர் சட்டத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த கொடூர சம்பவம் அம்பலமாகி ஒன்பது மாதங்கள் ஆகியும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து தண்டனையை உறுதிபடுத்த முடியாத நிலையில், பெண்கள் இயக்கங்களும், அரசியல் மற்றும் சமூக இயக்கங்களும் குற்றவாளிகள் மீது உறுதியான நடவடிக்கையை வலியுறுத்தி போராடி வருகின்றனர்.

சென்ற ஆண்டு அயனாவரம் மாற்றுத்திறனாளி சிறுமிக்கு நடந்த கொடூர பாலியல் வன்முறையை விசாரித்து முடித்த போக்சோ நீதிமன்றத்தின் நீதிபதி இன்னும் தீர்ப்பை வழங்காமல் தேதியும் குறிப்பிடாமல் தீர்ப்பை நிறுத்தி வைத்துள்ளார். சென்னையில் அனைவரின் கவனம் பெற்ற வழக்கிலேயே இவ்வளவு காலதாமதம் என்றால், குன்றத்தூர் சிறுமி, ஸ்ரீவைகுண்டம் சிறுமி, அரியலூர் மாணவி..... போன்று பாதிக்கப்பட்ட பல குழந்தைகளின் வழக்கு நிலைமையை என்னென்பது?சென்ற ஆண்டு (2018) தமிழ்நாட்டில் பதிவான பாலியல் அத்துமீறல் வழக்குகள் 2,045. இதில் சென்னையில் மட்டுமே போக்சோ சட்டத்தின்படி பதியப்பட்ட குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல் வழக்குகள் மொத்தம் 218. இதில் பத்து வழக்கில் கூட இன்னும் தீர்ப்பு கிடைக்கவில்லை. இரண்டு மாதத்தில் இருந்து ஆறு மாத காலத்திற்குள் வழக்கு நடத்தி தீர்ப்பு வழங்க வேண்டும் என்று சட்டம் சொன்னாலும் அதை பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை என்பது தான் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பின் வேதனை குரலாக உள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...